அம்மா எனக்கு கல்யாணம் வேண்டாம்

நேற்று நடந்ததை நினைக்கும் போதெல்லாம் அபிராமியின் கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தன.  கடைசியாகப் பார்க்க வந்த மாப்பிள்ளையும் ஏதோ சில காரணங்களுக்காக பதில் கூறாமல் சென்றுவிட்டனர். மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் அம்மாவின் மடியில் தலை சாய்த்துப் படுத்தாள். வேதனையால் வாடிய முகத்தைக் கண்ட அம்மா தன் மகளுக்கு ஆறுதல் சொல்லும் வகையில்.

"ஏம்மா அபி, ஆபிசுல இன்னிக்கு ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னியே என்ன ஆச்சு?"

"இன்னிக்கு எங்க மேனேஜர் ஏதோ அவசர வேலையா வெளியூர் போறாரு, அதனால மீட்டிங் கேன்சல் ஆயிருச்சு"

"சரி நீ ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்த‌ உன் பிரண்ட் மீனாட்சியோட‌ குழந்தை எப்படி இருக்கா?   இந்த வாரம் வேலையில்லைனா சனிக்கிழமை போய் பார்த்துட்டு வாயேன்!"

"இல்லமா அடுத்த வாரம் எனக்கு எம்.பி.ஏ எம்ஸாம் இருக்கு, இப்ப வரைக்கும் எதுவும் படிக்கல. இந்த சனி, ஞாயிறு படிச்சாதான் முடியும் இல்லைனா ஃபெயில் தான். எப்பவாவது டைம் கிடைக்கும் போது போய்ப் பார்த்துட்டு வரேன்"

"சரிமா நீ ரொம்ப டையர்டா இருக்க நான் போய் காபி எடுத்திட்டு வரேன்" என்று கூறிவிட்டு சமையலறையை நோக்கிச் சென்றாள்.
அபிராமியின் அதே மனநிலைதான் பெரியசாமிக்கும் இருந்தது. அலுவலகத்தில் மதிய சாப்பாட்டை சாப்பிட முடியாமல் வெறும் மாத்திரையை மட்டுமே உட்கொண்டார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாப்பிள்ளை வீட்டார் பார்த்துவிட்டுச் சென்றதை நினைத்து, எப்படியாவது இந்த வருட இறுதிக்குள் ஒரு நல்ல வரண் அமைய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்தார். வெளியில் இருள் சூழ்ந்ததைப் பார்த்துவிட்டு தனது பழைய பஜாஜ் ஸ்கூட்டரில் வீட்டிற்குக் கிளம்பினார். இந்த பச்சை நிற ஸ்கூட்டர் அபியின் சிறு வயதில் வாங்கியது.

வழியில் டீக்கடையில் நின்றிருந்த புரோக்கர் மாணிக்கத்தைப் பார்த்துவிட்டு  வண்டியை நிறுத்தினார்.

"என்னப்பா நேத்து சாயந்திரம் ஃபோன் பண்ரேன்னு சொல்லிட்டு ஆளையே காணோம்?"

"இல்ல சார் நேத்து வீட்டில கொஞ்ச வேலையிருந்துச்சு அதான் ஃபோன் பண்ண முடியல"
"நீ கூட்டிட்டு வர ஒருத்தரும் சரியா அமையரதில்ல. நீ கேட்கும்போதெல்லாம் நான் பணம் தர்றேன் ஆனா நல்லதா ஒண்ணும் அமைய மாட்டேன்ங்குதே"

"சார் நான் என்ன செய்யறது, என் முன்னாடி ஜாதகம் நல்லா இருக்குனு சொல்லிட்டு நேர்ல வந்து பார்த்திட்டு புடிக்கலைன்னு சொல்றாங்க. இதுவரைக்கும் நான் 40 ஜாதகம் உங்களுக்கு கொடுத்திருக்கேன். சரி சார் நீங்க இனி கவலைய விடுங்க உங்க பொண்ணுக்கு நல்ல ஒரு மாப்பிள்ளைய நான் எங்கிருந்தாவது கண்டுபிடிச்சுக் கொண்டுவரேன்"

"என்னமோ மாணிக்கம் இதையே தான் நீ ஒவ்வொரு தடவையும் சொல்ற, எப்படியாவது நம்ம அபிராமிக்கு ஒரு நல்ல வரண் அமைஞ்சா நல்லா இருக்கும். சரி டைம் ஆகுது நான் கிளம்பறேன்" என்று கூறிச் சென்றார்.

