பாரதி - சிறுகதை


’’ஜமுனா, இன்னைக்கு வர்ற வழியில ஒரு பைக்கும் காரும் மோதி பெரிய ஆக்ஸிடெண்ட், பைக்ல இருந்த பையனுக்கு தலையில பயங்கர அடி, ரோடெல்லாம் ஒரே ரத்தமா இருந்துச்சு. கடைசியா ஆம்புலன்ஸ் வந்து அந்தப் பையனை எடுத்திட்டுப் போய்ட்டாங்க, ஆளு உயிரோட இருக்கா இல்லையான்னு தெரியல. இதைப் பார்த்து அப்படியே பயந்துபோய் நின்னுட்டேன்’’.

’’அதனாலதான் இப்படி முகமெல்லாம் வேர்த்திருக்கா! இப்பெல்லாம் ரோட்ல ஆக்ஸிடெண்ட் ஆகலைனாத் தான் அதிசயம். ஸ்கூல் போற பசங்களுக்கு சின்ன வயசிலேயே பைக் வாங்கிக் கொடுத்தா, அவன் ரோட்ல கண்ட்ரோல் இல்லாம ஃபாஸ்டா போறான், அப்பறம் இந்த மாதிரித்தான் ஆகும். எல்லாம் அப்பா அம்மா பண்ற தப்பு, புள்ளைங்கள நல்லா கண்டிச்சு வளர்க்கறது இல்லை. சரி அதெல்லாம் இருக்கட்டும், பாரதிக்கு பேக் வாங்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிச்சேன், வழக்கம் போல மறந்தாச்சு. உங்க மறதிக்குத் தகுந்த மாதிரி வழியில ஆக்ஸிடெண்ட் வேற!’’

’’இல்ல ஜமுனா ஞாபகமெல்லாம் இருந்துச்சு, ஆனா ஆக்ஸிடெண்டைப் பார்த்த அதிர்ச்சியில நேரா வீட்டுக்கு வந்துட்டேன். இன்னும் அம்மு ட்யூஷன்ல இருந்து வர்லயா?’’

’’இப்பத்தான் மணி ஏழு ஆகுது, அவ ஏழரை மணிக்கு மேல தான் வருவா’’.
…..

சிறிது நேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

’’ஏண்டி இன்னிக்கும் லேட்டா, எத்தனை தடவ சொல்லியிருக்கேன் டியூஸன் முடிஞ்சா நேரா வீட்டுக்குவான்னு. எப்பப் பார்த்தாலும் ஃப்ரெண்சோட பேசிட்டு பொறுமையா வர்றது. சரி கைய கழுவிட்டு வா, நான்  தோசை எடுத்து வைக்கிறேன்’’.

‘’அம்மு சாரிடா,  அப்பா இன்னைக்கும் பேக் வாங்கிட்டு வரல, இந்த ஞாயிற்றுக்கிழமை நாம வெளியில போறப்ப வாங்கித் தர்றேன். உனக்கு பிடிச்ச மாதிரி நீயே வாங்கிக்கோ’’.

``சரிப்பா, அப்படியே எனக்குச் செப்பலும் வேணும், இப்ப இருக்கிறது ரொம்ப பழசாயிடுச்சு''.

``ஏய் உனக்கு எத்தனை தடவ சொல்றது, இந்த மாதிரி குட்டியா இருக்கற பாவாடையைப் போட வேண்டாம்ன்னு. நம்ம சொன்னா கேட்கறதே இல்ல. அப்பாவும் பொண்ணும் இந்த விஷயத்துல ஒரே மாதிரி இருக்கீங்க, போய் வேற போட்டுட்டு வா’’.

’’ஜமுனா அவ சின்னப் பொண்ணு, கொஞ்சம் ஃப்ரியா இருக்க விடு. வீட்டில இருக்கும்போது அவளுக்குப் பிடிச்சதைப் போடட்டுமே. எப்பப் பார்த்தாலும் சின்ன விஷயத்துக்கெல்லாம்  திட்டிட்டு இருக்க’’.

