அப்பா எப்ப வீட்டுக்கு வருவாரு !

 
"அம்மா இந்த சன்டே நம்ம MGM போலாம், நானும் ரொம்ப நாளா கேட்கிறேன் நீங்க என்னை கூட்டிட்டு போக மாட்டீறிங்க". ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிதின் வீட்டிலே இதே சத்தம்தான்

நிதின் - இப்ப அவனுக்கு 7 வயசு, செய்ன்ட் ஜோசப் ஸ்கூல்ல செகண்ட் ஸ்டேன்டட் படிக்கிறான். வீட்டில மட்டுமில்ல ஸ்கூல்லியும் அவன் சுட்டி தான். நல்லா படிப்பான், அதனாலேயே என்னவோ ஸ்கூல் பஸ் டிரைவர்ல இருந்து பக்கத்து கமலா  ஆன்டி வரைக்கும் நிதினை எல்லாருக்கும் பிடிக்கும்.

கௌரி - நிதினோட அம்மா, சொந்த ஊர் சென்னை ஆனா பிறந்தது படிச்சதெல்லாம் பெங்களூர். MCA முடிச்சிட்டு அவங்க அப்பா பிஸினஸ் பார்த்திட்டு இருந்தாங்க. சரவணன் கௌரி மேரேஜ் முடிஞ்சு இப்ப சென்னைல செட்டிலான வழக்கமான சாப்ட்வேர் பேமிலி. சரவணனுக்கு வயசு 38, கார், அடையார்ல மெயின் ஏரியாவுல வீடு, வீட்டில வேலைக்கு ஆளூ என எல்லாமே இருந்துச்சு. மாசத்தில 10 நாளைக்குமேல  ஃபாரின்லதான் வேலை. சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டதால பணம் மேல அவனுக்கு ஒரு ஈர்ப்பு, நிறைய சம்பாதிக்கணும், பையனுக்கு நிறையா சேர்த்து வைக்கணும்ங்கறது தான் ஒரே லட்சியமா இருந்தது.

நிதின் வீட்டில எப்பவுமே ஃபாரின் சாக்லேட் நிறைஞ்சு இருக்கும் ஆனா எல்லாரும் சேர்ந்து ஒன்னா சாப்பிடதான் டைம் இருக்காது. ஒவ்வொரு வருஷமும் ஆபிஸ்ல பெஸ்ட் பெர்ஃபார்மர் அவார்டு  சரவணனுக்குத்தான். வேலைல எந்த மிஸ்டேக்கும் இருக்காது, அதனாலேயே அவனுக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைச்சுது. இதுவரைக்கும் 2 பாஸ்போட் முடிச்சு 3வது பாஸ்போட்டும் கிடைச்சாச்சு. தொடர்ச்சியா வெளியூர் போறது, கண்ட நேரத்தில சாப்பிட்டுவது, ஆபிஸ் டென்ஷ்ன் என எல்லாம் ஒண்ணா சேர்ந்து  சரவணனுக்கு ஹெல்த் ப்ராப்ளம் வரத்தொடங்கியது.   போன மாச டாக்டர் செக்கப்ல தான் தனக்கு BP, Sugar இருக்குன்னு தெ ரிங்சுது, இத  எப்படி கௌரிக்கு சொல்றதுன்னு மறைச்சிட்டான். சீக்கிரமா டையர்டாகிறது, ஃப்ரி டைம்ல வீட்டில தூங்கறதுக்குத் தான் அவனுக்கு டைம் இருந்துச்சு.

