முகவரி இல்லாத ஊரில்

நேற்று மாலை என் மனைவியுடன் அருகில் வசிக்கும் எனது நண்பனின் செல்லக் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்லத் தயாரானோம். எப்போதும் போல வீட்டிலிருந்து மிகச் சரியாக லேட்டாகப் புறப்பட்டு, செல்லும் வழியில் அவசர அவசரமாக பேன்ஸி ஸ்டோர் சென்று கிப்ட் வாங்கி, இறுதியில் அவர்கள் வீட்டிற்கு அரைமணி நேரம் லேட்டாகச் சென்றோம்.

வண்டியை பார்க் செய்யும்போது 'ச்சீ எப்பவும் போல லேட், அப்படி என்னதான் பண்றீங்க இவ்வளவு லேட் ஆக' என்று மனைவியை நொந்து கொண்டேன். புறப்படும் முன் க்ரோர்பதி நிகழ்ச்சியில் கேட்கப் படும் கேள்விகளைப் போல "ஏங்க இந்த டிரஸ் ஓகேவா? இல்ல மஞ்சள் கலர் ஓகேவா? இல்லைனா இந்த கருப்பு ஓகேவா இருக்குமா. NO இது வேண்டாம் பாப்பா பர்த்-டேக்கு போகும்போது எப்படி கருப்பு டிரஸ்ல போறது. சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் இந்த 3 டிரஸ்ல ஏதாவது ஒன்னு செலக்ட் பண்ணி சொல்லுங்க டைம் ஆகுதுனு" சொன்ன என் மனைவியை கோபமாகப் பார்த்தேன்.

ஏதோ எனக்கு பிடித்த மஞ்சள் நிற உடையைச் சொல்ல, வழக்கப் போல் என் மனைவி "இல்லைங்க அத லாஸ்ட் டைம் தான் வெளியில போகும்போது போட்டேன்னு" சொன்னத கேட்டு  கோபத்தில "மேடம் இன்னைக்கு எப்பவும் போல லேட் ஆச்சுனா, அப்புறம் நான் கத்துவேன் சோ நீயே முடிவு பண்ணிக்கோனு" கோபத்தில் எச்சரித்தேன்.

10‍-15 நிமிடங்களுக்குப் பிறகு நீல நிற உடையில் வெளியே வந்த என் மனைவியை வெளிப்படையாகத் திட்டினாலும், இன்றும் நமது தமிழ் கலாச்சாரத்திலிருந்து சிறிதும் முரணாகாமல் ஆடை உடுத்தும் சில பேரில் ஒருவராக இருக்கும் மனைவியைப் பார்க்கும் போது ஏதோ ஒருவித மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது.

மராட்டியத்தில் எங்களைப் போன்றே தனித்து விடப்பட்ட ஏனைய நபர்களில் ஒருவன் என் நண்பன். விழாவில் எங்களுடன் வேலை புரியும் அலுவலக நண்பர்கள் (ராஜஸ்தான், குஜ்ராத், உபி) தத்தம் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். எங்களைப் போன்று குடிபெயர்ந்தவர்களின் முக்கிய நோக்கம் பணம் ஈட்டுவதொன்றே. இத்தகைய பணத்தால் எங்களுக்குக் கிடைக்கும்  இந்த வெட்டி சந்தோசமும், ஆடம்பரமும் வாழ்வில் நிலையான மகிழ்ச்சியை அளிப்பதில்லை. 

விடுமுறை நாட்களில் ஷாப்பிங் மால், ரெஸ்டாரண்ட், சினிமா ஹால் செல்வது நாளடைவில் திகட்ட ஆரம்பித்த சமயத்தில் இது போன்ற  get-together நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தனிமையில் இருக்கும் எங்களைப் போன்ற முகவரி தெரியாத முகவர்களுக்கு பிற மாநிலத்தாரின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைந்தது.

தக்ஷா (Daksha) நேற்றுடன் அவளுக்கு 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிவப்பு மலர்  வடிக்கப்பட்ட கவுனில் குட்டி தேவதையாகக் காட்சி அளித்தாள். அணைக்கச் சென்ற என் மனைவியைப் பார்த்து அவள் வெட்கத்தில் சிரித்த காட்சி அடடா அப்போது தான் மழலைச் செல்வத்தின் இனிமையை உணரமுடிந்தது.  கிப்ட் பேக்கை கொடுக்க அருகில் சென்றதும், தனது பலூனை எங்கே இவர்கள் பிடுங்கி விடுவார்களோ என்ற  அச்சத்தில் ஓடி அவள் அம்மாவை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

கேக் கட் செய்யும்போது திரளாக இருந்த அடையாளம் காணாத புதுமுகங்களைக் கண்ட பதற்றத்தில் எரியும் மெழுகுவர்த்தியை அணைக்க, அவள் செவ்வாயை திறந்து ஊத மீண்டும் அதே மழலை வெட்கம். கடைசியில் அந்த கேக்கை சாப்பிடும்போது ஏனைய மழலைகளுடன் எந்த வித பிரிவும், வேறுபாடுமின்றி அவர்களுக்கும் ஊட்டிவிட்டு தானும் சுவைத்த காட்சி நம் முன்னோர்கள் குறிப்பிட்ட 'பகிர்ந்து உண்' என்ற சொல்லுக்கு உதாரணமே. நீண்ட நேரம் அவள் பேசுவதைப் பார்க்கும்போது, குழந்தைகள் அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் மொழியை அறியவதென்பது என்னைப் போன்றவர்களுக்கு சிரமமான ஒன்று.

நண்பனுடன் உரையாடும்போது, இவ்வருட இறுதியில் அருகிலுள்ள‌ பள்ளியில் தக்ஷாவை சேர்க்கவேண்டுமென்று கூறினான். ‌Pre-school, lower KG, play school என ஆங்காங்கே அபார்ட்மென்டின் ஒரு வீட்டில் காற்றுப்புகமுடியா அறையில் அவளது மழலைக் கல்வி ஆரம்பமாகிறது. இதுவே இன்றைய நிலை...

நீண்ட நேரமானதால் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பி, வழியில் இருந்த dominos ல் இரவு உணவை முடித்துவிட்டு, 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

3 comments:

 1. சரியாக சொன்னீர்கள், எப்போதும் பார்ட்டி என்றால் கொஞ்சம் லேட்டாகவே ஆகிறது. தவிரவும் அவர்களே பத்து மணிக்கு வர சொன்னால் எப்படியும் பத்தரை மணிக்கு தான் வருவார்கள் என்று நினைத்து ஒரு அரைமணி நேரம் முன்பே வர சொல்கிறார்கள்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. U ate Less in our home.. thats y u went to Domino.....

  For my blog...
  Thanks Anna U r the Inspiration

  ReplyDelete