‘’இன்னும் என்ன சின்னப் பொண்ணு, ஐப்பசி வந்தா 15 வயசாகுது, இதெல்லாம் உங்களுக்குப் புரியாது’’.

‘’என்னமோ செய், என் முன்னாடி அவள திட்டாதே’’.

’’அப்பா நெக்ஸ்ட் மன்த் டியூஷன் ஃபீஸ் கட்டணும், டீச்சர் கேட்டாங்க’’.

‘’சரிடா செல்லம், அப்பா நாளைக்குத் தர்றேன்’’.

``ஏங்க நீங்களும் கைய கழுவிட்டு வாங்க, இப்ப சாப்பிட்டாத்தான் அவ நேரத்தில போய் தூங்குவா''.
…..

ஜமுனா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் சென்றாள்.

‘’உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், சின்ன விஷயத்துக்கெல்லாம் அவள திட்டாதேன்னு. பாவம் அவ ஸ்கூல், டியூஷன்னு ஓடிட்டு இருக்கா, தூங்கக்கூட நேரமில்லாம போச்சு’’.

’’டிரஸ் விஷயத்துல நீங்க செல்லம் கொடுக்காதீங்க, ஒரு அம்மாவுக்குத் தான் தெரியும் எது சரி, தப்புன்னு. வீட்டுக்குள்ள இருக்கிற பழக்கம்தான் வெளியில போகும் போது வரும். உங்க கண்ணுக்கு அவ சின்னப் பொண்ணா தெரியலாம், ஆனா அடுத்தவங்களுக்கு அப்படி இல்ல. நாம தான் அவளுக்குச் சொல்லி புரிய வைக்கணும். நியூஸ் பேப்பர்ல டெய்லியும் கண்ட கண்ட நியூஸ், பொண்ண வெளிய அனுப்பவே பயமா இருக்கு. அதனால நம்ம தான் கரெக்டா டிரஸ் போட்டுட்டு போகணும், நாலு பேரு பேசற மாதிரி இருக்கக் கூடாது''.

‘’தப்பு செய்யறவன் தைரியமா செய்யறான், தப்பு செஞ்சவனைத் தண்டிக்காம பொண்ணு போட்ட டிரஸ்ல தப்புன்னு சொல்றோம். இப்படியே பயந்திட்டு இருந்தா நாளைக்கு பொண்ணுக யாரும் வெளியே போக முடியாத சூழ்நிலை வரும்.  

இப்போ காலம் ரொம்ப மாறியாச்சு ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு அவங்க வெளியில இருக்கிற நேரம் தான் அதிகம். நாம பொண்ண எவ்வளவு தைரியாக வளர்க்கிறோமோ, அப்பதான் பயமில்லா அவ வெளியில சுதந்திரமா நடமாட முடியும், யாரோட துணையும் இல்லாமல் நம்மளை நாமே பார்த்துக்கணுங் துணிச்சல் வரும். நீயும் நானும் அவ கூடவே எல்லா பக்கமும் போக முடியாது. பொண்ண தைரியமா வளர்க்கிறது தான் பெத்தவங்களோட கடமை’’.

‘’நீங்க சொல்றது புரியுது, ஆனா தப்பு நடக்க நாம எதுக்கு சேன்ஸ் தரணும். போட்ற டிரஸ் அடுத்தவங்க கண்ணை உறுத்தாம இருக்கணும்’’.

’’பிரச்சனைகளை சமாளிக்கக் கத்துக் கொடுக்கணும், அதவிட்டுட்டு இப்படியே பயந்திட்டு இருந்தா அவளுக்கு எப்படி தைரியம் வரும். உனக்கு ஞாபகம் இருக்கா - அம்முவுக்கு பாரதி-ன்னு பேரு வைச்சதே, அவ மகாகவி பாரதியார் மாதிரி யாருக்கும் பயப்படாம நேர்மையாவும், தைரியமாவும் இருக்கணும் நினைச்சதாலதான். நீ எதுக்கும் பயப்படாதே அவளுக்குத் தன்னைப் பார்த்துக்கத் தெரியும்’’.

…..