இன்னியோட 4 நாள் ஆச்சு சரவணன் US போய், அடிக்கடி இப்படி வெளிநாடு போவது கௌரிக்கும் அறவே பிடிக்கல, எவ்வளவோ தடவை சொல்லிப்பார்த்தாச்சு ஆனா சரவணன் கேட்கிறதா இல்ல. இதனாலேயே அவங்களுக்குள்ள பிரச்சனை வரும், ஒவ்வொரு தடவையும் சரவணன் ஊர்ல இருந்து வரும்போது ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு வந்து சமாதானம் பண்ணி சமாளிச்சிடுவான். ஆனா இது ரொம்ப நாளைக்கு நிலைக்காதுங்கிறது ரெண்டு பேருக்கும் தெரியும்

சரவணன் நிதின் ஸ்கூல் பஃர்ஸ்ட் டேக்கு வந்ததோட சரி, மீதி எல்லாமே கௌரிதான். இந்த தடவைகூட ப்ரோக்ரஸ் கார்ட் வாங்க கௌரி தனியா தான் போனா, டெர்ம் புக்ஸ் வாங்கறது என எல்லா வேலையும் அவ தனியாவே செஞ்சா. போன தீபாவளிக்குக்கூட சரவணன் வேலை விஷயமா வெளியூர்ல இருந்ததால அவ தனியா தான் அவங்க அம்மா வீட்டுக்குப் போனா. எங்கயாவது கல்யாணம், சொந்தக்காரங்க வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குப் போனாலும் எல்லாரும் சரவணன் வரலயா, தனியா தான் வந்தியா  என கேட்கும்போதெல்லாம் இனி இந்தமாதிரி ஃபங்ஷ்ன்க்கு வரக்கூடாதுனு அவளுக்குத் தோன்றியது.

பக்கத்து வீட்டு விக்னேஷ் வீட்டில இதுக்கு அப்படியே ஆப்போசிட். விக்னேழஷ் அப்பா மேக்சிமம் லீவுநாள்ல வீட்டிலதான் இருப்பாரு. சன்டே அவங்க குடும்பமா போறதுதான் வேலை, லாங் லீவ் வந்தா கோவைல இருக்கற அவுங்க பாட்டி வீட்டுக்கு போயிருவாங்க. போன வாரம் விக்னேஷ் வீட்ல ECR ரோட்ல இருக்கிற 'தக்ஸின்சித்ரா' போயிருந்தாங்க. இதைக்கேட்டதலிருந்து நிதின் அவங்க அம்மாகிட்ட ஒரே பிடிவாதம், ரெண்டு அடி வச்சதுக்கு அப்புறம்தான் அவன் அமைதியானான்.

அடுத்த நாள் காலைல வேலைக்காரி வந்து காலிங்பெல் அடிச்சதுக்கு அப்புறம் தான் கௌரி எழுந்தா. வழக்கம்போல இந்த ஞாயிற்றுக்கிழமையும் அவுங்க வீட்டில கார்ன்ஃப்லக்ஸ் தான்,  ரொம்ப நேரமா எழுப்பியும் நிதின் பெட்லிருந்து எந்திரிக்கல. பக்கதுல போய் தொட்டுப்பார்த்தா உடம்பெல்லாம் சூட, காய்ச்சல் இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. உடனே கௌரி பக்கத்துல இருக்கிற கிளினிக்கு போன் பண்ணி அப்பாயின்மென்ட் வாங்கினா - ஆனா அதுவும் இவினிங்க்குத் தான் கிடைச்சுது. calpol கொடுத்தும் காய்ச்சல் கம்மியாகல, என்ன‌ செய்றதுன்னு தெரியாம ரொம்ப கவலையா இருந்தா. இது நெறைய தடவ தனியா இருந்து சமாளிச்சாலும், இந்த முறை ஏதோ கஷ்டமா இருந்தது - அம்மாவ ஒரு வாரத்துக்கு வரச்சொல்லலாமான்னு நெனச்சா ஆனாலும் கூப்பிடல. ஈவினிங் டாக்டர்கிட்ட போய்ட்டு வந்ததபிறகு தான் காய்ச்சல் கொறஞ்சது. இதையெல்லாம் கமலாகிட்ட சொல்லி அழுவா, இப்படியே ஒவ்வொரு நாளும் ஓடிட்டு இருந்தது.

