காவியா

04.08.2007, இரவு 3.00:

ரமேஷுக்குத் தூக்கம் வரவில்லை. மெத்தையில் புரண்டு படுத்தும் நித்திராதேவியின் நிழல் ஆட்கொள்ளவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தான் மனதளவில் மிகவும் இளகிப் போனதை ஒப்புக்கொண்டான். காவியாவை மறக்க நினைக்கும்போதெல்லாம் அவளுடைய ஞாபகம் தன்னுள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இவ்வுலகில் தான் மட்டும் சோகக்கடலில் தொலைதூரம் தனித்தே பயணிப்பதாக எண்ணி தன்னைத் தானே நொந்துகொண்டான். பார்க்கும் பொருட்களையெல்லாம் வெறுக்கத் தொடங்கினான்.

சமீபத்தில் தான் வாங்கிய நோக்கியா மொபைல் தூரத்தில் சிதறிக்கிடந்ததை வேண்டா வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.  காவியாவின் குறுஞ்செய்தியை எதிர்பார்த்து வெறுப்பின் உச்சத்தில் வீசியெறிந்ததை எண்ணினான். காவியாவின் மேலிருந்த கோபம் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

கல்லூரியில் சேரும்போது இருந்த ரமேஷுக்கும் தற்போது இருக்கும் ரமேஷுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்தான். நேற்று கடைசியாக அவள் பேசிய வார்த்தைகள் ரமேஷின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

"Who are you to judge me?"

இன்றுடன் காவியாவுடனான உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினான். கல்லூரி கேன்டீனில் அவளை சந்தித்த முதல் நாளை நினைத்துப் பார்த்தான். ராகிங் என்ற வார்த்தையைக் கேட்டவுடனே சிலருக்கு கசப்பு ஏற்படுவதுண்டு. ரமேஷ், காவியாவின் முதல் சந்திப்பே ராகிங்கில்தான் தொடங்கியது.

ரமேஷ் காவியாவின் சீனியர், இருவரின் துறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின் சொந்த ஊர் திருச்சியே. ரமேஷின் அப்பா ஒரு தனியார் விளம்பரக் கம்பெனியில் வேலை செய்து வந்தார். ரமேஷின் அம்மா சினிமாக்களில் வரும் அம்மாவைப் போல் பையனுக்குச் செல்லமாய் இருந்தார். ரமேஷுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு தங்கை இருந்தாள். ரமேஷின் அப்பா பணக்காரராக இல்லாவிட்டாலும் மற்ற சக மனிதர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நல்ல மனிதராக விளங்கினார். அவர் வாங்கும் சம்பளம் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கே சரியாக இருந்தது. அவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய சொத்துக்கள் ஏதுமில்லை.

காவியாவின் அப்பா டிராவல்ஸுக்கு சொந்தக்காரர். சொந்த பங்களா, கார், தியேட்டர், தோட்டம் என்று அந்த ஏரியாவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவராக இருந்தார். தொழிலில் இருந்த ஈடுபாடு, குடும்ப விஷயங்களில் அவருக்கு இல்லாமல் போனது. பணம் சம்பாதிப்பது ஒன்றே  குறியாக இருந்ததால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போனது. இதனாலோ என்னவோ காவியாவிற்கு தனது அப்பாவின் மீதிருந்த அன்பு மாதாமாதம் கல்லூரி, விடுதிக்கு பணம் கட்டும்போது மட்டுமே வந்துபோனது.

கேன்டீனில் தன் தோழர்களுடனான கலாட்டாவின் போது காவியாவை முதலில் சந்தித்தான். ஜூனியர் பெண்ணைப் பார்க்கும்போது தோன்றும் அதே ஏளனப்பார்வை காவியாவை சந்தித்த‌ போது ரமேஷிற்கு தோன்றிற்று.

