இடக்கரடக்கல்

இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம் கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது.

இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு
                                    அடக்கல் என்பது “அடக்கி”

அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ கூறுவது.

எ.கா.
(*) கோழியும் சேவலும் ஒன்று சேர்தலை ‘சேவல் அணைந்தது’ என்று கூறுவது வழக்கம்.
(*) மலம் கழிக்கப் போனான் என்பதை “காட்டுக்குப் போனான்”, வெளியே போனான்” அல்லது “கால் கழுவி வந்தான்” என்று கூறுவது
(*)  அமங்கலத்தை மங்கலமாகக் கூறுதல் – இறந்துவிட்டார் என்பதை “இறைவனடி சேர்ந்தார் அல்லது “உயிர் நீத்தார்”
(*) தீபத்தை அணை என்பதை “தீபத்தை குளிர வை” என்று கூறுவர்
(*) வாய் கழுவி வந்தான் – வாய் பூசி வந்தான்

ஆங்கில இலக்கணத்தில் இதனை யூஃபமிசம்(euphemism) என்பர்.

E.g.
(*) kick the bucket – the death of a person
(*) downsizing - firing employees
(*) special child- disabled/ learning challenged


இறைவனடி சேர்ந்தார் (இறந்துவிட்டார்) என்பது இடக்கரடக்கல் அல்ல, அது 'மங்கலம்' என்ற பிரிவுக்குள் அடங்கும். மேலுள்ள பதிவில் தவறுதலாகக் குறிப்பிட்டுள்ளேன்.

தொற்று

முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. 

‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்!

இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவும் எண்ணவில்லை.  ஒருவேளை இதுதான் பிறவிப் பயன் என்பதா!


வாலிபத்தின் காரணமாக விளைந்த சிந்தனை தடுமாற்றத்தின் வினைதான் இத்தொற்று. இருவருக்கும் இடையேயிருந்த இறுக்கத்தின் காரணமாக மனதில் மறைந்திருந்த இச்சை இரகசியமாய் எட்டிப் பார்த்தது, தொடக்கத்தில் இருந்த தயக்கம் சட்டென்று விலக, வேட்கையும் விரகமும் ஒருசேர இணைந்து என்னை முன்னிருத்திச் சென்றது. தேகச் சூட்டில் எனை மறந்து இன்பத்தில் இலயித்திருந்தது நினைவில் உள்ளது.

இதைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மனைவியிடம் சொல்லியிருக்கலாம், என்னுடைய தவறினால் அவளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது வேதனையாக உள்ளது. மனதிற்குப் பிடித்தவர்களிடமிருந்து விலகிச் செல்வதை வலியின் உச்சமாக எண்ணுகிறேன். அம்மாவும் அப்பாவும் இதை எப்படித் தாங்கிக் கொள்வார்கள், நாளை இச்சமூகம் அவர்களை எப்படி நடத்தும்! நான் இழைத்த தவறுக்கு காலமெல்லாம் அவர்களும் தண்டனை அனுபவிப்பதை நினைத்தால் என் மீதான வெறுப்பு அதிகரிக்கிறது.

நடந்து முடிந்ததை இன்றெண்ணிப் பார்ப்பதில் எவ்வித பயனுமில்லை. தீவினையின் முடிவில் நன்மை விளைவதில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். விலகிச் செல்ல துணிந்த பின் திரும்பத் திரும்ப எண்ணுவதில் பலனில்லை. என்னுள்ளிருக்கும் இந்தக் குற்றவுணர்வு என்னுள்ளே மடிந்து அழியட்டும் !!
(வழக்கம் போல கற்பனை கலந்து எழுதியது. தகாத செயலின் காரணமாக வாலிபன் ஒருவனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதும், அதனால் விளையும் குற்ற உணர்ச்சியில் அவன் மடிந்து போவதாகக் கூறியுள்ளேன். அத்தகைய ஒருவனின் மனநிலை எப்படி இருக்குமென்பதை வேறொரு கோணத்தில் படைத்துள்ளேன்).