தாயின் கடமை சரியே! நற்றிணை

பருவக் கோளாறின் காரணமாக காதல் வயப்பட்டு, தலைவன் பிரிவை நினைத்து வாடும் தனது பெண்ணை அன்னையொருத்தி கண்டித்தாள். சினம் கொண்ட தலைவிக்கு, தாயின் கடமை சரியே என தோழி எடுத்துரைத்தல்;


வளர்பிறையாய் உம் காதல் வளர்ந்து
குளிர்நிலவாய் அமுதமழை பொழிந்தால்
குலமகளே ! உமை வாழ்த்தாமல்
உன் தாயின் மனமென்ன ;
நிலமகழ்ந்து எடுத்திட்ட
இரும்பாகப் போமோ?

கருவுற்ற காலத்தில் அவள் நாவினைக்
கசப்பாக்கித் தொல்லை தந்தபோது
திருவுற்ற அந்தத் தாய்
புளிப்பாலே கசுப்பு போக்கி உன்
புன்னகை காணத் தவமிருந்தாள்!
ஆலின் இலைபோன்ற அவள் அழகு வயிற்றை ஒரு
சாலின் வடிவாக்கி நீ அலங்கோலம் தந்தபோதும்,

உன் கோலம் காண்பதற்கே அவள்
உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்!
மணிவயிற்றுக்குள்ளிருந்து நீ
மாறி மாறி உதைத்த போதும்,
வலிபொறுத்துக் கொண்டபடி
அணியென்ன பூட்டலாம் அந்தக் காலுக்கென்று
ஆயிரம் சிந்தனை செய்திருந்தாள்!

ஊதையில் துரும்பெனத் தாயுடல் அலைக்கழித்து
உலகில் நீ பிறந்துருண்டு அழுதபோது இன்ப
போதையில் துன்பமெலாம் மறந்திருந்தாள்! இன்றவள், உன்
பாதையில் பாடம் சொல்லல் ஒரு பாபமா?
பூவைத்துப் பொட்டிட்டு முத்தமாரி பெய்தபோது நீ,
பூவையாய் ஆவது எப்போதென்று ஆண்டெண்ணிக் கிடந்த அன்னை;

கோவையாய் சிவந்த உன் இதழைக் கிளியொன்று
கொத்துமென்று தெரியாத பேதையா  என்ன?
ஆற்றில் இறங்கிக் குளிக்கத் தடை கூறவில்லை அன்னை!
ஆழம் தெரிந்து இறங்கென்று கூறுகின்றாள் அவ்வளவே!
அதற்குள் நீ அவன் வருமட்டும் வழிபார்த்துக் காத்திருந்து
அல்லும் பகலும் உறக்கமின்றி வாடிவதங்கி,
உடலைக் கெடுத்துக் கொள்கின்றேன் என்றால்;
உனை உயிராக நினைக்கின்ற பெற்றோர்கள் ஒப்புவரோ?
உன் தோழி கெஞ்சுகின்றேன்; உடனே கேள்!
உறங்கி எழு! உற்சாகமாய் இரு!
உறையூர் எங்கும் ஓடிவிடாது - உன்
அறையூரில் அடங்கத்தான் போகிறது!" - என்றுரைத்துச் சிரித்தாள்.

No comments:

Post a Comment