2011ஆம் ஆண்டின் 10 உறுதிமொழிகள்

புத்தாண்டு நெருங்குகிறது, வழக்கம்போல் இப்புத்தாண்டின் பத்து உறுதிமொழிகளை முன்வைக்கிறேன். இந்த வருடமாவது முடிந்த வரையில் இவையனைத்தையும் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

கோபத்தைக் குறை:

எனது பார்வையில் மனித உணர்ச்சிகளில் மிகவும் இயல்பானது `கோபம்`. பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தொடக்கமாக‌ இருப்பது கோபம். ஒவ்வொராண்டும் என் முதல் உறுதிமொழியாக இருப்பது - கோபத்தைக் குறைத்தல். ஆனால் ஒவ்வொரு முறையும் அதன் வெளிப்பாடு வெங்காய விலையைப் போல் என்னுள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. என்னுள்தான் எத்தனை வகையான கோபங்கள் வீண்கோபம், விளையாட்டுக்கோபம், தனிமைக்கோபம், தவறான கோபம், நியாயமான கோபம். இவற்றின் வண்ணங்கள் பலவென்றாலும் முடிவில் துன்பம் என்ற வாசனையே வீசுகிறது. இம்முறை இயன்றளவில் என் கோபத்தைக் குறைத்துக்கொள்வேன்.

குறைகூறல்/மனம் விட்டு பேசு:

எனது பிரச்சனைகளுக்கு 2வது காரணமாக இருப்பது குறை கூறல். இது இயலாமையின் இன்னொரு முக்கிய வெளிப்பாடு. முதலில் நேரத்தைக் குறை கூறினேன், பிறகு மனிதர்களை குறை கூறினேன். இன்றும் நிறுத்தவில்லை என் புலம்பல்களை, தனிமையில் யோசித்துப்பார்த்தேன் ‍குறைகூறலை விடு இல்லையேல் குறைவாகப் போவேன் என்பது தெளிவானது. இம்முறை இக்கொடிய பேயை விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளேன்.

உறவினர்கள்/நண்பர்களுடன் (அதிக) நேரம் செலவிடு:

வருடத்தில் ஒரு/இருமுறையோ வீட்டிற்கு செல்வதே கடினமாக உள்ளது. அப்படியே சென்றாலும் குறைவான நேரமே செலவிட முடிகிறது. பள்ளி/கல்லூரி நண்பர்களின் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. அவர்களின் பெயர்களோ நினைவில் இல்லை. இழப்பு எனத் தெரிந்தும் இழ‌க்கத் தொடங்கினேன். இழக்க மனமில்லை, ஆகவே எனது நட்பின் முகவரி மறையும் முன், முடிந்தவரையில் தொலைபேசியிலாவது அவர்களுடனான தொடர்பை இணைப்பேன்.

உடற்பயிற்சி/யோகா தொடங்கு:

இதுவும் என்னுடைய ஒவ்வொரு வருட‌ உறுதிமொழிகளில் ஒன்றாக இருக்கும். மனச்சோர்வுக்கு முதற்காரணம் உடற்சோர்வு. ஷாப்பிங் செய்கையில் கட்டான உடலை பார்க்கும்போது பொறாமையே மிஞ்சுகிறது. முதுமையில் முடங்குவேனென்பது முன்னமே தெரிகிறது. சோம்பேறிதனமே தடைக்கல்லாக உள்ளது, இனியும் தூங்க முடியாது. விழித்தெழுந்து விடுதலை பெற வேண்டும் இந்த சோம்பேறி பேயிடமிருந்து. 

பிறருக்கு உதவு:

இதுவொன்றையே இன்னமும் உறுதியாக செய்கிறேன். வாழ்நாள் முழுவதும் உறுதியாகச் செய்வேன்.

புத்தக வாசிப்பை தொடரு:

அப்பா கற்றுக்கொடுத்த அருமையான பழக்கம். விடுமுறையிலும் விழாக்களிலும் வாசிப்பை நிறுத்தினேன், தொல்லைதரும் தொலைக்காட்சியை சரணடைந்தேன். சற்றே தூர நின்று யோசித்தால் சோர்வடையும் போதெல்லாம் புத்தகமே துணையாக நின்றதை உணர்ந்தேன். மீண்டும் பொன்னியின் செல்வனை வாசிக்க வேண்டும், தமிழ் நூல்களை சுவாசிக்க வேண்டுமென தோன்றுகிறது. இன்றே புதுப்பிக்கிறேன் என் புத்தகப்பயணத்தை !

தவறை ஒப்புக்கொள்:

குறைகூறல்தான் எவ்வளவு எளிது, குறைகளை ஒப்புக்கொள்வதே கடினம். இவ்வளவு நடந்தும் இன்னும் தெளியவில்லை, தெரிந்தும் ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. சோக மூட்டங்கள் சூழூகையில் தெளிவு பிறக்கிறது. இனியாவது தவறை ஒப்புக்கொள் - இல்லையேல் உன் மனக்காட்டில் இன்பம் என்ற மழை பொய்த்து, வறண்ட வானிலையே தொடரும். ஒப்புக்கொள்ளத் துணிந்தேன்.

பணியில் மேம்பட:

செய்வதை திருந்தச்செய், ஏனோதானோ என்ற மனப்போக்கை கைவிடு. மனம் சொல்வதைக் கேள். கிடைத்த வேலையை சிறப்புடன் செய். பிடிக்காத வேலையை அப்படியே நிறுத்து. 'பிறப்பில் ஏழையாகப் பிறப்பது தவறாகாது, இறப்பில் ஏழையாக இறப்பதே தவறு'. 

இந்த இணையதள பயணம் தொடர:

புதிதாக முளைத்த இந்த இணையதள பயணத்தை இனிதே தொடரு, கைவிடாதே! பகிர்தலின் பலனைச் சுவை. கற்றது கையளவு கல்லாதது உலகளவு. கருத்தை தெறிவி, கற்றதைச் சொல், விமர்சனங்களை ஏற்றுக்கொள்.

புதிய இடத்தை வாசனை செய்:

சாலையின் வாகனப்புகை, நெரிசலில் வியர்வை, கனரக வாகனங்களின் இரைச்சல் - மாற்ற‌முடியாத இந்த‌ நிலையை நொந்து பலனில்லை. தொடரும் துன்பங்களை சற்றே தூர நிறுத்தி, தொலைவான தூரப் பயணத்தை தொடங்கு.

இந்தப் புத்தாண்டில் ‌இனிதே ஒருமுறை பிறந்தெழு!!!  

2 comments:

  1. 'பிறப்பில் ஏழையாகப் பிறப்பது தவறாகாது, இறப்பில் ஏழையாக இறப்பதே தவறு'. - ஒருவார்த்தை சொன்னாலும் அத திருவார்தையா சொல்லிபுட்ட தல... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete
    Replies
    1. @ சிவா, பின்னூட்டத்திற்கு நன்றி!

      Delete