மோகமுள் - தி. ஜானகிராமன்


மோகமுள் நாவல் மறைந்த எழுத்தாளர் தி.ஜானகிராமன் அவர்களால் 1956ல் எழுதப்பட்டது. முதல் பதிப்பு வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகளாகியும், காலத்தால் அழியாவண்ணம் தமிழ் புத்தகவாசிகளிடத்தில் ஒரு செவ்வியல் புதினமாகக் கொண்டாடப்படுகிறது. 1995ல் திரு. ராஜ ஞானசேகரன் அவர்கள் இந்நாவலைத் தழுவி திரைப்படமாக வெளியிட்டார், ஆனால் வணிக ரீதியாக இப்படம் வெற்றியடையவில்லை.
இந்நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் என்னுள் பல ஆண்டுகளாக இருந்தது, ஆனால் அதற்கான வாய்ப்பு சமீபத்தில்தான் அமைந்தது. எனது 10ம் அகவையில் தூர்தர்ஷனில் இத்திரைப்படத்தைப் பார்த்ததாக ஞாபகம். கதை வாசிப்பிலிருக்கும் சுவாரசியத்தைத் திரைப்படத்தில் கொண்டுவர முடியவில்லை என்ற நிசப்தனமான உண்மை படம் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.

கதையின் மையக்கரு –

``மோகத்தைக் கொன்றுவிடு – அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு''

முதிரா இளைஞன் முதிர் கன்னி மேல் ஈடுபாடு கொண்டு, அவளை அடைய முற்படுவதும், அதன்பின் எழும் தவிப்பின் தொடர்ச்சியாக அவள் மீது விளையும் மோகம் (பொருந்தாக் காமம்) பற்றியதாகும். மோகத்தை மட்டுமே முன்னிருத்தாமல், நாயகனின் இலட்சியமான கர்நாடக சங்கீதத்தையும் முன்னிருத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

அன்றைய சமூக கோட்பாடுகள், நடைமுறைப் பழக்கவழக்கங்களை எதிர்த்து முற்போக்கானக் கருத்தை தன் இயல்பான நடையில் ஆசிரியர் முன்னிருத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்க்கு உரியது. நாவல் வெளிவந்த காலகட்டத்தில் பல்வேறான எதிர்மறை விமர்சனங்களை நிச்சயம் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.

கதையின் காலம் தோராயமாக சுதந்திரத்திற்கு முன்பானதாகக் (1930-1950) கொள்ளலாம். கதை சுழலும் இடம் தஞ்சை மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்த கும்பகோணமும் அதைச் சுற்றியுள்ள பகுதியுமாகும் (இப்பகுதி சோழர்காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டது).

கதையில் வழக்காடப்பட்டுள்ள சொற்கள் எனக்கு அதிகம் பரிட்சையமானதாக இல்லை, அதனால் தொடக்கத்தில் சிறிது தடுமாற்றமும் சலிப்பும் உருவானது. ஒரு கட்டத்தில் நாவலை மூடி வைத்துவிடலாமா என்ற எண்ணமும் எழுந்தது. எனினும் தி.ஜா அவர்களின் எழுத்து நடையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் தொடர்ந்து வாசிக்க முற்பட்டேன். முதல் 100-120 பக்கத்தில் தோன்றிய சிரமம், மெல்ல மெல்ல குறைந்து, நானும் கதையுடன் தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினேன்.

கதையின் நாயகன் பாபு கர்நாடக இசையில் ஆர்வமிக்க 20 வயது அந்தணர்குல வாலிபன், நாயகி யமுனா மராட்டிய வம்சாவழியில் தோன்றி பின்னாளில் தஞ்சையை உரைவிடமாக்கி வாழும் மராட்டிய-தமிழ்க் குடும்பப் பெண் ஆவாள்.             

கதையில் பல்வேறு மாந்தர்கள் வந்து சென்றாலும், நம் கண் முன் மறையாமல் நிற்பது – ரங்கண்ணா, தங்கம்மா, வைத்தி, ராஜம், பார்வதி மற்றும் பாலூர் ராமு என்ற கதாபாத்திரங்களே! கதை முழுவதும் பாபுவின் பார்வையில் வருவதால், கதையில் வரும் மாந்தர்களின் இயல்பும் அவர்களின் மனப்போக்கும் பாபுவின் சிந்தனை ஓட்டத்தினூடே பார்க்கப்படுகிறது.

