அப்பாவின் வெள்ளை வேஷ்டி

சிறு வயதில் என் அப்பாவுடன் பேசும்பொழுது ஏதோ ஒருவித பயமிருக்கவே செய்தது. இதுவரை அடித்ததில்லை, அப்படியிருந்தும்  மரியாதையுடன் கூடிய ஒரு பயம் இருக்கவே செய்தது. அப்பா எப்பொழுதும் தனக்கென்று ஒரு தனிக்கொள்கை வைத்திருப்பார். அரசாங்க வேலையிலிருந்தாலும் இன்றும் நேர்மை தவறாத அதிகாரியாகவே வாழ்ந்துவருகிறார். வாழ்நாளில் இதுவரை அவர் பேண்ட் அணிந்ததே இல்லை, எப்பொழுதும் ஒரு வெள்ளை நிற சட்டையும்வெள்ளை நிற வேஷ்டியும் அணிவதே அவரது வழக்கம். 

எவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவிலிருந்தாலும் அப்பாவை தனியாக அடையாளம் காட்டுவது அவரது அந்த வெள்ளை நிற உடையே! அதனாலேயே என்னவோ எனக்கும் அவருடைய வெள்ளை வேஷ்டியின் மீது ஒருவித ஈர்ப்பு உருவானது.

இன்றும் நினைவிலுள்ளது, எனது பள்ளிப்பருவத்தில் அவ்வப்போது அப்பாவின் வேஷ்டியை இரும்பு பீரோவிலிருந்து வெளியேயெடுத்து உடுத்த முயற்சித்தது. அதற்காகவே சீக்கிரம் பெரியவனாக வேண்டுமென எண்ணினேன்.  வீட்டின் இரும்பு பீரோவில் அப்பாவுக்கென்று ஒரு தனியறை ஒதுக்கப்பட்டிருந்தது. பட்டு சரிகை, நீலம், சிவப்பு, பச்சை என்று வெவ்வேறான நிறங்களில் சரிகைகளைப் பார்த்ததுண்டு.   

அம்மாவிற்கு அப்பாவின் துணிகளைத் துவைப்பதென்பது மிகக்கடினமான ஒன்று. ஏதாவது கரையோ அல்லது வண்டியின் கிரீஸ் இருக்கும். அம்மாவிற்கு இது சிரம‌மாகத்தோன்றினாலும், தன் கணவனின் துணிகளைத் துவைப்பதை அதே ஆர்வத்துடன் இன்றும் செய்கிறார்.  

அலுவலகத்திற்கு 15 நிமிடம் முன்பாகவே செல்லும் என் அப்பா, அந்த வீதியின் நடமாரும் கடிகாரமாகவே விளங்கினார். அப்பா தனது இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் செல்லும் நேரம் மிகச்சரியாக 9.00 ஆக இருக்கும். அலுவலகத்திலும் தனக்கென்று ஒரு வரைமுறையை வகுத்துக்கொண்டார். 

அப்பாவின் நேர்மையினால் சில நேரங்களில் மனஉளைச்சல் இருந்தாலும், தனது அலுவலகப் பணியை மிகவும் நேசிப்பவர். அவ்வப்போது அலுவலக நண்பர்கள் வீட்டிற்கு வரும்போது, கண்டிப்பாக அப்பாவின் நேர்மையைப் பற்றிக் குறிப்பிட்டு அடுத்ததாக அவரது வெள்ளை நிற வேஷ்டி பற்றிக் கூறுவது மிகவும் இயல்பான ஒன்று.

அப்பா ஏதாவது திருமண சுப காரியங்களுக்குச் செல்லும்போது மற்றவர்களின் பார்வை கண்டிப்பாக அவருடைய வெள்ளை வேஷ்டியின் மீதிருக்கும். அப்பாவிற்கென்று ஒரு தனி மரியாதை இருக்கக் காரணம் அவருடைய நேர்மையாக இருந்தாலும், ஒரு சிறு பங்காவது அவரின் வெள்ளை உடைக்கு இருக்கும். அதனாலே என்னவோ  பிற்காலத்தில் நானும் அப்பாவைப் போல் வெளியில் செல்லும்போது வேஷ்டி அணிய வேண்டும் என விரும்பினேன்.  

இறுதியாக எனது திருமணநாளில் முதன்முறையாக வேஷ்டி அணிந்தேன். இன்று யோசித்துப் பார்த்தால் தினமும் வேஷ்டி உடுத்துவதென்பது எனக்கு சிரமமான ஒன்று. ஆனாலும் எனக்கு விருப்பமான நேரங்களில், குறிப்பாக கோவில் மற்றும் திருமண சுபகாரியங்களுக்குச் செல்லும்போது அப்பாவின் வேஷ்டியை உடுத்த இன்றும் விரும்புகிறேன்.

வரும் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு செல்லவுள்ளேன், கண்டிப்பாக அப்பாவின் வெள்ளை வேஷ்டியை அணிவேன் என்ற நினைப்பே மகிழ்ச்சியாக உள்ளது.

No comments:

Post a Comment