சூப்பர் மார்க்கெட் போகணும் லேட் ஆகுது!!

”ஏய் உள்ளே என்ன பண்ற? சூப்பர் மார்க்கெட் போகணும் லேட் ஆகுது”.

“டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க, நவீன் பாத்ரூம் போய்ட்டு இருக்கான்”.

“ஆமா வெளியில போகும் போது தான் அவனுக்கு எல்லாம் வரும்”.

“சரி, மறக்காம லாக் பண்ணி கீ எடுத்துக்கோ!”

சூப்பர் மார்க்கெட்டினுள் நுழையும் போது கதவிலிருந்த வந்த குளுமையான காற்று கோபியின் முகத்தில் பட்டது. தனக்கே உண்டான அவசர பாணியில் ஒருபுறமிருந்த தள்ளுவண்டியை உள்ளே தள்ளிச் சென்றான்.

”நவீன், உங்கப்பாவுக்கு பொறுமையே இல்லடா. எப்டி போறாரு பாரு”.

நவீன் தன் மழலை மொழியில், அப்பா பேட் ஃபெல்லோ என்று செல்லமாக சொன்னான்.

”காயத்ரி, பர்சேஸ் முடிச்சிட்டு நைட் அப்பிடியே ஹோட்டல்ல சாப்பிட்டுப் போலாம்”.

“ஓகே கோபி, இன்னைக்கு வீட்டு பக்கத்துல இருக்கிற நார்த் இண்டியன் ரெஸ்ட்ரன்ட்ல நாம சாப்பிட்டதே இல்ல, சோ அங்க ட்ரை பண்ணலாம்”.

உள்ளே நுழைந்தபின் எங்கு பார்த்தாலும் நியூ இயர் ஆஃபர், இதை என்னும்போதே கோபியின் கை பாக்கெட்டிலுள்ள கடன் அட்டையை தடவிச் சென்றது. ம்ம் இன்னைக்கு எவ்வளவு ஆகும்னு தெரியல, வழக்கம்போல ஃபோர் டிஜிட் போகாமிருந்தா சரி என்று எண்ணிக் கொண்டே சென்றான்.

“அப்பா, எனக்கு அந்த மெக்குயின் கார் வேணும். என்கிட்ட கிரீன் காரே இல்ல!”

“கடைக்கு வந்தா போதும் எப்ப பார்த்தாலும் இது அது வேணும்னு ஒரே டார்ச்சர். போன வாரம்தான் ஒரு கார் வாங்கின, அதுக்குள்ள இன்னோரு கார்…அப்பா சொன்ன பேச்சுக் கேட்டு சைலண்டா இரு, இல்லே நல்லா அடி வாங்குவே. வர வர உன் தொல்லை அதிகமாயிருச்சு”.

நவீன் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அருகிலிருந்த சிறுவனின் கையிலிருந்த கார் பொம்மையை வெறித்துப் பார்த்தான்.

“டேய் ஏன் அழுதிட்டு இருக்க? கடைக்கு வந்தா சைலண்டா இருக்கமாட்டே நீ!” 

“அம்மா, அப்பா என்னை திட்டிட்டே இருக்காரு. நான் மெக்குயின் கார் கேட்டேன் அப்பா நோ சொல்லிட்டாரு”

”நவீன் மறுபடியும் அழுகையை ஆரம்பிக்காதே. ஒழுங்கா குட் பாய்யா இரு, அம்மா அப்பாகிட்ட சொல்றேன்”.

“கோபி உன்கிட்ட க்ரே கலர் சர்ட் இல்ல, இந்த சர்ட் பாரு ரொம்ப நல்லா இருக்கு”.

”ரெண்டு வாரம் முன்னாடிதான் ஒரு சர்ட் எடுத்தேன். ஆல்ரெடி நிறைய சர்ட் இருக்கு, சோ இப்ப வேணாம்”.

”நல்லாயிருந்தா எடுக்கவேண்டியதுதானே, அப்புறம் நாம தேடும்போது வேணுங்கிற கலர் கிடைக்காது”.
”ஒவ்வொரு தடவையும் இப்டியே வாங்கிட்டுடிருந்தா அப்புறம் அதுவே பழக்கமாயிடும். இதை பார்த்துத்தான் அவன் கத்துக்கிறான், எங்க போனாலும் அடம்புடிக்கிறது”

”சரி உன் இஷ்டம் வேண்டாம்னா எடுக்க வேணாம்”.

“வழக்கம்போல மறந்திட்ட!, அரிசி மாவு இல்லைன்னு ஞாபகப்படுத்த சொன்ன, மறக்காம எடுத்துவச்சிக்க. நான் பில்லிங்ல வெயிட் பண்றேன்”.

“கோபி இந்தா இதையும் பில் போட்டிரு”.

“ஏய் இதை எதுக்கு எடுத்திட்டு வந்தே! அவனே மறந்திருப்பான்”

“பாவம் அவன், ஒரு கார் தானே, இருந்திட்டு போகட்டும். புள்ளைக்கு வெளியில போய் விளையாட முடியல அட்லீஸ்ட் வீட்டுக்குள்ளே தானே இருக்கான். நெக்ஸ் டைம் நோ சொல்லிடலாம்”

”சரி நீ மூஞ்சிய தூக்கி வச்சிக்காத, அதை குடு நான் பில் போட்டுட்டு வரேன்”.

பில் பண்ணிவிட்டு தன்னுடைய சொகுசு காரில் ஹோட்டலுக்கு சென்றனர். இரவு முழுவதும் காரை வைத்து விளையாடிவிட்டு அசதியில் நவீன் தூங்கினான்.

அடுத்த நாள் காலை, கோபி பில்லை தேடிக்கொண்டிருந்தான்.

“என்ன தேடிட்டு இருக்க?”

“நேத்து வாங்கின பில்லைப் பார்த்தியா?”

”எதுக்கு தேட்ற, நேத்தே அதை பின்ல போட்டுட்டேன்”

“சூப்பர், அட்லீஸ்ட் கார் விலை எவ்வளவுனு பார்த்தியா?”

“இல்ல அப்டியே கவரோட போட்டுட்டேன்”

“வாங்கற நாமே விலையை பார்க்காம வாங்தித் தர்றோம். அப்புறம் புள்ளையே திட்டி என்ன பண்றது. யோசிச்சு பாரு நாம சின்ன வயசில இப்படி பார்த்ததெல்லாம் வேணும்னு அடம்புடிச்சிருப்போமா? அப்ப நமக்கு காசோட வேல்யூ தெரியும், அப்பா அம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்க. இப்ப நிலைமையே வேரே, வேணுங்கிறத இப்பிடியே வாங்கிக் குடுத்திட்டு இருந்தா அவனுக்கு காசோட அருமையே தெரியாது. பெரியவனானா அவனுக்குத்தான் கஷ்டம்”

“ஆமா கோபி, நானும் இப்பத்தான் ரியலைஸ் பண்றேன். சரி இனி ஸ்லோவா நாமதான் சொல்லித்தரணும்”.