வீட்டிற்குச் சென்றதும் ம‌னைவி சிவ‌காமி கொடுத்த சர்க்கரை இல்லா காபியைக் குடித்துவிட்டு சிறிது இளைப்பாறினார்.

"சிவ‌காமி,பொண்ணு வ‌ந்துட்டாளா?"

"ஹூம்ம் வந்துட்டாங்க டையர்டா இருக்குனு சொல்லிட்டு படுத்துட்டா"

"ஒண்ணுமே புரியமாட்டேங்குதுமா, இதுவரைக்கும் 25 பேர் பார்த்துட்டுப் போய்டாங்க. ஆனா எதுவுமே சரியா அமையல"

"ஆமாங்க அதை நெனச்சாத்தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுவரைக்கும் நாம போகாத கோயில் இல்ல, வேண்டாத தெய்வம் இல்ல. நம்ம பொண்ண நினைச்சாதான் ரொம்ப‌ க‌ஷ்டமா இருக்கு, இப்ப‌வெல்லாம் அவ‌ முக‌த்தில ச‌ந்தோஷ‌மே இல்ல‌!"

"வர்ற வழியில‌ ந‌ம்ம‌ புரோக்கர் மாணிக்கத்தைப் பார்த்திட்டு வ‌ரேன், அவ‌ன்கிட்ட‌ இருந்தும் ந‌ல்ல‌ ப‌தில் இல்ல‌. அவ‌ன் ஒவ்வொரு த‌ட‌வை கூட்டிட்டு வ‌ரும்போதெல்லாம் ப‌ண‌ம் கொடுக்க‌றோம் ஆன எதுவும் அமைய மாட்டேன்ங்குது!"

"அவ‌ கூட ஸ்கூல்ல ப‌டிச்ச‌ மீனாட்சிக்கு க‌ல்யாண‌மாகி இப்ப‌ குழந்தையும் பொற‌ந்தாச்சு. அந்த‌ ப‌க்க‌த்து வீட்டு மீனாவுக்கு 3 வயசில ஒரு பெண் குழந்தை இருக்கு, இப்டி அபிராமி வயசில இருக்கிற எல்லாருக்கும் க‌ல்யாணமாகி குழ‌ந்தை பொறந்து ச‌ந்தோஷ‌மா இருக்காங்க‌"

"நாம என்ன ப‌ண்ண‌முடியும் சிவ‌காமி, ந‌ம‌க்கு தெரிஞ்ச‌ சொந்த‌கார‌ங்கள், ஆபிஸுல‌ வேலை செய்ற‌ ப‌ர‌ந்தாம‌ன்கிட்ட‌யும் சொல்லி வைச்சிருக்கேன்"

"ஏங்க‌ இன்னிக்கு எங்க‌ மாமா பொண்ணு சாந்திய‌ மார்க்கெட்ல‌ பார்த்தேன். அவ‌கிட்ட‌ பேசிட்டு இருக்கும்பொது ந‌ம்ம‌ அபிராமிய‌ ப‌த்தி சொன்னேன், பொள்ளாச்சிகிட்ட‌ ஏதோ ஒரு நல்ல ஜோசிய‌கார‌ர் இருக்கிறாமா அங்க‌போய் ஒரு எட்டு பார்த்துட்டு வ‌ர‌லாம்னு சொன்னா"

"ஜோசிய‌த்தில‌ ந‌ம்பிக்கை போச்சு, எல்லாரும் பேசி வைச்ச‌ மாதிரி ஒரே ப‌தில‌த்தான் சொல்றாங்க‌. இந்த வ‌ருஷ‌த்துக்குள்ள‌ எப்ப‌டியோ ந‌ட‌ந்திரும்னு சொல்றாங்க‌, ஆனா இதுவரைக்கும் அது ந‌ட‌க்குல"

இந்த‌ சம்பாஷ‌னைகளை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த அபிராமிக்கு க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வ‌ழிந்தது. தன‌து விதியை நினைத்து வ‌ருந்தினாள். எந்த‌ ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளுக்குச் சென்றாலும் 'ஏம்மா இன்னும் உன‌க்கு க‌ல்யாணம் ஆகலையா, க‌டைசியா வ‌ந்த மாப்பிள்ளையும் பிடிக்க‌லைனு சொல்லிட்டாங்க‌ளாமே. உனக்கும் வயசாகிட்டே போகுது சீக்கிரமா ஏதாவது அமைஞ்சா பரவயில்ல' என்று தங்களுக்கு தெரிந்த கீதா உபதேசங்களைச் சொல்வதைக் கேட்பது அபிராமிக்கு வழக்கமான ஒன்று. ஆபிஸிலும் இதே நிலைதான், இத‌னாலேயே தான் எந்த‌ க‌ல்யாண சுப காரியங்களுக்கும் செல்வ‌தில்லை என்று உறுதியாக இருந்தாள்.

‌அடுத்த நாள் காலை வழக்கம்போல் காலை உணவைப் புறக்கணித்து அவசர அவசரமாக ஒரு ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்த சிவகாமி,

"ஏண்டி உனக்கு எவ்வளவு தடவ சொன்னாலும் தெரியாதா, அதான் சாதம் செஞ்சு வச்சிருக்கேன் கொஞ்சம் உக்கார்ந்து சாப்பிட்டுப் போனாதான் என்ன? காலைல இப்பவி சாப்பிடாம வெறும் வயத்துல போனா எப்டி வேலை செய்ய முடியும்"

"அம்மா நான் தான் ஏதாவது ஒரு ஃபுரூட் சாப்பிடறேன்ல இததான் எல்லா டாக்டர்ஸும் டீவியில சொல்றாங்க சோ ஒரு பிரச்சனையும் இல்ல. சரி எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பறேன்"

"ஆபிஸுக்கு போற வழியில தெருமுனைல இருக்கற‌ நம்ம மகாலட்சுமி கோயிலுக்கு போய் ஒரு நெய்தீபம் ஏத்திட்டு போ"

"இதைத்தான் நான் 2 வருஷமா பண்ணிட்டு இருக்கேன், எந்த சாமியும் நமக்கு வரம் கொடுக்கறதா தெரியல‌"

"ஏண்டி காலையிலே இப்ப‌டி குத‌ர்க்க‌மா பேச‌ற, நீ வேணா பாரு இந்த‌ வ‌ருஷ‌ம் உன் க‌ல்யாண‌ம் க‌ண்டிப்பா ந‌ட‌க்கும்"

"சரிமா எல்லாம் சாய‌ந்திர‌ம் பேசிக்க‌லாம், நான் கெள‌ம்ப‌றேன்" என்று சொல்லிவிட்டு த‌னது ஸ்கூட்டியில் அலுவ‌ல‌க‌த்திற்குப் பறந்தாள்.

முந்தா நாள்  லீவு எடுத்ததால் அபிராமிக்கு வ‌ழ‌க்க‌த்திற்கு மாறாக‌ வேலைச் சுமை  சற்று அதிகமாக‌வே இருந்தது. த‌னது ஹேன்ட்பேக்கை டிராவ‌ரில் வைத்துவிட்டு, க‌ம்பியூட்ட‌ரை ஆன் செய்தாள். அருகிலிருந்த ஸ்வப்னாவைப் பார்த்துவிட்டு ,

"ஹாய் டீ குட்மார்னிங், பாஸ் வந்தாச்சா?"

"இன்னும் இல்ல, நாளைக்குத்தான் வர்றதா ராகவன் சொன்னாரு"

"ஸ்வப்னா இப்பவெல்லாம் முன்னமாதிரி வேலை செய்ய இன்டிரஸ்டே இல்லடி"

"ஏன் அப்படி சொல்ற, இந்த வேலை புடிக்கலையா?"

"அப்படியெல்லாம் இல்ல, ஏனோ மனசே சரியில்லை. பீஸ்ஃபுல்லாவே இல்ல"

"சரி விடுடி, எனக்கும் இப்படித்தான் இருந்துச்சு. நாம என்ன பண்ண முடியும்? நல்ல வரண் அமைஞ்சா எல்லாம் சரியாயிடும்"

"இதுவரைக்கும் எவ்வளவோ பேர் வந்து பார்த்துட்டு போய்டாங்க. வர்றவுங்க எல்லாம் வரதட்சணை அதிகமா கேட்கராங்க, இல்லைனா ஜாதகம் சரியில்லைனு ஃபோன்ல சொல்றாங்க. இன்னும் சில பேர் ரீசனே இல்லாம வேண்டாம்னு சொல்றாங்க"

"என்ன செய்யறது நாம இருக்கற கல்சர் அப்படி. இதுதான் இங்க ரொம்ப வருஷமா நடந்துட்டு இருக்கு. ஃபாரின் மாதிரி இருக்கனும், பிடிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா இங்கதான் பொண்ணு பார்க்கறது, காபி வைக்கறது, பஜ்ஜி சொஜ்ஜி செய்யறதுனு ஏதோ கண்ட ஃபார்மாலிட்டிஸ். இது எதுவும் இப்போதைக்கு நிக்காது. இன்னும் ஒரு ஜெனரேஷனுக்கு இருக்கும். "

"இல்ல ஸ்வப்னா வீட்டில அப்பாவும் அம்மாவும் ரொம்ப கவலையா இருக்காங்க. எப்பவும் இதே பேச்சுத்தான், வீட்டில சந்தோஷமே இல்ல. யோசிச்சு பார்த்ததில நான் கல்யாணமே பண்ணிக்க வேண்டாம்னு இருக்கேன். அப்பா அம்மாவை நல்லா பார்த்திட்டு, அப்புறம் ஏதாவது சோஷியல் சர்வீஸ் பண்ணிட்டு காலம் கழிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

"ஏய் இதெல்லாம் பிராக்டிகலா ஒத்துவராது. பேசறதுக்கு வேணும்னா நல்லா இருக்கும். காலம் நேரம் வரும்போது எல்லாம் சரியாயிடும். சரி ரொம்ப நேரமாச்சு, நம்ம லஞ்ச்ல டிஸ்கஸ் பண்ணலாம்"

அபிராமியின் மனதில் ஏதேதோ எண்ண அலைகள் பறந்தன. எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவளது முகத்தில் முந்தைய பளபளப்பு இல்லை. எப்போதும் முகத்தில் ஒருவித கவலையே படர்ந்திருந்தது. உள்ளச் சோர்வு அதிகமானதால் அவளுக்கு முன்போல் வேலையில் ஈர்ப்பு ஏற்படவில்லை.

ல‌ஞ்சில் வெரைட்டி ரைஸ் சாப்பிடுவ‌து அபிராமிக்கு வ‌ழ‌க்க‌மான‌ ஒன்று. மீண்டும் அவ‌ர்க‌ளது பேச்சு தொட‌ங்கிற்று.

"அபிராமி நீ சொன்ன‌தெல்லாம் பிராக்டிகலா ஒத்துவ‌ராது. கொஞ்ச‌ கால‌ம் வேயிட் ப‌ண்ணு"

"இதுல‌ இனி ந‌ம்பிக்கை இல்ல‌, நான் டிசைட் ப‌ண்ணிட்டேன். ஈவினிங் அம்மாட்ட‌ பேச‌லாம்னு இருக்கேன்"

"இல்ல‌ டீ, இது ச‌ரியான டிஷிஸன் இல்ல‌. ஏதோ கோப‌த்துல‌ எடுத்த‌ முடிவு, கொஞ்ச‌ கால‌ம் நீ வேயிட் ப‌ணணித்தான் ஆக‌ணும்"

"நான் என்ன பொம்மையா? ஒவ்வொருத்த‌ரும் வ‌ந்து பார்த்திட்டு போக‌? இதெல்லாம் பிடிக்க‌ல‌ ஸ்வ‌ப்னா, ஏன்டா பொண்ணா பொறந்தேன்னு தோணுது. வீட்டுக்கும் க‌ஷ்ட‌ம் என‌க்கும் க‌ஷ்ட‌ம், வெளியில‌ எங்க‌ போனாலும் இதையே கேக்க‌றாங்க வேற வேலையே இல்லாத மாதிரி"

