தொற்று

முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. 

‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்!

இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவும் எண்ணவில்லை.  ஒருவேளை இதுதான் பிறவிப் பயன் என்பதா!


வாலிபத்தின் காரணமாக விளைந்த சிந்தனை தடுமாற்றத்தின் வினைதான் இத்தொற்று. இருவருக்கும் இடையேயிருந்த இறுக்கத்தின் காரணமாக மனதில் மறைந்திருந்த இச்சை இரகசியமாய் எட்டிப் பார்த்தது, தொடக்கத்தில் இருந்த தயக்கம் சட்டென்று விலக, வேட்கையும் விரகமும் ஒருசேர இணைந்து என்னை முன்னிருத்திச் சென்றது. தேகச் சூட்டில் எனை மறந்து இன்பத்தில் இலயித்திருந்தது நினைவில் உள்ளது.

இதைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மனைவியிடம் சொல்லியிருக்கலாம், என்னுடைய தவறினால் அவளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது வேதனையாக உள்ளது. மனதிற்குப் பிடித்தவர்களிடமிருந்து விலகிச் செல்வதை வலியின் உச்சமாக எண்ணுகிறேன். அம்மாவும் அப்பாவும் இதை எப்படித் தாங்கிக் கொள்வார்கள், நாளை இச்சமூகம் அவர்களை எப்படி நடத்தும்! நான் இழைத்த தவறுக்கு காலமெல்லாம் அவர்களும் தண்டனை அனுபவிப்பதை நினைத்தால் என் மீதான வெறுப்பு அதிகரிக்கிறது.

நடந்து முடிந்ததை இன்றெண்ணிப் பார்ப்பதில் எவ்வித பயனுமில்லை. தீவினையின் முடிவில் நன்மை விளைவதில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். விலகிச் செல்ல துணிந்த பின் திரும்பத் திரும்ப எண்ணுவதில் பலனில்லை. என்னுள்ளிருக்கும் இந்தக் குற்றவுணர்வு என்னுள்ளே மடிந்து அழியட்டும் !!




(வழக்கம் போல கற்பனை கலந்து எழுதியது. தகாத செயலின் காரணமாக வாலிபன் ஒருவனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதும், அதனால் விளையும் குற்ற உணர்ச்சியில் அவன் மடிந்து போவதாகக் கூறியுள்ளேன். அத்தகைய ஒருவனின் மனநிலை எப்படி இருக்குமென்பதை வேறொரு கோணத்தில் படைத்துள்ளேன்).

8 comments:

  1. படித்தேன் இதற்கு கருத்துரை சொல்ல அறியேன் ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வழக்கம் போல கற்பனையை கலந்து எழுதினேன்.
      தகாத செயலின் காரணமாக வாலிபன் ஒருவனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதும், அதனால் விளையும் குற்ற உணர்ச்சியில் அவன் மடிந்து போவதாகக் கூறியுள்ளேன்.

      Delete
  2. தேகச் சூட்டில் எனை மறைந்து இன்பத்தில்
    நல்ல தமிழ்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !

      Delete
  3. இதுவும் கடந்து போகும்...

    ReplyDelete
    Replies
    1. தவறுதலாக புரிந்துள்ளீர்கள், இது வெறும் கற்பனையே...
      வருகைக்கு மிக்க நன்றி !

      Delete