ரௌத்திரம் பழகு!

இன்றைய சூழில் நாம் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களுள் மிக முக்கியமான ஒன்று - `ரௌத்திரம் பழகு`. 

வாழ்க்கையோட்டத்தில் ஓடுவதை சிறிது மணித்துளிகள் நிறுத்திவிட்டு சற்றே சிந்தித்துப் பார்த்தால், நம் ஆசான் பாரதியின் கருத்துக்களை நாம் மறந்துவிட்டுப் பயணிப்பதாகத் தோன்றுதிறது. ஆசானின் கவிதைகளும், தத்துவங்களும் இன்றைக்கு மட்டுமல்ல, வாழ்வின் அனைத்து நிலைகளிலும். அனைத்துத் தலைமுறையினருக்கும் நிச்சயம் பயனளிக்கும்.


 முதலில்  `ரௌத்திரம்` என்றால் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்;
 • ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் அல்லது சினம் அல்லது ஆத்திரம்; அதாவது  தனக்கோ அல்லது பிறருக்கோ தவறு/அநீதி இழைக்கப்படும் போது  அதைத் துணிவுடன் எதிர்த்துத் தட்டிக் கேட்கும் ஆத்திரம்தான் ரௌத்திரம்.
 • இன்னும் சரியாகச் சொன்னால், கோபப்பட வேண்டிய இடத்தில் கோபம் கொள்ளாமல் கோழையாய் இல்லாமலிருப்பது ரௌத்திரம்.
 • இப்படி அநீதியை எதிர்த்துத் தவறை தட்டிக்கேட்பதே ரௌத்திரம்.
அன்று அவன் கூறிய கருத்துக்களை நாம் கடைபிடிக்காததினால் வந்த வினைதான் இன்று நம்மைச் சுற்றி நிகழும் கொலைகளும் கொடூரங்களும்! 

ஓடும் பஸ்ஸில் பயணிகளுக்கு மத்தியில் பெண்ணொருத்திக்கு இழைக்கப்படும் கேலியும் கிண்டலும், விஷ்ணுப்பிரியாவின் கொலையைக் கண்ணுக்கெதிரே பார்த்தும் ஒன்றும் செய்யாத ஈனத்தனம், வழிப்பறி நடப்பதைப் பார்த்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது, வாகன விபத்தில் யாரோ அடிபட்டுக்கிடப்பதைப் பார்த்து கண்மூடிச் செல்வது, பட்டப் பகலில் நம் கண்ணெதிரே வாலிபவனொருவன் ரவுடிகளின் அரிவாளால் வெட்டப்பட்டுச் சரிவதும் தினம் தினம் இங்கு நடக்கின்றது. இதுபோன்ற அநியாயச் செயல்களுக்கெதிராக மக்களாகிய நாம் ஏதாவது செய்திருக்கோமா?

இல்லை இதுவரை நாம் எதுவம் செய்யவில்லை, ஏனெனில் நாம் தான் கோழைகளாயிற்றே. இதுபோன்ற சம்பவங்கள் நம் வீட்டிற்குள் ம்ம்ம் இல்லையில்லை நம் மகளுக்கோ, நம் மனைவிக்கோ அல்லது நம் தம்பிக்கோ நடக்கவில்லையே, பின் நாம் எதற்கு இவ்வநீதிகளைத் தட்டிக் கேட்கவேண்டும். அது நடக்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற போக்கில்தான் இருக்கிறோம். இப்படித் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் மறைமுகமாக அவற்றை வளர்த்துவருகிறோம் என்ற பழியுணர்ச்சியுமின்றி வாழப் பழகியுள்ளோம். இப்படி கண்டும்காணாமல் இருந்துகொண்டு தினம் தினம் மனித நேயத்தை நாமே தூக்கிலேற்றிக் கொன்றுவருகிறோம். 

இவையனைத்திற்கும் மூலகாரணம் நாம் ரௌத்திரம் பழகாதது தான். ரௌத்திரம் பழகாததால் தவறைத் தட்டிக் கேட்க அச்சம்; அவ்வச்சத்தைத் தவிர்க்கத் தவறியதால் வந்த இந்தக் கோழைத்தனம். 

தட்டிக்கேட்பதாலேயே பல தவறுகள் தடுக்கப்படும். 

நீங்க சொல்றது சரிதான், ஆனால் அவன் கையில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதமிருக்கும் போது என்ன செய்வது? தானிருக்கும் இடத்திற்கும் நிலைக்கும் தகுந்தாற்போல் விவேகமாகச் செயல்பட வேண்டும். ஆம் இதுபோன்ற நிலைகளில் முன்னெச்சரிக்கையின்றி தனித்திருக்கும் போது செயல்படுவது சிரமம்தான். அதுவே ரௌத்திரம் பழகிய மக்களின் மத்தியில் இருக்கும்போது சிரமமல்ல. எனவே ரௌத்திரம் என்பது நாம் மட்டும் பழகினால் போதாது, இச்சமுதாயத்தில்  இருக்கும் அனைவரும் பழக வேண்டும். இன்று வீட்டிற்கு வெளியே நடப்பது நாளை வீட்டிற்குள் நடக்காதா? அந்நிலை வர எவ்வளவு நாளாகும்?

