குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி

வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம். 

இந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பத்துப் புத்தங்கள் வாங்கியதாக ஞாபகம், அதில் முதலில் வாசிக்க வேண்டும் என்றெண்ணியது "குற்றப்பரம்பரை" நாவல். நாவலின் முன்னுரையில் 'பெருநாளாய் தீ வளர்த்தேன்',  பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்' என்று ஆசிரியர் குறிப்பிட்டதை வாசித்த போது நாவலின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்தது. 

இந்நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்கள். இவரை சமீப கால தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடியும்.  எழுத்துலகில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிபடுத்தி வருகிறார்.

முன்னுரையிலிருந்து…

என் பேரன்பு எவர் பால்? பெருங்கோபம் எவர் பால்? என்பதை என் எழுத்தைத் தொடர்பவர் அறிவர். தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம். பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு என்றும், இந்த இரு சாதியினர் மோதினால் இனப்பெயரையும் குறித்து, சாதிக்கலவரம் என்றும் அக்கினி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா? சாதிப் பயிர்களுக்கு சாணி, உரம் இடுபவன்தானே, பெரியார் பெயர் சொல்லி தொடர்ந்து கொடியேற்றுகிறான்? சில சலுகைகளுக்காக மண்டியிடும் சான்றோர், ஆன்றோர்களின் திருக்கு மீசைகளில் ஒரு வண்டி மண் ஒட்டி இருக்கிறதே – என்று தொடக்கத்திலேயே சாடியுள்ளார் !!

நாவலின் கதைக்களம் அன்றைய இராமநாதபுரத்தைச் சுற்றியிருந்த பெருநாழி, கொம்பூதி, பெரும்பச்சேரி எனும் கிராமப் பகுதிகளில் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கிறது. அந்நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மூன்று சாதிக் குழுக்களைப் பற்றியது. குறிப்பாக கள்ளர் என்ற இனக்குழுவைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் வாழ்வியல் மற்றும் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விவரித்துச் செல்கிறது.

ம்மக்களிடமிருந்த வேற்றுமைகள், சிறுபான்மைச் சமூகமான அவர்களுக்கு எதிராக மறுக்கப்பட்டிருந்த உரிமைகள், அதன் தொடர்ச்சியாக நிகழும் சண்டை, அவர்களை ஒடுக்க ஆங்கிலேயர்களும் உயர்சாதியினரும் கையாண்ட அடக்குமுறைகள், சித்ரவதைகள், வலியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், அவ்விரு பூர்வீகக் குடிகளுக்கிடையே மூண்டெழும் கலவரம் அணையா நெருப்பாகி ரத்தம் படிந்த பூமிக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. 

களவு, தீண்டாமை, வீரம், நேர்மை, வன்மம் துரோகம், பொறாமை, அடக்குமுறை, சூழ்ச்சி, கொலை  மற்றும் கலவரம் என்று மனிதனின் அகம், புற வாழ்வின் கொடிய பகுதிகளுக்குள் கதை நகர்கிறது.

நாவலை ஒரே மூச்சில் படித்து விட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன் ஆனால் தொடக்கத்தில் கதையுடன் சேர்ந்து பயணிக்க முடியாமல், ஏதோ ஒருவித தொய்வும் இடைவெளியும் உண்டானது. கதை நிகழும் இடமும், மாந்தர்களுக்குள் நிகழும் சம்பாசணைகளும், அங்கு வழக்காடப் பட்டிருந்த வட்டார மொழியும்  எனக்கு அதிகம் பரிட்சையமில்லாத காரணத்தால் ஒரு கணம் வாசிப்பை நிறுத்தி விடலாமா என்றெண்ணினேன்!

ஆனால் அடுத்த சில பக்கங்களைக் கடந்த பின் முதலில் நினைத்தது எத்தகு தவறு என்பதை உணர்ந்தேன். ஆசிரியரின் எழுத்து நடை கதை மாந்தர்களின் வாழ்வியலைப் போன்று ஆரம்பத்தில் சற்று கரடுமுரடாகச் சென்றாலும், சிறிது நேரத்தில் நம்மை முழுவதும் வசியப்படுத்துகிறது. வாசிப்பின் இடையில் ஆசிரியர் நமக்கு சுவாசிக்கவும் இடம் தராமல் முழு மூச்சில் ஓட விடுகிறார். நிதானித்துத் திரும்பிப் பார்க்கும் எண்ணத்திற்கே இடமில்லாமல் போகிறது. 

முன்னுரையில் மட்டுமின்றி கதை முழுவதும் அவ்வுயர் சமூகத்தின் மீது அவருக்கிருந்த கோபமும், சிறுபான்மையினர் மீதிருந்த பரிவும் புலனாகிறது. வேயன்னா எனும் கள்ளர் இனத்தலைவனைச் சுற்றி கதை நகர்கிறது. கதையில் வரும் இவரின் போக்கும் செயலும் நாவலாசிரியரை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது. கதையின் இன்னொரு சிறப்பம்சம் இதில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் அவர்களின் இயல்புடன் ஒன்றிப் பயணிக்கிறது. எ.கா. கூழானிக்கிழவி, சேது, வில்லாயுதம், அக்கம்மா, வையத்துரை, காளத்தி, சிட்டு, அன்னமயில், வீரணன், விக்டர்துரை, வஜ்ராயினி.