அன்று அவனுக்கு தெரியவில்லை காவியா அவன் வாழ்வின் ஒரு நிரந்தர நிலவாக உலா வருவாளென்று. தன் நண்பன் ஆனந்தின் கேள்விக்கு பதில் சொல்லாமலிருந்த காவியாவை அருகில் அழைத்து பெயர், ஊர் என சீனியர்கள் ஜூனியர்களை‌க் கேட்கும் வழக்கமான கேள்விகளைக் கேட்டான். பார்ப்பதற்கு ஏதோ பழக்கப் பட்ட பெண்ணைப் போல் தோற்றமளித்தாலும், சிறுவயதிலிருந்தே அவளிடமிருந்த திமிரான பார்வை ரமேஷுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

"அங்க ஏன் சைட்டுல ஒளிஞ்சிட்டு இருக்க, உன் பேரு என்ன?".
"காவியா".
"ஊரு?".
"திருச்சி".
"ஓ திருச்சியா, அப்ப நம்ம ஊர் பொண்ணு! சரி அங்க எந்த‌ இடம்?".
"KV நகர்".
பொதுவாக பெண்களிடம் பேசிப் பழக்கமில்லாத ரமேஷிற்கு இதைக் கேட்டவுடன் மனதில் பல்வேறான எண்ணங்கள் தோன்றி மறைந்தது. இது ஒரு தொடக்கத்தின் முதலாக எண்ணினான்.

"உங்க அப்பா பேரு என்ன? என்ன பண்றாரு"

"அப்பா பேரு தேவராஜன், திருச்சில பிசினஸ் பண்ணிட்டு இருக்காரு". மறுபடியும் அதே தோணியில் பேசினாள்.

ரமேஷுக்கு இது அறவே பிடிக்கவில்லை என்றாலும் அவளுடனான நட்பை ஏற்படுத்த இது ஒரு அரிய சந்தர்ப்பமாக எண்ணினான். குறுக்கே பேசும் ஆனந்தை சிறிதும் சட்டை செய்யாமல் தனது கேள்விகளை காவியாவிடம் அடுக்கிக்கொண்டே இருந்தான். இவ்வாறாகத் தொடங்கிய உரையாடல் பள்ளி, பொழுதுபோக்கு, கட்-ஆப் மார்க் என்று காவியாவின் முழு விவரத்தையும் அறிந்தான்.

சீனியர் ஜூனியர் என்று பயபக்தியுடன் தொடங்கிய நட்பு, நாளடைவில் கல்லூரி கேன்டீனிலும், ஞாயிற்றுகிழமைகளில் வெளியே செல்வதிலும் சிறிது சிறிதாக மலர்ந்து முடிவில் அவ‌ர்கள் இருவ‌ருக்குமிடையில் காதல் உருவாக‌க் கார‌ணமானது. அத‌ன் பின் விடுமுறை முடிந்து ஊரிலிருந்து திரும்பும்போது இருவ‌ரும் ஒன்றாக‌வே சேர்ந்து ப‌யணித்த‌னர்.

க‌ல்லூரி நாட்க‌ளில் அவ‌ர்களுக்கிடையில் வாக்குவாத‌மும், ச‌ண்டையும் ஏற்ப‌டுவ‌து ச‌க‌ஜ‌மாக இருந்தது. இருவ‌ரின் அணுகுமுறைக‌ள் முற்றிலும் முர‌ண்பாட‌க‌வே இருந்த‌து. தொட‌க்க‌த்தில் சாதார‌ண விஷ‌ய‌ங்க‌ளில் தொட‌ங்கிய வாக்குவாதம் இறுதியில் சண்டையில் முடிந்தது. இருவருக்குமிடையே இருந்த க‌ருத்து வேறுபாடு சிறிதுசிறிதாக வ‌ள‌ர்ந்து, ர‌மேஷின் இறுதியாண்டில் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் பேசிக்கொள்வ‌து அறவே நிறுத்த‌ப்ப‌ட்ட‌து.

ர‌மேஷும் ப்ராஜ‌க்ட், கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் விஷ‌ய‌ங்க‌ளில் பிஸியான‌தால் காவியாவின் சந்திப்பை நிறுத்த‌ அதுவே ந‌ல்ல ச‌ந்த‌ர்ப்பமாக‌ அமைந்தது. வெளியில் இருவ‌ரும் தத்த‌ம் விஷ‌ய‌த்தில் ம‌கிழ்ச்சியுடன் இருப்பதாக நடந்து கொண்டாலும் ம‌ன‌திற்குள் ஏதோ ஒருவித‌ துய‌ர‌மே இருந்தது. இறுதியாக ரமேஷ் கேம்ப‌ஸ் இன்ட‌ர்வியூவில் வெற்றி பெற்று சென்னையில் ஒரு சாப்ட்வேர் க‌ம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். காவியாவின் நினைவு மெல்ல மெல்ல ம‌றைய‌த் தொட‌ங்கிய‌து.

