காமன் பண்டிகை

இணைய நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!!

காமன் பண்டிகை என்னும் தலைப்பைப் பார்த்ததும் வாசகர்கள் மத்தியில் சந்தேகம் எழுமென்று நினைக்கிறேன்! தீபாவளி தினத்தன்று அப்பண்டிகையைப் பற்றிக் கூறாமல், வேறு ஏதோவொரு (அந்த மாதிரிப்) பண்டிகையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறானே என்று எண்ண வேண்டாம். காமன் பண்டிகைக்கும் இன்றைய இளசுகள் கொண்டாடும் காதலர் தினத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை!!!!

காமன் பண்டிகை என்பது தமிழர் மரபில் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வரும் பண்டிகைகளுள் ஒன்று. இன்றும் தென் மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இப்பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  பண்டிகையின் நிறைவின் போது தெருக்கூத்தும் நடத்தப்படும். இத்தகு காமன் விழாவைப் பற்றி நம் சங்கப் பாடல்கள் பலவற்றிலும் குறிப்புகளைக் காணமுடியும்.

காமன் விழா/பண்டிகையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் ’காமன்’ அதாவது ’மன்மதனைப்’ பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு மன்மதனென்று நான் குறிப்பிட்டது பீப்பாடல் புகழ் நடிகர் அன்று; தேவர்களுள் ஒருவரான காமதேவன் ஆவார். இன்னும் சரியாகச் சொன்னால் ரதியின் கணவர்; திரைப்படங்களில் தலைவன் அல்லது தலைவி மீது காம பாணமெய்து, அவர்களிருவருக்கும் இடையில் காதல் மலரச் செய்வாரே அவர்தான் ’காமன்’.

தேவர்களுள் அழகில் மிகுந்தவன், காம தெய்வன், கொஞ்சுங்கிளி வாகனமும், மகரக் கொடியுடையோன் (1), கரும்பை வில்லாக்கி அதில் ரிங்காரமிடும் வண்டுகளை நாணாக்கி  ஐந்து மலரால் (2) செய்த அம்பினை எய்தும் வடிவுடையோனே மன்மதனாவான். மன்மதனுக்குக் கோயில் கட்டி வணங்கியிருப்பதும் தமிழர் வழக்கிலிருந்துள்ளது.


மன்மதனுக்கென்று பேராயுதங்கள் எதுவுமன்று, ஐம்மலராலான மெல்லிய அம்புதான் அவன் ஆயுதம், அவ்வாயுதத்தால் வீழ்ந்தோர் தப்பியதில்லை!

சிவபெருமானின் தவத்தை கலைக்கும் பொருட்டு பார்வதிதேவியால் அனுப்பப்பட்ட மன்மதன் தன்னிடமிருந்த காமக்கணையை அவரை நோக்கித் தொடுப்பார். தனது தவத்தைக் கலைத்ததால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார். இதைக்கண்ட மன்மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரண்டு, தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டினாள். கோபம் தணிந்த சிவன் ரதியின் நிலையைப் புரிந்து அவள் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். பின்னர் மன்மதன் உயிர்த்தெழுந்து சிவபெருமானை வழிபடுதலே காமன் பண்டிகையாகும். 


      (1)   மகரக்கொடி – மீன் கொடி
    (2) ஐந்து மலர்கள் - தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம் (அல்லி??).