அர்த்தமுள்ள இந்துமதம் - 2


அர்த்தமுள்ள இந்து மதத்தைப் பற்றி எழுதுவதன் முக்கிய நோக்கம், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே. எந்த வித மதம் சார்ந்த கருத்துக்களையும் முன்வைத்துக் கூறப்படவில்லை.

 

மனித வாழ்க்கையின் நிலைகளையும் அதன் தத்துவங்களையும் இந்து மதம் எவ்வாறு விளக்குகிறது? உதாரணமாக இந்து மத இதிகாசங்கள் அனைத்திலும் இரண்டு (extreme) நிலைகள் அல்லது துருவங்களைக் காணலாம்.

மகாபாரதத்திலும், ராமாயணத்திலும் நல்லவர்கள் ஒரு பிரிவாகவும், கெட்டவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டிருப்பது ஏன்? எதனை முன்னிருத்த இத்தகைய கதைகள் கூறப்பட்டிருந்தன.  அறுபது மனைவிகளைக் கொண்ட த‌சரதனை ஏன் சித்தரித்தனர்? மனித வாழ்வில் இது சாத்தியமா? அப்படி வாழலாமா என்கிற கேள்விகளை விட, அவனது மகன் ராமனை ஏகப்பத்தினி விரதன் என்றார்கள்.

இரண்டையும் இரண்டு துருவங்களாக்கிக் காட்டினார்கள். இரண்டு வாழ்க்கையிலே எந்த வாழ்க்கை சரி? எது நியாயம் என்பதை அவர்கள் போதிக்க வரவில்லை! அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டான் தசரதன், இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டான் ராமன். ஆனால் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட ராமனை தெய்வம் என்று இராமாயணம் அழைத்தது. ஆகவே அது சொல்லாமல் சொன்ன தத்துவம் 'ஏகப்பத்தினி விரதனாகும்'. அந்த ஏகப்பத்தினி விரதன் என்று அவனை சொல்லுவதற்கு எவ்வளவு அற்புதமான உவமைகள், உவமை நயங்களில் இதை சொல்லியுள்ளனர்.

ராமாயணத்தில் ராவணன் சீதையை மயங்க வைக்க பல்வேறு வேஷங்கள் போடுகிறான். இளவரசனாக வருகிறான், மன்மதன் போல் வருகிறான்,  பல்வேறு நாட்டு இளவரசர்கள் போலத் தோற்றமளிக்கிறான். எதிலேயும் அவள் மயங்கவில்லை. மயங்கவில்லையே சீதை என்று கலங்கிப் போய் அரண்மனையிலே உலாவிக் கொண்டிருக்கிறான். அப்போது அமைச்சர் அங்கே வருகிறார்.   அமைச்சர் சிரித்துக் கொண்டே அவனிடம் சொல்லுகிறார், "அரசே சீதை மயங்கக் கூடியது ஒரே ஒரு மனிதருக்கு மட்டுமே, ஒரே ஒரு உருவத்திற்கு மட்டுமே! அது ஸ்ரீராமருடைய வேஷம். அந்த வேஷத்தை நீ எடுத்தால் மட்டுமே அவள் மயங்குவாள்"  என்று அமைச்சர் சொல்லுகிறார்.

உடனே ராவணன் அவரைப் பார்த்துச் சொல்லுகிறார், "அமைச்சரே உமக்கு தெரிகின்ற இந்த உண்மை எனக்கு தெரியாமல் போயிருக்குமா? நானும் ராமனைப் போலவே வேஷமிட்டு, ராமனாகவே தோற்றமளித்தேன். ஆனால் ராமனுடைய வேஷத்தைப் போட்டவுடனேயே எனக்கு சீதையின் மீது, இன்னொருவன் மனைவியின் மீது ஆசை வரவில்லையே நான் என்ன செய்வேன்? என்று அவன் வருந்தினான்.

ஏகப்பத்தினி விரதன் என்பதை ஒரு வார்த்தையாகச் சொல்லாமல், அதை ஒரு கதையாக உலவ விட்டு சாதரணமான மக்களுக்கும் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.   அவர்கள் படித்தவர்களோ, படிக்காதவர்களோ, யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு சில விஷயங்களைப் புரிய வைக்க இந்து மதம் முயன்றது.

அருந்ததியின் கதை, நளாயினியின் கதை, அசூரியையின் கதை, அகலிகையின் கதை -  இந்தக் கதைகள் எல்லாம் கற்பனைகளாகவே வைத்துக் கொண்டாலும், இவையெல்லாம் கற்போடு வாழ்ந்த சில பெண்களின் வாழ்க்கையைக் குறிப்பது. இவை கற்போடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை இந்து பெண்களின் மனதிலே உண்டாக்குவதற்காக ஏற்பட்டவை. 

(தொடரும்)

தாயின் சிறப்பை உணர்த்தும் இந்து மதம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தான் எனக்கு இவ்வலைபூவை புதுப்பிக்க நேரம் கிடைத்திற்று. வாசகர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு/சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.


சமீபத்தில் இணையதளத்தில் உலாவும்போது 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒலிப்பேலை (mp3 audio file) கிடைத்தது.  சிறுவயதில் எனது அப்பா இப்புத்தகத்தை படித்தது இன்றும் நினைவில் உள்ளது. இதில் இந்து மதத்தின் தோற்றம் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் கவிஞர் கண்ணதாசன் மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். 


சிறு வயதில் நான் எனது அம்மாவிட‌ம்  அடிக்கடி கேள்விகள் கேட்பது வழக்கம். அத்தகைய தருணங்களில் அதிக தடவை எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. உதாரணமாக எதற்காக குங்குமமும், திருநீரும் இடுகிறோம்? ஏன் வலது காலை வைத்து வீட்டிற்குள் வருவது வழக்கமாக உள்ளது? இதுபோன்ற எண்ணற்ற மதம் சார்ந்த கேள்விகளுக்கு, ஆராய்ந்து தனது பதிலை கவிஞர் இதில் குறிப்பிட்டுள்ளார். 

தாயின் சிறப்பை உணர்த்தும் இந்து மதம்

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் பேசும் பொழுது அங்கிருந்த இளம்பெண்கள் மற்றும் ஆண்களையெல்லாம் பார்த்து, "பெரியோர்களே, தாய்மார்களே" என்று அழைத்தார். இதனைக் கேட்ட அங்கிருந்த இளம்பெண்கள் சிலர் சிரித்தார்கள். அதற்கு அவர் சொன்னார் - "நீங்கள் சிரிப்பது எனக்கு புரிகிறது. நீங்களோ இளம் பெண்கள், என்னடா நமக்கு இன்னும் திருமணம்கூட ஆகவில்லை, நம்மை இவன் தாய்மார்களே என்று அழைக்கிறானே என்று நீங்கள் கருதுகிறீர்கள்.

மேலை நாட்டிலே பெண் என்றாலே மனைவி அல்லது காதலி என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 'பெண்' என்ற பேரைக் கேட்டாலே தாய் என்கிற உணர்வுதான் எங்களுக்கு வரும். "தாய்! தாயே" என்று அழைப்பது எங்கள் லட்சியக் கனவாகும். பதினெட்டு வயது இளம்பெண்ணைப் பார்த்து 80 வ்யது கிளவன் பிச்சைகேட்கும் போதும்கூட ஏன்,  7 வயது சிறுமியைப் பார்த்து பிச்சை கேட்கும் போதும்கூட "தாயே பிச்சை போடு" என்று தான் கேட்கிறானே தவிர "சிறுமியே பிச்சை போடு அல்லது குமரியே பிச்சை போடு" என்று கேட்பதில்லை. 