இன்றிலிருந்து சரியாக 6 மாதம் முன்பு, ரமேஷின் மொபைலில் காவியாவின் குறுங்செய்தி நீண்ட‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு கிடைத்தது. தானும்  இன்ட‌ர்வியூவில் செல‌க்ட்டாகி சென்னையில் வேலைக்கு சேர‌ அழைப்பு வ‌ந்திருப்பதை தெரிவித்தாள். மீண்டும் காய்ந்து சருகான அவ‌ர்களது ந‌ட்பு உர‌மிட்ட ப‌யிர்களைப் போல‌ வ‌ள‌ர‌த்தொட‌ங்கிய‌து.

காவியா சென்னைக்கு வ‌ரும் முன் அவ‌ளுக்குத் தேவையான அனைத்தையும் திட்ட‌மிட்டு ஒவ்வொன்றாக செய‌ல்ப‌டுத்தினான். த‌னக்குத் தெரிந்த‌ அலுவ‌ல‌க‌த் தோழி மூலமாக‌ காவியா தங்குவதற்கு ஏற்பாடு செய்தான்.

அதன்பின் இர‌வு 2 அல்ல‌து 3 ம‌ணிவரை வரைக்கும் தொலைபேசியில் பேசினார்க‌ள். ஒவ்வொரு நாளும் விடியலின் தொடக்கமும், இரவின் முடிவும் அவர்களுக்கிடையே குறுங்செய்தியுட‌ன் முடிவ‌டைந்தது. ர‌மேஷ் இன்னும் அதேபோல் தான் இருநதான்காவியாவிற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தான். வாரமொரு முறை அவளை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதும், பீச் செல்வதும், வெள்ளி காலையில் வடபழனி முருகன் கோவிலுக்கு செல்வது என கணவன் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்தான். தினமும் அவளை வீட்டிலிருந்து பிக்அப் செய்து, பின் மாலையில் பத்திரமாக அவள் தங்கியிருந்த விடுதியில் ட்ராப் செய்து வந்தான்.

காவியா சென்னைக்கு வந்து இன்றுடன் ஏறக்குறைய 6 மாதங்கள் ஆயிற்று. ரமேஷுக்கு காவியாவின் மேலிருந்த அக்கறை ஒருபுறமிருக்க காவியாவிற்கும் ரமேஷின் மீதான அன்பு வளர்ந்து கொண்டே வந்தது. இம்முறை விடுமுறைக்கு சென்ற போது தனது அம்மாவுக்கு ஜாடைமாடையாக தனது விருப்பத்தை தெரியப்படுத்தினாள். ஆனாலும் அந்தஸ்து விஷயத்தில் அப்பாவின் அதே பணக்கார குணம் அவளுக்கும் சரிபாதி இருந்தது.

04.08.07

மாலையில் ரமேஷும், காவியாவும் பேசிவைத்த‌தைப் போல் சிட்டி சென்டர் சென்றனர், காவியா வழக்கம் போல் தனது பர்சேஸை தொடங்கினாள். காலையிலிருந்தே அவர்களிருவருக்கும் ஏதோ ஒருவித மனச்சங்கடம் இருந்தது. பைக்கிலிருந்து இறங்கும்போது ரமேஷின் முகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சோர்ந்து காணப்பட்டது. 

காவியா திரும்பத் திரும்ப அதற்கான காரணத்தைக் கேட்டும், ரமேஷிடமிருந்து எந்த பதிலும் இல்லை.  கல்லூரி காலங்களில் ரமேஷின் மீதிருந்த அக்கறை நாளடைவில் அவளுக்குக் குறையத் தொடங்கியது.  இதுவறை மௌனம் சாதித்த ரமேஷ் வெளிப்படையாகக் கேட்டான்.

"நீ ஏன் முன்ன மாதிரி, என்னோட சரியா பேசறதில்ல!"

"அப்படிலாம் எதுவும் இல்ல, நான் யுசுவலாதான் பேசறேன், ஏன் அப்படி கேக்கற?"

"காலேஜ்ல இருந்ததற்கும், வேலைக்கு சேர்ந்து இப்போ இருக்கிற காவியாவுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்குது. அப்பவெல்லாம் என்மேல ரொம்ப அக்கறையா இருப்ப, ஆனா இப்போ நிறைய சேஞ்சஸ் இருக்குது".

"நான் எப்பவும் போலதான் இருக்கேன், உனக்கு தான் அப்படி தோணுது’’.

"காவியா நீ பேசறது சரியில்லநேத்து ஏன் ஃபோன்கால் அட்டன்ட் பண்ணல?"

