சாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்

சில மாதங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடந்த சாதிக் கொலைச் சம்பவத்தை நம்மில் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. சாதி என்ற பெயரில் அரங்கேரிய அந்த மனிதாபிமானமற்ற செயலைப் பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் சில நாட்களுக்கு வந்து சென்றன. தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் இவ்வநீதியை எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவில்லை. 
 

ஒருபுறம் அறிவியல், தொழில்நுட்பங்கள் என்று இச்சமூகம் வளர்ச்சியடைந்து வந்தாலும், மறுபுறம் இதுபோன்று சாதி வெறியின் கொடூரங்களும் ஆங்காங்கே நிகழ்ந்த வண்ணமுள்ளன. இதுபோன்ற அநியாயக் கொலைகளுக்கு என்னதான் தீர்வு? 

கடுமையான நீதிமன்றச் சட்டங்களினால் இதுபோன்றக் குற்றங்களைத் தடுக்க முடியுமா? கொடுமையான தண்டனைகளின் மூலம் இவற்றை குறைக்க முடியுமா? இதில் அரசு, போலீஸ் மற்றும் வழக்கறிஞர்களின் பங்கு என்ன? இவர்கள் மட்டும்தான் இதற்குக் காரணமா, குடிமக்களாகிய நாம் இவற்றை எதிர்த்து என்ன செய்தோம்? நல்ல வேளை நம் வீட்டில் இதுபோன்று எதுவும் நிகழவில்லை என்ற மெத்தனப் போக்கில் வாழ்கிறோமா?

சாதிக் கொலைகள் தமிழகத்தில் மட்டுமின்றி ஏனைய பிற மாநிலங்களிலும் நடந்து வருகின்றன. ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீகார், ஆந்திரா, கேரளா, மகாராஸ்டிரா, ஒரிஸ்ஸா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் குறிப்பாக கிராமங்களில் இவை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

இன்று தமிழகத்தில் சாதிக் கட்டிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.  சாதிக் கட்ிகள் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள பயந்த நிலை மறைந்து, கலர் கலரான கொடிகளும், கட்சிக் கூட்டங்களும் புற்றீசல் போல் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சாதிக்கட்சிகளினால் அவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படுவதில்லை, மாறாக இதுபோன்ற கட்சிகள் வெறும் ஓட்டு வங்கிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் கருவிகளாக உள்ளன. படித்த கல்வியாளர்களும் சாதிப்பற்றுடன் அவரவர் தம் சாதிக்கு ஆதரவளித்து இந்த அலங்களை  மேலும் மேலும் வளர்த்து வருகின்றனர். 

எங்கிருந்து வந்தது இந்தச் சாதியும், பேதமும்??

காதல் திருமணம், கலப்புத் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் – இவைகளில் எத்தலைப்பு இது போன்ற திருமணங்களுக்குப் பொருந்தும் என்பது போன்ற பயனற்ற விவாதங்கள் அரங்கேறும் அவலமிகு மாநிலமாக நம் தமிழகம் விளங்கி வருகிறது. 

சாதி எதிர்ப்பைப் பற்றிப் பேசும் இன்றைய அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும், மறுபக்கம் ஆடம்பரத் திருமணங்களுக்குச் சென்று தலைமை தாங்கி வருகின்றனர். நாளிதழ்களும், தொலைக்காட்சி சேனல்களும் இதுபோன்ற செய்திகளை சரியான முறையில் பயன்படுத்தி  தங்களின் TRP வரிசையை உயர்த்திக் கொள்வதோடு நின்று விடுகின்றன. இவர்களால் இங்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. 

இதுபோன்ற திருமணங்கள் நம் வீட்டில் நடந்தால் நாம் அதை ஏற்றுக் கொள்வோமா? ஆதரிப்போம் என்ற நிலை வருமேயானால் அன்றுதான் இதுபோன்ற கொடுமைகள் அழியும். 

எனது பார்வையில் சாதி/மதம் என்ற பெயரில் நிகழும் இக்கொடூரங்கள் மறையும் காலம் வெகுதொலைவிலில்லை, இவை மெல்ல மெல்லக் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. நான் பள்ளி/கல்லூரியில் படித்த காலத்தில் என்னுடன் பயின்ற நண்பர்களின் சாதியை இதுவரை நான் அறியேன், அதே நிலைப்பாடுதான் அவர்களிடத்தும். பள்ளியிலும் சரி, கல்லூரி விடுதியிலும் சரி அதைப் பற்றி நண்பர்களிடத்தில் பேசியதில்லை.  

கல்வியினால் இச்சமூகம் சிறப்படையும், அது சாதியை அழிக்கும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்தச் சான்றாகும்.

இன்று என்னுடன் படித்த, அலுவகத்தில் வேலை செய்துவரும் பல நண்பர்களும் காதல் திருமணம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் வேற்று சாதியினரை மணமுடித்து வாழ்ந்து வருகின்றனர் (நிச்சயம் இத்திருமணங்களில் எதிர்ப்பில்லாமல் இருந்திருக்காது).

இன்று கற்றவர்கள் பலரும் சாதிப் பேய் என்ற போர்வையினுள் உள்ளனர் என்பதை இத்தருணத்தில் நினைவு கூற வேண்டும். காதலும் கல்வியும் ஒன்றல்ல, எனினும் இக்காதலும் ஒருநாள் சாதியை அழிக்கும். சாதியினால் அழியும் இதுபோன்ற காதலும் திருமணங்களும், நாளை அந்தச் சாதியையே ஒழித்தழிக்கும்.  

சாதி, மதவெறியை பிரசவிக்கும் இன்றைய சாதிக்கட்சிகள் நாளைய கல்விக் கடலில் நிச்சயம் அழியும்.

இன்றைய கலப்பு மணங்கள் நேற்றைய சாதியை அழித்து நாளைய சமூகத்தை ஒன்றிணைக்கும்! எனக்கு நம்பிக்கையுள்ளது!

2 comments:

 1. தெலுங்கன் ரெட்டி நாய்டு , மலையாளி மேனன் இப்படி தங்கள் சாதிய தமிழ் நாட்டில் வளர்க்குறாங்க . இதை யாரும் கேள்வி கேட்பதில்லை . தமிழனுக்கு மட்டும் ஏன் பிரச்சனை> தமிழன் சாதி பற்றி பேசும் நீங்க மற்றவர்களின் சாதி பற்றி பேசுவதில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிவா!
   பிற மாநிலத்தாரின் சாதியைப் பற்றிப் பேச நான் இந்தப் பதிவை எழுதவில்லை அதில் எனக்கு விருப்பமுமில்லை. யாரும் யாருடைய சாதியையும் இங்கு வளர்ப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

   இன்று சாதியை அறுத்தெரிந்து பல சாதி மறுப்பு/கலப்புத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. என்னுடைய பார்வையில் இதுபோன்ற கொடூரக் கொலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழியுமெனத் தோன்றுகிறது. இவையனைத்தும் அறியாமையின் இன்னொரு பிம்பமாகவே தோன்றுகிறது. சரியான கல்வியறிவு கிடைக்கப் பெற்ற எந்தவொரு பண்பான சமூகமும் இதுபோன்ற பழிச் செயலை செய்யாது. அடுத்த 10-20 வருடங்களில் இது போன்ற செயல்கள் நிச்சயம் குறையும்.

   Delete