வேடிக்கையான
விஷயம் என்னவென்றால் சிறுவயதில் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பேய் பற்றிய பயம்
கண்டிப்பாக இருந்திருக்கும். இதற்குக் காரணம் பேய் பற்றிய கதைகளை நாம் நம் குழந்தைப் பருவத்திலிருந்தே
கேட்டதுதான்.
முன்னொறு
நாளில் AXN சேனலில் பேய்களைப் பற்றிய நிகழ்ச்சியைப் பார்த்ததாக ஞாபகம், ஏதோ ஒரு அருங்காட்சியகத்தில் இரவு வேளையில் பேய்கள் உலாவுவதாகவும்
அவைகளின் உருவம் CCTV கேமிராக்களில் பதிந்துள்ளதாகவும் காட்டப்பட்டது.
ஐரோப்பாவில் ஒரு பெரிய நூலகத்தில் நடுஇரவில் பேய்களின்
நடமாட்டம் இருப்பதைக் கண்டதாகவும், நூல்கள் பரவலாகச் சிதறிக்கிடந்ததைப்
பற்றியும் ஒளிபரப்பினார்கள்.
இதைப் பற்றி
கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் உரையாடியது நினைவிலுள்ளது. குழந்தை பருவத்தில் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அம்மாக்கள் வெவ்வேறு
வேடிக்கை கதைகளைக் கூறி உணவு ஊட்டுவது இயல்பு. அப்போது 'நீ சாப்பிடலேனா பூச்சாண்டி வந்து உன்னத் தூக்கிட்டு போயிடும்' என்று கூறி மீதமுள்ள உணவை குழந்தைகளுக்கு ஊட்டுவது வழக்கம்.
அன்றிலிருந்தே
குழந்தைகளுக்கு பேய் பற்றிய பயம் தொத்திக்கொள்ளும். மேலும் இரவில் தூங்காமல் அடம்பிடிக்கும்
குழந்தைகளுக்கு இருட்டில் விழித்துக்கொண்டிருந்தால் பேய் பிடித்துக்கொள்ளும் என்று
சொல்லி அவர்களைத் தூங்க வைப்பார்கள். அதன்பின்
இருளைப் பார்க்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு அந்த ஞாபகம் தோன்றும்.
இரவில்
தூக்கம்வராத நேரங்களில் எங்கோ ஒரு மூலையிலிருந்து சத்தம் வருவது போலவும், ஜன்னலுக்கு வெளியே ஏதோ ஒரு கை அசைவது
போலவும் தோன்றும். இதற்காகவே கண்களை இறுக்க மூடி, தலையிலிருந்து கால் வரை நன்றாகப் போர்த்திப் படுத்துத் தூங்குவேன்.
'எங்க எழுந்தா பேய் பிடிச்சிட்டு போயிடும்னு நெனச்சு' அந்த பயத்திலேயே தூங்கிவிடுவேன்.
இரவில்
தூங்கும்போது தூரத்தில் வினோதமான சத்தம் கேட்பதுபோல தோன்றுவதும், ஒரு சில குழந்தைகள்
இவ்வகையான பயத்தின் காரணமாக தூக்கத்தில் உச்சா போவதும் கேள்விப்பட்டஒன்று.
என்
சிறுவயதில் பேய் பற்றி அறிய எனக்கு மிகுந்த ஆவல் இருந்தது. மாலை நேரத்தில் என் நண்பர்களுடன்
உரையாடும் போது ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தெரிந்த, அறிந்த,
பழக்கப்பட்ட கதைகளை மிகைப்படுத்திக்
கூறுவார்கள்.
சமீபத்தில்
தொலைக்காட்சியில் பார்த்த திகில் படத்திலிருந்து ஒருசில காட்சிகளை தங்களுக்குத்
தேவையான இடங்களில் நிரப்பி அக்கதைகள் உலவுவது இயல்பு. நானும் இதற்கு விதிவிலக்கல்ல. இதற்காக நாங்கள்அனைவரும் ஹவுசிங் யூனிட்டின் மொட்டை
மாடிக்குச் சென்று இரவு 7 அல்லது 8மணி
வரை விவாதிப்போம். விவாதம் முடிந்து கீழே செல்லும் போது
மனதிற்குள் நான் கடைசியாகச் செல்லக் கூடாது என்பதை எண்ணிக்கொண்டே இருப்போம்.