"ஏய் நான் ஒண்ணு சொன்னா த‌ப்பா எடுத்துக்க‌ மாட்டியே! ந‌ம்ம ஆபிஸ்ல‌ வேலை செய்ற‌ ராகுல் அவன் விருப்பத்த எத்தனையோ தடவை உன்கிட்ட சொல்லிட்டான். நீ தான் எந்த பதிலும் சொல்லாம இருக்க. லாஸ்ட் வீக் என்கிட்ட கூட அவன் உன்ன பத்திதான் பேசினான். நீ தான் அவனுக்கு ப்ராபர் பதில் சொல்ல மாட்டேங்கிற"

"ஸ்வப்னா பீளீஸ் ராகுல பத்தி பேச எனக்கு விருப்ப‌மில்ல‌. வேற‌ ஏதாவதுனா சொல்லு எனக்கு பிடிக்காத‌ விஷ‌ய‌த்தை ப‌த்திப் பேசாதே"

"ஏன் உனக்கு பிடிக்கல, நீ தான்டீ திமிர்ல‌ பேசிட்டு இருக்க‌. உன்ன‌ என்னால‌ புரிஞ்சுக்க‌வே முடிய‌ல‌. முன்னேலாம் அவ‌ன் கூட‌ ந‌ல்லாத்தானே பேசிட்டு இருந்தே, இப்ப திடீர்னு ஏன் வெறுக்க‌றே. நீயே யோசிச்சுப் பாரு ராகுல்க்கு என்ன‌டி குறை இருக்கு, ந‌ல்லா படிச்சிருக்கான் ச‌ம்பாதிக்க‌றான், வீட்டுக்கு ஒரே புள்ள‌, சொந்த‌ வீடு இருக்கு. இதவிட என்னடி வேணும்"

"ஸ்வ‌ப்னா இதெல்லாம் இருக்க‌ற‌துனால‌ அவ‌ன‌ பிடிச்சிருக்க‌ணும்னு அவ‌சிய‌ம் இல்ல‌"

"வேற‌ என்ன‌தான்டி வேணும் உன‌க்கு? வீட்டில் ஒத்துக்க மாட்டாங்கனு யோசிக்கிறியா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லடி, ஏனோ அவ‌ன‌ பிடிக்க‌ல‌ அவ்வ‌ள‌வுதான்"

"அபிராமி உன்னால‌ ஒரு ப்ராப‌ர் ரீச‌ன் கூட‌ சொல்ல‌ முடிய‌ல‌. என்கிட்ட கூட‌ ஓப‌னா பேச‌ மாட்டேன்ங்கிற‌!"

"அப்ப‌டியெல்லாம் இல்ல‌, உனக்குத் தெரியாத ராகுல் என்ன‌விட‌ ஒன் இய‌ர் ஜூனியர்னு?"

"ஏய் இதெல்லாம் பிராப‌ள‌மே இல்ல‌, இன்னிக்கு எவ்வள‌வோ பேர் ஏஜ் பார்க்காம‌, ஜாதி ம‌த‌ம் பார்க்காம‌ க‌ல்யாணம் ப‌‌ண்ணிக்க‌றாங்க‌. அப்புற‌ம் ஒன் இய‌ர்'ங்க‌றாது ஒரு பெரிய‌ வித்தியாச‌ம் இல்ல‌. நீ க‌ண்ட‌த‌ போட்டு குழ‌ப்பிட்டு இருக்க‌"

"இதெல்லாம் இப்ப‌ பேச‌றதுக்கு ந‌ல்லா இருக்கும், நாளைக்கு க‌ல்யாண‌மாகி ஏதாவ‌து பிர‌ச்ச‌னைனு வ‌ந்தா இந்த‌ டாபிக் தான் ஃப‌ர்ஸ்ட் வ‌ரும். அப்போ நான் தான் ஃபேஸ் பண்ணனும்"

"ஏய் நீ ரொம்ப யோசிக்கிற‌ அதுதான் உன் ப்ராபள‌ம். கல்யாணத்துக்கு பின் பிராப்ளமே வராதுனு யாராலும் சொல்ல முடியாது, அப்படியே வந்தாலும் நல்ல அன்டர்ஸ்டான்டிங் இருந்தா அதெல்லாம் 'ஃபாசிங் க்ளெளவ்ட் மாதிரி ம‌றைஞ்சு போயிரும்'. இந்த‌ ஒரு பிராப்ளம்தான் இருக்குதுனா ராகுல்கிட்ட‌யே நேரா போய் பேசு. உன் ஒப்பீனிய‌ன(opinion) சொல்லு, ரெண்டு பேரும் பேசி ஒரு நல்ல முடிவு எடுங்க‌. அதைவிட்டுட்டு இப்படி உப்பு சப்பில்லாத காரணத்தைச் சொல்லிட்டு இருக்காதே. ஃலைப்ல பிரச்சனை வர்றதெல்லாம் சகஜம் அத ஃபேஸ் பண்றதுதான் குடும்ப வாழ்க்கை. உதாரணாத்திற்கு என்னையே எடுத்துக்கோ கல்யாணத்திற்கு முன்னாடி ரொம்ப இன்டிபென்ட்டா இருந்துச்சு ஆனா இப்போ அப்படி இல்ல, அதுக்காக நான் ஹேப்பியா இல்லைனு சொல்ல முடியாது. எங்க இரண்டுபேருக்கும் நடுவுல அப்பப்போ பிரச்சனை வந்திட்டுத்தான் இருக்கு அதுக்காக என் ஃலைப்பே போச்சுனு சொல்ல முடியாது. இன்னைக்கு போடற சண்டை நாளைக்கு மறைஞ்சு போகும்"

"நீ சொல்ற‌தெல்லாம் சரிதான் ஆனா எங்க‌ வீட்டில‌ ஒத்துக்க‌ மாட்டாங்க‌. என்னை ரொம்ப‌ ந‌ம்பிட்டு இருக்காங்க‌, அவ‌ங்க‌ள‌ க‌ஷ்டப்ப‌‌டுத்த‌ எனக்குப் பிடிக்க‌ல‌. என‌க்கு எங்க‌ வீட்டில‌ ந‌ல்ல‌ மாப்பிள்ளைய‌ பார்த்து வைப்பாங்க‌னு ந‌ம்பிக்கை இருக்கு"

"நான் இவ்வ‌ள‌வு சொல்லியும் நீ கேக்க‌ல‌, இது உன் ஃலைப் நீ தான் முடிவு ப‌ண்ண‌னும். சரி லேட் ஆச்சு போலாம் வா" என்று கூறிவிட்டு இருக்கையை நோக்கிச் சென்ற‌ன‌ர்.

அன்று மாலை ஸ்வ‌ப்னா அபிராமியுடன் நடந்த உரையாடலைப் பற்றி ராகுலுக்குத் தெரிவித்தாள்.

மாலை அபிராமி வீட்டிற்குச் சென்ற‌தும் அம்மா கொடுத்த காபியைக்க் குடித்துவிட்டு குளிக்கச் சென்றாள். திருமணம் வேண்டாமென்ற முடிவை தன‌து அம்மாவுக்குத் தெரிவித்தாள். இதைக்கேட்ட‌ சிவ‌காமி,

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு, இப்ப‌ என்ன‌ ந‌ட‌ந்து போச்சுன்னு க‌ல்யாண‌ம் வேண்டாம்னு சொல்ற‌"

"அம்மா நீயும் அப்பாவும் கஷ்ட‌ப்பட்ட‌தெல்லாம் போதும், இனியும் நான் உங்க‌ள க‌ஷ்ட‌ப்ப‌டுத்த‌ விரும்ப‌ல‌. இந்த‌ உல‌க‌த்துல‌ க‌ல்யாணம் பண்ணாம வாழ முடியாதா? ஃபாரின்ல‌ இருக்கிறவங்க‌ அவங்களுக்கு புடிச்ச வாழ்க்கை வாழ்றாங்க, அவங்க‌ மாதிரி நான் இருந்துட்டு போறேன்"

"அபிராமி நீ இன்னும் சின்ன புள்ள மாதிரி பேசிட்டு இருக்க, அதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது"

"அப்புறம் என்னதான் பண்ணச் சொல்றீங்க, வர்ற மாப்பிள்ளையெல்லாம் ஜாதகம் சரியா இருக்குனு சொல்லிட்டு வந்துட்டு, அப்புறம் செவ்வாய் தோஷம் இல்ல வேற ஏதோ தோஷம் இருக்குனு வேண்டாங்கறாங்க. ஒவ்வொரு தடவையும் நான் புடவை கட்டிட்டு ஏதோ பொம்மை மாதிரி வந்தவங்க எல்லாருக்கும் காபி கொடுக்கறது, மாப்பிள்ளை பேசணும் சொல்லி தனியா பேசறது. இது எதுவுமே எனக்கு சுத்தமா பிடிக்கல"

