பழைய திரைப்படப்‌ பாடல்களில் இருந்த தெளிவு!


சமீபத்தில் என் மனைவியுடன் தொலைக்காட்சியில் சன் மியூசிக் சேனல் பார்க்கும் பொழுது, தொடர்ச்சியாக ஏதோ அர்த்தம் புரியாத பாடல்கள் உலா வந்தது. புரிந்த சில பாடல் வரிகளின் அர்த்தம் மிகவும் ஆபாசமாக இருந்ததை உணர முடிந்த்து. சில நேரங்களில் இசை நன்றாக இருந்தாலும் பாடலின் வரிகளில் ஆபாசமும் அபத்தமுமே மிஞ்சு நிற்கிறது.

கடந்த பொங்கல் விடுமுறையில் என் சொந்த ஊருக்கு சென்ற போது, பக்கத்து வீட்டு சிறுவன் முணுமுணுத்த பாடல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அப்பாடல் வரிகளின் அர்த்தம் அவனுக்குப் புரிந்ததா, இல்லையா என்று கூடத் தெரியவில்லை. மறுநாள் மீண்டும் அந்தப் பாடலை வீட்டில் என் குடும்பத்தாருடன் அமர்ந்து பார்க்கும்போது ஏதோ ஒருவித கசப்புணர்வு தோன்றியது. நீண்ட நேரம் பார்க்க முடியாத காரணத்தால் டிவி ரிமோட்டில் வேறு சேனலுக்குத் தாவினேன். ‌

இன்றைய‌ சினிமா பாட‌ல்க‌ளின் அப‌த்தததையும், ஆபாசத்தையும் பின்வ‌ருமாறு காணலாம்.

"வாடா வாடா பையா என் வாசல் வந்து போடா
வாசல் வந்து என் வாசம் வாங்கிப் போடா "

"டாடி மம்மி வீட்டில் இல்ல தடைபோட யாரும் இல்ல
விளையாடுவோமா உள்ள வில்லாலா"

இத்தகைய பாடல்கள் நமது தமிழ்த்திரைப்படங்களில் தற்போது இடம் பெற்று வருவது இயல்பான ஒன்று.  இன்றைய பெரும்பாலான பாட‌ல்க‌ளில் இசை என்ப‌து மனித‌னின் செவியுணர்வின் 85 டெசிப‌லைத் தாண்ட வேண்டுமென்ப‌து துரதிஷ்ட வசமானது.

என் சிறு வயதில் பழைய பாடல்களைத் தொலைக்காட்சி பார்க்கும்போதோ, வானொலியிலோ கேட்கும்போதோ இத்தகைய ஆபாச வரிகளை  வந்தது நினைவில்லை. பழைய பாடல்களில் இருந்த அந்தத் தெளிவு தற்போதுள்ள சினிமா பாடல்களில் தெரிவதில்லை. எனது லேப்டாப்பில் முன்பு சேகரித்த பழைய பாடல்களைக் கேட்கும் பொழுது கிடைக்கும் ஒருவித மன அமைதி இன்றைய சினிமா பாடல்களில் தவறிவிடுகிறது. 

தற்போது தமிழில் சினிமா பாடலாசிரியர்கள் நூற்றுக் கணக்காக இருந்தாலும், அவர்களது பாடல்களில் ஆபாசமில்லா வரிகளைக் கேட்பதென்பது கடினமான ஒன்று. சமீபத்திய இந்தி பாடல்களில் உள்ளது போன்றே ஆங்கில வரிகளின் ஆதிக்கம் இன்றைய ‌தமிழ் பாடல்களில் உள்ளதை உணர முடிகிறது. இது வளர்ச்சியா அல்லது சாபமா

என் மனதைக் கவர்ந்த ஒரு பழைய பாடலை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள்திலகம் MGR நடித்த 'பணம் படைத்தவன்' என்ற திரைப்படத்தில் வரும் கவிஞர் வாலி எழுதி, திரு. T.M. செளந்தரராஜன் பாடிய பாடல் பின்வருமாறு:

"கண் போன போக்கிலே கால் போகலாமா
 கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
 மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

பொய்யான‌ சில பேர்க்கு புது நாகரிகம்
புரியாத பல பேர்க்கு இது ‌நாகரிகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உறவுகள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"

இப்பாடலை கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒருவித ஈர்ப்பு உருவாகிறது. நாகரிகம் என்ற பெயரில் நாம் அனைவரும் தவறிப்போவதாக உணர்கிறேன். அன்று சொல்லப்பட்ட இந்த உண்மை இன்றும் நினைக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ பழைய பாடல்களைச் சொல்ல முடியும். 

இதே போன்று இன்றைய சினிமா பாடல்களில் எத்தனை பாடல்களை நம்மால் அடுக்க முடியும். இன்று எவ்வளவு பாடல்கள் நம் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்துகின்றன. விடை மிகமிகக் குறைவே. இதற்கான காரணங்களை எண்ணும்போது, இது இன்றைய சினிமா டைரக்டர்களின் கட்டாயமா, இசையமைப்பாளர்களின் விருப்பமா அல்லது நம்மைப் போன்ற ரசிகர்களின் விருப்பமா அல்லது பாடலாசிரியர்கள் தங்களை சினிமாத் துறையில் தக்க வைத்துக் கொள்ளவும் வருமானம் ஈட்டுவதற்காகவும் இருக்கலாம். விடை நான் அறியேன். 