எங்களுடைய குடும்பத்தின் லட்சியம், மூலம் 'தாய்'. எவள் இல்லையென்றால் இந்த பூமியிலே நான் பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்துவிட்டால் நான் மீண்டும் அடைய முடியாதோ அவளே என்னுடைய வாழ்க்கையின் தத்துவங்களை துவக்கி வைக்கின்றாள்.

என்னுடைய தாயை நான் வணங்குகின்றேன். எனக்கு வாழ்க்கைக்குத் துணையாக ஒரு மனைவி வந்திருந்திருப்பாலானால் அவளும் அவளை வணங்கியாக வேண்டும். எனக்கு அவள் தருகிற இன்பங்களுக்காக என் தாயின் மீது ஏறி நின்று என் தாயாரை அவள் விலை பேச முடியாது. என்னுடைய தாய் என்பவள் தான் என் குடும்பத்தின் ராணி, அந்த ராணிக்குத் தோழிதான் என் மனைவியே தவிர அந்த மனைவி என்பவள் ராணி என்கின்ற அந்தஸ்த்தைப் பெற முடியாது.

அவளுக்கு வருகின்ற மருமக‌ளுக்கு வேண்டுமானால் அவள் ராணியாக இருக்கலாமே தவிர, என் தாய்க்கு அவள் தோழியாகத்தான் அடங்கி இருக்க முடியும். என் தாயை நான் வணங்கும்போது அவளும் வணங்கியாக வேண்டும். அப்படி அவள் வணங்க விரும்பவில்லையென்றால், என் மனைவியாக அவளை நான் அங்கீகரிக்க மாட்டேன். இதுதான் மேலை நாட்டிற்கும் இந்திய‌ நாகரிகத்துக்கும் உள்ள வித்தியாசம்.  இந்துக்களுடைய நாகரிகத்தில் தாய் என்கிற ஸ்தானத்திலிருந்தே சகலமும் ஆரம்பமாகின்றன" என்று சுவாமி விவேகானந்தர் அங்கே கூறினார்.

தாய் நம்முடைய பிறப்பிற்கு மூலமும் அவளே. உலகத்தில் நமக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்த உண்மை எது? "தாய்", அவள் மட்டுமே. இன்ன தாயின் வயிற்றில் பிறந்தோம் என்பதை மட்டுமே நாம் அறிவோம்.  தாய் காட்டித்தான் தகப்பனை அறிவோம். தகப்பன் கொண்டுபோய் உட்கார வைத்து "அரி நமத்து சிந்தம்" (pl check)  என்று எழுதச் சொல்லும் போதுதான் நாம் குருவை அறிவோம். 'அன்பே கடவுள், அறிவே தெய்வம்' என்று சொல்லிக் கொடுத்த பின்னாலே தான் நாம் தெய்வத்தை அறிவோம். அதனாலே தான் சுருக்கமாக நான்கு சொற்களை வைத்து 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று சொன்னார்கள்.

இந்த நான்கினுடைய வரிசையிலே சர்வ நிச்சயமாகத் தெரிந்த ஒரே உண்மை - மாதா, சந்தேகத்திற்கு இடமாக இருப்பது தெய்வம். சர்வ நிச்சயமாகவும், சந்தேகத்திற்கு இடமாகவும் இருப்பது பிதாவும், குருவும்.  இவர்கள் இருவர் பற்றியும் சந்தேகம் எழலாம், இந்த சந்தேகங்கள் உண்மையாகவும் இருக்கலாம். தெய்வம் முழுக்க சந்தேகத்திற்கு உரியது, ஆனால் அடையும் போது அது முழுக்க உண்மையானது . "மாதா" சந்தேகத்திற்கே இடமில்லாதது. அவளிடமிருந்தே நம்முடைய‌ ஜனனம் ஆரம்பமாகிறது. 

ஜனனம் ஆரம்பமாகும் போது இந்த தாயினுடைய வயிற்றில் நாம் பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வரம் வாங்கிப் பிறப்பதில்லை. அந்த இருவருடைய சந்தோஷத்தின் பலனாக ஆண்டவன் நம்மை அனுப்பி வைக்கிறான்.  அதனாலே தான் பிறப்பு என்பது ஆண்டவன் கொடுத்தது என்று அழைக்கிறார்கள் இந்துக்கள்.ஆண்டவன் கொடுத்ததா! பிறகு தாய் தந்தையர் நிலை என்ன என்று கேள்வி கேட்கின்றவ‌ர்கள் இதை அறிய வேண்டும். தாய் தந்தையினுடைய‌ விருப்பத்தின் படி ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ பிறக்க‌வில்லை. ஆண்டவனுடைய‌ விருப்பத்தின் படியே நாம் பிறக்கிறோம். அதற்கு இரண்டு கருவிகள் தான் தாயும் தந்தையுமாவர்.

ஜனனம் நமக்கு சர்வ நிச்சயமாக கிடைத்துவிடுகிறது. எந்த ஒரு குழந்தை பிறப்பதானாலும் கூட பத்தாவது மாதம் அந்த குழந்தை பிறக்கும் என்று ஒரு தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. பெரிய பெண்ணாக வளருகிற‌ ஒரு பெண் 16 வயதிலேயும் வரலாம் அல்லது 18 வயதிலேயும் வரலாம், ஆனால் குழந்தை என்பது 10 மாதங்களிலே தான் பிறக்கும் என்கின்ற ஒன்றுதான் உலகத்தில் உண்மை. 

அதன் பின்னால் மரணம் என்பது இன்ன தேதியில் தான் வரும் என்று யாருக்கும் நிச்சயமான டைரி கிடையாது. 

(தொடரும்)


சித்திரைத் திருநாள்

தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய‌ தமிழ்ப் புத்தாண்டு/ சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.
 தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதலாம் நாளே என தமிழ்நாடு அரசு 2008 ஆம் ஆண்டு அறிவித்தது. 1920 களில் இருந்தே தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாக தை முதலாம் நாளைக் கொண்டாட வேண்டும் என பல தமிழ் அறிஞர்கள் கூறிவந்தனர். இதனை அரசு ஏற்பு பெற்ற முடிவாக 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு சித்திரை முதலாம் நாளே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது. ஆனால் வழக்கத்தில், பெரும்பாலான மக்கள் சித்திரை முதல் நாளையே இன்றும் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்

தாயின் காலடியே சொர்க்கம்!

22.04.05ல் ஆனந்த விகடனில் வெளியான அம்மா பற்றிய ஒரு கட்டுரை...

உலகத்தின் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொ
ல்...அம்மாவைக் குறிக்கும் சொல்!


பிரபஞ்சத்தைப் படைத்தளித்த பரம்பொருள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாததால்தான், ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தாயைத் தந்தது. தாயும் தெய்வமும் தனித்தனி வடிவங்கள் இல்லை!

கடவுளின் படைப்பில் தன்ன
த்தின் நிழல்கூடப் படாதது, தாயின் படைப்பு ஒன்றுதான். இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், சமீபத்தில் தான் பெற்ற விழியற்ற இரு பிள்ளைகள் பார்வையைப் பெறுவதற்காகத் தன் விழிகளைத் தரும் நோக்கில் தற்கொலை செய்துகொண்ட தமிழ்செல்வியைச் சிந்தித்தால் போதும், இதயமுள்ள அனைவரையும் அழச் செய்த தமிழ்ச்செல்வியின் தற்கொலை ஒரு தவறான நடவடிக்கை...ஆனால், அதைச் தன்னலமற்றஒரு தாயால் மட்டுமே செய்ய முடியும்.