இப்படி ரௌத்திரம் பழகாமல், அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டுப் போகும் மனப்பான்மைதான் இங்கு அதிகம் உள்ளது. சரி கத்தி அரிவாள் வேண்டாம், சாதாரணமாக பேங்குகளிலும், ரயில் நிலையங்களிலும் க்யூவில் நிற்பதைப் பற்றிப் பேசுவோம்.  அங்கு நம்மை முந்திக்கொண்டு வரிசையில் நிற்காமல் செல்பவனைக் கண்டு எதிர்த்துக் கேட்கத் திறனின்றி அவன் காதுகளுக்குக் கேட்காததுபோல் மெதுவாகச் சபிக்கிறோம். சரி அவன் தான் முன்னாடி போறான் – புத்திகெட்டவன், நாம வரிசையிலேயே நின்றுகொண்டிருந்தால் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை என்ற கோழைத்தனம் தான் நம்மிடம் மிஞ்சியிருக்கிறது. 

அதேபோல் தான் பேருந்திலும், ரயிலிலும் பயணிக்கும் போது அருகிலிருக்கும் பெண்களிடத்தில் வம்பு செய்பவர்களை எதிர்த்து எதுவும் பேசாமல், ஏதோ எருமை மாட்டு மேல மழை பெய்த்தைப் போன்று தலைகுனிந்து நிற்கிறோம். 

தவற்றைக் கண்டால் தட்டிக்கேட்க வேண்டுமென்பதை நம் பிள்ளைகளுக்காவது சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகளிட்த்தில் நம்மைச் சுற்றி நிகழும் அநீதிகளைக்கெதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும். 

வெறுமையாக முதல் ரேங்க வாங்கு, நல்லா படி, எது நடந்தாலும் கண்ணைமூடி உட்கார் என்று பேடிகளை வளர்க்காமல்; தைரியாக இரு, தவறைத் தட்டிக்கேள், அச்சம் தவிர் என்று ஆத்திசூடியையும் சொல்லிக் கொடுத்து, அவர்களுக்கு முன் நாம் நடந்துகாட்ட வேண்டும். தவறைத் தட்டிக் கேட்காமல் இருப்பதுதான் தவறு என்பதை உணர்த்த வேண்டும். இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, மாறாக நாம் நம் அன்றாடச் செயல்களில் அதைக் கடைபிடித்துக்காட்ட வேண்டும். 

இனியாவது ஆட்டு மந்தைகள் போலில்லாமல், முன் நிற்பவன் கேள்வி கேட்காவிடிலும் நாம் தட்டிக் கேட்போம். தவறைத் தட்டிக் கேட்பதுதான் சரி, அதைதான் நம் பாரதியும் கூறியுள்ளான் என்பதை நினைவில் கொள்வோம்.

அதற்காக எப்பொழுதுமே கோபப்பட வேண்டுமென்று நான் இங்கு குறிப்பிடவில்லை. தேவையான நேரங்களில் நிச்சியம் கோபப்பட வேண்டும். (நியாயக்) கோபங்களைக் கட்டுபடுத்த நாமொன்றும் இயேசுவோ புத்தனோ அல்ல, சாதாரண மனிதன் தான் ஆனால் கோழையல்ல!

17 comments:

 1. பழகத்தான் வேண்டும்
  நன்று

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

   Delete
 2. Jesus was deadly against all Jewish priests if those period, he questioned them, which irritated them and they planned against him & killed him. The only place where he did not open his mouth physically was when he was sentenced for crucification.

  ReplyDelete
  Replies
  1. AnonymousJune 04, 2018

   புரியவில்லை

   Delete
  2. நாட்டில் பெரிய பெரிய கொடுமைகள் நடந்துகொண்டிருக்கும் தருணத்தில் மிகச்சிறிய விஷயத்திற்கு ரௌத்திரம் அவசியமா.....?? நேரம் கடந்தமையால் வரிசையில் நிற்க இயலாத நிலைக்கு ரௌத்திரம் நியாயமா...??

   Delete
  3. நம்மிடமுள்ள ஒரு தவறான வழக்கம், தவறையும் அனுசரித்துச் செல்வது. அதுபோல உதவி மனப்பான்மை இருப்பது நல்லதுதான் அதற்காக ஏமாளியாக இருந்துவிடக் கூடாது.யாருக்காக, எதற்காக உதவுகிறோம் என்பதைத் தெரிந்து செய்தால் நன்று. சமுதாயத்தில் நிகழும் பெரும்பாலான தவறுகளுக்கு தனி மனிதவொழுக்கம் தான் முக்கியக் காரணி. நாட்டில் நடக்கும் பெரிய கொடுமைகளுக்கானக் காரணம், நுணியளவிருந்த தவறுகளைத் தட்டிக் கேட்காமல் அமைதியாக ஆதரித்ததுமாகும்.

   Delete
 3. அருமையான பதிவு

  ReplyDelete
 4. இது தவறான பதிவு

  ReplyDelete
  Replies
  1. என்ன தவறு என்று கூற முடியுமா நண்பரே...

   Delete
  2. @ Rasirajan, நண்பரின் பின்னூட்டத்திற்கு நன்றி.
   தவறைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள முயற்சி செய்வேன், அவை ஏற்புடையதாயின்!

   Delete
 5. சுயமரியாதை இழக்காமல் இருக்க கோவம் அத்யாவிசயம்

  ReplyDelete
  Replies
  1. @ சிவகிருஷ்ணன், பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே.

   Delete
 6. ரௌத்திரம் பழக வேண்டும்

  ReplyDelete