உலகத்திலுள்ள
அனைத்து ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில்
குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும்
நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அவரது மனைவி வாசுகி தான்.
அந்த
அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே
இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர்
சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள
ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும்
அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார்
இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம். வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி
ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.
அப்போது வள்ளுவர் வாசுகியிடம், ""சோறு சூடாக
இருக்கிறது. விசிறு,'' என்றார். "பழைய சோறு எப்படி
சுடும்?' அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற
ஆரம்பித்து விட்டார்.
இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.அந்த கற்புக்கரசி ஒருமுறை
கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு
அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக்
கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.
"நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு'' என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின்
பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார் ""நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது
தான் இந்த உலகத்திற்கே பெருமை'' என்பது இந்தக் குறளின்
பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த
அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின்
பிரிவைத் தாளாமல்,
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல்
தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி
முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய்
என்
தூங்கும் என்கண் இரவு'' என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
"அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள்
இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!'' என்பது பாட்டின்
உருக்கமான பொருள்.
இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை
மனதிற்குள் அசைபோடுவார்களா!
(குறிப்பு: தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரை)
மேற்குறிப்பிட்ட
கட்டுரையை வாசித்த பின் என்னுள் எழுந்த எண்ண அலைகளை உங்களுடன் இங்கு பகிர்கிறேன்:
- நமது இந்தியத் தலைநகரில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 8000 - 9000 விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
- அடுத்தாற்போல் மும்பை, பெங்களூர் நகரங்களிலிருந்து 4000 - 5000 வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
- இதற்கு நமது சென்னையும் மாநகரமும் விதிவிலக்கல்ல, இங்கும் ஆண்டொன்றுக்கு வரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 200%மாக உயர்ந்துள்ளது.
- இதுபோலவே பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற விவசாயத்தை நம்பியுள்ள மாநிலங்களிலும் இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 150%மாக உயர்ந்துள்ளது.
- படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள கேரள மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவே 350%காக உயர்ந்துள்ளது.
- பெங்களூரில் மட்டும் நாளொன்றுக்கு 20 விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. கடந்த 2008 ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 5000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- விவாகரத்து வழக்குகள் சராசரியாக 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் குடும்ப நல நீதிமன்றத்திலும், அதன் பின் குறைந்தது 4 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்திலும் முடிவில் 4 ஆண்டுகள் உச்சநீதிமன்றத்திலும் நீடிக்கப்படுகின்றன.
இதற்கான காரணங்களை
ஆராயும் போது - நகரமயமாதலும், குடும்பத்தில் கணவன் மனைவி இருவரின்
நிதிநிலைமைகளினால் உருவாகும் கருத்து வேறுபாடுகளும் முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்களில் பலர் இதுவரைப் பின்பற்றப்பட்டு வந்த
திருமணமுறைகளை ஏற்கத்தயங்குகின்றனர். ஏனெனில் திருமணத்திற்குப் பின்
பெற்றோர்களை விட்டுப் பிரிந்து கணவன் வீட்டிற்கு செல்லவேண்டியுள்ளது என்பது அவர்களின்
கருத்தாக உள்ளது. வேலைக்கு செல்லும் அனைத்துப் பெண்களும் திருமணத்திற்குப்
பின் தங்களது சுதந்திரம் பறிக்கப்படுவதாக எண்ணுவதால் தன்னிச்சையாக இயங்கத்
தொடங்குகின்றனர்.
மும்பையில் தினசரி
நாளேடில் வெளியான ஒரு செய்தி - ஒரு மனைவி தனது கணவன் தான் சுடிதார் அணிவதை
அனுமதிக்காமல் சேலையை அணியச் சொன்னக் காரணத்தால் கணவனை எதிர்த்து விவாகரத்து
செய்ய கோர்டை அணுகியுள்ளார். இதுபோன்ற பல வழக்குகள் இன்று நகரங்களில் பரவலாக
தாக்கல் செய்யப்படுகின்றன.
இன்றைய சூழலில்
கணவன் மனைவியினரிடையே நிலவும் "ஈகோ" என்ற புற்றுநோயே குடும்பத்தில்
நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. விட்டுக்கொடுத்தல்
என்பது மனைவியிடமிருந்து மட்டும் எதிர்பார்ப்பதைத் தவிர்த்து குடும்பத்தில் அமைதி
நிலவ கணவனும் சிற்சில சமயங்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை
வளர்க்கவேண்டும்.
Super post...Very interesting to know about the 4 line poem by thiruvalluvar...Thanks for sharing...
ReplyDelete