"உனக்குன்னு ஒரு காலம் வரும் அப்போ இதெல்லாம் சரியா போயிடும், அதுவரைக்கும் நாம பொறுமையா இருக்கணும். என்கிட்ட சொன்னதெல்லாம் அப்பாட்ட சொல்லி அவரு மனச‌ நோக‌டிக்காதடீ. சரி அப்பா வர்ற டைம் ஆச்சு, கண்ண‌த் தொட‌ச்சிட்டு போய் வேறேதாவ‌து வேலைய‌ பாரு"

அன்று இர‌வு வ‌ழ‌க்க‌ம்போல‌ சிவ‌காமி த‌னது க‌ண‌வ‌னிட‌ம் அபிராமியைப் ப‌ற்றிப் பேசினாள்.

"ஏங்க நம்ம அபியப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்குங்க, அவ முகத்துல முன்னமாதிரி சிரிப்ப பார்க்கவே முடியல"

"என்ன செய்யறது அவ வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே"

"இன்னிக்கு சாய‌ந்திர‌ம் பேச‌றப்பே க‌ல்யாண‌மே வேண்டாம்னு சொல்லி அழ‌றா, எனக்கு என்ன செய்ய‌ற‌துனே தெரிய‌ல‌. எவ்வ‌ள‌வு சொன்னாலும் பிடிவாத‌மா இருக்கா"

"சிவ‌காமி நீ தான் அவ‌ளுக்கு ஆறுத‌ல் சொல்ல‌ணும், சரி நான் புரோக்க‌ர் மாணிக்க‌த்துக்கூட‌ ம‌றுப‌டியும் பேசிப் பார்க்கிறேன்"

"சரிங்க‌ நான் போய் ச‌மைய‌ல் செய்ய‌றேன்" என்று கூறிவிட்டு ச‌மைய‌ல‌றை நோக்கிச் சென்றாள்.

அபிராமிக்கு அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ள் வ‌ழ‌க்க‌ப் போல‌வே சென்ற‌ன. வெள்ளிக்கிழ‌மை மாலை அலுவ‌ல‌க‌த்தில் வேலை செய்யும் ந‌ண்ப‌ரின் குழ‌ந்தையின் பிறந்த‌ நாள் விழாவிற்குச் சென்றாள். விழாவை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கே  வீடு திரும்பினாள், களைப்பில் நன்றாகவே உறங்கிவிட்டாள்.

சனிக்கிழமை காலை வழக்கம்போல் லேட்டாகவே எழுந்தாள். பேப்பர் படித்துக்கொண்டிருந்த பெரியசாமியிடம், அபி வருவதைக் கவனித்த‌ சிவகாமி நேற்று மாலை நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி உரையாட ஆரம்பித்தாள்.

"அபி நேற்று ஃபங்சன் எப்படி இருந்துச்சு?"

"ம்ம் ஆபிசிலிருந்து எல்லாரும் வந்திருந்தாங்க. ஸ்வப்னாதான் ஏதோ வேலையிருந்திச்சுனு வரல!"

"ராகுல் வந்திருந்தாரா?"

இதைக்கேட்ட அபிக்கு  உள்ளுக்குள் கரண்ட் ஷாக் அடித்ததுபோல இருந்தது.  முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை மறைக்க முயற்சித்த அபிக்கு அம்மாவின் அடுத்த வாக்கியம் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

"நேத்து சாயந்திரம் ராகுல் இங்க வந்தாருமா, அப்பாகிட்ட பேசினாரு. பார்க்க நல்ல பையன் மாதிரித்தான் தெரியுது, ஆபிஸ்ல நடந்ததெல்லாம் சொன்னாரு. அவங்க வீட்டில நாளைக்கு உன்னப் பொண்ணு பார்க்க வர்றதா சொன்னாரு"

இதைக்கேட்ட அபிக்கு தான் வேறு ஏதோ உலகத்தில் இருப்பது போல் தோன்றியது. இதுவரை ராகுலின் மேலிருந்த அன்பு இன்னும் ஒருபடி உயர்ந்து நின்றது.

இதுவரை மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து புதுத் தெளிவு பிறந்தது.
  

2 comments: