நினைத்தாலே இனிக்கும் - கல்லூரி நாட்கள் - 1



எனது 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர முடிந்தது. நுழைவுத் தேர்வை முடித்து அண்ணா பல்கலைக்கழத்தில் இஞ்ஜினியரிங் கவுன்சிலிங் சென்றது இன்றும் நினைவிலுள்ளது. 



கல்லூரியின் முதல்நாள் - கடந்து வந்த நம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. விடுதியில் காலை 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தது, அதுவே முதலும் கடைசியுமாக அமைந்தது. அந்த நாள் கல்லூரியே கலர்புல்லாக இருந்தது. வகுப்பறையில் அருகிலிருந்த முகவரி தெரியாத நண்பனிடம் முதலில் சொன்ன 'ஹாய்'. அதுவே நாளடைவில் மாமா, மச்சி என்று வளர்ந்தது. பலருடன் பழகியிருந்தாலும் கடைசியில் பத்து பேரின் நினைவே நெஞ்சில் நிற்கின்றது.

அடுத்து கல்லூரி வாழ்வின் முக்கியப் பகுதி ‍ராகிங். கல்லூரி தொடங்கிய முதல் வாரத்திலேயே ரப்பர் செருப்பு அணிந்து சென்றது நினைவிவுள்ளது. இது செருப்போடு மட்டும் நிற்காமல் உடை, மீசை என்ற அனைத்திலும் சென்றது. சீனியர் பெண்ணை சில்லென்று பார்த்ததால், அன்றிரவே சீனியரின் அறை சன்னலில் வௌவாலாக‌த் தொங்கினேன். தொடக்கதில் துன்பமாகத் தோன்றினாலும், நாளடைவில் அதுவே சீனியர்களின் நட்புக்குப் பாலமாக அமைந்தது.

அம்மாவின் சமையலில் உப்புச் சப்பில்லா குறைகளைக் கண்டுபிடித்த எனக்கு, ஹாஸ்டல் மெஸ்‍சின் காய்ந்த தோசையும், உப்பான சாம்பாரையும் ஏற்க வேண்டுமென்ற தெளிவு பிறந்தது. என் நாவிற்கு கண்ணீரஞ்சலி செலுத்தப்பட்ட‌து அந்நாளில்தான். புலி பசித்தாலும் புல்லை தின்னாது, ஆனால் நானோ பசித்தால் எதைவேண்டுமென்றாலும் உண்ணலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். சுவையின் சுகத்தை நிறுத்தினேன். கேண்டீனின் மசாலா தோசையில் மசாலாவை தேடியதும், தேவையற்ற நேரங்களில் தேனீரருந்தியதும் நினைவிலிருப்பவையே. கேண்டீனின் குட்டிச்சுவர்/திட்டு - சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் மற்ற‌ வகுப்புத்தோழர்களை பார்த்துப் பழகி மனவிட்டு பேசுமிடம் அதுவே. கேண்டீனின் பத்து ரூபாய் மேட்டரை இன்று நினைத்தாலும் இனிப்பாகவே உள்ளது.
அடுத்ததாக Treat - ‍ தேர்வில் தேர்ச்சி பெற்றால் treat, தோல்வியடைந்தாலும் treat.  ஃபிகரைப் பார்த்தால் treat, ஃபிகர் நம்மை பார்த்தாலும் treat, வகுப்பறையில் ஆசிரியர் திட்டினாலும் treat, தேர்வுக்கு முன்பும் treat, தேர்வுக்குப் பின்னும் treat. மொத்ததில்‌ treat நாட்க‌ளில் மெஸ்சின் வ‌றண்ட தோசையின் வாசம் ம‌றைந்த‌து.

கல்லூரி நாட்களில் நான் மிகவும் ப‌ய‌ந்த‌து ப்ராக்டிகல் எக்ஸாம். லேப் நாட்களின் நீலநிற உடை கண்முன்னே நிற்கிறது. 3 அல்லது 4 பேர் கூட்டாகச் செய்தாலும் முடிவில் அவுட்புட் வ‌ராதது வேடிக்கையான‌தே. இது எங்க‌ளின் குற்ற‌மா, இல்லை க‌ணினியின் குற்ற‌மா! லேபின் 100 ம‌திப்பெண்ணிற்காக‌ 200 முறை ஃபேகல்டி அறையை உலாவ‌ந்த‌து உண்மையே. செம‌ஸ்ட‌ர் தேர்வில் எப்ப‌டியாவ‌து ப‌க்க‌ங்க‌ளை நிறைத்து பாஸ் செய்தாலும் ப்ராக்டிகலில் அது முடியாத ஒன்று. அன்றைய‌ நாட்க‌ளில் எத்த‌கைய‌ வினாத்தாள் கொடுத்தாலும் தேர்வுத்தாளில் ப‌க்க‌ம் சேர்ப்ப‌தென்பது மிகவும் சாதார‌ணமான ஒன்று.

