தேசிய அறிவியல் தினம்

மறைந்த இயற்பியலாய்வாளர் சர். சி.வி. ராமன் அவர்களின் 'ராமன் விளைவு'' கண்டுபிடிப்பின் காரணமாக, வருடா வருடம் பிப்ரவரி 28ஆம் நாள் "தேசிய அறிவியல் தினம்" ஆகக் கொண்டாடப்படுகிறது.



 

1928ல் இந்த தினத்தில் தான் அவரது ராமன் விளைவு கண்டுபிடிப்பிற்காக, 1930ல் நோபல் பரிசு பெற்றார். இதை நினைவுபடுத்திக் கூறும் வகையில் ஆண்டுதோறும் இன்றைய தினம் தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.


இயற்பெயர் - சந்திரசேகர வெங்கட ராமன்
 

தோற்றம் ‍- 07.11.1888
 

மறைவு - 21.11.1970

பேய் இருக்கா?


வேடிக்கையான விஷயம் என்னவென்றால் சிறுவயதில் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பேய் பற்றிய பயம் கண்டிப்பாக இருந்திருக்கும். இதற்குக் காரணம் பேய் பற்றிய கதைகளை நாம் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே கேட்டதுதான்


முன்னொறு நாளில் AXN சேனலில் பேய்களைப் பற்றியநிகழ்ச்சியைப் பார்த்ததாக‌‌ ஞாபகம், ஏதோ ஒரு அருங்காட்சியகத்தில் இரவு வேளையில் பேய்கள் உலாவுவதாகவும் அவைகளின் உருவம் CCTV கேமிராக்களில் பதிந்துள்ளதாகவும் காட்டப்பட்டது. ஐரோப்பாவில் ஒரு பெரியநூலகத்தில் நடுஇரவில் பேய்களின் நடமாட்டம் இருப்பதைக் கண்டதாகவும், நூல்கள் பரவலாக‌ச் சிதறிக்கிடந்ததைப் பற்றியும் ஒளிபரப்பினார்கள். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

இதைப் பற்றி கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் உரையாடியது நினைவிலுள்ளது. குழந்தை பருவத்தில்  சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அம்மாக்கள்  வெவ்வேறு வேடிக்கை கதைகளைக் கூறி உணவு ஊட்டுவது இயல்பு. அப்போது 'நீ சாப்பிடலேனா பூச்சாண்டி வந்து உன்னத் தூக்கிட்டு போயிடும்' என்று கூறி மீதமுள்ள உணவை குழந்தைகளுக்கு ஊட்டுவது வழக்கம். ‌‌‌‌‌‌‌

அன்றிலிருந்தே குழந்தைகளுக்கு பேய் பற்றிய பயம் தொத்திக்கொள்ளும். மேலும் இரவில் தூங்காமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இருட்டில் விழித்துக்கொண்டிருந்தால் பேய் பிடித்துக்கொள்ளும் என்று சொல்லி அவர்களைத் தூங்கவைப்பார்கள். அதன்பின் இருளைப் பார்க்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு அந்த ஞாபகம் தோன்றும்.  ‌‌‌

இரவில் தூக்கம்வராத நேரங்களில் எங்கோ ஒரு மூலையிலிருந்து சத்தம் வருவது போலவும், ஜன்னலுக்கு வெளியே ஏதோ ஒரு கை அசைவது போலவும் தோன்றும். இதற்காகவே கண்களை இறுக்க மூடி, தலையிலிருந்து கால் வரை நன்றாகப் போர்த்திப் படுத்துத் தூங்குவேன். 'எங்க எழுந்தா பேய் பிடிச்சிட்டு போயிடும்னு நெனச்சு' அந்த பயத்திலேயே தூங்கிவிடுவேன்.  

இரவில் தூங்கும்போது தூரத்தில் வினோதமான  சத்தம் கேட்பதுபோல தோன்றுவதும், ஒரு சில குழந்தைகள் இவ்வகையான பயத்தின் காரணமாக தூக்கத்தில் உச்சா போவதும்  கேள்விப்பட்டஒன்று.

