பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)


மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

பாடலுக்குச் செல்லும் முன் அப்பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்தது. 

பாலை நிலப்பரப்பானது `முல்லையும் குறிஞ்சியும் திரிந்து வெம்மை உற்ற நிலம் (வறண்ட நிலம்)’; `பிரிதலும் பிரிதல் நிமித்தமும்பற்றிக் குறிப்பிடுவது

காதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும்.



குறுந்தொகைப் பாடல்  எண் - 27

ஆசிரியர் - வெள்ளிவீதியார்

திணை - பாலைத்திணை

தலைவியின் கூற்று பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்து, மனதில் துயரம் குடிகொண்டதோடு, பொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூகிறாள்.

‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது  
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமக் கவினே’’

கலம்பால் கறக்கும் பாத்திரம்; நல் ஆன்நல்ல பசு
தீம் பால்சுவையான பால், உக்காங்குசிந்துதல்/விழுதல்
என்னைக்கும்என் ``க்கும்காதலன்
பசலைமேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது
உணீ இயர்தன்னை உட்கொள்ளும்; திதலைதேமல்
அல்குல்இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்)
மாமைமாந்தளிர் நிறம்; கவின்அழகு 

பாடலின் பொருள்:

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல்  அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் சேராத பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை. அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.

ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது.