அன்றைய சிறு
வயது ஞாபகங்களை இன்று நினைத்துப் பார்த்தால் இனிமையாக உள்ளது. அப்போது எனக்கு 7 அல்லது 8 வயதிருக்கும்,
வீட்டில் இரவு சமையலுக்கு தேங்காய் அல்லது கொத்தமல்லிக்கு தேவை
ஏற்படும்போது அவற்றை வாங்குவதற்காக நான் அருகிலிருந்த அண்ணாச்சி கடைக்குச் செல்வது
வழக்கம். Dollar city என்றழைக்கப்படும் திருப்பூரில்
எங்கள் வீடு நகரின் முக்கியப் பகுதியில் இருந்தது. அப்பாவின்
அரசாங்க வேலையின் காரணமாக அலுவலகப் பணியாளர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த
ஹவுசிங் யூனிட்டில் வசித்து வந்தோம்.
வீட்டிற்கு
மிக அருகில் "வைகிங்" பனியன் கம்பெனி இருந்ததால், வீட்டின் அட்ரஸ் சொல்வது எளிதாக அமைந்தது.
'எங்க வீடு வைகிங் கம்பெனி காம்பவுண்டுக்கு அடுத்தது'
என்று பிரபலமான அந்த கம்பெனியின் பெயரை சொல்வது வழக்கம். ஏறக்குறைய
திருப்பூரில் வசிக்கும் அனைவருக்கும் அந்த கம்பெனியின் பெயர் தெரிந்தே இருக்கும்.
திருப்பூர் இந்தியாவின் பனியன் தலைநகர் என்றழைக்கப்படுகிறது (சொந்த ஊரைப் பற்றி குறிப்பிடுவதில்
ஏதோ ஒருவித மகிழ்ச்சி).
எங்கள் வீட்டிற்கும்
அண்ணாச்சி கடைக்கும் உள்ள தூரம் மிகக்குறைவே, தோராயமாக 50-100 மீட்டர் இருக்கும்.
அண்ணாச்சி கடை வீட்டிற்கு மிக அருகில் இருந்ததால் கொசுறு சாமான் வாங்க தொலைதூரம்
நடக்க வேண்டியதில்லை. மாதம் ஒருமுறை வீட்டிற்குத்
தேவையான மளிகை சாமான் வாங்க அப்பா அம்மாவிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பது
வழக்கம். அப்பணத்தை நானும் எனது அக்காவும் தனியே பிரித்து அரிசி, பால், காய்கறி, கரண்ட் பில், போக்குவரத்து, கேஸ்
சிலிண்டர், கேபிள் டிவி என்று லிஸ்ட் செய்து அவற்றிற்குத்
தேவையான தொகையை ஒதுக்குவது வழக்கம். மளிகை சாமான் வாங்க நானும் என் அம்மாவும்
குறிஞ்சி மளிகைக் கடைக்குக் செல்வோம்.
மாதத்தின் கடைசி
வாரம் அல்லது முதல் சனிக்கிழமைகளில் அங்கு செல்வது வழக்கம். செல்லும் வழியில்
அம்மா அவரது பழைய ஞாபகங்களைப் பற்றி பேசுவார். எடை அதிகமாக உள்ள ஒயர் கூடையை அம்மா சுமந்து கொண்டு எனக்கு சிறிய
கூடையைப் கொடுப்பார். நான் எனது பள்ளியில் நடந்த
நிகழ்ச்சிகளைப் பற்றி அம்மாவிடம் கூறுவேன். அன்றைய காலத்தில் ரோடு இருந்த அமைப்பு,
வீதிகளில் ஓடு அல்லது கூரை நெய்யப்பட்ட வீடுகளின் அமைப்பை பற்றி
அம்மா விவரிப்பார். நானும் பதிலுக்கு 'ஓ, அப்படியா' என்று என் அம்மா சொல்லும் புராணத்தை
கேட்டுக் கொண்டே வீடு வந்து சேருவோம்.
உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களின் திடீர் விஜயத்தின் போது ஜூஸ்
செய்வதற்காக தேவைப்படும் எலுமிச்சை அல்லது ரஸ்னா வாங்க அண்ணாச்சி கடைக்கு
செல்வேன். யோசித்துப் பார்த்தால் கருவேற்பிலை, கொத்தமல்லி, வெங்காயம்,
தக்காளி, தேங்காய் வாங்குவதற்கு மட்டுமே
அண்ணாச்சி கடைக்கு செல்வது வழக்கம். என்னைப்
போலவே அருகில் வசிக்கும் எனது நண்பனின் வீட்டிலும் அதே நிலைமைதான். அம்மா
கடைக்குப் போகச் சொல்லும்போது என் நண்பனையும் உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.
அப்படி செல்கையில் வழி நெடுக அன்றைய தினத்தில் பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான
நிகழ்ச்சிகளைப் பற்றி உரையாடுவோம்.
அடிக்கடி அந்தக் கடைக்குச் செல்வதால் அண்ணாச்சிக்கு எங்கள் பெயர்
பரிட்சயமானது. பின்னாளில் அண்ணாச்சி என்றழைக்கப் படுவோரில் பெரும்பாலானோர்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அண்ணாச்சி கடையைப் பற்றி விளக்கவேண்டுமானால், நமக்கு அன்றாடம் பழக்கப்பட்ட தெருமுனைக்
கடையாக இருக்கும். கடையின் மொத்த ஏரியா தோராயமாக 150-200 சதுர
அடி இருக்கும். வெளிப்புறத்தில் பலகைக் கதவுகள் வைக்கப்பட்டு இடையில் இரண்டு
அல்லது மூன்று அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ளிருப்பவர்க்கும் வாடிக்கையாளர்க்கும்
நடுவே ஒரு தடுப்புச் சுவராக இருக்கும். கடையின் வலது மூலையில் வெவ்வேறு வகையான
வாழைத்தார்கள் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும்.
அதுபோலவே சிறுவயதில் எனக்குப் பிடித்தமான சிவப்பு தேன் மிட்டாய்
ஒரு பாலிதீன் கவரில் அடைக்கப்பட்டு ஏனைய தின்பண்டங்களுக்கு நடுவில் தொங்கிக்
கொண்டிருக்கும்.சில நேரங்களில் எனக்கு அண்ணாச்சியின் மீது வெறுப்பு ஏற்படுவதுண்டு.
பெரியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு எங்களைப் போன்ற
சிறுவர்களுக்கு அடுத்ததாகவே பொருட்கள் வழங்குவது அண்ணாச்சியின் வாடிக்கையானது.
அன்றைய நாட்களில் ஐம்பது காசுக்கு ஒரு தேங்காய்த்
துண்டும், நாலணாவிற்கு கருவேற்பிலை/கொத்தமல்லியும் வாங்குவது
வழக்கம்.
அண்ணாச்சி வெளியூர் செல்லும் நேரங்களில் அவரது மனைவி கடையை
கவனித்துக் கொள்வார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் முறையே 5 மற்றும் 2 வயதில்
இருந்தது. கடையில் கூட்டமில்லாத நேரங்களில் எனது பள்ளியைப் பற்றி அண்ணாச்சி
வினவுவது வழக்கமாயிருந்தது. அன்றைய தினத்தில் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் இருந்தால்
அதைப் பற்றி உரையாடிக் கொண்டிருப்போம்.
இன்றுடன் ஏறக்குறைய 15 வருடங்களாகிறது, சமீபத்தில்
எனது பள்ளி நண்பனுடன் பேசும்போது அண்ணாச்சி அங்கிருந்து காலிசெய்து விட்டு தன் சொந்த
ஊருக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.
"அண்ணாச்சி கடை" - இன்றும் அந்த பழைய நினைவு ஞாபகத்தில் உள்ளது.
(பேய்கள் பற்றிய எனது சிறுவயது அனுபவத்தை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்)
இனிமையான மலரும் நினைவுகள்
ReplyDeletethanks 4 ur comments velu..
ReplyDeleteGood writing and sweet memories. continue it
ReplyDelete@ ரவிசந்திரன், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
Delete