’’தீபா நான் ஹோம்வொர்க் இன்னும் பண்ணல, நீ முடிச்சிருந்தா கொடு காப்பி பண்ணிட்டுத் தர்றேன்’’.

’’நான் முடிச்சிட்டேன், இந்தா புடி. நானும் உன்னைக் கொஞ்ச நாளா வாட்ச் பண்றேன், நீ ரொம்ப டல்லா தெரியற. முன்ன மாதிரி படிக்கறதில்லை, முகத்தைப் பார்த்தா ஏதோ பயத்துல இருக்கிற மாதிரி தெரியுது''.

‘’அப்படியெல்லாம் எதுவும் இல்லை,  நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்’’.

‘’பொய் சொல்லாதே, ஏதோ ப்ராப்ளம் இருக்கு. நான் உன் பெஸ்ட் ஃரெண்ட்தான என்கிட்ட சொல்லு''.

``ச்சீ அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஏதாவது இருந்தா கண்டிப்பா சொல்றேன்''.

``பாரதி நீ பொய் சொன்னா நான் உங்க அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லிருவேன்’’.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு,
‘’ம்ம்ம் நான் ஒரு விஷயம் சொல்லுவேன் ஆனா நீ யார்கிட்டயும் சொல்லக் கூடாது. காட் பிராமிஸ்?’’

’’ஓகே நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்’’.

‘’நான் ஈவினிங் டியுஷன் போற வழியில பைக் ஒர்க்ஷாப் இருக்கு, அங்க டெய்லியும் ரெண்டு மூணு பசங்க வழியில நின்னுட்டு கேலி பண்றாங்க. அவங்களைக் க்ராஸ் பண்றப்ப பாட்டு பாடுறது, சத்தமா சிரிக்கறது, ஏதேதோ கெட்ட வார்த்தைல பேசறது. நானும் கொஞ்ச நாளா கண்டுக்கவே இல்லே, ஆனா இந்த ஒரு மாசமா ரொம்ப டார்ச்சர் பண்றாங்க. டபுள் மீனிங்ல பேசறது, பைக்ல வந்து மேல ஒரசற மாதிரி போகறது. இப்பெல்லாம் அந்த ரோட்ல போகவே பயமா இருக்கு’’.

‘’இதெல்லாம் நீ உங்க வீட்டில சொன்னியா?’’.

‘’இல்லடி, சொன்னா என்னைத் தப்பா நினைச்சுக்குவாங்கன்னு பயமா இருக்கு’’.

‘’லூசு மாதிரி பேசாதே, இதுல உன் தப்பு எதுவுமில்ல. பிரச்சனை சின்னதா இருக்கும்போதே சொல்லிடணும், உனக்கு பயமா இருந்தா சொல்லு நான் உங்க வீட்டில பேசறேன்’’.

‘’இல்ல வேண்டாம், நானே சொல்றேன். அப்பா திட்டுவார்ன்னு கொஞ்சம் பயமா இருக்கு!’’.

‘’உனக்கு ஹெல்ப்தான் பண்ணுவாங்க, கண்டிப்பா திட்ட மாட்டாங்க. இது பெரிய பிராப்ளம் ஆகறதுக்கு முன்னாடி நீயே சொல்லிடு, அவங்க புரிஞ்சுக்குவாங்க. மைண்ட்ல கண்டதைப் போட்டு குழப்பிக்காதே’’.

…..

’’ஏங்க நேத்து அம்முவுக்கு ஃப்ரோக்ரஸ் கார்ட் குடுத்திருக்காங்க, எல்லா சப்ஜெக்ட்லையும் மார்க் கம்மியா வாங்கியிருக்கா. டியூசன் போனா நல்லா படிப்பான்னு பார்த்தா, மார்க் குறைஞ்சிட்டே வருது. இந்த வாரம் அவங்க டியூசன் மேடத்த பார்த்துப் பேசிட்டு வாங்க. அடுத்த வருஷம் பத்தாவது போறா, இப்படியே இருந்தா நல்ல மார்க் வாங்கறது கஷ்டம் தான்’’.

