தி.மு & தி.பி


சமீபத்தில் என் நண்பனுடன் நடந்த உரையாடலின் வெளிப்பாடு!

வரலாற்றை கி.மு, கி.பி என்று பிரிப்பதைப் போல, நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.

திருமணத்திற்கு முன் ஆணும்/பெண்ணும் தனிச்சையாக‌வே செய‌ல்ப‌டுகிறார்க‌ள். பெற்றோர் அல்லது சுற்றத்தாரின் தலையீடு பொதுவாக‌ இருந்தாலும்தத்தம் விஷயங்களில் தனித்தே செய‌ல்ப‌டத் தொடங்குகிறார்க‌ள். இத‌ன் பொருட்டு தைரியம், ஆணவம் ம‌ற்றும் சில அடிப்படை குண‌ங்க‌ள் அவ‌ர்க‌ளுக்குள் வ‌ள‌ர்கின்றன. பின்னாளில் திரும‌ண‌மாகும் பொழுது, அதுவரை வளர்க்கப்பட்ட அடிப்படை குண‌ங்க‌ளில் மாற்ற‌த்தைக் கொணர‌ ம‌னத்த‌ய‌க்க‌மும், பிடிவாத‌மும் தோன்றுகிறது.

சமீபத்தில் திருமணமான என் நண்பனிடம் உரையாடும் போது, இல்ல‌ற‌ வாழ்க்கை இனிதாக‌‌ச் சென்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் அவனுக்குள்ளிருந்த க‌ச‌ப்புண‌ர்வுள்ளதை உணர்ந்தேன்.  சிறிது மனம்விட்டு பேசும்போது தவறான எண்ணச் சூறாவளியில் அவன் சிக்கித்தவிப்பதை அறிந்தேன். அவனுடைய கூற்றுக்களின் படி  தி.மு  நமக்கு தேவையானவற்றை  நாமே திட்டமிட்டு, செயல்படுத்தி வந்திருப்போம். அதில் யாருடைய தலையீடும் இருந்திருக்காது.  அதுபோலவே தங்களுக்கு விருப்பமான அல்லது  தேவையான பொருட்களை வாங்குவதிலும் அதே நிலைதான். விடுமுறை நாட்களில் விருப்பமான செயல்களில் ஈடுபடல், சினிமா, பொழுதுபோக்கு என்று அனைத்து செயல்களிலும் யாருடைய குறுக்கீடும் இருந்திருக்காது. ஆக திருமணத்திற்குப் பிறகு அவனது சொந்த விஷயங்களில் தன் மனைவியின் குறுக்கீடு உள்ளதை அவன் விரும்பவில்லை  என்பது புலப்பட்டது. இதே நிலைதான் திருமணமான பெண்களிடத்திலும் இருப்பதில் ஐயமில்லை.

மேலே கூறப்பட்ட அனைத்தும் ஒரு தனிமனிதனின் உளப்பாங்காக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நாமனைவரும் ஒரு சிறிய விழுக்காடாவது இவற்றை உணர்ந்திருப்போம். இதை சரியா தவறா என்று விவாதிப்பதைவிட, திமுதிபி என்ற இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தி.பின் முதலில் உணரப்படுவது - அன்பு, ஆதரவு.  ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணையாக உள்ளதை உணர முடிகிறது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நம்மிடமுள்ள சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ள எதிர்பாலரின் துணை இன்றியமையாதது. அவ்வப்போது மாமிச உணவு உண்ணும் நான், எனது மனைவியின் தெய்வ‌ வ‌ழிபாட்டின் காரணமாக திங்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அவற்றை தவிர்த்துக் கொண்டேன். இது என்னால் முடிந்த காரியமே!  நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனதை நாம் பழக்கிக்கொள்ள வேண்டும்.

சில நேர‌ங்களில் நம்மிடமுள்ள  தவறான செயல்களை கணவனோ/மனைவியோ சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக்கொள்வதே பண்பானது.  இதனைக் குறுக்கீடாகக் கருதாமல், அவர்களின் யோசனையாகவோ அல்லது கருத்தாகவோ எண்ணலாம். தி.முன் தனித்து எடுக்கும் முடிவுகளைவிட, திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் துணையிடம் கலந்தாலோசித்து எடுக்கும் முடிவே சரியானதாக இருக்கலாம். கணவன்-மனைவிக்கிடையில் கொடுக்கப்படுவதும், கிடைப்பதுமான இன்பமும் துன்பமும்  வேறெந்த உறவுகளிடமிருந்தும் கிடைக்கப் பெறாதவையாகும். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தத்தம் முன்னேற்றத்திற்கு ,வாழ்க்கைத் துணையின் பங்கு மிகவும் இன்றியமையாத‌து.

முடிவில்தி.முன் க‌ருப்பு/வெள்ளை ப‌ட‌ங்க‌ளாக இருந்த நம் வாழ்வு, தி.பின் வ‌ண்ணப்படமாக‌ மாறியுள்ள‌து உண்மையே!!!
 

No comments:

Post a Comment