இத்தகைய ஆபாசப் பாடல்களுக்கு நடுவே, இன்றும் சில நல்ல பாடல்கள் திரையில் வருவது வரவேற்கத்தக்கது. நினைவில் நின்ற இன்றைய பாடல்களில் ஒன்று ஆட்டோகிராப் திரைப்படத்தில் பாடலாசிரியர் திரு. பா. விஜய் எழுதிய : 

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும்  போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவென்றால் பகலோன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிட்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு"

மேலே குறிப்பிட்ட பாடலைப் போன்று எழுத இப்போதிருக்கும் பாடலாசிரியர்களாலும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தகைய நிலைப்பாட்டிற்கு தமிழ் சினிமா ரசிகர்களாகிய நாமும் ஒரு முக்கியக் காரணம். வருங்காலத்திலாவது தமிழ் திரைப்பட‌ பாடல்களில் ஆபாசம் என்ற விஷம் குறைந்து, நல்ல தெளிவான பாடல்கள் இடம் பெற வேண்டுகிறேன். ‌

குறிப்பு: இந்த பதிவின் நோக்கம் எந்த ஒரு பாடலாசிரியரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. என் மனதில் தோன்றிய ஆதங்கத்தின் வெளிப்பாடே!

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

8 comments:

  1. இப்பொழுதுதான் அம்மம்மா கேளடி தோழி எனும் பாடலை கேட்டு முடித்து தமிழ்மணத்தை திறந்த சமயம் உங்கள் கட்டுரையை காணுகிறேன். என் மனம் தற்போதைய தமிழ் பாடல்கள்களை யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தங்கள் கட்டுரை செவிட்டில் அறைவது போல் இருந்தது. இத்தனைக்கும் மேற்கண்ட பாடலில் இசைகருவிகளை பாடலுக்கு பயன்படுத்தி இருந்த விதம் இக்கால இசைமேதைகள் தலைகீழாக நின்று சாதகம் செய்தாலும் அந்த இனிமையை கொண்டுவரமுடியாது.. அதன் மிக முக்கிய காரணம் இசையில் அவர்களுக்கு இருந்த உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடே.. தனிமனித திறன் அல்ல.. இக்கால மேதைகள் எப்படியாவது தம் திறனை பிறர் மெச்ச வேண்டும் எனும் நோக்கிலேயே.. பாடலின் அற்புதத்தை அழித்து குட்டிச்சுவராக்கிவிட்டார்கள். இன்னொன்றும் சொல்வேன் அந்த எளிய பதங்களையும் ஸ்வரங்களையும் இவர்களால் திரும்ப கூட வாசிக்கமுடியவில்லை என்பது தான் நிஜம்.

    ReplyDelete
  2. உண்மைதான். பழைய பாட்டுகளின் இசையில் உள்ள நளினம் எல்லாம் இப்போ வரும் பாடல்களில் இல்லை.

    பழைய பாடல்கள் ஆரம்பிக்கும்போதே அது என்னன்னு சரியாச் சொல்லிட முடியும். இப்போ பாட்டு என்ற பேரில்.........ப்ச்.

    சூப்பர் சிங்கர் போட்டிகள் , மற்றும் மெல்லிசைக்குழுவினர் எல்லோரும்கூட பழைய பாடல்களத்தான் பாடறாங்கன்றதைக் கவனிச்சீங்களா?

    வெஸ்டர்ன் ம்யூஸிக் போல இருக்கணும் நம்ம பாட்டுகள்ன்னு மக்கள்ஸ் கேக்கறாங்களாமே.நெசமாவா?

    என்னமோ போங்க...... என்னத்தைச் சொல்லி அழ?

    ReplyDelete
  3. த‌ங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு. ராஜா அவர்களே.

    நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல,

    "இன்னொன்றும் சொல்வேன் அந்த எளிய பதங்களையும் ஸ்வரங்களையும் இவர்களால் திரும்ப கூட வாசிக்கமுடியவில்லை என்பது தான் நிஜம்"

    தற்போதுள்ள திரைக்கலைஞர்களுக்கு அது சிரமமான ஒன்று.

    ReplyDelete
  4. துளசி கோபால் தாங்கள் சுட்டிக்காட்டியதைப் போல, இன்றைய மக்களுக்கு வெஸ்டர்ன் ம்யூஸிக் பாட்டுக்களைக் கேட்பதென்பதே நாகரிகமாகக் கருதுகின்றனர். தற்போதுள்ள நிலைக்குக் காரணம் இது போன்ற ரசிகர்களே !

    தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. very correct

    ReplyDelete
  6. மெல்லிசையை கேட்டால் வரும் மயக்கம். ஆபாச பாடல் வரிகளில் வருகிறது கலக்கம். இளையதலைமுறையினருக்கு இதுதான் பிடிக்கிறதோ?

    ReplyDelete
  7. உண்மைதான், இன்று ஆபாசமில்லாத பாடல் கேட்பது அரிதாகவுள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற பாடல்கள் தான் பிடிக்கிறது, இதுதான் அவர்களுக்கு நாகரிகமாகத் தெரிகின்றது...

    ~பொய்யான‌ சில பேர்க்கு புது நாகரிகம்
    புரியாத பல பேர்க்கு இது ‌நாகரிகம்~

    ReplyDelete
  8. @ அசோகன் குப்புசாமி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete