படித்ததில் பிடித்தது - 2

பாரதியார் பாடல்கள் - 2

    த‌மிழ்நாடு

செந்த‌மிழ் நாடெனும் போதினிலே - ‍இன்ப‌த்
தேன் வ‌ந்து பாயுது காதினிலே - எங்க‌ள்
த‌ந்தைய‌ர் நாடென்ற‌ பேச்சினிலே - ஒரு
ச‌க்தி பிற‌க்குது மூச்சினிலே (செந்த‌மிழ்)

வேத‌ம் நிறைந்த த‌மிழ்நாடு - உய‌ர்
வீர‌ம் செறிந்த‌ த‌மிழ்நாடு - ந‌ல்ல‌
காத‌ல் புரியும் அர‌ம்பைய‌ர் போல் - இள‌ங்
க‌ன்னிய‌ர் சூழ்ந்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - த‌மிழ்
க‌ண்ட‌தோர் வையை பொருனை நதி -  என‌
மேவிய‌ யாறு ப‌ல‌வோடத் -  திரு
மேனி செழித்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

முத்த‌மிழ் மாமுனி நீள்வ‌ரையே - நின்று
மொய்ம்புற‌க் காக்குந் த‌மிழ்நாடு - செல்வ‌ம்
எத்த‌னையுண்டு புவிமீதே - அவை
யாவும் ப‌டைத்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

நீல‌த் திரைக்க‌ட‌ லோர‌த்திலே - நின்று
நித்தம் த‌வ‌ஞ்செய் கும‌ரிஎல்லை - வ‌ட‌
மால‌வ‌ன் குன்ற‌ இவ‌ற்றிடையே - புக‌ழ்
ம‌ண்டிக் கிட‌க்குந் த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

க‌ல்வி சிற‌ந்த‌ த‌மிழ்நாடு - புக‌ழ்க்
க‌ம்ப‌ன் பிற‌ந்த‌ த‌மிழ்நாடு - ந‌ல்ல‌
ப‌ல்வித‌னமாயின‌ சாத்திர‌த்தின் - ம‌ண‌ம்
பாரெங்கும் வீசுந் த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

வ‌ள்ளுவ‌ன் த‌ன்னை உல‌கினுக்கே - த‌ந்து
வான்புக‌ழ் கொண்ட‌ த‌மிழ்நாடு -  நெஞ்சை
அள்ளும் சில‌ப்ப‌தி கார‌மென்றோர் - ம‌ணி
யாரம் ப‌டைத்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

சிங்க‌ள‌ம் புட்ப‌க‌ம் சாவ‌க‌ - மாதிய‌
தீவு ப‌ல‌வினுஞ் சென்றேறி - அங்கு
த‌ங்க‌ள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் க‌ண்ட‌வ‌ர் தாய்நாடு (செந்த‌மிழ்)

விண்ணை யிடிக்கும் த‌லையிம‌ய‌ம் - எனும்
வெற்பை ய‌டிக்கும் திற‌னுடையார் - ச‌ம‌ர்
ப‌ண்ணிக் க‌லிங்க‌த் திருள்கெடுத்தார் - த‌மிழ்ப்
பார்த்திவ‌ர் நின்ற‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

சீன‌ மிசிர‌ம் ய‌வ‌ன‌ர‌க‌ம் - இன்னும்
தேச‌ம் ப‌ல‌வும் புக‌ழ்வீசிக் - க‌லை
ஞான‌ம் ப‌டைத் தொழில் வாணிப‌மும் - மிக‌
ந‌ன்று வ‌ள‌ர்த்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

2 comments:

  1. க‌ல்வி சிற‌ந்த‌ த‌மிழ்நாடு - புக‌ழ்க்
    பாரதி பிற‌ந்த‌ த‌மிழ்நாடு ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள்...

      Delete