தன் சிறுவயதிலிருந்தே யமுனாவுடன் பழகிவரும் பாபு, மெல்ல மெல்ல அவள் அன்பில் கரைந்து, வாலிப பருவத்தில் அவளை தெய்வத்தின் உருவமாகக் கொள்கிறான். யமுனாவின் அழகும், இலட்சணமும் அவனுடைய மனதில் ஒருவித மோகத்தை எரியூட்டி ஒருதலைக் காதலாக உருவெடுக்கிறது.

கும்பகோணத்தில் தங்கி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு சமயத்தில் பக்கத்து வீட்டு கிழவனின் இரண்டாந்தாரமாக வரும் இளம் மனைவி தங்கம்மாவுடன் சமய சந்தர்ப்பத்தால் கூடிவிடுகிறான். பின்னர் தவறிழைத்து விட்டதாக எண்ணி வாடும் அந்நேரத்தில் தான் யமுனா மீதான காதல் அவனுக்குப் புலனாகிறது. அடுத்த நாளே நடந்த உண்மைகளை யமுனாவிடம் எடுத்துரைத்து, அவளுக்கு தான் துரோகம் இழைத்து விட்டதாகக் கூறுகின்றான். ஆனால் யமுனா தங்களைச் சுற்றியிருக்கும் சமூகத்தைக் காரணம் காட்டி அவனை ஒதுக்கிவிடுகிறாள்.

இச்சூழலில் தங்கம்மாவும் தற்கொலை செய்துவிட தன்னுள் எழும் குற்றவுணர்வின் காரணமாக தன்னை அழித்துக்கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறான். தான் செய்வது தவறு என்பதை உணர்ந்தாலும், யமுனாவை தன் நினைவிலிருந்து அகற்ற இயலாமல் தவித்து வாடுகிறான்.

யமுனாவின் நிராகரிப்பால் ஏக்கமும் வலியும் அவனை இசை மீது பற்று கொள்ளச் செய்கிறது. பின் ரங்கண்ணா என்னும் இசைப் பயிற்றுவரிடம் சேர்ந்து கர்நாடக இசையைக் கற்றுக்கொள்கிறான்.  பின்னாளில் குருவிற்கு இஷ்டமான சிஷ்யனாகிறான். ஒரு நேரத்தில் தன் குருவும் இறந்துவிட, மனமுடைந்து நிற்கும் பாபு யமுனாவின் மீதுள்ள தவிப்பின் காரணமாக தன் உயிர்நாதமாக விளங்கிய இசைக்கலையையும் தொடர முடியாமல் வெறுக்கத் தொடங்குகிறான்.

ரங்கண்ணாவின் இறப்பிற்குப் பின்பு மெட்ராசில் பணிபுரிந்து வரும் பாபு, மூன்று வருடங்களுக்குப் பிறகு யமுனாவைச் சந்திப்பதும், வறுமையின் காரணமாக அவள் தன் இளமைப் பொலிவை இழந்து நிற்பதைக் காண்கிறான். இவ்வளவு வருடங்களுக்குப் பின்பும் பாபுவின் மனதில் தன் மீதிருக்கும் காதலில் எவ்வித மாற்றமும் இல்லாதது கண்டு மலைக்கிறாள்.

இதுவரை யாருக்கும் பயன்படாத தன் இளமையை, இத்தனை காலம் தனக்காஎவ்வளவோ செய்துவிட்டுக் காத்திருக்கும் பாபுவிற்குக் கொடுக்க விழைகிறாள். இத்தனை நாளிலிருந்த தவிப்பும் காத்திருப்பும் ''இதற்குத்தானா'' என்று கேட்பதுடன், பாபுவிடம் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள். இதனை மறுக்கும் பாபு, தான் முன்னர் சொல்லியது போல் அவளோடு நிரந்தரமாக வாழ நினைக்கிறான்.