ASSIGNMENT வைக்க‌வேண்டிய‌ நாட்க‌ளில் கண்டிப்பாக வ‌யிற்றுவலி, கண்வலி, காய்ச்சல் வ‌ருவ‌து இய‌ல்பான‌தே. விடுதியில் ஒவ்வொரு காலைவேளையிலும் பாத்ரூம் பிடிப்ப‌து தியேட்ட‌ரில் எந்திர‌ன் ப‌ட‌த்திற்கு முதல் நாள் டிக்கெட் வாங்குவ‌த‌ற்குச் சமம். காலைக் குளிரில் க்யூவில் நிற்ப‌து நக‌ர‌ப்பேருந்தில் க‌டைசி ப‌டியில் நின்று ப‌ய‌ணிப்ப‌த‌ற்குச் சம‌ம். அப்ப‌டி க‌ஷ்ட‌ப்ப‌ட்டுக் குளித்து முடித்தாலும், பல நேரங்களில் காலை உணவை கண்ணில் பார்க்காத நாளே அதிகம். மாலையில் தொடங்கும் வெட்டிப்பேச்சு இரவு 4 மணிவரை நீண்டிருக்கும்.  முதல் PERIOD பற்றித் தொட‌ங்கும் இந்த‌ப்பேச்சு IIT, IIM போன்ற‌ கல்வி சம்பந்தமான தலைப்பில் மேய்ந்து,  RS புரம், ஊட்டி, மூணாறு என்று நீண்டு, கிரிக்கெட், சச்சின், வோர்ல்ட் கப்சன் டி.வி, விஜய்  டி.வி, சூர்யா டி.வி, இளமை புதுமை, லொள்ளு சபா என்று கலகலப்பாகப் பயணித்து, அடுத்த விடுமுறை பற்றிய விவாதங்களில் விழுந்து, இறுதியில்  கடைசியாகப் பார்த்த சினிமா படத்தில் முற்றுப்பெரும்.

விடுமுறை நாட்களில் இரவு படத்திற்குக் குறைவிருக்காது. வெள்ளி, சனி இரவுகளில் ஏதாவது ஒரு படம் பார்க்க வேண்டுமென்பது கல்லூரியின் விடுதி வாழ்வின் நியதி. அதுபோலவே, ஞாயிறு காலையில் வீதியுலா செல்வது கல்லூரி வாழ்வில் இன்றியமையாதது. அதற்காக எட்டு மணிக்கு (அதிகாலை!!) எழுந்து, காலை உணவை முடித்து (செல்லவிருக்கும் தியேட்டரின் தொலைவைப் பொறுத்தது மாறும்), நகரப்பேருந்தில் தொத்தி கடைசியில் ஒரு சப்ப படத்தைப் பார்த்த அலுப்பில் முடிவுறும். திரும்புகையில் கையில் காசு இருந்தால் கால்டேக்சியில் கல்லூரி வந்து சேர்வோம். 

தேர்வுநாள் அறிவிக்கப்பட்ட‌வுடன் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வெட்டிப் பேச்சு குறைந்து, கடைசியில் SYLLABUS, XEROX, NOTES சேகரிப்பு  என்று புல்லட் ரயிலைப் போல் பற‌க்கும். சாதாரண நாட்களில் வெறுச்சோடிக் கிடக்கும் மெஸ்சின் காப்பிக்கு, தேர்வு நாட்களில் மிகப்பெரிய ‌‍‍க்யூ நிற்கும். தேர்வு நாட்களில், இதுவரை வணங்கப்படாத அனைத்து தெய்வங்களையும் அவசர அவசரமாக வணங்கிவிட்டு காலை உணவைப் புறக்கணித்து 10 நிமிடத்திறகு முன்பாகவே தேடிப்பிடித்து தேர்வறைக்குச் செல்வோம்.   வினாத்தாளை பெற்று விடைத்தாளில் எழுத்தத்‌ தொடங்கும் பொழுது, எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருந்த நாவலாசிரியனும், எழுத்தாளனும் உருப்பெருவார்கள்.   

இத்தகைய ரகளையான, சேட்டைகள் நிறைந்த என் கல்லூரி வாழ்வின் நாட்கள் என்றும் என் நினைவில் நிற்கும் !!

(தொடரும்)

3 comments:

  1. நண்பரே.. எந்த கல்லூரி நீங்கள்?

    ReplyDelete
  2. thanks 4 ur suggestion - Raj (குறை ஒன்றும் இல்லை !!!), i removed that verification option

    ReplyDelete