சில
நேரங்களில் நான் கடைசியாக வரும்போது பின்னால் திரும்பிப் பார்ப்பதற்கு தைரியம்
இல்லாமல் அவசர அவசரமாக
படிகளைத் தாவிச் செல்வது வழக்கம். இதற்குக்காரணம் Speed'ஆ போனா பேயால நம்மல பிடிக்க முடியாது என்பது தான்.
நண்பர்களில்
சிலர் வீட்டிற்கு அருகிலிருந்த சுடுகாட்டைப் பற்றி விவரிப்பார்கள். இரவு நேரங்களில்
அங்கிருந்த ஏதோ விசித்திரமான சப்தம் வருவதாகவும், பிணங்களை எரிக்கும்போது அவைகளின் கை கால்கள் எழத்துடிப்பதையும், அப்படிப்பட்ட நேரங்களில் அங்கு வேலை செய்பவர்கள்
அப்பிணங்களை பெரிய தடிமூலம் அடிப்பதாகக் கூறுவார்கள்.
எங்கள்
வீதியைப் போலவே ஊரெங்கும் இதுபோன்ற பேய்க்கதைகள் நிறைந்துள்ளன. எனது சிறுவயதில் மாமாவுடன் செகண்ட் ஸோ "Evil Dead" படம் பார்த்துவிட்டு யமஹாவில் வரும்போது, எங்களுக்குப்
பின் யாரோ ஓடிவருவதைப்போலவும், திரும்பிப் பார்த்தால்
அவைகளிடம் நான் அகப்பட்டுக் கொள்வேன் என்றபயத்தில் கண்களை இறுக்க மூடிக்கொண்டு
வீடு வந்து சேருவேன். இதுவரை மாமாவிடம் அதைப் பற்றி
கூறியதில்லை.
இரவு
நேரங்களில் அம்மா தொலைவிலுள்ள கடைக்குப் போகச் சொல்லும்போது அதனை கண்டிப்பாக மறுக்கும்
நான், அந்த சுடுகாட்டைத் தாண்டி
போகணும் பயமாயிருக்குன்னு சொன்னா எங்க சிரிப்பாங்களோனு
நினைச்சு, "ஆம்பிளபையன்னா, தைரியமா
இருக்கணும் இப்படி பேய்க்கெல்லாம் பயப்படக் கூடாது" என்று
எனக்குள் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி பக்கத்து வீட்டு நண்பனை துணைக்கு
அழைத்துச் செல்வேன்.
அத்தகைய நேரங்களில்
நண்பனிடமிருந்து வரும் முதல் கேள்வி "டேய் உனக்கு பயமா
இருக்குன்னுதானே என்னை துணைக்குக் கூப்பிடற" என்பான்.
நானும் பதிலுக்கு "அப்டிலாம் ஒண்ணுமில்ல
தனியா போனா போர் அடிக்கும் அதான் உன்ன கூப்பிட்டேன்,
உனக்கு பயமா இருந்தா நீ வீட்டுக்குப் போ" என்று உள்ளுக்குள் பயமிருந்தாலும் வெளியில பொய்
சொல்லுவது வழக்கமான ஒன்று. அப்பொழுதுதான் நாளைக்கு
நண்பர்களுக்கு மத்தியில் இதபத்தி பேசும்போது 'அருணுக்கு
ரொம்ப தைரியம்னு' நாலுபேர்கிட்ட
சொல்லுவான்னு ஒரு அல்ப ஆசைதான்.
பேயெல்லாம்
இரவு நேரங்களில் மட்டுமே உலாவுவதாகவும், பாழடைந்த கிணறு, ஆள்நடமாட்டமில்லாத பகுதிகள், ஊருக்கு
வெளியே ஏதோ ஒரு பகுதியில் குடியிருப்பதாக சொல்லக்
கேள்விப்பட்டிருக்கேன். இதில் ஆச்சர்யமான விஷயம்
என்னவென்றால் பேய்களில் ஆண் பேய் பற்றி ஒரு கதையைக் கூட கேள்விப்பட்டதில்லை,
எல்லாமே பெண் பேய்கள் தான்.
தற்கொலை
செய்து கொண்டபெண்கள், ரயிலில் அல்லது பேருந்தில் அடிபட்ட மனிதர்களின்
ஆன்மா பேயாகத் தொடரும் என்று நண்பன் கூறுவான். சினிமாவில்
காண்பிப்பதைப் போல பேய்களுக்கென்று ஒரு தனி வெள்ளை நிற புடவையும்,
பிசாசுகள் மனித ரத்தம்குடிப்பதாகவும்,
விடிந்த பின் அவைகள் மறைந்து போவதும் இன்றும் சிறுவர்களிடம் பரவலாக
நம்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில்
பாட்டி வீட்டிலிருந்து கிளம்பும்போது அன்று சமைக்கப்பட்ட சிக்கன், மீன், மட்டன்
போன்றவற்றை பாட்டி எங்கள் வீட்டிற்கு கொடுத்தனுப்புவது வழக்கம். அத்தகைய நேரங்களில் நான் தனியே செல்லவேண்டியதால், கூடையில்
"வேப்பிலையும், ஏதோவொரு இரும்பும்"
வைத்து அனுப்புவது அன்றைய நாட்களின் வழக்கம். ஒருசில
நாட்களில் மிகுதியான பயத்தின் காரணமாக காய்ச்சல் வருவதும், அதற்காகவே
அம்மா தூங்கும்போது நெற்றியில் திருநீரிட்டு, கொஞ்சம்
தண்ணீர் குடிக்கச் சொல்வதும் இன்றும் நினைவிலுள்ளது.
இதனாலேயே
தூக்கத்தில் தாகம் எடுத்தாலும் இருட்டில் தனியே சமையலறைக்குச் செல்ல பயந்து, அம்மாவை
எழுப்புவது வழக்கம். ஒருசில நாட்களில்
பயத்தின்காரணமாக அப்படியே தூங்கி விடுவேன். என்றாவது ஒரு நாள் இரவில் தனியே செல்ல சந்தர்ப்பம்
கிடைக்கும்போது யாரோ நம்மை அழைப்பது போலவும், திரும்பித்திரும்பி
பார்த்துக் கொண்டே செல்வேன்.
சில
நேரங்களில் இருட்டில் திரும்பிப் பார்க்க தைரியம் இல்லாமல் ஒரே ஓட்டமாக வீடு வரை
ஓடிவருவேன். வீட்டிற்குள் நுழையும்போது
நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு, தலைமுடியை
சரிசெய்து, இயல்பாக இருப்பது போல் உள்நுழைவேன்.
இதனாலேயே ஆள் நடமாட்டமில்லாத இடங்களுக்குப் போவதை தவிர்ப்பேன். எங்கு சென்றாலும் யாராவது பக்கத்தில் செல்லும்போது "நல்ல வேள தனியா போகல,
இவரு கூடவே போயிடலாம்" என்று மனதிற்குள்
எண்ணுவது வழக்கம். சிறுவயதில் யாராவது 'பேய் இருக்கறத நம்பறீங்களா'
என்று வினவும்போது 'இல்லை' என்று
கூறினாலும் மனதிற்குள் ஒருவித பயமிருந்தது உண்மையே.
சிறு வயதில் பேயை நினைத்து ரொம்ப பயபட்டிருக்கீங்க ... இது ஒரு மனநோய் இதைத்தான் ஆங்கிலத்தில் ''பேயேபோவியா'' என்று அழைகின்றனர். கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்
ReplyDeleteசிறுவயது அனுபவங்களை எண்ணிப் பார்க்கும்போது நகைச்சுவையாக உள்ளது. தங்களது வலைப்பூவை வருகை செய்து பின்னூட்டத்தை அங்கு பதிவு செய்கிறேன்.
Delete