விமர்சனம்


நேற்று நண்பனிடம் தொலைபேசியில் உரையாடும் போது, முதலில் சாதாரண விஷயங்களைப் பற்றி தொடங்கிய பேச்சு முடிவில் இந்த வலைப்பூவைப் பற்றிய உரையாடலில் நின்றது.

முதலில் நீ எதற்காக எழுதுகிறாய்? வேறு வேலையில்லாத காரணத்தினால் தொடங்கினாயா? (இது என்னுள்ளும் எழுந்த‌ ஒரு வினா! இதன் விடையை தொடக்கத்தில் நான் அறியேன்) வேறேதேனும் வ‌லைப்பூவிலிருந்து நக‌ல் செய்தாயா? என்றெல்லாம் வினவினான். அத்துடன் நிற்காமல் யாருக்காக இதை நீ எழுதிகிறாய்? என்ற கேள்வி என்னை முதலில் யோசிக்கச் செய்தது.

தொடர்ந்து உரையாடுகையில், இத்தளத்தில் நான் குறிப்பிட்ட பாரதியார் பாடல்களை அவன் 2 வரிகளுக்கு மேல் வாசிக்கவில்லை என்பது புலனானது. இதற்குக் கார‌ணம்  பாடல்/செய்யுளின் பொருள் புரியாதததினாலோ அல்லது அவரவர்களின் விருப்பமின்மையின் காரணமாக‌வோ இருக்கலாம். இறுதியில் தனிப்பட்ட ஒருவரின் விருப்பு/வெறுப்புகளைப் பற்றி விமர்சிக்க எனக்கு விருப்பமில்லை.

சிறிது யோசித்துப் பார்த்தால், எழுதுவதின் நோக்கம் என் த‌னிமையின் வெளிப்பாடோ என‌த் தோன்றுகிற‌து. அல்லது மற்ற பாதிப்புகளின் அடையாளமாகவும் இருக்கலாம் அல்லது எனது எண்ணங்களின் சிதறலாகவுமிருக்கலாம். இவையனைத்தும் மனதின் ஒருபுறமோட, எந்த சமூக நோக்கத்திலும் எழுதவில்லை என்பது புலனாகிறது.

இந்த வலைப்பூவைத் தொடங்கி இன்றுடன் 10 நாட்களானது இனிமையாக உள்ளது. இணையத்தில் மற்ற வலைப்பதிவுகளைப் பார்வையிடும் போது, தமிழில் தரமான வலைப்பதிவுகளின் எண்ணிக்கை குறைவு என்பது முற்றிலும் சரியாகாது. தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் ஏேனும் ஒர வ‌கையில் தத்தம் எண்ண‌ங்க‌ளை வெளிப்படுத்தி வருகின்ற‌னர், இது பாராட்ட‌த்த‌க்க ஒன்று. அவர்க‌ளின் நோக்கம் சினிமா, சமூக அக்கறை, உலக/உள்நாட்டுச் செய்திகள், கணினி, பொருளாதாரம், கற்பனைக் கதைகள், கவிதைகள் என வேறுபட்டாலும், இவையனைத்தும் தமிழில் கொடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

குறிப்பிட்ட சில நண்பர்கள்/வாசகர்களிடமிருந்து பெற்ற நல்ல கருத்துக்களும், அவர்களின் ஊக்குவிப்பே என்னை இன்னும் எழுதத் தூண்டுகின்றது. அத்தகைய அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.

(குறிப்பு: நான் இவ்வலைதளத்தில் பதிக்கும் அனைத்தும் என் மனதில் தோன்றிய சிந்தனைகள் மற்றும் எண்ணங்களின் பிரதிபலிப்பே!)

No comments:

Post a Comment