இனிய‌ தீபாவளிஇணையதள வாசகர்களனைவருக்கும் எனது இனிய‌ தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தாயின் கடமை சரியே! நற்றிணை

பருவக் கோளாறின் காரணமாக காதல் வயப்பட்டு, தலைவன் பிரிவை நினைத்து வாடும் தனது பெண்ணை அன்னையொருத்தி கண்டித்தாள். சினம் கொண்ட தலைவிக்கு, தாயின் கடமை சரியே என தோழி எடுத்துரைத்தல்;


வளர்பிறையாய் உம் காதல் வளர்ந்து
குளிர்நிலவாய் அமுதமழை பொழிந்தால்
குலமகளே ! உமை வாழ்த்தாமல்
உன் தாயின் மனமென்ன ;
நிலமகழ்ந்து எடுத்திட்ட
இரும்பாகப் போமோ?

கருவுற்ற காலத்தில் அவள் நாவினைக்
கசப்பாக்கித் தொல்லை தந்தபோது
திருவுற்ற அந்தத் தாய்
புளிப்பாலே கசுப்பு போக்கி உன்
புன்னகை காணத் தவமிருந்தாள்!
ஆலின் இலைபோன்ற அவள் அழகு வயிற்றை ஒரு
சாலின் வடிவாக்கி நீ அலங்கோலம் தந்தபோதும்,

உன் கோலம் காண்பதற்கே அவள்
உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்!
மணிவயிற்றுக்குள்ளிருந்து நீ
மாறி மாறி உதைத்த போதும்,
வலிபொறுத்துக் கொண்டபடி
அணியென்ன பூட்டலாம் அந்தக் காலுக்கென்று
ஆயிரம் சிந்தனை செய்திருந்தாள்!

ஊதையில் துரும்பெனத் தாயுடல் அலைக்கழித்து
உலகில் நீ பிறந்துருண்டு அழுதபோது இன்ப
போதையில் துன்பமெலாம் மறந்திருந்தாள்! இன்றவள், உன்
பாதையில் பாடம் சொல்லல் ஒரு பாபமா?
பூவைத்துப் பொட்டிட்டு முத்தமாரி பெய்தபோது நீ,
பூவையாய் ஆவது எப்போதென்று ஆண்டெண்ணிக் கிடந்த அன்னை;

கோவையாய் சிவந்த உன் இதழைக் கிளியொன்று
கொத்துமென்று தெரியாத பேதையா  என்ன?
ஆற்றில் இறங்கிக் குளிக்கத் தடை கூறவில்லை அன்னை!
ஆழம் தெரிந்து இறங்கென்று கூறுகின்றாள் அவ்வளவே!
அதற்குள் நீ அவன் வருமட்டும் வழிபார்த்துக் காத்திருந்து
அல்லும் பகலும் உறக்கமின்றி வாடிவதங்கி,
உடலைக் கெடுத்துக் கொள்கின்றேன் என்றால்;
உனை உயிராக நினைக்கின்ற பெற்றோர்கள் ஒப்புவரோ?
உன் தோழி கெஞ்சுகின்றேன்; உடனே கேள்!
உறங்கி எழு! உற்சாகமாய் இரு!
உறையூர் எங்கும் ஓடிவிடாது - உன்
அறையூரில் அடங்கத்தான் போகிறது!" - என்றுரைத்துச் சிரித்தாள்.

மனதைத் தொட்ட... கவிதைகள்!

இணையதளத்தில் சமீபத்தில் நான் வாசித்த, என் மனதைத் தொட்ட கவிதைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். கவிதை எழுதியவர்களின் பெயர் மற்றும் விபரம் அறிய முடியவில்லை.

1. என்னைக் குத்திக் காட்டியது - என் தமிழ்
எத்தகைய யதார்த்தமான சிந்தனையைத் தூண்டும் வரிகள்! 
2. தமிழ் மொழி

 3. அம்மா

  
4. நம்பிக்கை


5. கமல்ஹாசன் கவிதைகள்


 இவைகளை இயற்றிய அனைத்துக் கவிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

வாணன் மணந்த வண்ணத் திருமகள்! நற்றிணைஎனது முந்தைய பதிவின் தொடர்ச்சி -

எனது முந்தைய பதிவில் குறிப்பிட்ட நற்றிணை பாடல் (380) பற்றிய தொடர்ச்சி;

சென்ற ஆண்டு தமிழ் புத்தகத் திருவிழாவில் கலைஞர் எழுதிய "சங்கத் தமிழ்" என்ற நூலை வாங்கி வாசித்தேன். தமிழ் மூதறிஞர் அவர்கள் தனது கலைநயத்தையும், கவிநயத்தையும் கொண்டு வாசிப்பவர்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் கவிநடையின் வழியே சங்கத் தமிழ் பாடல்கள் ஒரு சிலவற்றிற்கு உரை வழங்கியுள்ளார். 

இக்கவிதை நூலில் புறநானூற்று  பாடல்கள் 15உம், எட்டுத்தொகை நூல்களிலிருந்து 15 அகப்பொருள் பற்றியபாடல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்கத்தமிழ்ப் பாடல்களைப் படித்து அவற்றின் சுவையை உணர்ந்து இன்புறும் நோக்கில் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.  இது சங்கத் தமிழ்க் கற்கும் ஆசையுள்ள அனைவரும் படித்து சுவைக்க வேண்டிய ஒரு புத்தகம்.