என் சிறுவயதில் பேய் பற்றி அறிய எனக்கு மிகுந்த ஆவல் இருந்தது. மாலை நேரத்தில் என் நண்பர்களுடன் உரையாடும் போது ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தெரிந்த, அறிந்த, பழக்கப்பட்டகதைகளை மிகைப்படுத்திக் கூறுவார்கள்.  

சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த திகில் படத்திலிருந்து ஒருசில காட்சிகளை தங்களுக்குத் தேவையான இடங்களில் நிரப்பி அக்கதைகள் உலவுவது இயல்பு. நானும் இதற்கு விதிவிலக்கல்ல‌. இதற்காகநாங்கள்அனைவரும் ஹவுசிங் யூனிட்டின் மொட்டை மாடிக்குச் சென்று இரவு 7 அல்லது 8மணி வரை விவாதிப்போம். விவாதம் முடிந்து கீழே செல்லும் போது மனதிற்குள் நான் கடைசியாகச் செல்லக் கூடாது என்பதை எண்ணிக்கொண்டே இருப்போம்.            ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
சில நேரங்களில் நான் கடைசியாக வரும்போது பின்னால் திரும்பிப் பார்ப்பதற்கு தைரியம் இல்லாமல் அவசரஅவசரமாக படிகளைத் தாவிச் செல்வது வழக்கம். இதற்குக்காரணம் Speed'ஆ போனா பேயால நம்மல பிடிக்கமுடியாது என்பது தான்

நண்பர்களில் சிலர் வீட்டிற்கு அருகிலிருந்தசுடுகாட்டைப் பற்றி விவரிப்பார்கள். இரவு நேரங்களில் அங்கிருந்தஏதோ விசித்திரமான சப்தம் வருவதாகவும், பிணங்களை எரிக்கும்போது அவைகளின் கை கால்கள் எழத்துடிப்பதையும், அப்படிப்பட்டநேரங்களில் அங்கு வேலை செய்பவர்கள் அப்பிணங்களை பெரியதடிமூலம் அடிப்பதாகக் கூறுவார்கள்.  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

எங்கள் வீதியைப் போலவே ஊரெங்கும் இதுபோன்றபேய்க்கதைகள் நிறைந்துள்ளன. எனது சிறுவயதில் மாமாவுடன் செகண்ட் ஸோ "Evil Dead" படம் பார்த்துவிட்டு யமஹாவில் வரும்போது, எங்களுக்குப் பின் யாரோ ஓடிவருவதைப்போலவும், திரும்பிப் பார்த்தால் அவைகளிடம் நான் அகப்பட்டுக் கொள்வேன் என்றபயத்தில் கண்களை இறுக்க மூடிக்கொண்டு வீடு வந்து சேருவேன். இதுவரை மாமாவிடம் அதைப் பற்றி கூறியதில்லை. ‌‌‌‌‌ ‌

இரவு நேரங்களில் அம்மா தொலைவிலுள்ளகடைக்குப் போகச் சொல்லும்போது அதனை கண்டிப்பாகமறுக்கும் நான், அந்தசுடுகாட்டைத் தாண்டி போகணும் பயமாயிருக்குன்னு சொன்னா எங்கசிரிப்பாங்களோனு நினைச்சு, "ஆம்பிளபையன்னா, தைரியமா இருக்கணும் இப்படி பேய்க்கெல்லாம் பயப்படக் கூடாது" என்று எனக்குள் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி பக்கத்து வீட்டு நண்பனை துணைக்கு அழைத்துச் செல்வேன்.  

