கண்டதும் காதல் - `யாயும் ஞாயும் யாராகியரோ`


பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலபேரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். இணைய நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துச் சுவைத்து, தங்களின் கருத்துரையை இணைக்க வேண்டுகிறேன்.

பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும்.


பொதுவாக குறிஞ்சித் திணையானது தனித்திருக்கும் தலைவனும் தலைவியும் அல்லது வேட்டைக்குச் செல்லும் ஒரு இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியொருத்திக்குமிடையே நிகழும் ``புணர்தலும் புணர்தல் நிமிர்த்தமுமாகும் (கூடல்)’’. 

குறுந்தொகைப் பாடல்  எண்: 40 (நாற்பது)

ஆசிரியர் செம்புலப்பெயனீரார்

திணை - குறிஞ்சி

தலைவன் கூற்று – தலைவியிடம் தலைவன் கூறுதல்

தலைவனுக்கும் தலைவிக்குமிடையே எதிர்பாராத சந்திப்பின்பால் காதல் மலர்ந்தது. இப்படி முன்பின் தெரியாத இளைஞனுடன் கண்டதும் காதல் ஏற்பட்டதால் தலைவிக்குத் தலைவன் மேல் ஐயமேற்படுகிறது, எங்கு இவன் நம்மை விட்டுச் சென்றுவிடுவானே என்ற பயம்தான் அது. தலைவியின் முகத்தில் சட்டெனத் தோன்றிய கவலையை உணர்ந்த தலைவன், தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம் கூறும் பாடல் இதோ:

``யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’.

யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்;
எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்;
செம்புலம் = செம்மண் நிலம்; பெயல் = மழை;

பாடலின் பொருள்:

என் தாயும் உன் தாயும் யார் யாரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்?
எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே!

இப்படி செம்மண் நிலத்திலிருக்கும் நீர் போல் தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டிருந்தனர்.

21 comments:

 1. குறுந்தொகை இன்பம். படைப்பிற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. @ தி.தமிழ் இளங்கோ, ஐயாவின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 2. சுவை - தமிழ்ச் சுவை பருகத் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வெங்கட்!

   Delete
 3. மிகவும் புகழ் பெற்ற பாடலை இங்கே ரசிக்கக் கொடுத்ததற்கு நன்றி! ரொம்ப நாளாயிற்று இதை மறுபடியும் படித்து! கவிஞர் கண்ணதாசன் இதையொட்டியே ' நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?' என்ற பாடலை எழுதியதாகச் சொல்வார்கள். நா.பார்த்தசாரதியும் தன் பொன்விலங்கு என்ற நாவலில் இப்பாடலை அழகாய் கையாண்டிருப்பார்!

  ReplyDelete
  Replies
  1. @ மனோ சாமிநாதன், அம்மாவின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

   Delete
 4. thanks to info
  tamilitwep.blogspot.com

  ReplyDelete
 5. Replies
  1. @ Arivazhagan, நண்பரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

   Delete
 6. திரைபாடல் மூலம் இவ்வரிகள் என்ணை கவர்ந்தது.விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்
  படம் சகா.

  ReplyDelete
 7. பள்ளிக்கூட நாட்களில் படித்து கவிதையின் நேர்த்தியான வரிகளால் சிறுவனாய் இருப்பினும் அதன்பால் ஈர்க்கப்பட்டு என் தந்தை (தமிழாசிரியர் ) யிடம் விளக்கம் கேட்டு மனதில் ஏதோ ஒரு மூலையில் உறைந்திருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து திரைப்பட பாடலாக அழகான இசையில் (smule singers)கேட்டதும் மெய்மறந்து சிலிர்த்தேன் !!

  ReplyDelete
 8. பள்ளிக்கூட நாட்களில் படித்து கவிதையின் நேர்த்தியான வரிகளால் சிறுவனாய் இருப்பினும் அதன்பால் ஈர்க்கப்பட்டு என் தந்தை (தமிழாசிரியர் ) யிடம் விளக்கம் கேட்டு மனதில் ஏதோ ஒரு மூலையில் உறைந்திருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து திரைப்பட பாடலாக அழகான இசையில் (smule singers)கேட்டதும் மெய்மறந்து சிலிர்த்தேன் !!

  ReplyDelete
 9. நன்று, தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அருமையான பதிவு , இந்த குறுந்தொகை பாடலுக்கான ஆசிரியர் பெயர் தெரிவில்லை ஆதலால் பாடலில் வரும் உவமையை அவருக்கு பெயராக சூட்டி உள்ளனர்

  ReplyDelete
 11. அருமையான உவமை கொண்ட பாடலை எழுதியவர் பெயர் கூட குறிப்பிடவில்லை என்பது அந்த ஆசிரியரின் மேல் மரியாதையை கொண்டிருக்கிறது

  ReplyDelete
 12. மரியாதையை கூட்டுகிறது

  ReplyDelete
 13. மனதிற்கு மகிழ்வும் நெகிழ்வும் தரும் நம் தமிழ் பாடல்கள் இதனை போற்றி பேணி காக்க வேண்டும்.

  ReplyDelete
 14. கண்ணதாசன் மிக நேர்த்தியாக இப்பாடலையும் திருக்குறளையும் இனைத்து அழகாக திரைப்பாடல் அமைத்திருப்பார்.இப்பாடல் உலகின் மிகச்சிறந்த பாடல் வரிசையில் லண்டன் மாநகர் சுரங்க தொடர்வண்டி நிலையங்களில் திரு.ராமானுஜம் அவர்களது ஆங்கில மொழிபெயர்ப்புடன் வைக்கப்பட்டுள்து தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த மாபெரும்அங்கீகாரம்.வாழ்க செம்புலப் பெயனீரார்.

  ReplyDelete
 15. அழகு அருமை

  ReplyDelete
 16. அண்ணா மிக்க நன்றி
  இந்த பாடலை கேட்டதும்

  நான் என்னையே
  மறந்து போனேன்

  இத்தகைய படைப்புகள் மேலும் படைக்க

  நான் இதன் பொருள் ஆரய
  விளங்கியது

  ReplyDelete