"சாரி, நான் ஆபீஸ் வேலைல பிஸியா இருந்திருப்பேன்"

’’பிஸின்னு ஒரு மெஸேஜ் பண்ண முடியாத உன்னால?"

"அதான் சொன்னேனே பிஸின்னு, அப்பறம் எப்படி மெஸேஜ் பண்ண முடியும். இத கூட உன்னால புரிங்சுக்க முடியாதா!, நீ மட்டும் போன வாரம் என் மெஸேஜ்க்கு ரிப்லை பண்ணியா?"

"அத அப்பவோ கேட்டிருக்கலாமில்ல, இவ்வளவு நாள் கழிச்சு கேக்கற! அதுக்குத்தான் நேத்து ஃபோன் அட்டன்ட் பண்ணலயா, லூசா நீ"

"நான் இல்ல, மே பி நீயா இருக்கலாம். உனக்கு தெரியாதா ஆபீஸ் டைம்ல போன் பண்ணக் கூடாதுனு"

"இவ்வளவு நாளா ஆபீஸ் டைம்ல போன் பண்ணா பேசினநேத்து மட்டும் என்ன பிரச்சனை? கார்த்தி என்னோட பேச கூடாதுனு சொன்னானா?"

"ரமேஷ் யூ ஆர் க்ராசிங் யுவர் லிமிட்.  அவன் என் ஃபிரெண்ட் அவ்வளவு தான், அவன ஏன் இப்போ இழுக்கற?"

"அவன பத்தி சொன்னா உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது!"

"ரமேஷ் நீ உன் லிமிட்ட தாண்டற, இது நல்லா இல்ல. ஆபிஸ் வேலை செய்ரவங்க கூட பேசினா தப்பா?"

"நான் பேசினத தப்பு சொல்லல, நைட்ல அவன் எதுக்கு உனக்கு மெசேஜ் பண்ணனும். இத நான் கேட்டா லிமிட்ட தாண்டி பேசிறனு சொல்றே. அப்படியே அவனோட போ, நான் உன்ன ஒன்னும் கேக்க மாட்டேன். இப்ப திருப்தியா??‌"

"எவ்வளவு சொன்னாலும் நீ திருந்த மாட்டே, சரி நான் கிளம்பறேன்".

"எதுக்கு இவ்வளவு கோபப்பட்றே, அப்ப நீ மெஸேஜ் பண்ணலைன்னு சொல்லு பார்க்கலாம்".

"ரமேஷ் உன்ன திருத்த முடியாது, யூ கெட் லாஸ்ட். டோன் கால் மீ எனிமோர். குட் பை".

அன்றிரவு ரமேஷ் தொடர்ச்சியா பலமுறை போன் பண்ணியும், காவியாவின் தொலைபேசி இணைப்பு கிடைக்கவில்லை. வெறுப்பின் உச்சத்தை அடைந்த ரமேஷ் தன் மொபைலை சுவற்றின் மீதெறிந்தான்.

காவியா - ச்சீ இனி அவ பேரக் கூட சொல்லக்கூடாது என்று முடிவு செய்தான். தூங்கும் முன் தனது பழைய சிம்கார்டை தொலைபேசியில் போட்டுவிட்டு உடல் களைப்பால் கண்ணயர்ந்தான்.

05.08.07  ‍
நேரம் காலை 5.00

1 New Message ‍from Kavya Chellam
ஹாய்டா குட் மார்னிங். சாரி நேத்து நைட் டென்ஷன்ல போன் சார்ஜ் பண்ணல, அதான் கால் வந்த்து தெரியல. சாரி டா செல்லம்!

நேரம் காலை 7.00

Reply: ஓகே டியர், நோ ப்ராப்ளம். ஈவினிங் ரெடியா இரு சத்யம் தியேட்டர் போலாம்!


4 comments:

  1. அப்புறம் எதுக்குங்க அவ்வளவு சண்டை?

    நல்லாயிருக்கு.

    ReplyDelete
  2. நம்ம பசங்கள பத்தி தெரியாதா, எவ்வளவுதான் ..
    பட்டாலும் புத்தி வராதில்ல !!!

    இது தான் டெய்லியும் நடந்திட்டு இருக்கறாதா என் ப்ரெண்ட்ஸ் சொல்லுவாங்க...

    ReplyDelete
  3. nalla katpanai.
    vaazhthukkal.
    mullaiamuthan
    kaatruveli-ithazh.blogspot.com

    ReplyDelete
  4. வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.முல்லை அமுதன் அவர்களே

    ReplyDelete