அர்த்தமுள்ள இந்துமதம் - 2


அர்த்தமுள்ள இந்து மதத்தைப் பற்றி எழுதுவதன் முக்கிய நோக்கம், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே. எந்த வித மதம் சார்ந்த கருத்துக்களையும் முன்வைத்துக் கூறப்படவில்லை.

 

மனித வாழ்க்கையின் நிலைகளையும் அதன் தத்துவங்களையும் இந்து மதம் எவ்வாறு விளக்குகிறது? உதாரணமாக இந்து மத இதிகாசங்கள் அனைத்திலும் இரண்டு (extreme) நிலைகள் அல்லது துருவங்களைக் காணலாம்.

மகாபாரதத்திலும், ராமாயணத்திலும் நல்லவர்கள் ஒரு பிரிவாகவும், கெட்டவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டிருப்பது ஏன்? எதனை முன்னிருத்த இத்தகைய கதைகள் கூறப்பட்டிருந்தன.  அறுபது மனைவிகளைக் கொண்ட த‌சரதனை ஏன் சித்தரித்தனர்? மனித வாழ்வில் இது சாத்தியமா? அப்படி வாழலாமா என்கிற கேள்விகளை விட, அவனது மகன் ராமனை ஏகப்பத்தினி விரதன் என்றார்கள்.

இரண்டையும் இரண்டு துருவங்களாக்கிக் காட்டினார்கள். இரண்டு வாழ்க்கையிலே எந்த வாழ்க்கை சரி? எது நியாயம் என்பதை அவர்கள் போதிக்க வரவில்லை! அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டான் தசரதன், இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டான் ராமன். ஆனால் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட ராமனை தெய்வம் என்று இராமாயணம் அழைத்தது. ஆகவே அது சொல்லாமல் சொன்ன தத்துவம் 'ஏகப்பத்தினி விரதனாகும்'. அந்த ஏகப்பத்தினி விரதன் என்று அவனை சொல்லுவதற்கு எவ்வளவு அற்புதமான உவமைகள், உவமை நயங்களில் இதை சொல்லியுள்ளனர்.

ராமாயணத்தில் ராவணன் சீதையை மயங்க வைக்க பல்வேறு வேஷங்கள் போடுகிறான். இளவரசனாக வருகிறான், மன்மதன் போல் வருகிறான்,  பல்வேறு நாட்டு இளவரசர்கள் போலத் தோற்றமளிக்கிறான். எதிலேயும் அவள் மயங்கவில்லை. மயங்கவில்லையே சீதை என்று கலங்கிப் போய் அரண்மனையிலே உலாவிக் கொண்டிருக்கிறான். அப்போது அமைச்சர் அங்கே வருகிறார்.   அமைச்சர் சிரித்துக் கொண்டே அவனிடம் சொல்லுகிறார், "அரசே சீதை மயங்கக் கூடியது ஒரே ஒரு மனிதருக்கு மட்டுமே, ஒரே ஒரு உருவத்திற்கு மட்டுமே! அது ஸ்ரீராமருடைய வேஷம். அந்த வேஷத்தை நீ எடுத்தால் மட்டுமே அவள் மயங்குவாள்"  என்று அமைச்சர் சொல்லுகிறார்.

உடனே ராவணன் அவரைப் பார்த்துச் சொல்லுகிறார், "அமைச்சரே உமக்கு தெரிகின்ற இந்த உண்மை எனக்கு தெரியாமல் போயிருக்குமா? நானும் ராமனைப் போலவே வேஷமிட்டு, ராமனாகவே தோற்றமளித்தேன். ஆனால் ராமனுடைய வேஷத்தைப் போட்டவுடனேயே எனக்கு சீதையின் மீது, இன்னொருவன் மனைவியின் மீது ஆசை வரவில்லையே நான் என்ன செய்வேன்? என்று அவன் வருந்தினான்.

ஏகப்பத்தினி விரதன் என்பதை ஒரு வார்த்தையாகச் சொல்லாமல், அதை ஒரு கதையாக உலவ விட்டு சாதரணமான மக்களுக்கும் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.   அவர்கள் படித்தவர்களோ, படிக்காதவர்களோ, யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு சில விஷயங்களைப் புரிய வைக்க இந்து மதம் முயன்றது.

அருந்ததியின் கதை, நளாயினியின் கதை, அசூரியையின் கதை, அகலிகையின் கதை -  இந்தக் கதைகள் எல்லாம் கற்பனைகளாகவே வைத்துக் கொண்டாலும், இவையெல்லாம் கற்போடு வாழ்ந்த சில பெண்களின் வாழ்க்கையைக் குறிப்பது. இவை கற்போடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை இந்து பெண்களின் மனதிலே உண்டாக்குவதற்காக ஏற்பட்டவை. 

(தொடரும்)