அத்தகையநேரங்களில் நண்பனிடமிருந்து வரும் முதல் கேள்வி "டேய் உனக்கு பயமா இருக்குன்னுதானே என்னை துணைக்குக் கூப்பிடற‌" என்பான். நானும் பதிலுக்கு "அப்டிலாம் ஒண்ணுமில்ல தனியா போனா போர் அடிக்கும் அதான் உன்னகூப்பிட்டேன், உனக்கு பயமா இருந்தா நீ வீட்டுக்குப் போ" என்று உள்ளுக்குள் பயமிருந்தாலும் வெளியிலபொய் சொல்லுவது வழக்கமான ஒன்று. அப்பொழுதுதான் நாளைக்கு நண்பர்களுக்கு மத்தியில் இதபத்தி பேசும்போது 'அருணுக்கு ரொம்பதைரியம்னு' நாலுபேர்கிட்டசொல்லுவான்னு ஒரு அல்பஆசைதான். ‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

பேயெல்லாம் இரவு நேரங்களில் மட்டுமே உலாவுவதாகவும், பாழடைந்தகிணறு, ஆள்நடமாட்டமில்லாதபகுதிகள், ஊருக்கு வெளியே ஏதோ ஒரு பகுதியில் குடியிருப்பதாகசொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் பேய்களில் ஆண் பேய் பற்றி ஒரு கதையைக் கூட கேள்விப்பட்டதில்லை, எல்லாமே பெண் பேய்கள் தான்.  

தற்கொலை செய்து கொண்டபெண்கள், ரயிலில் அல்லது பேருந்தில் அடிபட்டமனிதர்களின் ஆன்மா பேயாகத் தொடரும் என்று நண்பன் கூறுவான். சினிமாவில் காண்பிப்பதைப் போல பேய்களுக்கென்று ஒரு தனி வெள்ளை நிறபுடவையும், பிசாசுகள் மனிதரத்தம்குடிப்பதாகவும், விடிந்த பின் அவைகள் மறைந்து போவதும் இன்றும் சிறுவர்களிடம் பரவலாக நம்பப்படுகிறது.  ‌ ‌ ‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

ஞாயிற்றுக்கிழமைகளில் பாட்டி வீட்டிலிருந்து கிளம்பும்போது அன்று சமைக்கப்பட்ட சிக்கன், மீன், மட்டன் போன்றவற்றை பாட்டி எங்கள் வீட்டிற்கு கொடுத்தனுப்புவது வழக்கம். அத்தகைய நேரங்களில் நான் தனியே செல்லவேண்டியதால், கூடையில் "வேப்பிலையும், ஏதோவொரு இரும்பும்" வைத்து அனுப்புவது அன்றைய நாட்களின் வழக்கம். ஒருசில நாட்களில் மிகுதியான பயத்தின் காரணமாக காய்ச்சல் வருவதும், அதற்காகவே அம்மா தூங்கும்போது நெற்றியில் திருநீரிட்டு, கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் சொல்வதும் இன்றும் நினைவிலுள்ளது.   

இதனாலேயே தூக்கத்தில் தாகம் எடுத்தாலும் இருட்டில் தனியே சமையலறைக்குச் செல்லபயந்து, அம்மாவை எழுப்புவது வழக்கம். ஒருசிலநாட்களில் பயத்தின்காரணமாகஅப்படியே தூங்கி விடுவேன். என்றாவது ஒரு நாள் இரவில் தனியே செல்லசந்தர்ப்பம் கிடைக்கும்போது யாரோ நம்மை அழைப்பது போலவும், திரும்பித்திரும்பி பார்த்துக் கொண்டே செல்வேன்.  

சில நேரங்களில் இருட்டில் திரும்பிப் பார்க்க தைரியம் இல்லாமல் ஒரே ஓட்டமாக வீடு வரை ஓடிவருவேன். வீட்டிற்குள் நுழையும்போது நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு, தலைமுடியை சரிசெய்து, இயல்பாக இருப்பது போல் உள்நுழைவேன்.  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

இதனாலேயே ஆள் நடமாட்டமில்லாதஇடங்களுக்குப் போவதை தவிர்ப்பேன். எங்கு சென்றாலும் யாராவது பக்கத்தில் செல்லும்போது "நல்லவேளதனியா போகல, இவரு கூடவே போயிடலாம்" என்று மனதிற்குள் எண்ணுவது வழக்கம். சிறுவயதில் யாராவது 'பேய் இருக்கறதநம்பறீங்களா' என்று வினவும்போது 'இல்லை' என்று கூறினாலும் மனதிற்குள் ஒருவிதபயமிருந்தது உண்மையே.
 