’’உனக்கு பொண்ணு மேல நம்பிக்கை இருக்கா, இல்லையா? அவள எப்பவும் தப்பாவே பார்க்கற, இப்பதான் டியூசன் போக ஆரம்பிச்சு இருக்கா, அதுக்குள்ள பர்ஸ்ட் வாங்க முடியுமா? கொஞ்சம் டைம் கொடு’’.

’’நான் ஏன் சொல்றேன்னா, அவ முன்னமாதிரி இல்லைங்க, டியூஷன்ல இருந்து வந்தா தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு பெட்ரூம்ல போய் உட்கார்ந்திட்ரா. நான் ஏதாவது கேட்டா, ஒண்ணுமில்லை என்னைத் தனியாக இருக்கவிடுங்க சொல்றா. நானும் உங்ககிட்ட இத சொல்ல வேண்டாம்ன்னு பார்த்தேன், ஆனா ஏதோ தப்பாத் தெரியுது’’.

‘’சரி நீ அம்முகிட்ட இதைப்பத்திப் பேசாதே, நானே அவகிட்ட பொறுமையாப் பேசறேன்’’.

…..

‘’அம்மு உனக்கு புடிச்ச பேக்கை எடுத்துக்கோ, இன்னைக்கு உன் சாய்ஸ்’’.

மாலை வீட்டிற்கு வந்ததும் சோபாவில் அமர்ந்திருந்த பாரதியிடம்,

‘’அம்மு அடுத்த வாரம் நம்ம ஊர்ல ஒரு கல்யாணம் இருக்கு, அதனால நாம எல்லாரும் போகணும், நீ டியூஷன் மேம் கிட்ட சொல்லி முன்னாடியே பர்மிஷன் வாங்கிக்கோ’’.

‘’சரிப்பா, நான் நாளைக்கே சொல்லிடறேன்’’.

‘’உனக்கு ப்ரோக்ரஸ் கார்ட் கொடுத்ததா அம்மா சொன்னா, மார்க்லாம் கொஞ்சம் கம்மியா இருக்கு. டியூஷன்ல நல்லா சொல்லித்தர்றது இல்லையா? இங்க வேண்டாம்னா சொல்லு, வேற சென்டர்ல் சேர்த்துவிடறேன்’’.

‘’இல்லப்பா அந்த மாதிரியெல்லாம் இல்ல, நெக்ஸ்ட் டைம் நான் நல்ல மார்க் வாங்குவேன்’’.

‘’சரிடா செல்லம், நல்லா படிச்சாதான் அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம்ல நல்ல மார்க் எடுக்க முடியும். நீ போய் சாப்பிட்டுத் தூங்கு’’.

‘’சாரி அப்பா இந்த டைம் நான் சரியா பண்ணல, நெக்ஸ்ட் டைம் நல்ல மார்க் வாங்குவேன்’’.
 
…..

’’பாரதி நீ உங்க வீட்ல சொன்னயா?’’

’’இல்லடி, எனக்கு பயமா இருக்கு. நேத்து ப்ரொக்ரஸ் கார்ட் காட்டினேன், ஏன் கம்மியா மார்க் எடுத்திருக்கேன்னு அம்மா திட்டினாங்க. நான் இப்ப சொன்னா, ஏதோ பொய் சொல்றேன்னு தப்பா நெனச்சுக்குவாங்க’’.

‘’பொண்ணுக்கு ஒரு பிரச்சனைனா அத எப்படி சால்வ் பண்ணலாம்னு தான் யோசிப்பாங்க, கண்டிப்பா திட்டமாட்டாங்க. சரி நம்ம இங்கிலீஷ் மேம்கிட்ட சொல்லலாம், அவங்க ஏதாவது சொல்யூஸன் சொல்லுவாங்க’’.

…..

‘’மேம், மே ஐ கம் இன்?’’

’’வா பாரதி/தீபா,  ஹோம்வொர்க் பண்ணலயா?’’

‘’இல்ல மேம், உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்’’.

‘’ம்ம் சொல்லுங்க, யாரும் இங்க இல்ல’’.

