குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி

வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம். 

இந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பத்துப் புத்தங்கள் வாங்கியதாக ஞாபகம், அதில் முதலில் வாசிக்க வேண்டும் என்றெண்ணியது "குற்றப்பரம்பரை" நாவல். நாவலின் முன்னுரையில் 'பெருநாளாய் தீ வளர்த்தேன்',  பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்' என்று ஆசிரியர் குறிப்பிட்டதை வாசித்த போது நாவலின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்தது. 

இந்நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்கள். இவரை சமீப கால தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடியும்.  எழுத்துலகில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிபடுத்தி வருகிறார்.

முன்னுரையிலிருந்து…

என் பேரன்பு எவர் பால்? பெருங்கோபம் எவர் பால்? என்பதை என் எழுத்தைத் தொடர்பவர் அறிவர். தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம். பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு என்றும், இந்த இரு சாதியினர் மோதினால் இனப்பெயரையும் குறித்து, சாதிக்கலவரம் என்றும் அக்கினி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா? சாதிப் பயிர்களுக்கு சாணி, உரம் இடுபவன்தானே, பெரியார் பெயர் சொல்லி தொடர்ந்து கொடியேற்றுகிறான்? சில சலுகைகளுக்காக மண்டியிடும் சான்றோர், ஆன்றோர்களின் திருக்கு மீசைகளில் ஒரு வண்டி மண் ஒட்டி இருக்கிறதே – என்று தொடக்கத்திலேயே சாடியுள்ளார் !!

நாவலின் கதைக்களம் அன்றைய இராமநாதபுரத்தைச் சுற்றியிருந்த பெருநாழி, கொம்பூதி, பெரும்பச்சேரி எனும் கிராமப் பகுதிகளில் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கிறது. அந்நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மூன்று சாதிக் குழுக்களைப் பற்றியது. குறிப்பாக கள்ளர் என்ற இனக்குழுவைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் வாழ்வியல் மற்றும் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விவரித்துச் செல்கிறது.

ம்மக்களிடமிருந்த வேற்றுமைகள், சிறுபான்மைச் சமூகமான அவர்களுக்கு எதிராக மறுக்கப்பட்டிருந்த உரிமைகள், அதன் தொடர்ச்சியாக நிகழும் சண்டை, அவர்களை ஒடுக்க ஆங்கிலேயர்களும் உயர்சாதியினரும் கையாண்ட அடக்குமுறைகள், சித்ரவதைகள், வலியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், அவ்விரு பூர்வீகக் குடிகளுக்கிடையே மூண்டெழும் கலவரம் அணையா நெருப்பாகி ரத்தம் படிந்த பூமிக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. 

களவு, தீண்டாமை, வீரம், நேர்மை, வன்மம் துரோகம், பொறாமை, அடக்குமுறை, சூழ்ச்சி, கொலை  மற்றும் கலவரம் என்று மனிதனின் அகம், புற வாழ்வின் கொடிய பகுதிகளுக்குள் கதை நகர்கிறது.

நாவலை ஒரே மூச்சில் படித்து விட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன் ஆனால் தொடக்கத்தில் கதையுடன் சேர்ந்து பயணிக்க முடியாமல், ஏதோ ஒருவித தொய்வும் இடைவெளியும் உண்டானது. கதை நிகழும் இடமும், மாந்தர்களுக்குள் நிகழும் சம்பாசணைகளும், அங்கு வழக்காடப் பட்டிருந்த வட்டார மொழியும்  எனக்கு அதிகம் பரிட்சையமில்லாத காரணத்தால் ஒரு கணம் வாசிப்பை நிறுத்தி விடலாமா என்றெண்ணினேன்!

ஆனால் அடுத்த சில பக்கங்களைக் கடந்த பின் முதலில் நினைத்தது எத்தகு தவறு என்பதை உணர்ந்தேன். ஆசிரியரின் எழுத்து நடை கதை மாந்தர்களின் வாழ்வியலைப் போன்று ஆரம்பத்தில் சற்று கரடுமுரடாகச் சென்றாலும், சிறிது நேரத்தில் நம்மை முழுவதும் வசியப்படுத்துகிறது. வாசிப்பின் இடையில் ஆசிரியர் நமக்கு சுவாசிக்கவும் இடம் தராமல் முழு மூச்சில் ஓட விடுகிறார். நிதானித்துத் திரும்பிப் பார்க்கும் எண்ணத்திற்கே இடமில்லாமல் போகிறது. 

முன்னுரையில் மட்டுமின்றி கதை முழுவதும் அவ்வுயர் சமூகத்தின் மீது அவருக்கிருந்த கோபமும், சிறுபான்மையினர் மீதிருந்த பரிவும் புலனாகிறது. வேயன்னா எனும் கள்ளர் இனத்தலைவனைச் சுற்றி கதை நகர்கிறது. கதையில் வரும் இவரின் போக்கும் செயலும் நாவலாசிரியரை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது. கதையின் இன்னொரு சிறப்பம்சம் இதில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் அவர்களின் இயல்புடன் ஒன்றிப் பயணிக்கிறது. எ.கா. கூழானிக்கிழவி, சேது, வில்லாயுதம், அக்கம்மா, வையத்துரை, காளத்தி, சிட்டு, அன்னமயில், வீரணன், விக்டர்துரை, வஜ்ராயினி.

கள்ளர் இனக்குழுவின் வாழ்வியலை சிறிதும் தொய்வின்றி சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார். வெவ்வேறு நிலைகளில் தொடர்ந்து இச்சமுகத்தால் விலக்கப்படுவதால், வேறுவழியின்றி களவையேத் தொழிலாகக் கொண்டிருந்தனர். எதற்கு இத்தகு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார்கள், விருப்பத்தின் பேரிலா? நிச்சயம் கிடையாது என்பதை வாசிப்பினூடே நம்மால் உணர முடிகிறது. கோபமிருக்கும்  இடத்தில் தான் குணமிருக்கும், அதுபோல அம்மக்களின் புறத் தோற்றம் கரடுமுரடாகத் தோன்றினாலும், அகத்தில் மாசற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாகக் கூறுகிறார்.

இப்படிக் களவாடிய பொருட்களைத் தங்களின் ஆடம்பர வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், உயர்சாதி ஒருவனிடம் கொடுத்து, அதற்கு ஈடாக உணவு தானியங்களைப் பெறுவதிலிருந்து அவர்கள் உண்ணும் உணவிற்காகவே இவ்வளவும் செய்கிறார்கள் என்றறியும் போது மனதில் இரக்கமும் அனுதாபமமும் குடிகொள்கிறது. வெக்கையில் வளரும் மனிதர்களிடம் இயற்கையாகவே கோபம், ஆத்திரம், பிடிவாதம், திமிர் போன்ற குணாதிசயங்கள் இருப்பது அவர்களின் தவறல்ல. 

நாவலில் கிளைக்கதையாக வரும் வஜ்ராயினி, நாகமுனி, ஹஷார் தினார் அவர்களின் பகுதிகள் ஏனோ மனதில் ஒட்டவில்லை.  பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட  வளரி எனும் ஆயுதத்தை (பூமராங்) நினைவுபடுத்தி இருக்கிறார்.

நாவலை வாசித்த பின்பு குற்றப்பரம்பரைச் சட்டத்தைப்  (Criminal Tribes Actபற்றி இணையத்தில் விரிவாகத் தெரிந்துகொண்டேன். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில்  வட இந்தியாவில் பெருகி வந்த கொலை மற்றும் கொள்ளையைத் தடுக்க ஆங்கிலேயர்கள் இச்சட்டத்தை  முதலில் கொண்டுவந்தனர். பின்னர் இச்சட்டம் ஒரு சில சமூகத்தினருக்கு (கீழ் சாதி)   எதிராகத் திரும்பியது.

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், முத்தரையர், அம்பலக்காரர், வலையர் என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. இதில் குறிப்பிட்ட சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்று அறிவிக்கப்பட்டனர்.   இப்படி நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த இயற்றப்பட்ட சட்டம் நாளடைவில் கை ரேகைச்சட்டம், ராத்திரிச்சீட்டு என்று பல்வேறு அடக்குமுறைகளைச் சிறுபான்மையினருக்கு எதிராகத் திணித்தது. இதன் எதிரொளியாக தென் மாநிலங்களில் பல்வேறு கலவரங்களும், உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக நடந்துவந்தது.