கள்ளர் இனக்குழுவின் வாழ்வியலை சிறிதும் தொய்வின்றி சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார். வெவ்வேறு நிலைகளில் தொடர்ந்து இச்சமுகத்தால் விலக்கப்படுவதால், வேறுவழியின்றி களவையேத் தொழிலாகக் கொண்டிருந்தனர். எதற்கு இத்தகு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார்கள், விருப்பத்தின் பேரிலா? நிச்சயம் கிடையாது என்பதை வாசிப்பினூடே நம்மால் உணர முடிகிறது. கோபமிருக்கும்  இடத்தில் தான் குணமிருக்கும், அதுபோல அம்மக்களின் புறத் தோற்றம் கரடுமுரடாகத் தோன்றினாலும், அகத்தில் மாசற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாகக் கூறுகிறார்.

இப்படிக் களவாடிய பொருட்களைத் தங்களின் ஆடம்பர வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், உயர்சாதி ஒருவனிடம் கொடுத்து, அதற்கு ஈடாக உணவு தானியங்களைப் பெறுவதிலிருந்து அவர்கள் உண்ணும் உணவிற்காகவே இவ்வளவும் செய்கிறார்கள் என்றறியும் போது மனதில் இரக்கமும் அனுதாபமமும் குடிகொள்கிறது. வெக்கையில் வளரும் மனிதர்களிடம் இயற்கையாகவே கோபம், ஆத்திரம், பிடிவாதம், திமிர் போன்ற குணாதிசயங்கள் இருப்பது அவர்களின் தவறல்ல. 

நாவலில் கிளைக்கதையாக வரும் வஜ்ராயினி, நாகமுனி, ஹஷார் தினார் அவர்களின் பகுதிகள் ஏனோ மனதில் ஒட்டவில்லை.  பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட  வளரி எனும் ஆயுதத்தை (பூமராங்) நினைவுபடுத்தி இருக்கிறார்.

நாவலை வாசித்த பின்பு குற்றப்பரம்பரைச் சட்டத்தைப்  (Criminal Tribes Actபற்றி இணையத்தில் விரிவாகத் தெரிந்துகொண்டேன். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில்  வட இந்தியாவில் பெருகி வந்த கொலை மற்றும் கொள்ளையைத் தடுக்க ஆங்கிலேயர்கள் இச்சட்டத்தை  முதலில் கொண்டுவந்தனர். பின்னர் இச்சட்டம் ஒரு சில சமூகத்தினருக்கு (கீழ் சாதி)   எதிராகத் திரும்பியது.

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், முத்தரையர், அம்பலக்காரர், வலையர் என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. இதில் குறிப்பிட்ட சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்று அறிவிக்கப்பட்டனர்.   இப்படி நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த இயற்றப்பட்ட சட்டம் நாளடைவில் கை ரேகைச்சட்டம், ராத்திரிச்சீட்டு என்று பல்வேறு அடக்குமுறைகளைச் சிறுபான்மையினருக்கு எதிராகத் திணித்தது. இதன் எதிரொளியாக தென் மாநிலங்களில் பல்வேறு கலவரங்களும், உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக நடந்துவந்தது.

கள்ளர் இனக்குழுவின் வாழ்வையும், அவர்களின் சமுதாய நிலைப்பாட்டையும், அந்த சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்தவர்கள் யார்? எதிர்த்து நின்றவர்கள் யார்? என்று அச்சமூகத்தின் வாழ்வியலை இந்நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார். களவைக் குலத்தொழிலாகக் கொண்டிருந்தாலும் அது நல்லவர்கள் நிறைந்த கூட்டமாகவே தெரிகிறது !
அடக்கி ஆள்ந்துகொண்டிருக்கும் உயர் சமூகம் ஒருநாள் உணர்வற்றுப் போகும், ஒடுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுமிருந்த சமூகம் வரும் நாளில் நிச்சயம் விழித்தெழும் !!
இப்படியொரு உணர்வுப் பூர்வமான நாவலை ஆசிரியர் அளித்ததாலோ என்னவோ, வாசிப்பின் முடியில் நல்லதொரு நாவல் படித்த திருப்தி கிட்டியது. வேயன்னாவின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு மனதிலிருக்கும்.

இந்நாவல் தமிழ் வாசகர்கள் அனைவரும்  கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.

யார் இந்த காளிதாசன்! (பாகம் 1)

காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை  இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.

அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்;

“கற்கும்போதே
இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்…
ஒன்று கலவி
மற்றொன்று காளிதாசனின் கவிதை….”

“காளிதாசனின் கவிதை
இளமையான வயது
கெட்டியான எருமைத் தயிர்
சர்க்கரை சேர்த்த பால்
மானின் மாமிசம்
அழகிய பெண் துணை
என் ஒவ்வொரு ஜன்மத்திலும்
இதெல்லாம் கிடைக்க வேண்டுமே!”.

காளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது.

காளிதாசனுடைய உவமானங்கள் ஒப்பற்றவை, அழகிற் சிறந்தவை. “உபமான: காளிதாஸ:” என்றே சிறப்பித்துக் கூறுவார்கள்.

உதாரணத்திற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய பாடலை இங்கு காண்போம்;

“மழையின் முதல் துளிகள்
அவளின் கண் இமைகளில்
சிறிது தங்கின…
பின் அவள் மார்பகங்களில்
சிதறின…
இறங்கி அவள் வயிற்று
சதைமடிப்பு வரிகளில்
தயங்கின…
வேகுநேரத்திற்கு பின்
அவள் நாபிச் சுழியில்
கலந்தன…”

இனிவரும் நாட்களில் அவரியற்றிய கவிதைத் தொகுப்புகள், காவியங்களை வாசித்து இணைய நண்பர்களுடன் இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்.

தொடரும்..