தாயை வேறெந்த மொழியில் விளக்கினாலும் வராத பொருள் தமிழில் விளக்கினால் வரும். தாய் தன்னுடைய குழந்தைக்கு உயிர் கொடுக்கிறாள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்து பின்பு அதை உலகத்தில் உயிர்மெய்யாய் உலவு விடுகிறாள். இந்த உண்மையை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் சேர்ந்து உருவானது 'அம்மா'!

இந்தியாவில் ஓர் லட்சிய பெண் தாயே. அவள்தான் தன்னலமற்று துன்பங்களைச் சகித்துக்கொள்கிற எந்த பாவத்தையும் மன்னிக்கிற மனோபாவம் கொண்டவள்.

மேலை நாடுகளில் பெண் ஒருவனால் மனைவியாகப் பார்க்கப்படுகிறாள். ஆனால் கிழக்கில் அவள் எப்போதும் தாயாகவே போற்றப்படுகிறாள். இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள்தன் முழுவாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பூ அரும்பாகி, மலராகி, கனியாய் கனிவது போல், பெண்களுக்கும் வாழ்வில் பெண்மை, தாய்மை, இறைமை என் மூன்று நிலைகள் உண்டு. பெண்மைக்குள் தாய்மை மலர்ந்தால் இறைமை தானாய் மலரும்.  மலையில் உள்ள கல்லை யாரும்  மதித்து வணங்குவதில்லை. அது சிற்பியின் கைப்பட்டு சிலையாகும்போது அதற்கு ஒரு மரியாதை பிறக்கிறது. அந்த சிலைக் கோவிலின் கருவறையில் வைக்கப்படும்போது தொழுகைக்குரிய தெய்வமாகிறது. கன்னிப் பெண் ஒரு கல்லைப் போன்றவள். இல்லற வாழ்க்கையில் அவள் சிற்பமாக செதுக்கப்படுகிறாள். தாயாகும்போது குடும்பக்கோவிலில் கருவறைக்குள் அவள் கடவுளாக்கப்படுகிறாள்.

உலகத்தின் எந்த இடத்திலும் கெட்ட பிள்ளை உண்டு. ஆனாலும் எங்கேயும் கெட்ட தாய் இல்லை. இதற்கு நம் இதிகாசத்திலும் சான்று உண்டு. 

கெளரவர்களின் தாய் காந்தாரி. கணவன் காணமுடியாத உலகைத் தானும் காண்பதில்லை என்று கண்களை
ப் பட்டுத்துணியால் மூடி மறைத்துக் கொண்டவள். காலம் முழுவதும் கற்புத் தவம் புரிந்த அந்த தாயுள்ளம், பாண்டவர்களால் துரியோதனனுக்கு துன்பம் நேர்ந்துவிடுமோ என்று கலங்கித்தவித்தது. போர் மேகம் சூழ்ந்த போது அவள் துரியோதனனை அழைத்தாள். 'மகனே என் கற்புத் தவத்தை உன் உடலுக்கு கவசமாக்குகிறேன். குழந்தையாய் பூமியில் நீ பிறப்பெடுத்த போதிருந்த நிர்வாணகோலத்தில் என் முன் வந்து நில். துணியால் மூடிவைத்திருக்கும் என் விழி துறந்து உன் மேனி பார்க்கிறேன். என் பார்வை படும் இடமெல்லாம் உருக்கின் வலிமை பெறும்.  அதன் பின் உன்னை யாராலும் அழிக்க முடியாது!' என்றாள்.

தாயின் முன்னால் நிர்வாணமாக நிற்க நாணிய துரியோதனன் இடுப்பில் ஓர் ஆடையை அணிந்து வந்தான். கணவனின் கரம் பற்றிய காலம் தொட்டு  மூடிவைத்த விழிகளைப் பட்டுத் திரை விலக்கி, முதன்முதலாக மகனைப் பார்த்தால் காந்தாரி.  ஆடை மூடிய தொடைப் பகுதியில் அவள் பார்வை படாததால் அந்த இடம் மட்டும் பலவீனமுற்றது. அதை அறிந்து வைத்திருந்த கண்ணன் காட்டிய சமிஞ்சையின்படி, களத்தில் பீமன் துரியோதனனின் தொடையில் கதையால் அடித்து நிலத்தில் வீழ்த்தினான். ‌

தான் பெற்ற நூறு பிள்ளைகளும் அழிந்ததற்கு மூல காரணம் கண்ணனே என்று புரிந்துகொண்டாள் காந்தாரி.  'கண்ணா! நான் ஒரு பத்தினி என்பது உண்மையானால் இவ்வளவு அழிவுக்கும் அடித்தளமான நீ அழிந்து போவாய்.  இன்றிலிருந்து முப்பத்தாறு ஆண்டுகள் முடியும்போது உன் குலம் முழுவதும் அழியும். உறவுகளின்றி அநாதையாய் நீ மரணத்தைச் சந்திப்பாய். இது சத்தியம்!' என்று சபித்தாள். அவளுடைய சாபம் அப்படியே நிறைவேறியதாக பாரதம் கூறுகிறது. கெட்ட பிள்ளைகளுக்குத் தாயாக இருந்தாலும், பாசமில்லாத கெட்ட தாயை எங்கும் பார்க்க முடியாது. அவதார புருஷனையும் சபிக்கும் ஆற்றல் பெற்றது தாயின் பாசம்.

உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட, எந்த நிலையிலும் துறக்க முடியாத உறவு தாயின் உறவு. பற்றுகளிலிருந்தும் விடுபட்ட துறவிகளுக்குப் பூர்வாசிரமம் இல்லை என்கிறது சனாதன தர்மம். ஒரு துறவியை, அவரைப் பெற்ற தந்தை சந்திக்க நேர்ந்தால், தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும்.  ஆனால் தாய் சந்திக்க நேர்ந்தால், அவள் திருவடிகளில் துறவி விழுந்து தொழ வேண்டும். தந்தைகட்கு இல்லாத மதிப்பை இந்து தர்மம் தாய்க்குத் தந்திருக்கிறது.

கேரளத்தில் உள்ள காலடியில் அவதரித்த ஆதிசங்கரர், எட்டு வயதில் நான்கு வேதங்களைக் கற்று முடித்து, பன்னிரண்டு வயதில் சாத்திரங்கள் அனைத்தையும் தேர்ந்து தெளிந்து, பதினாறு வயதில் பாஷ்யம் எழுதி, முப்பத்திரண்டு வயதில் அத்வைதியானார்.  அவர் துறவுக் கோலம் பூண்ட போது, தன் மட்டும் தனி மரமாக எப்படி வாழ்வது என்று தவித்தாள் அன்னை ஆர்யாம்பிகை. மரணத்தின் மடியில் மூச்சுத் திணறும் போது மகனுடைய மடியில் தலைசாய்க்கும் வரம் வேண்டினாள். 'தாயே! நான் எங்கிருந்தாலும் உன் மரணப் பொழுதில் வந்து மடி சுமப்பேன்' என்று சத்தியம் செய்தார் சங்கரர்.

காலம் அதன் போக்கில் வேகமாக ஓடியது. ஒருநாள் சிருங்கிரியில் சீடர்களுக்கு நடுவே அமர்ந்திருந்தபோது அவருடைய நெஞ்சில் தாயின் மரணப்படுக்கை நிழலாடியது. உடனே, காலடி நோக்கி விரைந்தார். மரண வாசலில் தடுமாறிக் கொண்டிருந்த தாயின் தலையை மடியில் சுமந்தார். ஆரியாவின் ஆன்மா அமைதியடைந்தது. ஊரும், உறவும் கூடியது. ஈன்ற அன்னைக்கு இறுதிக்கடன் முடிக்க சங்கரர் முடிவெடுத்தபோது 'துறவிக்கு ஏது உறவு?' என்று உரத்த குரலில் ஊர் கேட்டது. 'சந்நியாசம் வாங்கியவன் பிரேத சம்ஸ்காரம் செய்ய முடியாது' என்று அது தீர்ப்பு வாசித்தது. 'தர்மத்தை மீறினால் தள்ளி வைத்துவிடுவோம்' என்று சனாதனச் சமூகம் மிரட்டியது.

ஊரின் மிரட்டலுக்கும், உறவின் ஒப்பாரிக்கும் சங்கரர் வளைந்து கொடுக்கவில்லை. தன்னைப் பெற்ற தாயின் சடலத்தைத் தோளில் சுமந்தார். தனியனாய் கொல்லைப்புறம் நோக்கி நடந்தார். அன்னையின் சடலத்தை இறக்கி வைத்து, 'அக்கினித் தேவனே! சந்நியாச தர்மத்தைத் தாங்கி நிற்கும் நான் இதுவரை உனக்கு அவிர்ப்பாகம் அளிக்கவில்லை. இன்று என் தாயின் தேகத்தை உனக்கு ஆகுதியாய் அளிக்கிறேன். ஏற்றுக்கொள்' என்றார். அன்னை ஆர்யாவின் உடலை உடனே நெருப்பு சூழ்ந்தது. விருப்புவெறுப்புகளைக் கடந்து ஞானநிலை அடைந்த ஆதிசங்கரர், சுகதுக்கங்களுக்கு ஆட்பட்ட சாதாரண மனிதனைப் போல் தாயின் அன்பை நினைத்து நெஞ்சம் உருகி, ஐந்து பாடல்களில் தன் சோகம் முழுவதையும் இறக்கிவைத்தார்.  அந்த பாடல்கள் வடமொழியில் 'மாத்ருகா பஞ்சகம்' என்று அமரத்துவம் பெற்றுவிட்டன.

வாழ்க்கை உறவுகளை ஒரே நொடியில் உதறித் தள்ளிய பட்டினத்தாராலும் தாயின் உறவைத் தள்ள முடியவில்லை. தெரு மண்ணில் உருண்டும், குப்பையில் புரண்டும், காடு மேடுகளில் கால் கடுக்கத் திரிந்தும் பட்டினத்தாரின் காலம் நடந்தபோது, ஒருநாள் அவரைப் பெற்றெடுத்த தாய் கண் மூடிய செய்தி வந்து சேர்ந்தது. மயானம் நோக்கி ஓடினார். சுற்றத்தார் அடுக்கியிருந்த சிதையைத் தள்ளிவிட்டுப் பச்சை வாழை மட்டையில் தாயின் சடலத்தைக் கிடத்தி ஞான நெருப்பால் எரித்தார்.  பாசத்தால் ஆற்றமாட்டாமல் அனைவரும் தேம்பித் தேம்பிஅழும்படி பத்துப் பாடல்கள் பாடினார்.  தாயின் தியாகத்தை விளக்கும் பட்டினத்தாரின் பத்துப் பாடல்களை விஞ்சி நிற்கும் படைப்பு உலகத்தின் எந்த மொழியிலும் இருக்க முடியாது.

கன்னிமேரிக்கு மகனாய்ப் பிறந்த கர்த்தர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது, கண்மூடும் கடைசி நிமிடத்தில் தன் தாயை நினைத்தார். உடற் கூட்டிலிருந்து உயிர்ப் பறவை பறக்கும் அந்தக் கடைசி நொடியில் ஒவ்வொருவர் நெஞ்சிலும் தாயின் நினைவே நிழலாட வேண்டும் என்று உணர்த்துவதற்காகவே தன்னுடைய மரணப் பொழுதில் அவர் தாயை நினைத்தார்.

'தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது' என்று நபிகள் நவின்றார். 'ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களுள் ஒன்று தாயையும், தந்தையையும் புறக்கணித்தல்' என்கிறது திருக்குர்-ஆன்.

நிலத்துக்கடியில் நிறைந்து நீர் கிணற்றில் தெரிவதுபோல், பசுவின் உடலில் வியாபித்திருக்கும் பால் ம‌டிக்காம்பில் சுரப்பது போல், தெய்வம் ஒவ்வொருவனுக்கும் தாயில் தரிசனம் தருகிறது' என்பது நம் வைதீக மதத்தின் வாக்கு. ராமகிருஷ்ண பரமஹம்சர் தக்ஷிணேசுவரம் காளி கோயிலில் அம்பிகை தரிசனத்தில் ஆழ்ந்து கிடந்தாலும், பெற்ற தாயை இறுதிவரை பராமரிக்க மறக்கவில்லை. அவருடைய ஆன்மிகச் சீடர் விவேகானந்தர் வேதாந்த சிகரத்தில் நின்ற நிலையிலும், தாயின் விருப்பத்தை நிறைவேற்ற, தனக்குச் சடங்குகளில் நம்பிக்கை இல்லாவிடினும் கங்கையில் நீராடி, ஈர உடையுடன் காளி கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்யத் தயங்கவில்லை.


'என்னுடைய நல்ல குணங்கள் எல்லாவற்றுக்கும் என் தாய்க்கு நான் கடன்பட்டவன்' என்றார் ஆபிரகாம் லிங்கன். 'பிரெஞ்சு நாட்டில் நல்ல குடிமக்கள் உருவாக நல்ல தாய்மார்கள் பெருக வேண்டும்' என்றான் நெப்போலியன். 'அன்னையின் செல்வாக்கில்தான் என் பண்புகள் சிறந்தன. அவளால்தான் என் இலக்கிய ரசனையும் வளர்ந்தது' என்று நன்றி செலுத்தினார் காந்தியை சிந்தனையில் மகாத்மாவாகச் செதுக்கிய ரஸ்கின்.

கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் இதயத்தில்  கூட இறுதிவரை தாய்ப்பாசத்தின் ஈரம் இருந்தது.  இரண்டாம் உலகப் போரில் மோசமான தோல்வியைத் தழுவியதும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஹிட்லர், தன் மார்பில் தாயின் படத்தை தழுவியபடி நாற்காலியில் சரிந்து கிடந்தார் என்று சரித்திரம் சொல்கிறது.

'முள்ளில் படுக்கையிட்டுப் பெற்றோர் இமையை மூடவிடாத பிள்ளைக் குலங்கள்' பல்கிப் பெருகுவது பாரதப் பண்பாட்டுப் பெருமைக்கு உகந்ததன்று.  முதியோர் இல்லங்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது இந்த மண்ணுக்குரிய நாகரிகத்தின் நல்ல அடையாளமில்லை. குடந்தையில் தாயைத் தவிக்கவிட்டு, காசியில் கோதானம் செய்பவனைக் கடவுள் கண் திறந்து பார்க்க மாட்டான்.  நன்றி மறந்து தாயையும், தந்தையையும் புறக்கணிப்பவன், நரகத்தை வாழும் உலகிலேயே நாள்தோறும் அனுபவிப்பான். பெற்றோர்க்குச் சோறு போடாதவன் வாழ்க்கையில் உயர்ந்ததாக வரலாறில்லை.


அரசியலும், சினிமாவும் நம்மைப் பாதித்தபோல் வேறு எதுவும் பாதித்ததில்லை.  ராஜரிஷியாய் வாழ்ந்த காமராஜர் தாய்க்கு மட்டும் மாதம்தோறும் அடிப்படைச் செலவுக்கு 120 ரூபாய் அனுப்பிவைத்தார்.  கலைஞர் கருணாநிதி நாத்திகம் பேசினாலும் தாயைத் தெய்வமாகத் தொழுதிடும் ஆத்திகர்.  எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் அம்மா என்ற சொல்லின் ஆழம் கண்டவர்கள்.  இவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வளர்ந்தவர்களே தவிர, வீழ்ந்தவர்களில்லை.  இந்த இரண்டு துறைகளாலும் எத்தனையோ வழிகளில் மோசமாகப் பாதிக்கப்பட்ட என் வாழ்கால இளைஞர்கள் தாயைப் போற்றுவதில் இவர்களைத் தாராளமாகப் பின்பற்றலாம்.

பணத்தை மையமாக வைத்து உறவுகள் மதிக்கப்படும் காலம் இது.  தாய்ப்பாலில் வளர்ந்து, தந்தையின் வியர்வையில் உயர்ந்து, வெளிநாடுகளில் பணியாற்றிப் பணம் சேர்க்கும் இளைஞர்கள் சிலர் இன்பங்களைப் பட்டியலிட்டு அனுபவிக்கும் அவசரத்தில், ஆதரவற்று நிற்கும் பெற்றோரைப் புறக்கணித்துவிடுகின்றனர்.  அப்படிப் புறக்கணிக்கப் பட்ட பெற்றோரின் கண்ணீரில் வரையப் பட்டதுதான் இந்தக் கவிதை...

மகனே...
நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை மரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது
ஒருநாள்...
நீ ஈமெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்!


பாசத்தின் வேர்களினால் தான் பாரதத்தின் பண்பாட்டு மரம் பூத்துக் குலுங்குகிறது. அந்த வேர்களை யாரும் வெட்டிவிடாதீர்கள். மறைந்த காஞ்சி மகாப் பெரியவர் சொல்கிறார்..."தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு இந்த உலகில் வேறு எதுவுமில்லை. பிள்ளை தன்னுடைய அன்பைப் பிரதிபலிக்காவிடினும், தாய் அதைப் பொருட்படுத்தமாட்டாள்.  பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு! துஷ்டப் பிள்ளை உண்டு. துஷ்ட அம்மா கிடையவே கிடையாது.  பரிபூரணமான அன்பையும் தன்னலமற்ற உழைப்பையும் அம்மா ஒருத்தியிடம் மட்டுமே பார்க்க முடியும்."

'அம்மா என்று
அழைக்காத உயிர்
இல்லையே
அம்மாவை வணங்காமல்
உயர்வில்லையே'


என்னும் வாலியின் வைர வரிகள் எப்போதும் வேத மந்திரமாக நம் இதயங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

தஞ்சை பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) கோயில்

வாச‌க‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்கம், கடந்த நாட்களில் எனது அலுவலகப் பணியின் காரணமாக வலைப்பதிவை தொடர்ச்சியாக எழுத முடியவில்லை. எனினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னால் இயன்றவற்றை இவ்வலைப்பூவில் பதிக்கிறேன்.

எனது முந்தைய 'இராஜராஜ சோழன்' பற்றிய பதிப்பின் நிறைவாக‌த் த‌ஞ்சை பெரிய‌ கோவில் ப‌ற்றி எழுத‌ வேண்டும் என்ற முனைப்பு என்னுள் இருந்துகொண்டே இருந்த‌து. இன்று இணைய‌த‌ளத்திலும், வ‌லைபூக்க‌ளிலும் தஞ்சை பிர‌க‌தீஸ்வ‌ர‌ர் ஆல‌ய‌த்தைப் பற்றிய‌ செய்திக‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும் ப‌ர‌வ‌லாக‌க் காண‌ப்படுகின்ற‌ன.

இத்திருக்கோயிலின் த‌ல‌வ‌ர‌லாற்றைப் ப‌ற்றியும், அத‌ன் சிறப்பைப் ப‌ற்றியும் பெரும்பாலான தமிழ் ஆர்வலர்க‌ள் அறிந்திருக்கக்கூடும்.

thanjai-periya-kovil-33s.jpg


 இத்திருக்கோயிலின் பெருமையைப் போற்றுவோர் ஒருபுறமிருக்க, இதற்கு எதிர்கருத்துள்ளவர்களும் இங்கு உண்டு. இதைப்பற்றிய விவாதங்களும், கருத்துகளும் இன்றும் நடந்துகொண்டிருக்க இத்திருக்கோயிலின் சிறப்பையும், இத்தலம் உருவான வரலாற்றையும் இங்கு காண்போம்.

த‌ஞ்சை - பெய‌ர்க்கார‌ண‌ம்:

தஞ்சன் என்னும் அசுரன் மக்களை துன்புறுத்தி வந்தான் என்றும், இங்குள்ள மக்களைக் காக்க சிவபெருமான் அவனை வதம் செய்து அழித்த இடமானதால் தஞ்சாவூர் என்று பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.

ஆனால் வைணவக் கொள்கையுடையவர்கள் மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும் அதனால்தான் தஞ்சாவூர் ஆயிற்று என்று சொல்கிறார்கள். இப்படி இருவேறு கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் தஞ்சன் எனும் அசுரனின் கொடுமைகளுக்கு ஆட்பட்ட ஊர் தஞ்சாவூர் என்று தெரிகிறது.

த‌ஞ்சையின் சிறப்பு: 
 • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது.
 • உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 • உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது.
 • தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. மேலும் தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மையும் மிகவும் புகழ் பெற்றது.
 • கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.
 • மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.
 • இன்னொரு முக்கியச் சிறப்புமிக்க பெருமையாகப் போற்றப்படுவது இங்குள்ள "தஞ்சை பெருவுடையார் கோயில்".
 • இத்திருக்கோயில் வானத்தை நோக்கிப் பிரம்மாண்டமாய் எழுப்பப்பட்டு, உலகம் முழுவதும் வியந்து போற்றும்  வண்ணம் கட்டிடக்கலைக்கு பெயர் சேர்த்து நிற்கிறது. இந்தப் பெரிய கோயில் கோபுரக் கலசத்தின் நிழல் தரையில் விழாமல் கோபுரத்தின் மேலேயே விழும் வகையில் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது என்பதும் இத‌ன் சிறப்ப‌மைப்பு.

IMG_3162.jpg

தலவரலாறு:

சோழப் பேரரசின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவன் இராஜராஜ சோழன். இவன் சுந்தரசோழன் என வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனின் இளைய மகன். ஐப்பசிச் சதய நாளில் பிறந்தவன்; இயற்பெயர் அருண்மொழித்தேவன். பட்டப்பெயர் இராசகேசரி. இவருக்கு ஆதித்த கரிகாலன் என்ற சகோதரனும், குந்தவை என்ற தமக்கையும் இருந்தனர்.

தில்லைவாழ் அந்தணர்களால் இராசராசன் என்று பெயர் சூட்டப்பட்டவன். சிவபாதசேகரன், திருநீற்றுச்சோழன் முதலிய வேறு பெயர்களையும் உடையவன். இம்மன்னன் சிவபெருமான் மீது கொண்ட அதிகப் பற்றுதலின் காரணமாக தஞ்சாவூரில் மிகப்பெரிய கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினான்.  மேலும் இக்கோயில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும் மிகப்பெரும் சாதனையாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினான்.

அவனது விருப்பப்படி இந்தக் கோயில் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரும்பான்மையாக அவன் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த கற்கள் அனைத்தும் முழுமையாகச் செதுக்கப்பட்டு கோயிலாக வடிவமைக்க சுமார் 34 வருடங்கள் வரை ஆகியது.
 • கோயில் கோபுரம் தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரம் உடையது.  கோபுரம் கர்ப்பக்கிரகத்திலிருந்து 190அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
 • இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவமான கல் சுமார் 80 டன் அளவுடையது. 
 • இக்கோயிலின் மூலவரான பிருகதீசுவரர் (பெருவுடையார்) லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த லிங்கத்தின் உயரம் 13 அடி. ஆவுடை எனும் லிங்கத்தின் கீழ்ப்பகுதியான வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாக இருக்கிறது.  இந்த லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றங்கரையிலிருந்த ஒரு மலையில் இருந்து கல் எடுத்து வந்து செய்யப்பட்டது என்கிறார்கள். இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.    
 • இந்தக் கோயிலின் சுவாமி விமானம் 216 அடி உயரமுள்ளது - இதை தக்ஷிணமேரு எனச் சொல்கிறார்கள்.
 • இங்கு கோயிலின் முன்புறமுள்ள நந்தியும் மிகப்பெரிய அளவுடையது. இது 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இது போன்ற நந்தி உருவம் வேறு எங்கும் இல்லை. 
 • கருவூரார் எனும் சித்தரின் அறிவுரையின்படி 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் முதலில் இராஜராஜ சோழன் பெயராலேயே இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் வந்த போது பிருகதீசுவரம் என்று பெயர் மாற்றமடைந்தது. 
 • இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் உள்ள "தளிக்குளம்" வைப்புத் தலமாகும். அப்பர் பெருமான் திருவீழிமிழலைத் தாண்டகத்துள் "தஞ்சைத் தளிக் குளத்தார்" என்று பாடியிருக்கிறார். இந்த சிவகங்கையில் நீர் குறைந்திருக்கும் காலத்தில் சிவலிங்கம், நந்தியைக் காணலாம். 
 • கோயிலின் முதற் கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன் வாயில் என்றும், இரண்டாம் கோபுர வாயிலுக்கு இராசராசன் வாயில் என்றும், தெற்குக் கோபுர வாயிலுக்கு விக்கிர சோழன் வாயில் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது 
 •  இக்கோயிலில் உள்ள திருமேனிகளை இராசராசனும், அவன் மனைவியர்களும், அவன் குலத்தவர்களும், அமைச்சர்களும் தந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுக்களின் மூலம் அறியப்பட்டுள்ளது. 
 • கோயிலின் முதல் தளத்தின் உட்சுவர்களில் 108 வகையான நடன அமைப்புகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

temple-2.jpg

 • இங்குள்ள சிவதாண்டவம், திரிபுராந்தகர், சுப்பிரமணியர், விநாயகர், காளி முதலிய வண்ண ஓவியங்கள் கலைக்குச் சிறப்பு சேர்க்கின்றன. 
 • இராசராசன் கோயிற் பணிகளுக்காகப் பல ஊர்களிலிருந்து கொண்டு வந்த 400 நடனப் பெண்களை 2 நீளமானத் தெருக்களில் குடியமர்த்தினான். இப்பெண்டிர் தளிச்சேரி பெண்டிர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வசித்த தெரு தளிச்சேரி என்று பெயர் பெற்றது. இவர்களுக்குப் பட்டங்களும் அளித்துச் சிறப்பு செய்யப்பட்டன என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 • இது போல் கானபாடிகள், நட்டுவர், சங்குகாளம் ஊதுவோர், மாலைகள் கட்டித் தருவோர், விளக்கேற்றுவோர், பரிசாரகர்கள், மெய்க்காவலர்கள் முதலியோர்களையும் இராஜராஜன் நியமித்திருந்தான் என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 • கல்வெட்டுக்களில் இறைவனின் பெயர் ஆடல்வல்லான், தக்ஷிணமேருவிடங்கர் எனவும், பின்னர் இராசராசேச்சரமுடையார், இராசராசேச்சமுடைய பரமசுவாமி எனவும் குறிக்கப்பட்டுள்ளது. 
 • கோயில் வளாகத்தில் சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில்  63 நாயன்மார்கள் சிலைகள் பல வடிவங்களிலான 108 சிவலிங்கங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுவற்றில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 
 • இந்தக் கோயிலைச் சுற்றி அக்காலத்தில் வெட்டப்பட்ட அகழிகள் இன்னும் உள்ளன.
தபால் தலை:

Tanjai_stamp.jpg

மத்திய அரசு 1995ஆம் ஆண்டில் வெளியான மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலை வெளியிட்டது.
 
ஆயிரம் ரூபாய் நோட்டு:

Tanjai1000.jpg

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி  1000 நோட்டு வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் 4&வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின.

துணைக் கோயில்கள்:

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெருவுடையார் கோயில் தவிரவடமேற்கு மூலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலும், வடகிழக்குப் பகுதியில் வராகியம்மன் கோயில், சண்டிகேசுவரர் கோயில், கணபதி கோயில், நடராஜர் கோயில் போன்றவைகளும், முன்பகுதியில் பெரிய நந்தி கோயிலும், கருவூரார் கோயிலும் அமைந்துள்ளன.

இந்தியா டுடே (அழியவேண்டிய அவலங்கள்)

மனிதநேயம் பற்றிப் பேசும்
   மகாத்மாக்கள் இங்கு அதிகம்!

மதவெறியை பிரசவிக்கும்
   ஜாதிக்கட்சிகள் இங்கு ஏராளம்!

மக்களாட்சியைப் பற்றிப் பேசும்
   மன்னராட்சிக் கட்சிகள் இங்கு அதிகம்!

க‌வர்ச்சியைக் காட்டி பணம் சம்பாதிக்கும்
   கலர்ஃபுல் சேனல்கள் இங்கு ஏராளம்!

பெண்களைத் துர‌த்தும்
   நடுநிசிநாய்கள் இங்கு அதிகம்!

அன்னையின் கருவறையிலே நசுக்கப்படும்
   பெண் சிசுக்கள் இங்கு ஏராளம்!

பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும்
    கார்ப்பரேட் காலர்கள் இங்கு அதிகம்!

ஏழையின் செந்நீரை லஞ்சமாக உறிஞ்சும்
   அரசாங்க லட்சாதிபதிகள் இங்கு ஏராளம்!

இவைய‌னைத்தும் அழிய‌ வேண்டிய‌ அவலங்களே !!! 

பலாச்சுளைக் கணக்கு - கணக்கதிகாரம்

வ‌ழ‌க்க‌ம்போல‌ இணைய‌த‌ளத்தில் உலாவுகையில், 'கணக்கதிகாரம்' என்ற ஒரு த‌மிழ்க் க‌ணித‌ நூலின் பக்கங்க‌ளைப் ப‌டிக்க‌ நேர்ந்த‌து. இந்நூல் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவரால் எழுத‌ப்ப‌ட்ட‌து.

இதில் காணப்படும் கணித வழிமுறைகள் மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையில் தோய்ந்து, தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல் ரீதியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கதிகாரம் 1850 களில் இருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளது.

வலைப்பக்கத்தில் வாசித்ததை உங்க‌ளுட‌ன் இங்கு ப‌கிர்ந்துகொள்கிறேன். இணையதள வாச‌க‌ர்க‌ள் ஏற்க‌னவே இதைப் ப‌டித்திருந்தாலும் மீண்டும் இங்கு நினைவுகூறுகிறேன்.
 
ஒரு பலாப் பழத்தை அறுக்காமலே அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதைக் கண்டறியும் வழி கொடுக்கப் பட்டுள்ளது.
     "பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
     சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
     ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே
     வேறென்ன வேண்டாஞ்ச்சுளை"


அதாவது பலாப்பழத்தின் காம்பைச் சுற்றயுள்ள முற்களை எண்ணி அதனை ஆறால் பெருக்கினால் வரும் விடையை ஐந்தால் வ‌குத்தால் கிடைப்ப‌து அந்த‌ பலாவில் உள்ள‌ எண்ணிக்கையாகும்.

உதாரணம்:

காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 100 எனில் 100 x 6 = 600     600 /5 =120 பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 120 ஆகும். உங்களுக்கு பொறுமை இருந்தால் பலாபழாத்தின் மேல் உள்ள சிறு முள்ளுகளை எண்ணி கணக்கு போட்டு பாருங்களேன்.............

Ref:

சங்க இலக்கியம், தமிழ்மொழியின் வரலாறு

நான் சமீப காலமாக‌ சங்க இலக்கியங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றைப் பற்றிய குறிப்புகளை இணையதளத்தில் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். தொடரும் நாட்களில் சேகரிக்கப்பட்ட குறிப்புகளை ஆராய்ந்து, அதன்பின் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இச்சேகரிப்பின் முக்கிய நோக்கம் இணையதளங்களிலும், ஏனைய பிற வடிவிலும் பரவலாகச் சிதறிக் கிடக்கும் தமிழ் இலக்கியக் கட்டுரைகளை ஒருங்கிணைத்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆர்வமுள்ள இணையதமிழ் வாசகர்கள் பயனடையும் வகையில் எனது மற்றொரு வலைபக்கத்தில் பகிர்ந்துள்ளேன்.

வலைதள முகவரி: http://tamilliteratureworld.blogspot.com

வாசகர்கள் கீழுள்ள தலைப்புகளைப் படிக்க, அதன் மீது சொடுக்கவும்.

தேசிய அறிவியல் தினம்

மறைந்த இயற்பியலாய்வாளர் சர். சி.வி. ராமன் அவர்களின் 'ராமன் விளைவு'' கண்டுபிடிப்பின் காரணமாக, வருடா வருடம் பிப்ரவரி 28ஆம் நாள் "தேசிய அறிவியல் தினம்" ஆகக் கொண்டாடப்படுகிறது. 

1928ல் இந்த தினத்தில் தான் அவரது ராமன் விளைவு கண்டுபிடிப்பிற்காக, 1930ல் நோபல் பரிசு பெற்றார். இதை நினைவுபடுத்திக் கூறும் வகையில் ஆண்டுதோறும் இன்றைய தினம் தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.


இயற்பெயர் - சந்திரசேகர வெங்கட ராமன்
 

தோற்றம் ‍- 07.11.1888
 

மறைவு - 21.11.1970

பேய் இருக்கா?


வேடிக்கையான விஷயம் என்னவென்றால் சிறுவயதில் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பேய் பற்றிய பயம் கண்டிப்பாக இருந்திருக்கும். இதற்குக் காரணம் பேய் பற்றிய கதைகளை நாம் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே கேட்டதுதான்


முன்னொறு நாளில் AXN சேனலில் பேய்களைப் பற்றியநிகழ்ச்சியைப் பார்த்ததாக‌‌ ஞாபகம், ஏதோ ஒரு அருங்காட்சியகத்தில் இரவு வேளையில் பேய்கள் உலாவுவதாகவும் அவைகளின் உருவம் CCTV கேமிராக்களில் பதிந்துள்ளதாகவும் காட்டப்பட்டது. ஐரோப்பாவில் ஒரு பெரியநூலகத்தில் நடுஇரவில் பேய்களின் நடமாட்டம் இருப்பதைக் கண்டதாகவும், நூல்கள் பரவலாக‌ச் சிதறிக்கிடந்ததைப் பற்றியும் ஒளிபரப்பினார்கள். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

இதைப் பற்றி கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் உரையாடியது நினைவிலுள்ளது. குழந்தை பருவத்தில்  சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அம்மாக்கள்  வெவ்வேறு வேடிக்கை கதைகளைக் கூறி உணவு ஊட்டுவது இயல்பு. அப்போது 'நீ சாப்பிடலேனா பூச்சாண்டி வந்து உன்னத் தூக்கிட்டு போயிடும்' என்று கூறி மீதமுள்ள உணவை குழந்தைகளுக்கு ஊட்டுவது வழக்கம். ‌‌‌‌‌‌‌

அன்றிலிருந்தே குழந்தைகளுக்கு பேய் பற்றிய பயம் தொத்திக்கொள்ளும். மேலும் இரவில் தூங்காமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இருட்டில் விழித்துக்கொண்டிருந்தால் பேய் பிடித்துக்கொள்ளும் என்று சொல்லி அவர்களைத் தூங்கவைப்பார்கள். அதன்பின் இருளைப் பார்க்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு அந்த ஞாபகம் தோன்றும்.  ‌‌‌

இரவில் தூக்கம்வராத நேரங்களில் எங்கோ ஒரு மூலையிலிருந்து சத்தம் வருவது போலவும், ஜன்னலுக்கு வெளியே ஏதோ ஒரு கை அசைவது போலவும் தோன்றும். இதற்காகவே கண்களை இறுக்க மூடி, தலையிலிருந்து கால் வரை நன்றாகப் போர்த்திப் படுத்துத் தூங்குவேன். 'எங்க எழுந்தா பேய் பிடிச்சிட்டு போயிடும்னு நெனச்சு' அந்த பயத்திலேயே தூங்கிவிடுவேன்.  

இரவில் தூங்கும்போது தூரத்தில் வினோதமான  சத்தம் கேட்பதுபோல தோன்றுவதும், ஒரு சில குழந்தைகள் இவ்வகையான பயத்தின் காரணமாக தூக்கத்தில் உச்சா போவதும்  கேள்விப்பட்டஒன்று.

என் சிறுவயதில் பேய் பற்றி அறிய எனக்கு மிகுந்த ஆவல் இருந்தது. மாலை நேரத்தில் என் நண்பர்களுடன் உரையாடும் போது ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தெரிந்த, அறிந்த, பழக்கப்பட்டகதைகளை மிகைப்படுத்திக் கூறுவார்கள்.  

சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த திகில் படத்திலிருந்து ஒருசில காட்சிகளை தங்களுக்குத் தேவையான இடங்களில் நிரப்பி அக்கதைகள் உலவுவது இயல்பு. நானும் இதற்கு விதிவிலக்கல்ல‌. இதற்காகநாங்கள்அனைவரும் ஹவுசிங் யூனிட்டின் மொட்டை மாடிக்குச் சென்று இரவு 7 அல்லது 8மணி வரை விவாதிப்போம். விவாதம் முடிந்து கீழே செல்லும் போது மனதிற்குள் நான் கடைசியாகச் செல்லக் கூடாது என்பதை எண்ணிக்கொண்டே இருப்போம்.            ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சில நேரங்களில் நான் கடைசியாக வரும்போது பின்னால் திரும்பிப் பார்ப்பதற்கு தைரியம் இல்லாமல் அவசரஅவசரமாக படிகளைத் தாவிச் செல்வது வழக்கம். இதற்குக்காரணம் Speed'ஆ போனா பேயால நம்மல பிடிக்கமுடியாது என்பது தான்

நண்பர்களில் சிலர் வீட்டிற்கு அருகிலிருந்தசுடுகாட்டைப் பற்றி விவரிப்பார்கள். இரவு நேரங்களில் அங்கிருந்தஏதோ விசித்திரமான சப்தம் வருவதாகவும், பிணங்களை எரிக்கும்போது அவைகளின் கை கால்கள் எழத்துடிப்பதையும், அப்படிப்பட்டநேரங்களில் அங்கு வேலை செய்பவர்கள் அப்பிணங்களை பெரியதடிமூலம் அடிப்பதாகக் கூறுவார்கள்.  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

எங்கள் வீதியைப் போலவே ஊரெங்கும் இதுபோன்றபேய்க்கதைகள் நிறைந்துள்ளன. எனது சிறுவயதில் மாமாவுடன் செகண்ட் ஸோ "Evil Dead" படம் பார்த்துவிட்டு யமஹாவில் வரும்போது, எங்களுக்குப் பின் யாரோ ஓடிவருவதைப்போலவும், திரும்பிப் பார்த்தால் அவைகளிடம் நான் அகப்பட்டுக் கொள்வேன் என்றபயத்தில் கண்களை இறுக்க மூடிக்கொண்டு வீடு வந்து சேருவேன். இதுவரை மாமாவிடம் அதைப் பற்றி கூறியதில்லை. ‌‌‌‌‌ ‌

இரவு நேரங்களில் அம்மா தொலைவிலுள்ளகடைக்குப் போகச் சொல்லும்போது அதனை கண்டிப்பாகமறுக்கும் நான், அந்தசுடுகாட்டைத் தாண்டி போகணும் பயமாயிருக்குன்னு சொன்னா எங்கசிரிப்பாங்களோனு நினைச்சு, "ஆம்பிளபையன்னா, தைரியமா இருக்கணும் இப்படி பேய்க்கெல்லாம் பயப்படக் கூடாது" என்று எனக்குள் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி பக்கத்து வீட்டு நண்பனை துணைக்கு அழைத்துச் செல்வேன்.  

அத்தகையநேரங்களில் நண்பனிடமிருந்து வரும் முதல் கேள்வி "டேய் உனக்கு பயமா இருக்குன்னுதானே என்னை துணைக்குக் கூப்பிடற‌" என்பான். நானும் பதிலுக்கு "அப்டிலாம் ஒண்ணுமில்ல தனியா போனா போர் அடிக்கும் அதான் உன்னகூப்பிட்டேன், உனக்கு பயமா இருந்தா நீ வீட்டுக்குப் போ" என்று உள்ளுக்குள் பயமிருந்தாலும் வெளியிலபொய் சொல்லுவது வழக்கமான ஒன்று. அப்பொழுதுதான் நாளைக்கு நண்பர்களுக்கு மத்தியில் இதபத்தி பேசும்போது 'அருணுக்கு ரொம்பதைரியம்னு' நாலுபேர்கிட்டசொல்லுவான்னு ஒரு அல்பஆசைதான். ‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

பேயெல்லாம் இரவு நேரங்களில் மட்டுமே உலாவுவதாகவும், பாழடைந்தகிணறு, ஆள்நடமாட்டமில்லாதபகுதிகள், ஊருக்கு வெளியே ஏதோ ஒரு பகுதியில் குடியிருப்பதாகசொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பேய்களில் ஆண் பேய் பற்றி ஒரு கதையைக் கூட கேள்விப்பட்டதில்லை, எல்லாமே பெண் பேய்கள் தான்.  

தற்கொலை செய்து கொண்டபெண்கள், ரயிலில் அல்லது பேருந்தில் அடிபட்டமனிதர்களின் ஆன்மா பேயாகத் தொடரும் என்று நண்பன் கூறுவான். சினிமாவில் காண்பிப்பதைப் போல பேய்களுக்கென்று ஒரு தனி வெள்ளை நிறபுடவையும், பிசாசுகள் மனிதரத்தம்குடிப்பதாகவும், விடிந்த பின் அவைகள் மறைந்து போவதும் இன்றும் சிறுவர்களிடம் பரவலாக நம்பப்படுகிறது.  ‌ ‌ ‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ஞாயிற்றுக்கிழமைகளில் பாட்டி வீட்டிலிருந்து கிளம்பும்போது அன்று சமைக்கப்பட்ட சிக்கன், மீன், மட்டன் போன்றவற்றை பாட்டி எங்கள் வீட்டிற்கு கொடுத்தனுப்புவது வழக்கம். அத்தகைய நேரங்களில் நான் தனியே செல்லவேண்டியதால், கூடையில் "வேப்பிலையும், ஏதோவொரு இரும்பும்" வைத்து அனுப்புவது அன்றைய நாட்களின் வழக்கம். ஒருசில நாட்களில் மிகுதியான பயத்தின் காரணமாக காய்ச்சல் வருவதும், அதற்காகவே அம்மா தூங்கும்போது நெற்றியில் திருநீரிட்டு, கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் சொல்வதும் இன்றும் நினைவிலுள்ளது.   

இதனாலேயே தூக்கத்தில் தாகம் எடுத்தாலும் இருட்டில் தனியே சமையலறைக்குச் செல்லபயந்து, அம்மாவை எழுப்புவது வழக்கம். ஒருசிலநாட்களில் பயத்தின்காரணமாகஅப்படியே தூங்கி விடுவேன். என்றாவது ஒரு நாள் இரவில் தனியே செல்லசந்தர்ப்பம் கிடைக்கும்போது யாரோ நம்மை அழைப்பது போலவும், திரும்பித்திரும்பி பார்த்துக் கொண்டே செல்வேன்.  

சில நேரங்களில் இருட்டில் திரும்பிப் பார்க்க தைரியம் இல்லாமல் ஒரே ஓட்டமாக வீடு வரை ஓடிவருவேன். வீட்டிற்குள் நுழையும்போது நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு, தலைமுடியை சரிசெய்து, இயல்பாக இருப்பது போல் உள்நுழைவேன்.  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

இதனாலேயே ஆள் நடமாட்டமில்லாதஇடங்களுக்குப் போவதை தவிர்ப்பேன். எங்கு சென்றாலும் யாராவது பக்கத்தில் செல்லும்போது "நல்லவேளதனியா போகல, இவரு கூடவே போயிடலாம்" என்று மனதிற்குள் எண்ணுவது வழக்கம். சிறுவயதில் யாராவது 'பேய் இருக்கறதநம்பறீங்களா' என்று வினவும்போது 'இல்லை' என்று கூறினாலும் மனதிற்குள் ஒருவிதபயமிருந்தது உண்மையே.