தொற்று

முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. 

‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்!

இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவும் எண்ணவில்லை.  ஒருவேளை இதுதான் பிறவிப் பயன் என்பதா!


வாலிபத்தின் காரணமாக விளைந்த சிந்தனை தடுமாற்றத்தின் வினைதான் இத்தொற்று. இருவருக்கும் இடையேயிருந்த இறுக்கத்தின் காரணமாக மனதில் மறைந்திருந்த இச்சை இரகசியமாய் எட்டிப் பார்த்தது, தொடக்கத்தில் இருந்த தயக்கம் சட்டென்று விலக, வேட்கையும் விரகமும் ஒருசேர இணைந்து என்னை முன்னிருத்திச் சென்றது. தேகச் சூட்டில் எனை மறந்து இன்பத்தில் இலயித்திருந்தது நினைவில் உள்ளது.

இதைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மனைவியிடம் சொல்லியிருக்கலாம், என்னுடைய தவறினால் அவளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது வேதனையாக உள்ளது. மனதிற்குப் பிடித்தவர்களிடமிருந்து விலகிச் செல்வதை வலியின் உச்சமாக எண்ணுகிறேன். அம்மாவும் அப்பாவும் இதை எப்படித் தாங்கிக் கொள்வார்கள், நாளை இச்சமூகம் அவர்களை எப்படி நடத்தும்! நான் இழைத்த தவறுக்கு காலமெல்லாம் அவர்களும் தண்டனை அனுபவிப்பதை நினைத்தால் என் மீதான வெறுப்பு அதிகரிக்கிறது.

நடந்து முடிந்ததை இன்றெண்ணிப் பார்ப்பதில் எவ்வித பயனுமில்லை. தீவினையின் முடிவில் நன்மை விளைவதில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். விலகிச் செல்ல துணிந்த பின் திரும்பத் திரும்ப எண்ணுவதில் பலனில்லை. என்னுள்ளிருக்கும் இந்தக் குற்றவுணர்வு என்னுள்ளே மடிந்து அழியட்டும் !!




(வழக்கம் போல கற்பனை கலந்து எழுதியது. தகாத செயலின் காரணமாக வாலிபன் ஒருவனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதும், அதனால் விளையும் குற்ற உணர்ச்சியில் அவன் மடிந்து போவதாகக் கூறியுள்ளேன். அத்தகைய ஒருவனின் மனநிலை எப்படி இருக்குமென்பதை வேறொரு கோணத்தில் படைத்துள்ளேன்).

இதுவும் கடந்து செல்லும்


ஆம், நாம் பேசுவதை நிறுத்தி இன்றுடன் மூன்று நாட்களாகிறது. மனதிலிருப்பதை உன்னிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், ஆனால் அதை எப்படிச் சொல்வது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. நீ அன்று அப்படிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை, அதனால் உண்டான ஏமாற்றத்தை விட வலியே அதிகம். 

அன்று நடந்தது உனக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதை உணரமுடிகிறது. கடந்து சென்ற இந்த நாட்களில் ஓரிரண்டு வருடங்கள் உருண்டோடிச் சென்றதாக உணர்கிறேன். எனது பலவீனத்தைத் தெரிந்திருந்தும் அதை நீ சொல்லியது மன்னிக்க முடியாததாகத் தோன்றுகிறது. இதை கடந்து செல்ல நினைக்கும் போதெல்லாம் பலவீனத்தை உணர்கிறேன். தவறான ஒன்று சரியாக வாய்ப்பேயில்லை என்பது மட்டும் உறுதியாகத் தோன்றுகிறது. 

உன்னுள் எழுந்த பாதிப்பை என்னால் முற்றிலும் உணர முடியவில்லை, உன்னை புரிந்துகொள்ள முற்படும் போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அது தொடர்வது வருத்தமாக உள்ளது. ஆனால் என்னைப் பற்றி நீ நிச்சயம் புரிந்து வைத்திருப்பாய் என்று எண்ணியிருந்தேன். உனது மௌனத்தைப் பழக்கப்படாத எனக்கு, நெருப்பில் நிற்பது போல் தோன்றுகிறது. என்னுள் எழும் இதுபோன்ற தருக்கங்கள் உன்னுள்ளும் நிகழ்ந்திருக்குமா ?

ஒருசில நேரங்களில் நம்முள் உருவாகும் கோபமே முடிவை நிர்ணயிக்கிறதுபின்னர் அந்த முடிவை நியாயப்படுத்த முயலும் போதெல்லாம் மனதில் பிடிவாதம் குடிகொள்கிறது. இறுதியில் இதுபோன்ற அவரச முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம்.

இதுவும் கடந்து செல்லும், காலம் தான் இதற்கான ஒரே மருந்து !




அப்துல் கலாமும் இன்றைய (தமிழ்) இளைஞர்களும் !


ஜுலை 27, இன்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’. இந்த மண்ணில் பிறந்த அனைவரும் மகான் ஆவது கிடையாது, தகுதியுடைய ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பேறு கிட்டுகிறது. அவர்களிலும் ஒரு சிலரை மட்டுமே இவ்வையகம் நினைவில் வைத்துப் போற்றிக் கொண்டாடுகிறது.

‘கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.’ இன்றைய இளைஞர்களை இவரை விட அதிகமாக நம்பியவர்கள் கிடையாது. இளைஞர் சக்தியின் மூலம் இந்தியா வல்லரசாக முடியும் என்பதை கனவாகக் கொண்டிருந்தார். ஆனால் நம் இளைஞர்களின் செயல்களை அவர் இன்று கண்டிருந்தால் நிச்சயம் வேதனையடைந்திருப்பார். சினிமா நடிகர், நடிகைகளை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களுக்காக தங்களது வாழ்நாளின் நிமிடங்களைச் செலவழிப்பது வெட்கப்பட வேண்டியவொன்று. 



சென்னையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த பேருந்து நாள் கொண்டாட்டமும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையில் நடந்த அரிவாள் சண்டையும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள.

இதுபோன்ற இளைஞர்களுக்கு மத்தியில், ஒரு சிலர் கலாம் அய்யாவை முன்மாதிரியாகக் கொண்டு தம்மால் இயன்ற நற்செயல்களை ஆரவாரமில்லால் சாதித்து வருகின்றனர் . உதாரணத்திற்கு சென்னையைச் சேர்ந்த கலை அரசன் என்ற ஆட்டோ ஓட்டுனர், கலாமின் நினைவு நாளான இன்று பொதுமக்களுக்கு இலவச சேவையை வழங்கி வருகிறார். இதுபோன்ற இளைஞர்களின் செயல்கள் நிச்சயம் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.

இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை நிறுத்தி, வாழ்க்கையை மேம்படுத்த உதவும் கனவுகளைக் கண்டு, அக்கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபவது மட்டுமே அவரை நாம் பின்பற்றுவதற்குச் சான்றாகும்.



 
APJ – WE MISS YOU SIR !

படம்: கூகிள்