‘’மேம் ஒரு சின்ன ப்ராப்ளம், நான் டியூஷன் போயிட்டு வர்ற வழியில சில பசங்க கிண்டல் பண்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு மேம். ஈவினிங் டைம்ல யாரும் அந்த ரோட்ல இருக்கதில்ல, நான் இதெல்லாம் பண்ணாதீங்கன்னு சொன்னேன், ஆனா அவங்க யாரும் கேட்கவே இல்லை. பைக்ல வந்து உரசறாங்க’’.

‘’எத்தனை நாளா ட்ரபிள் பண்றாங்க? இதைப்பத்தி உங்க வீட்டில சொன்னியா?’’.

’’இல்ல மேம், வீட்டில சொல்றதுக்கு எனக்கு பயமா இருக்கு’’.

’’சரி உங்க அப்பா ஃபோன் நெம்பர் கொடு, நான் பேசறேன். நீ ஒண்ணும் பயப்படாதே, எல்லாம் சரியா போயிடும். வீட்டில நாளைக்கு ஸ்பெஷன் கிளாஸ் இருக்கு லேட்டா வருவேன்னு சொல்லிடு, நாளைக்கு உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்’’.

’’சரி மேம், நாம் கிளம்பறேன்’’.

``ம்ம்ம் டேக் கேர்''.
…..

‘’என்ன பாரதி, நேத்து வீட்டில பேசினியா? இப்ப நாம முக்கியமான ஒருத்தற பார்க்கப்போறோம். என் பைக்லயே போகலாம்’’.

‘’ஹலோ மாலதி, எப்படி இருக்கீங்க?’ உங்களைத்தான் பார்க்க வந்தேன். இவ என் ஸ்டூடண்ட், பேரு பாரதி''.

’’ஐ யம் ஃபைன், நீங்க போன்ல சொன்ன பொண்ணு இவ தானா?’’

’’ம்ம் ஆமா,  நான் சொல்றத விட நீங்க சொன்னா அவளுக்கு இன்னும் தைரியமா இருக்கும், அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்’’.

‘’வாவ் பாரதி`னு பேரே சூப்பரா இருக்கு. உங்க மேம் போன்ல எல்லாம் சொன்னாங்க. உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது அந்த கேங்ல இருக்காங்களா?’’.

``எனக்கு யாரையும் தெரியாது, ஆனா அவங்களை அந்த ஸ்டீர்ட்ல பார்த்திருக்கேன். ஸ்ர்டாடிங்ல பேப்பரைத் தூக்கி வீசுனாங்க, சம்டைம்ஸ் கிண்டல் பண்ற மாதிரி பேசுவாங்க. நான் எதையும் கண்டுக்காம சீக்கிரமா நடந்து வந்திருவேன்''.

 ``உங்க வீட்டில யாருக்காவது இந்த விஷயத்தைப் பத்தித் தெரியுமா?''.

``தெரியாது, நான் யாருக்கும் சொல்லலை. டூ வீக்ஸ் முன்னாடி அவன் என்கிட்ட வந்து அவன் சொல்றதைக் கேட்கலைனா மூஞ்சில ஆசிட் வீசிருவேன்னு மிரட்டுனான்''.

‘’பாரதி, மூணு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு நடந்த பிரச்சனைதான் உனக்கு இப்ப நடந்திருக்கு. நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம். எத்தனை நாளா இந்தப் பிரச்சனை இருக்கு? அவங்க ஸ்கூல் பசங்களா இல்ல பெரிய ஆளா இருக்காங்களா?’’.

’’இந்த மூணு மாசமாத்தான் பிரச்சனை, அதுக்கு முன்னாடி நான் டியூஷன் போகல. அவங்களைப் பார்த்தா காலேஜ் படிக்கற பசங்க மாதிரி இருக்காங்கஎனக்கு இப்பவெல்லாம் அந்த ரோட்ல போக பயமா இருக்கு. வீட்டில சொல்லி டியூஷன் போறத நிறுத்திடலாம்னு இருக்கேன்’’.