தலைவனும் தலைவியும் காதல் புரிந்து, திருமணமாகி கலவியல் கலைகள் கற்றதும், பிள்ளை பெற்றபின் அத்தலைவி  தொட்டிலைக் காத்து கட்டிலுக்கு ஓய்வளித்தாள். இதனால் கவலையுற்ற மருதத்திணையின் தலைவன் தன்னுலெழுந்த காமத்தணல் தணிக்க பரத்தையின் இல்லச் சிறை புகுந்தான்.  பரத்தையின் கட்டில் சுவைத் தெவிட்டத் தொடங்கியதாலும், தலைவியின் உள்ளப் புலம்பல் உணர்ந்து, தலைவியை நோக்கிச் சென்றான்.
                                                     
இதைவாணன் மணந்த வண்ணத் திருமகள்என்ற தலைப்பில் கலைஞர் கூறும் கவித் தமிழில் காண்போம்.

"குலவும் கிள்ளை - குடும்பப் பாவை -
உலவும் தென்றல் - உதய தாரகை - அந்த

மலரை மணந்தான் ஒரு மருதத்தலைவன் - இந்த
உலகை மறந்தனர் இருவரும் இரவில்!

இலவம் பஞ்சுப் படுக்கைப் பள்ளியில் - கலைகள்
பலவும் கற்றார், கற்றார், நாளும் கற்றார்!

கட்டிலில் கற்றது கைம்மண் அளவே - இன்னும்
கல்லாதன கடல்மண் அளவே - இதனைப்

பட்டுமேனிப் பத்தினிக்குரைத்து
பற்பல கோடி இன்பம் தந்தான்.

கொஞ்சிப் பிணைந்த குடும்பக் கொடியில்
பிஞ்சு போன்று ஒரு பிள்ளை உதித்தது.

மஞ்சம் சிலநாள் ஓய்வு பெற்றதால்
மணாளன் தவித்தான் தனிமைத் துயரில்!

மரத்தை வெட்டும் கோடரி போல - அவன்
மனத்தை வெட்டும் காமக்கிளர்ச்சி!

அறத்தை மறவா அவன் இல்லக்கிழத்தி,
சிறுத்தைப் புலியாய் மகனை வளர்க்க -

கனத்த தனங்களில் பெருகும் பாலை,
கறுத்த காம்பின் வழியாய்க் கொடுத்தாள் - அதனை

நினைத்த போதெல்லாம் எச்சிலால் நனைத்து
இனித்த சுகத்தை இழந்த கணவன்;

தணலாய்க் காமம் தகித்தது கண்டு -
தாகம் தணிக்கப் பெரும் மோகம் கொண்டு;

பரத்தை ஒருத்தியின் படுக்கையில் விழுந்தான் -  அவன்
கரத்தைப்பற்றி அவளும் காதலைப் பொழிந்தாள்.

காலை, மாலை, இரவு, பகல் என்ற கணக்கேயின்றி
காம லீலையில் கழிந்தன நாட்கள்!

மூலையில் அமர்ந்து வாடுகின்றாள் - அவன்துணைவி
பாலையில் வெண்ணெய்போல் உருகுகின்றாள்!

அவளிருக்கும் நிலைமைதனை அறிந்ததாலே
அவசரமாய்ப் புறப்பட்டான் தேர் ஏறி!

பாணன் ஒருவனைப் பக்குவப்படுத்தி
பாவையின் கோபம் தணிக்கச் சொன்னான்.

இசைப்பாணன் அவள் இல்லம் சென்றான்.
இங்கிதமாய் எவ்வளவோ எடுத்துரைத்தான்.

இல்லக்கிழத்தியோ இறவாச் சினமுடன்
இலைமறைகாய் என எதுவுமின்றி

எல்லா விபரமும் எடுத்தியம்பிப்
பொல்லாக் கணவனைப் புறக்கணிக்கின்றாள்.


பல்கண்ணனார் என்னும் புலவர்,
பாடிய சங்கப் பாடலில் இப்படிப்

பாணன் ஒருவனிடம் தனது நிலையைப்
பட்டவர்த்தனமாய் தலைவி சொன்னதாய்ச் சொன்னதை மாற்றி

கற்பனையொன்றைத் தீட்டீட முனைந்தேன் (கலைஞர்)
கருப்பொருள் எதுவும் கெடாதவாறு!

பரத்தையின் இருளை விட்டகன்ற வீரன்,
பத்தின் விளக்கைப் பார்க்கத் துடித்தான்.

பாணனை அனுப்பினால் தூது பலிக்காமற் போகலாம்; அந்தப்
பயத்தால் திகைத்துப் பற்பல கற்பனை செய்தான் - முடிவில்,

ஒரு பாணன் போல் உருமாற்றங் கொண்டு
திருமகள் என்ற தன் தேவியின் முன் சென்றான்.

'யார் நீ? யாது வேண்டும் உனக்கு?' என்று
பார்வையொன்றால் அந்தப் பாவையும் கேட்டாள்.

"குலவிளக்கே! குங்குமச் சிமிழே! உனைக்
கொண்ட கணவன் அனுப்பினான் என்னை!

விலைமகளோடு போன துணைவன் வருவான் மீண்டும்! நீ;
நிலமகள் போலப் பொறுமையைப் பூண்டு,

வளைக்கரம் நீட்டி வரவேற்றிடுக" என்று -
களைத்தமிழ்ப் பாட்டை யாழுடன் இசைத்தான்.

"பொதுமகளை நாடி அவர் ஓடியதைப் பொறுத்திடுக!
புதுமனிதனாய்த் திரும்பி வருகிறான்; அவனை

மன்னித்தேன் என்று நீ உரைத்துவிட்டால் - உனை
அள்ளித்தேன் பருகுதற்குத் தயங்க மாட்டான்."