நாவலின் முடிவில் இவர்களிரும் இணைவார்களாக? பாபுவின் இசைக் கலை மேன்மேலும் சிறப்புறுமா என்பதைக் கூறி முற்றுப் பெறுகிறது.

தை  மாந்தர்களுள் தங்கம்மாவின் பாத்திரப்படைப்பு மிகவும் சுவாரசியமானது. பாபுவின் மீதான தன்னுடைய (கள்ளக்) காதலுக்காக தன் உயிரை விடுகிறாள். தங்கம்மா பாபுவின் மீது கொண்டிருந்த காதலுக்கும், பாபு யமுனாவின் மீது கொண்டிருந்த காதலுக்கும் அதிக வித்தியாசமில்லால் இருந்தாலும், தங்கம்மாவின் காதலில் அழுத்தமும், மரபை மீறிய காமமும் இருப்பதை உணர முடிகிறது. கிழவருக்குக் கட்டி வைக்கப்பட்டு, சரீர சுகம் பெறாமல் அவள் உள்ளம் அனல் மீது விழுந்தப் பனித்துளியைப் போல் தவிக்கிறது.

அதேபோல நல்லொழுக்கத்துடன் வளரும் மாந்தர் காலச் சுழற்சியில் சிக்கி, போதிக்கப்பட்ட நெறியிலிருந்து தவறி உடல் இச்சைக்கு பலியாவதைக் கூறுகிறார்.

ஆசிரியர் கதையின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை அன்றைய சமூகத்தில் புரையோடியிருந்த பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்;

1. ஆண்களின் பலதார மணம்
2. பெண்ணுக்குப் போதிய சுதந்திரம் வழங்காமல், வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கும் வழக்கம்
3. குழந்தைத் திருமணம்
4. கலப்பு மணமும், பின்வரும் பிரச்சனைகளும்
5. தகுந்த நேரத்தில் திருமணமாகாத பெண்களின் நிலை, இரண்டாம் தாரமாக தள்ளப்படும் சூழல்
6. முதியவன் இளம்பெண்ணை மணத்தல்
7. பெண்ணுரிமை மறுக்கப்பட்டு ஆணாதிக்கக் கட்டுப்பாட்டில் பெண் வாழ்தல்
8. பொருந்தாக் காமம்

வாசிப்பின் முடிவில் பரவசமடைந்தது முற்றிலும் உண்மை. நம்மிலிருக்கும் அந்தரங்கக் கதவுகளை மீண்டுமொரு முறைத் தட்டிப் பார்த்ததாகத் தோன்றுகிறது. கதையின் ஏதேனும் ஒரு பகுதியில் நம்மை நாமே நிலைக்கண்ணாடி முன்னிறுத்திப் பார்த்தது போன்ற உணர்வும் ஏற்படுகிறது. யமுனாவின் இயல்பை பாபுவின் பார்வையில் கண்டதால், அவளின் உண்மையான குணாதிசயத்தை அறிய முடியவில்லை என்ற ஏக்கம் எழுகிறது.

நாவல் முழுதும் வரும் உரையாடல்கள் மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றின் தேவைகளையும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றது - குறிப்பாக பாபு-வைத்தி (தந்தை மகன் உறவு), பாபு-ராஜம் (நட்பு), பாபு-யமுனா (காதல்), பாபு-ரங்கண்ணா (குரு சிஷ்யன் உறவு), பாபு-சங்கு (சகோதர உறவு). அதே போல் ஆசிரியர் காமம் என்ற தணலைக் கதையில் கையாண்டிருக்கும் விதம் விரசமாகத் தோன்றாமல் மனிதனின் அக உணர்வுகளின் பிரதிபலிப்பாகச் தோன்றுகிறது.
 
ஒரு நிலையில் பாபுவிற்கு யமுனா அடையக்கூடியவளாகவும்,  அடைய முடியாதவளாகவும் நிறுத்தி, மோகத்திற்குரியதாக விளங்கும் அவளின் உடல் தான் வணங்கும் தெய்வத்தின் சொரூபமாய் விளங்குவதாக வேற்றுமைப் படுத்தியுள்ளார். இப்படி இருவேறு எல்லைகளுக்கு மத்தியில் அவன் உள்ளம் அகப்பட்டுச் சிக்கித் தவிப்பதை இதை விட சிறப்பாகக் கூற முடியாது என்று தோன்றுகிறது.