‘’உன்கிட்ட டைரக்டாவே கேட்கிறேன் - நீ அந்த வழியில போறத நிறுத்திட்டா எல்லா பிரச்சனையும் சால்வ் ஆயிடுமா? நீ வேற எங்காவது போறப்ப இதே மாதிரி நடந்ததுனா, என்ன செய்வ? மறுபடியும் அங்கிருந்து ஓடிடுவியா? சரி எத்தனை நாளைக்கு இப்படி ஓடிட்டு இருப்ப? அந்த நிமிஷத்தில பிரச்சனைலிருந்து எஸ்கேப் ஆயிட்டா எல்லாம் முடிஞ்சிடுமா, கண்டிப்பா இல்லை.  

நீ பயந்து ஓட ஓட அவங்களுக்கு இன்னும் தைரியம் வரும், இவ நம்மள ஒண்ணும் செய்யமாட்டான்னு அட்வாண்டேஜ் எடுப்பாங்க. நீ பர்ஸ்ட் டைம்மே திட்டியிருந்தா அவன் ஸ்டாப் பண்ணியிருப்பான்.

எனக்கும் இதே மாதிரிதான் நடந்துச்சு, ஒருத்தன் டெய்லி ஃபாலோ பண்ணி மிரட்டடுனான், நானும் பயத்துல எதுவும் பேசாம சைலண்டா இருந்தேன். என் வீக்னஸப் பார்த்து தைரியமாயிட்டான், நம்மள எதிர்த்து இவ எதுவும் செய்யமாட்டாள்னு புரிஞ்சிக்கிட்டான்.

இந்த டார்ச்சர் மெல்ல மெல்ல அதிகமாகி ஒருநாள் லவ் லெட்டர் கொடுத்தான். அத நான் கீழ போட்ட கோபத்தில, கையில இருந்த ஆசிட்ட எடுத்து என் முகத்துல வீசிட்டு ஓடிட்டான். அப்புறம் தான் எனக்கு எல்லாமே புரிஞ்சுது, அவன் செஞ்ச தப்ப நான் திருப்பிக் கேட்காததால, இவ என்ன செஞ்சிருவான்னு நெனச்சு என் மேல வீசிட்டான். என் வாழ்க்கை இதோட முடிஞ்சிதுனு முதல்ல நெனச்சேன். ஆனா அந்த இன்சிடெண்ட்க்குப் பின்னாடிதான் எனக்கு தைரியமே வந்தது, அதுக்கப்புறம் நான் யாருன்னு புரிஞ்சுது. இந்த மாதிரி கஷ்டம் வந்தாத்தான் நாம இன்னும் ஸ்ட்ராங் ஆவோம். என்ன முகம் தான் வேற மாதிரி ஆயிருச்சு, ஆனா நான் எதுக்கும் பயப்படப் போறதில்லை, நம்மால் முடியும்ன்னு நெனச்சா எதையும் செய்யலாம்ன்னு நம்பிக்கை வந்துச்சு.

நான் ஃபர்ஸ்ட் நாளே திருப்பிக் கேட்டிருந்தா, எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. அட்லீஸ்ட் வீட்டில  யாராவதுகிட்ட சொல்லி இருந்திருந்தா அவங்க எனக்குப் பாதுகாப்பா இருந்திருப்பாங்க. அவனோட திமிரும் என்னோட கோளைத்தனமும் தான் இதற்குக் காரணம்.  

டெய்லியும் நமக்கு யாராவது பாதுகாப்புக்கு வருவாங்கன்னு எதிர்பார்க்கறது ரொம்ப தப்பு. ஒரு நாள் நாம் தனியா நிக்கிற சந்தர்ப்பம் வரும் அப்ப தைரியம் மட்டும் இல்லைன்னா, அந்தக் கொடுமை மறுபடியும் நடக்கும்.

தப்பு செய்யறவனுக்கு சரியான தண்டனை கிடைக்கலைன்னா அவன் மேல மேல தப்பு செய்வான்.  சமுதாயத்தில இது மாதிரித் தொடந்து நடந்திட்டு வர்றதுக்கு நாம எல்லாருமே காரணம். எங்கத் தட்டிக் கேட்டா நமக்கு ஏதாவது நடந்திருமோன்னு பயந்து ஒதுங்கிப் போறது, இதுவே அந்த மாதிரி ஆளுங்களுக்கு சாதகமா போகுது. எவ்வளவு தப்பு செஞ்சாலும் நமக்கு தண்டனையில்லைன்னு புரிஞ்சிட்டு ஃப்ரீயா சுத்திட்டு இருப்பான்’’.

’’அப்ப உங்களுக்கு நடந்த மாதிரி எனக்கும் நடக்குமா?’’.

’’பாரதி நம்ம பிரச்சனையே இதுதான், தப்பு செய்யறவனே பயமில்லாம இருக்கான், ஆனா விக்டிம் நாம தான் பயந்துட்டு இருக்கோம். நீ முதல்ல தைரியமா இரு, உனக்கு ஒண்ணும் ஆகாது. திருப்பி அடிக்கிற வரைக்கும் தான் நமக்கு பயம் இருக்கும், இந்த மாதிரிப் பிரச்சனை வரும்போது, தைரியமா எதிர்த்து நில்லு, அதுக்க பின்னால கண்டிப்பா அவன் உன்னை டார்ச்சர் பண்ணமாட்டான்.  

இந்த ஸ்ப்ரேவ பேக்ல வைச்சுக்கோ, நெக்ஸ்ட் டைம்ல பக்கத்தில வந்து உரசுனா இதை அவன் மூஞ்சியில அடிச்சிடு. அதுக்கப்புறம் உன்னைக் கண்டிப்பாத் தொந்தரவு செய்யமாட்டான். முதல்ல நடந்ததையெல்லாம் உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லு, நீ லேட் பண்ணப் பண்ண உனக்குத் தான் பிரச்சனை. உனக்கு ரொம்ப பயமா இருந்தா சொல்லு, எனக்குத் தெரிஞ்சவங்க போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்காங்க அவங்களா ஹெல்ப் பண்ணச் சொல்றேன்’’.

’’அக்கா, எனக்கு இன்னும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு’’.

‘’உனக்கு ஒன்னும் ஆகாது, பயப்படாதே. நீ தைரியமா எதிர்த்து நின்னா உன்னைப் பார்க்கிற பொண்ணுகளுக்கும் தைரியம் வரும், அப்பத்தான் இந்த பொறுக்கிகளுக்கு பயம் வரும். நாம நிமிர்ந்து நிக்கற வரைக்கும் நம்ம தலைல குட்டத்தான் செய்வாங்க. என் நம்பர் நோட் பண்ணிக்கோ, ஏதாவது பிரச்சனைன்னா உடனே கால் பண்ணு ’’.

``சரிக்கா நான் போயிட்டு வர்றேன்''.

……

மறுநாள் மாலை பாரதி டியூஷன் சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தாள்.

‘’ஏய் நில்லுடி எத்தனை தடவ கூப்பிடறதுஎங்க கண்டுக்காமப் போற? என் மேலிருந்த பயம் போயிருச்சா, இன்னொரு தடவ இந்த மாதிரி செஞ்ச டிரஸ்ஸ கிழிச்சிடுவேன். ஏய் நான் சொல்லிட்டே இருக்கேன் நீ போயிட்டே இருக்கே!’’.

’’மறுபடியும் தொந்தரவு செஞ்சினா வீட்ல சொல்லி போலீஸ்ல கம்ப்ளெண்ட் கொடுத்திருவேன்''.

``என்னடி சத்தமெல்லாம் ஜாஸ்தியா இருக்குஉன் மூஞ்சில ஆசிட் வீசினாத்தான் நீ சொல்றப் பேச்சக் கேட்ப’’.

‘’டேய் கைய எடுடா, சொன்னா கேளு''.

கையிருந்த ஸ்பேரைவை அவன் மீது அடித்துவிட்டு அங்கிருந்து விலகினாள்.

…..

கதவு தட்டும் சத்தம் கேட்டு ஜானகி சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

’’அம்மு ஏன் அழுதிட்டு வர்ற, என்ன ஆச்சு?’’.