நிதின் ஸ்கூல் கல்சரல் ஃப்ரோக்ராம்க்கு பக்கத்து வீட்டு விக்னேஷ் ஃபேமிலியோட சேர்ந்து போனா. பேன்ஸி டிரெஸ் காம்படிஷன்ல நிதின் பர்ஸ்ட் ஃப்ரைஸ் வாங்கியது சந்தோஷமா இருந்தாலும், மனசில ஏதோ ஒரு வலி இருந்தது. நிதின நெனச்சு ரொம்ப கஷ்டமா இருந்தது. இந்த தடவை என்ன பிரச்சன வந்தாலும் பரவாயில்ல சரவணன்கிட்ட சொல்லி இந்த வேலை வேண்டாம் வேறு ஏதாவது கம்பெனில சேர்ந்து குடும்பத்தோட இருந்தா போதும்.

சரவணனுக்கும் நிதின், கௌரி மேல ரொம்ப பிரியம், ஏதோ அவனுக்கு டைம் இல்லாததால தான் அவங்கள நல்ல கவனிச்சுக்க முடியல. டைம் கிடைக்கும் போதெல்லாம் அவங்க இரண்டு பேர நினைச்சிட்டு இருப்பான். இரண்டு வருஷத்துக்கு முன்னாடியெல்லாம், ஆபீஸிலிருந்து நேரத்திலயே வந்த பிறகு நிதின பக்கத்துல பார்க் போய் ஃபுட்பால், கிரிக்கெட்னு ஏதாவது விளையாட்டிட்டு விளையாடிட்டு இருப்பான். ஈவினிங் காய்கறி வாங்கறது, கோவிலுக்கு கௌரிய கூட்டிட்டு போறதுனு எல்லா வீட்டு வேலையையும் செய்வான். லீவு நாள்ல ஃபுல் டைம் நிதின் பார்த்துக்கறது சரவணன் தான். கௌரி எதுக்காவது பையன அடிச்சாலும், திட்டினாலும் அவனுக்கு தாங்காது. இதுவே கொஞ்சம் கொஞ்சமா குறையத் தொடங்கி, இப்போ ஏதோ ரோபட் போல அவன் வாழ்க்கை நகரத் தொடங்கியது.
திங்கட்கிழமை ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்த நிதினுக்கு கௌரி சாதம் ஊட்டிவிட்டாள்.

"அம்மா அப்பா எப்ப வருவாரு, நேத்து நைட்டும் நான் அவர பாக்கல".

"இல்ல செல்லம், அப்பா நாளைக்குத் தான் ஊர்லிருந்து வர்றாரு. நான் உனக்கு அப்பாகிட்ட PS3 வாங்கிட்டு வரச்சொல்லிருக்கேன். இந்த வாரம் நாம எல்லாரும் தஞ்சாவூர்ல இருக்கிற தாத்தா வீட்டுக்கு போறோம்".

"போ மா, நீ இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் சொல்லிட்டு இருக்க, ஆனா அப்பா வந்தாருனா எல்லாமே சேஞ்ச் ஆயிரும். பக்கத்து வீட்டு விக்னேஷ் சொல்றான், அவங்க அப்பா வாராவாரம் எங்காவது அவன வெளியில கூட்டிட்டு போறாராம். நம்ம அப்பா ஏன் என்னை கூட்டிட்டு போறதில்ல. முன்னெல்லாம் என் கூட சேர்ந்து Tom & Jerry பார்ப்பாரு இப்ப எதுவுமே செய்யறது இல்ல. போ மா எனக்கு இந்த அப்பாவ பிடிக்கல, அவர அந்த ஊர்லயே இருக்க சொல்லு" என்று சொன்னான்.

இதைக் கேட்ட கௌரிக்கு கண்களில் நீர் திரண்டது. நிதினுக்கு என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.  அவங்க அப்பாவ நிதின் எவ்வளவு மிஸ் பண்றான்னு தெரிஞ்சுது. "அப்படி இல்ல செல்லம், ஒவ்வொரு தடவையும் உனக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் வாங்கி வர்றார்ல, போன தடவை நீ கேட்டனு சொல்லி சாக்லெட், ரிமோட் கார், அப்பறம் டிரெஸ் வாங்கிட்டு வந்தாரு".

"இல்ல மா, எனக்கு இந்த அப்பா வேண்டாம், விக்னேஷ்க்கு இருக்கிற அப்பா மாதிரி வேணும். காலைல எனக்கு குளிச்சுவிடணும், டிரெஸ் அப்பறம் சாக்ஸ் போட்டு விட்டு, என்னை ஸ்கூல்ல விடணும், சாயந்திரமா கூட்டிட்டு வரணும். ஈவினிங் என் கூட விளையாடனும், நைட்டு நாம எல்லா ஒண்ணா சேர்ந்து சாப்பிடனும், அப்பறமா தூங்கறப்ப எனக்கு புடிச்ச  டார்ஜான் கதை சொல்லனும். லீவுல தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போகணும், எங்க ஸ்கூல் பஃங்க்ஷனுக்கு நீங்க ரெண்டு பேரும் வரணும்" என்றான்.

கௌரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எவ்வளவு சமாதானம் சொல்லியும் விக்னேஷ் சாப்பிடாமா அப்படியே சோஃபால தூங்கிவிட்டான்.

USலிருந்து சனிக்கிழமை மதியம் வீட்டிக்கு வந்த சரவணன் ஆபிஸ்க்கு போகாம வீட்டிலே இருந்தான்.

"கௌரி இந்த தடவை மீட்டிங்கு வந்த எல்லாரும் என்னை ரொம்ப பாராட்டினாங்க. இந்த முறை கண்டிப்பா இன்கிரிமென்ட் அன் புரோமோஷன்னு பாஸ் சொல்லிட்டாரு. நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன், உனக்கு டைமண்ட் நெக்லஸ் ஆர்டர் கொடுத்திருக்கேன் வீக்எண்ட் போய் கலெக்ட் பண்ணிக்கலாம். அப்பறம் நிதின்க்கு டிரெஸ் வாங்கிட்டி வந்திருக்கேன் அவன் சாயங்காலம் கொடுத்திரு" என்று சொல்லி அலைச்சலின் காரணமாக தூங்க சென்றான்ஏதோ சொல்லத் தொடங்கிய கௌரி அப்படியே நிறுத்திவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.

அன்றிரவு நிதின் தூங்கியபின், "என்னங்க நான் உங்கிட்ட கொங்ச நேரம் பேசணும், நிதின் முன்ன மாதிரி இல்ல. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா அப்டியே தூங்கிறான், சாதம் சாப்பிடறதில்ல. டிவி தான் ஃபுல்லா பார்க்கறான், எதாவது சொன்னா உடனே கட்டில போய்  அழுதுட்டு படுத்திட்றான். நீங்க அவன் கூட இல்லாதது அவனுக்கு நல்லா தெரியுது. நேத்து கூட எனக்கு இந்த அப்பா வேண்டாம், விக்னேஷ் அப்பா மாதிரி வேணும்னு சொல்றான். எனக்கு என்ன சொல்றதுனே தெரியல".

"எனக்கு புரியுதுமா, ஆனா என்ன செய்ய. உங்களுக்காகத் தான் நான் இப்டி கஷ்டப்பட்றேன். இன்னும் 2, 3 வருஷம் தான் அப்பறம் ஆன்சைட் போறது கொறங்சிரும். மேனேஜர் போஸ்ட் வந்தா சென்னைதான் வேலை இருக்கும்.அதுவரைக்கும் கொஞ்ச கஷ்டம்தான். அவன் சின்ன பையன் நீ தான் அவனுக்கு எடுத்து சொல்லணும். வீட்ல கார் இருக்கு ஃபிரியா இருக்கும்போது அவன வெளியில கூட்டிட்டு போய்ட்டு வா. கார்டூன் சிடி நிறையா இருக்கு அவன் லீவுநாள்ல பார்த்திட்டு இருப்பான்"