தெருவோர அண்ணாச்சி கடை

அன்றைய சிறு வயது ஞாபகங்களை இன்று நினைத்துப் பார்த்தால்  இனிமையாக உள்ளது.  அப்போது எனக்கு 7 அல்லது 8 வயதிருக்கும், வீட்டில் இரவு சமையலுக்கு தேங்காய் அல்லது கொத்தமல்லிக்கு தேவை ஏற்படும்போது அவற்றை வாங்குவதற்காக நான் அருகிலிருந்த அண்ணாச்சி கடைக்குச் செல்வது வழக்கம்.  Dollar city என்றழைக்கப்படும் திருப்பூரில் எங்கள் வீடு நகரின் முக்கியப் பகுதியில் இருந்தது.  அப்பாவின் அரசாங்க வேலையின் காரணமாக அலுவலகப் பணியாளர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ஹவுசிங் யூனிட்டில் வசித்து வந்தோம்.

வீட்டிற்கு மிக அருகில் "வைகிங்" பனியன் கம்பெனி இருந்ததால், வீட்டின் அட்ரஸ் சொல்வது எளிதாக அமைந்த‌து. 'எங்க வீடு வைகிங் கம்பெனி காம்பவுண்டுக்கு அடுத்தது' என்று பிரபலமான அந்த கம்பெனியின் பெயரை சொல்வது வழக்கம். ஏறக்குறைய திருப்பூரில் வசிக்கும் அனைவருக்கும் அந்த கம்பெனியின் பெயர் தெரிந்தே இருக்கும். திருப்பூர் இந்தியாவின் பனியன் தலைநகர் என்றழைக்கப்படுகிறது (சொந்த ஊரைப் பற்றி குறிப்பிடுவதில் ஏதோ ஒருவித மகிழ்ச்சி).


எங்கள் வீட்டிற்கும் அண்ணாச்சி கடைக்கும் உள்ள தூரம் மிகக்குறைவே, தோராயமாக 50-100 மீட்டர் இருக்கும். அண்ணாச்சி கடை வீட்டிற்கு மிக அருகில் இருந்ததால் கொசுறு சாமான் வாங்க தொலைதூரம் நடக்க வேண்டியதில்லை.  மாதம் ஒருமுறை வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான் வாங்க அப்பா அம்மாவிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பது வழக்கம். அப்பணத்தை நானும் எனது அக்காவும் தனியே பிரித்து  அரிசி, பால், காய்கறி, கரண்ட் பில், போக்குவரத்து, கேஸ் சிலிண்டர், கேபிள் டிவி என்று லிஸ்ட் செய்து அவற்றிற்குத் தேவையான தொகையை ஒதுக்குவது வழக்கம். மளிகை சாமான் வாங்க நானும் என் அம்மாவும் குறிஞ்சி மளிகைக் கடைக்குக் செல்வோம்.

மாதத்தின் கடைசி வாரம் அல்லது முதல் சனிக்கிழமைகளில் அங்கு செல்வது வழக்கம். செல்லும் வழியில் அம்மா அவரது பழைய ஞாபகங்களைப் பற்றி பேசுவார். எடை அதிகமாக உள்ள ஒயர் கூடையை  அம்மா சுமந்து கொண்டு எனக்கு சிறிய கூடையைப் கொடுப்பார். நான் எனது பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அம்மாவிடம் கூறுவேன். அன்றைய காலத்தில் ரோடு இருந்த அமைப்பு, வீதிகளில் ஓடு அல்லது கூரை நெய்யப்பட்ட வீடுகளின் அமைப்பை பற்றி அம்மா விவரிப்பார். நானும் பதிலுக்கு ', அப்படியா' என்று என் அம்மா சொல்லும் புராணத்தை கேட்டுக் கொண்டே  வீடு வந்து சேருவோம்.

உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களின் திடீர் விஜயத்தின் போது ஜூஸ் செய்வதற்காக தேவைப்படும் எலுமிச்சை அல்லது ரஸ்னா வாங்க அண்ணாச்சி கடைக்கு செல்வேன். யோசித்துப் பார்த்தால் கருவேற்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, தேங்காய் வாங்குவதற்கு மட்டுமே  அண்ணாச்சி கடைக்கு செல்வது வழக்கம்.  என்னைப் போலவே அருகில் வசிக்கும் எனது நண்பனின் வீட்டிலும் அதே நிலைமைதான். அம்மா கடைக்குப் போகச் சொல்லும்போது என் நண்பனையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி செல்கையில் வழி நெடுக அன்றைய தினத்தில் பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைப் பற்றி உரையாடுவோம்.
அடிக்கடி அந்தக் கடைக்குச் செல்வதால் அண்ணாச்சிக்கு எங்கள் பெயர் பரிட்சயமானது. பின்னாளில் அண்ணாச்சி என்றழைக்கப் படுவோரில் பெரும்பாலானோர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

அண்ணாச்சி கடையைப் பற்றி விளக்கவேண்டுமானால், நமக்கு அன்றாடம் பழக்கப்பட்ட தெருமுனைக் கடையாக இருக்கும். கடையின் மொத்த ஏரியா தோராயமாக 150-200 சதுர அடி இருக்கும். வெளிப்புறத்தில் பலகைக் கதவுகள் வைக்கப்பட்டு இடையில் இரண்டு அல்லது மூன்று அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ளிருப்பவர்க்கும் வாடிக்கையாளர்க்கும் நடுவே ஒரு தடுப்புச் சுவராக இருக்கும். கடையின் வலது மூலையில் வெவ்வேறு வகையான வாழைத்தார்கள் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும்.
அதுபோலவே சிறுவயதில் எனக்குப் பிடித்தமான சிவப்பு தேன் மிட்டாய் ஒரு பாலிதீன் கவரில் அடைக்கப்பட்டு ஏனைய தின்பண்டங்களுக்கு நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும்.சில நேரங்களில் எனக்கு அண்ணாச்சியின் மீது வெறுப்பு ஏற்படுவதுண்டு. பெரியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு அடுத்ததாகவே பொருட்கள் வழங்குவது அண்ணாச்சியின் வாடிக்கையானது. அன்றைய நாட்களில் ஐம்பது காசுக்கு ஒரு  தேங்காய்த் துண்டும், நாலணாவிற்கு கருவேற்பிலை/கொத்தமல்லியும் வாங்குவது வழக்கம். 

அண்ணாச்சி வெளியூர் செல்லும் நேரங்களில் அவரது மனைவி கடையை கவனித்துக் கொள்வார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் முறையே 5 மற்றும் 2 வயதில் இருந்தது. கடையில் கூட்டமில்லாத நேரங்களில் எனது பள்ளியைப் பற்றி அண்ணாச்சி வினவுவது வழக்கமாயிருந்தது. அன்றைய தினத்தில் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் இருந்தால் அதைப் பற்றி உரையாடிக் கொண்டிருப்போம். 

இன்றுடன் ஏறக்குறைய 15 வருடங்களாகிறது, சமீபத்தில் எனது பள்ளி நண்பனுடன் பேசும்போது அண்ணாச்சி அங்கிருந்து காலிசெய்து விட்டு தன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.

"அண்ணாச்சி கடை" - இன்றும் அந்த பழைய நினைவு ஞாபகத்தில் உள்ளது.

(பேய்கள் பற்றிய எனது சிறுவயது அனுபவத்தை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்)