பாரதி மெளனமாக நின்றாள்.

’’அம்மு என்னடா ஆச்சு, எதுக்கு இப்படி அழற?’’.

’’அப்பா ரொம்ப நாளா ஒருத்தன் நான் டியூஷன் போயிட்டு வரும் போது கிண்டல் பண்ணிட்டு இருந்தான். இன்னைக்கு அவன் முகத்தில ஸ்ப்ரே அடிச்சிட்டு ஓடி வந்திட்டேன். எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா’’.

பாரதி சொன்னதை அப்பா பொறுமையாகக் கேட்டார்.

‘’அம்மு, நீ யாருக்கும் பயப்படாத செல்லம் - உனக்கு ஒண்ணும் ஆகாது, அப்பா இருக்கேன்ல நீ செஞ்சதுல எந்தத் தப்பும் இல்ல, உனக்கு இவ்வளவு தைரியம் இருக்குன்னு நெனச்சா எனக்குப் பெருமையா இருக்குடா.

தப்பு செஞ்சவனுக்கு நீ தண்டனை கொடுத்திருக்க அதனால நீ எதுக்கும் கவலைப்படாதே!’’

’’அப்பா நாளைக்கும் இதே மாதிரி நடந்தா என்ன செய்யறது?’’.

’’அப்படியெல்லாம் எதுவும் ஆகாது, நாளைக்கு அப்பா கூட வர்றேன், உன் கூடவே இருப்பேன் ஓகே. நீ எதுக்கும் பயப்படாதே, இந்த மாதிரி சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஃபேஸ் பண்றப்ப நம்ம மைண்ட் இன்னும் ஸ்ட்ராங் ஆகும். நம்மள சுத்தி நல்லவங்க மட்டுமில்ல கெட்டவங்களும் சேர்ந்து இருக்காங்க, சோ அவங்களைப் பார்த்து நாம பயந்து ஒதுங்கிப்போனா பிரச்சனை இன்னும் அதிகமாகும். தப்பு நடக்கும்போதே அதைத் தட்டிக் கேட்டா எந்தப் பிரச்சனையும் வராது. நீ இன்னிக்குச் செஞ்சது உன்ன மாதிரிப் பொண்ணுக எல்லாருக்கும் ஒரு உதாரணமா இருக்கும். உன் பேருக்குத் தகுந்த மாதிரி நீயும் தைரியமா இரு!

இதை ஒரு பாடமா நினைச்சுக்க, உன் தைரியத்தையும் துணிச்சலையும் பார்த்து தப்பு செய்ய நினைக்கறவன் பக்கத்துல வரவே பயப்படணும். நமக்கு நல்லதோ கெட்டதோ நடக்கணும்னு இருந்தா அதை யாராலையும் தடுக்க முடியாது ஆனா முடிஞ்ச வரைக்கும் நாம எதிர்த்துப் போராடணும். உன் மேல எனக்கு இப்போ நிறைய நம்பிக்கை இருக்கு, இனி எந்த ப்ராப்ளம் வந்தாலும் நீயே தைரியமா எதிர்த்து நின்னு போராடுவ.

ஃப்யூசர்ல இதே மாதிரி பிரச்சனை உனக்கு வரலாம்,  நீ வேலை செய்யற ஆபீஸ், பஸ், ஹோட்டல், பார்க்ன்னு எந்த இடத்தில வேணாலும் வரலாம் அதை நீ தைரியமா ஃபேஸ் பண்ணனும். எது நடந்தாலும் பயப்படாதே, எதிர்த்து தைரியமா நில்லு''.

தன்னுளிருந்த பார`தீ'யை அன்றுதான் அவள் உணர்ந்தாள்.


 முற்றும்.

4 comments:

 1. டீன்-ஏஜ் பெண் சந்திக்கும் சிக்கல்களைப் பற்றி தெளிவாக அலசியுள்ளீர்கள். கட்டுரை அருமை.

  ReplyDelete
  Replies
  1. @ உயிர்நேயம், நண்பரின் பின்னூட்டத்திற்கு நன்றி!

   Delete
 2. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

  ReplyDelete