இதைக்கேட்ட கௌரி மனம் நொந்து கொண்டாள். "நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க, இந்த வேலைய ரிசைன் பண்ணிருங்க. அடிக்கடி போறதால உங்க உடம்பு ரொம்ப கஷ்டம் நாங்களும் ஹேப்பியா இல்ல. இப்டியே போச்சுன்னா அவனுக்கு உங்கமேல இருக்கிற பாசம் கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சு அப்பறம் வெறுப்பு தான் வரும். இந்த ஒரு தடவ நான் சொல்ற கேளுங்க. நம்ம குடும்பத்துக்காகத்தான் நான் எந்த வேலைக்கும் போகாம வீட்டில இருக்கறன். நிதின நல்லா பார்த்துக்கணும், ஈவினிங் வந்தா சொல்லிக்குடுக்கணும்னு எல்லா வேலையும் நானே செய்றேன். ஏன் நீங்க வேற வேலைக்கு டிரை பண்ணக்கூடாது. உங்க அப்பாவுக்கும் இதெல்லாம் புடிக்கல, எங்க உங்ககிட்ட அவர் சொன்னா கோபப்படுவீங்கன்னு என்ட சொன்னாரு. போதுங்க நீங்க சம்பாதிச்சதெல்லாம், கார், வீடு, சொசைடில நல்ல பேருன்னு எல்லாம் நம்மகிட்ட இருக்கு. ஆனா நிம்மதிதான் இல்ல, எப்ப பணம் வந்துச்சோ அப்ப போனதுதான்".

"கௌரி நீ என்ன லூசா, வேலைய விட்டுட்டு என்ன செய்யறது. சென்னைல எந்த கம்பெனி இந்த மாதிரி பணத்தை அள்ளித்தருவான். கொஞ்ச நாளைக்கு நாம தான் சகிச்சுக்கணும். உனக்கே இது புரியலனா, அந்த சின்ன பையனுக்கு எங்க புரியும். இனி நீ இதைப்பத்தி எதுவும் பேசாதே, என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்" என்று சொல்லி ஹால்ல போய் டிவி பார்க்கச்சென்றான்.

அடுத்த நாள் காலைல கௌரி கொடுத்த காபியை குடித்துவிட்டு, "கௌரி ஈவினிங் பீச் போய்ட்டு அப்டியே வெளிய ரெஸ்டாரண்டல சாப்பிட்டு, வீட்டுக்கு வேண்டியதெல்லாம் வரும்போது அப்டியே வாங்கிட்டு வந்தர்லாம்"ன்னு சொல்லிவிட்டு தனது Honda city'யை துடைக்கச் சென்றான்.  "அப்பா வா நாம கிரிக்கெட் விளையாடலாம், எனக்கு ரொம்ப போரடிக்குது என்று சொல்லி நிதின் சரவணனைத் தேடி கார் ஷெட் அருகில் வந்தான்.

உள்ளேயிருந்த தனது  செல்போனில் அழைப்பு மணியைக்கேட்டு எடுக்கச்சென்றான். திரும்பி வரும்போது நிதின் காரின் கதவில் ஆணியில் கிறுக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட சரவணன் - "டேய் நிதின் கார்ல என்னடா கிறுக்கற" என்று சொல்லி ஓங்கி அடித்தான். பயத்தில் சரிந்த நிதின் அருகிலிருந்த பூந்தோட்டியின் மேல் விழுந்து மயங்கினான்.

பயந்து போன சரவணன் கௌரியை அழைத்துவிட்டு பக்கத்திலிருந்த ஹாஸ்பிட்டலுக்கு நிதினை கொண்டு சென்றான்.  டாக்டர் பார்த்துவிட்டு - நோ ப்ராப்ளம், ஹீ இஸ் ஆல் ரைட். பயத்தில மயக்கமாயிட்டான். தலைல இருக்கிற கட்ட மூணு நாளைக்கு எடுக்க வேண்டாம், கம்மிங்  thursday வந்து செக்கப் பண்ணிக்கலாம்னு சொல்லிச் சென்றார்.

வருத்தத்தில் வெளியே வந்த சரவணன் காரை நோக்கிச் சென்றான். கதவில் எழுதியிருந்ததைப் பார்த்தவனுக்கு அப்படியே தனது இதயமே வெடிப்பது போல் தோன்றியது, கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

APPA I LOVE YOU


2 comments:

  1. நன்றாக இருக்கிறது....

    சிறிது நடை பிசகியிருக்கிறது....

    ReplyDelete
  2. வெளியே போற அவசரத்தில முடிச்சிட்டேன், இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம். நான் - தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி .

    ReplyDelete