மாந்தர்களின் அக உலகையும், அதிலிருக்கும் சிக்கல்களையும் தனது இயல்பான பாணியில் நடை பிறலாமல் சித்தரித்துள்ளது தமிழ்ப் புதினங்களுக்குப் புதிதாக இருந்திருக்கும்.

இம்மோகத்திலிருந்து விடுபட்டோர் சிலரே!



14 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே. நல்ல பதிவு அருள்மொழிவர்மன். I watched the movie, the novel is in my wish list for a long time now. Will read it soon.
    - செல்வம் தங்கதுரை

    ReplyDelete
  2. @ Selvam, நண்பரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. சமயம் கிடைக்கும்பொழுது நிச்சயம் வாசித்துப் பாருங்கள், தி. ஜாவின் எழுத்து நடை உங்களை நிச்சயம் வசீகரிக்கும். 650 பக்க நாவலை 2 மணி நேர திரைப்படத்திற்குள் நிரப்புவது சிரமமான ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. Agree with you Arulmozhi Varman. Some of my friends read this novel and suggested me as well. It's all about my free time rather! BTW I like this name from the time I read "Ponniyin Selvan" :-)

      Vaazhthukkal,
      Selvam T

      Delete
  3. ரொம்ப நாளாக படிக்க நினைத்து கொண்டிருக்கும் நாவல்....

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் வருகைக்கு நன்றி! வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் வாசிக்கவும்.

      Delete
  4. அருமை நண்பரே

    ReplyDelete
  5. வணக்கம் நண்பரே நலமா ?
    1985-என்று நினைக்கிறேன் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் சொல்லி இருந்தார்

    //மோகமுள் படித்து விட்டு பட்டுக்கோட்டை வீதிகளில் பித்துப்பிடித்து அலைந்து இருக்கிறேன் என்று//

    அன்றிலிருந்து இன்றுவரை எனது கைகளில் சிக்காத நூல் இது விரைவில் வாங்குவேன் நன்றி நண்பரே.
    தி.ஜானகிராமன் அவர்களைப்பற்றி அறியாதவர்கள் உண்டா ? அலசிய விதம் அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. @ Killergee, நலம் நண்பரே! நண்பரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

      அலுவலகப் பணியின் காரணமாக முன்பு போல் அதிக நேரம் வலைப்பூவில் செலவிட முடியவில்லை. சமயம் கிடைக்கும் பொழுது நிச்சயம் வாசித்துப் பாருங்கள், தி. ஜாவின் நடையிலிருக்கும் தனித்தன்மையை உணர முடியும்.

      Delete
  6. 'மோகமுள்' தொலைவில் நின்று பார்த்ததுண்டு ... அருகில் சென்று படித்ததில்லை. ஆனால் விரைவில் படிக்கச் ஆசையுண்டு. ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete
    Replies
    1. அந்தரங்கப் பக்கங்களை திறந்தாற்ப் போன்றுது, 'மோகம்' முள்ளின் கூர்மையைப் போன்றது. வலியுடன் கூடிய சுகம், அகவுலகின் சிக்கல் அதுவே!!

      Delete
  7. வெற்றிமாறனின் நேர்காணலை பார்த்துக்கொண்டிருந்தேன் . இந்த புத்தகத்தை பற்றி கூறினார் . கூகிளில் தேடிப்பார்த்தேன் . உங்கள் வலைத்தளம் பார்த்து வந்தேன் . நான் ஆசிரியர் , துபாயில் இருக்கிறேன்

    ReplyDelete
  8. அழகாக எழுதுகிறீர்கள் . தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
      வாசித்துப் பாருங்கள், அந்தரங்கக் கதவுகளைத் திறந்தது போன்ற உணர்வெழும்.
      நீங்களும் துபாயில் இருப்பது கண்டு மகிழ்ச்சி, நேரம் அமைந்தால் ஆசிரியரை நேரில் சந்திக்கலாம்.

      Delete
  9. படித்து முடித்ததும், என்னை ஒரு மீளா மோகத்துக்குள் தள்ளிய "மோகமுள்"❤️

    ReplyDelete