கள்ளர் இனக்குழுவின் வாழ்வையும், அவர்களின் சமுதாய நிலைப்பாட்டையும், அந்த சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்தவர்கள் யார்? எதிர்த்து நின்றவர்கள் யார்? என்று அச்சமூகத்தின் வாழ்வியலை இந்நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார். களவைக் குலத்தொழிலாகக் கொண்டிருந்தாலும் அது நல்லவர்கள் நிறைந்த கூட்டமாகவே தெரிகிறது !
அடக்கி ஆள்ந்துகொண்டிருக்கும் உயர் சமூகம் ஒருநாள் உணர்வற்றுப் போகும், ஒடுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுமிருந்த சமூகம் வரும் நாளில் நிச்சயம் விழித்தெழும் !!
இப்படியொரு உணர்வுப் பூர்வமான நாவலை ஆசிரியர் அளித்ததாலோ என்னவோ, வாசிப்பின் முடியில் நல்லதொரு நாவல் படித்த திருப்தி கிட்டியது. வேயன்னாவின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு மனதிலிருக்கும்.

இந்நாவல் தமிழ் வாசகர்கள் அனைவரும்  கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.

6 comments:

  1. சுவாசிக்க இடம் தராமல் வாசிக்க செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ... எனவே இடையிடையே பெருமூச்சுடன் முழுமூச்காக வாசிக்க துணிந்து விட்டேன். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete
    Replies
    1. வாசித்த பின் தங்களது பின்னூட்டத்தையும் சேருங்கள்...

      Delete
  2. இச்சட்டம் ஒரு சில சமூகத்தினருக்கு (கீழ் சாதி) எதிராகத் திரும்பியது. // கள்ளர் சாதியை சேர்ந்த புதுக்கோட்டை தொண்டைமான்கள் , அறந்தாங்கி தொண்டைமான்கள், தஞ்சையின் பதிமூன்று பாளையகர்கள், திருமாலை நாயக்கன் தன்னுடைய மகனாக நினைத்த மதுரை புன்னைய தேவன் , சிவகங்கை கப்பலூர் தலைவர் காரியமாணிக்கம் அம்பலம், தஞ்சாவூர் வாண்டையார், சாவடி நாயக்கர் என்ற கள்ளர் சாதியை சேர்ந்த எல்லோரும் கீழ்ச்சாதி என்று இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். அந்த கதையில் வரும் வெள்ளான், செட்டி இவர்கள் தான் உயர் சாதி என்று தெரிந்துக்கொண்டேன். இச்சட்டத்தில் வந்த மறவர் சேதுபதி மன்னர் வகையாற கீழ்ச்சாதி என்று தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  3. கள்ளர்களை ஒரு பிரிவான பிறமலைக் கள்ளர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டனர். பிறமலைக் கள்ளர்கள் ஆங்கில அரசுக்குக் கட்டுப்படாத ஒரு தனி அரசையே நெடுங்காலமாக நடத்திவந்தனர். 8 நாடுகள் 24 கிராமங்கள் உள்ளடங்கிய அவர்களது அரசுக்கு ‘தன்னரசுக் கள்ளநாடு’ என்று பெயர். கி.பி. 1754ஆம் ஆண்டில் பிறமலைக் கள்ளர்களின் தலைவர்கள் ஒன்றுகூடி ஒரு ஒப்பந்தம் போட்டனர். அதன்படி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு நெடுங்காலம் வரிகள் எதையும் செலுத்தவில்லை. ஆங்கில அரசை அவர்கள் பகிரங்கமாகவே எதிர்த்தனர். அதனால் அவர்களை ஆங்கில அரசு அச்சத்தோடே எப்போதும் பார்த்து வந்தது.

    ஆங்கிலேயர்கள் 1800 களில் மதுரைப்பகுதியை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். ராணுவத் தன்மை உடைய கள்ளர்கள் இங்கு ஏற்கனவே ஸ்தலக்காவல், தேசக்காவல், பகுதிக்காவல் உரிமைகள் பெற்றிருந்தார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் இங்கே அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அந்தக் காவல் பணியும் அவர்கள் வசம் சென்றது. கள்ளரினம் தனது பாரம்பரிய கட்டுமானத்தில் விரிசல்கள் கண்டது.

    1870 ஆம் ஆண்டு வரையிலும் பிரிட்டிஷ் போலீஸ் துறையால் தீர்க்கமுடியாத குற்றங்களை சில பிரமலைக்கள்ளர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர். அதற்காக அவர்கள் பெற்றுக் கொண்ட பரிசிற்கு பெயர்தான் துப்புக்கூலி. கள்ளர்கள் தங்களது பழங்காலமுறை காவல்தொழிலை திறமையான முறையில் நடத்தி வந்தனர். இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் எரிச்சலுற்றனர். இதனால் பல போலீஸ் சூப்பிரெண்டுகளும், கலெக்டர்களும் பிரமலைக்கள்ளர் சமூகத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டனர்.

    1906 ஆம் ஆண்டு மதுரைப்பகுதியில் ஏற்பட்ட சில முக்கியமான களவுகளை கண்டுபிடிக்க முடியாத பிரிட்டிஷ் போலீஸ் கையைப்பிசைந்தது. துப்புக்கூலி கொடுத்து உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர்களின் அதிகார மமதை இடம்தரவில்லை.

    மதுரையில் இருந்த ஆங்கில அதிகாரி ராபர்சன் துரை என்பவரிடம் பிறமலைக்கள்ளர்கள் காவல் வரி கேட்டதையும் அதற்கு பின் நடந்தேறிய சம்பவங்களை " India on march " எனும் புத்தகத்தில் வெள்ளையர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது..

    " இந்த தேவன் ( பிறமலை கள்ளர்) மிகவும் உறுதியான உடல் அமைப்பை கொண்டவன். இவர்கள் மதுரையில் நாகமலை பகுதியில் வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தங்களது நீண்ட கூத்தலுடன் கூர்மையான கத்தியை இணைத்து வைத்திருப்பார்கள்.

    பிறமலைக் கள்ளர்கள் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் ஒரு மரத்தின் அடியில் இருக்கும் கருப்புசாமியை வழிபட செல்வது இயல்பானதாகும்.

    ஒரு பிறமலைக்கள்ளர் ராபர்ட்சன் துரை எனும் ஆங்கில அதிகாரியிடம் காவல் வரியாக 5 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி , வரி செலுத்த மறுத்துவிட்டார். காவல் வரி கேட்டு வீட்டுக்கு வந்த மற்ற கள்ளர்களையும் போலீசில் புகார் செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தார். காவல் வரி செலுத்த மறுத்த வெள்ளையருக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தார் அந்த தேவர்.

    20 மைலுக்கு அப்பாலுள்ள தங்களது கிராமத்தில் இருந்து 8 கள்ளர்கள் ராபர்ட்சன் பங்களாவை இரவு 2 மணிக்கு அடைந்தனர். உடம்பில் எண்ணை தடவிக்கொண்டு, பங்காவிற்குள் நுழைந்தனர்.தங்களது சுவாசத்தின் மூலமே ராபர்சன் இருக்கும் அறையை அடைந்தனர். வெள்ளையரின் கைக்கடிகாரம், துப்பாக்கி, டயரி முதலியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர். தூங்கிய எழுந்த வெள்ளையன் தான் பழிவாங்கப்பட்டதை உணர்ந்து கொதித்து போய் காவல் நிலையத்தை நோக்கி ஒடிப்போனார்.

    கள்ளர்களின் வாழ்வாதாரமான காவல் தொழிலை ஒழித்து, பிற்காலத்தில் கள்ளர்களை குற்றப்பரம்பரை என முத்திரை குத்தியது வரலாற்றில் மறைக்கமுடியாத வெள்ளையர்களின் அவலம்.(India on march 1922)

    ReplyDelete
    Replies
    1. மேற்குறிப்பிட்ட தகவல்களுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் பல. கொள்ளை என்பதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் இனப்பிரிவை தவறென்பதா அல்லது அவரவர் நியாயங்களை வைத்து சரி என்பதா? ஒன்று நிச்சயம் இதை வைத்து ஆங்கிலேயர்கள் இன்னும் சுரண்டியிருப்பார்கள்.

      Delete