சத்யமேவ ஜெயதே

இணையதள வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என் இனிய வணக்கம். கடந்த ஓராண்டு காலம் தொடர்ச்சியான அலுவலக வேலைப்பளுவின் காரணமாக தொடர்ந்து வ்வலைப்பூவில் எனது கருத்துகளைப் பதிக்க இயலவில்லை. ஓராண்டு காலமாக சென்னையில் வசித்து வந்தாலும் இன்னும் முழுமையான சென்னைவாசியாகவில்லை. மேலும் தற்போதைய பணியில் அடிக்கடி வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளதால் என் இணையதள தேடல் மிகவும் குறைந்திற்று.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, விஜய் தொலைக்காட்சியில் சத்யமேவ ஜெயதே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். பாலிவுட் நடிகரான அமீர்கான் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இந்தியில் தயாரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட எட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

பொதுவாக திரையுலக நட்சத்திரங்களை நடன நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பார்ப்பது வழக்கம். ஆனால் நடிகர் அமீர்கானின் இந்த நிகழ்ச்சி வெறும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் இன்றைய சமூகத்தில் நிலவும் சில அவலங்களை அலசி ஆராய்ந்து அவற்றைப் பற்றி விவரமாக தொகுத்தளிக்கும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு தலைப்புகளைப் பற்றி விவாதம் நடைபெறுகிறது. பெண் சிசுக்கொலை, பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர் சிறுமியரின் நிலை, வரதட்சிணை கொடுமை, மருத்துவ முறைகேடுகள், ஆடம்பர திருமணங்கள், இன்றைய சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அவலங்கள் போன்ற தலைப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் நான் இதுபோன்ற சமூக சிந்தனையுள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்க அதிக நேரம் செலவிட்டதில்லை. பொதுவாக நாமனைவரும் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளிலேயே அதிக ஆர்வம் செலுத்துகிறோம். இந்நிகழ்ச்சியைப் பார்க்கும்போது ஏதோ ஒருவித உந்துதலும், நாம் எவ்வளவு சுயநலமாக உள்ளோம் என்பதும் தெளிவாகிறது. கல்லூரிப் படிப்பு, வேலையில் சேருவது, அதிகம் சம்பாதிப்பது, சுற்றுலா செல்வது, வார இறுதியில் திரையரங்கிற்கு செல்வது, உணவகங்களுக்கு செல்வது, இதுபோன்ற கேளிக்கைகளிலும்; எனது வாழ்க்கை, எனது வீடு, எனது குடும்பம், நான்/எனது என்ற ஒருமையிலேயே நமது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் சுயநலத்திற்காகவே நாம் செலவிடுகிறோம். இவை மட்டும்தான் நம்மால் முடியுமா? ஆம் சராசரி மனிதனால் இது மட்டுமே செய்ய முடியும்.

ஏதோ ஒன்று நம்மை தடுப்பதைப் போல உணர்கிறோம். குடும்பப் பொறுப்பு என்ற காரணத்தைக் காட்டியே நமது பொதுவாழ்வின் கடமைகளைத் தவிர்க்கிறோம். மனிதனாகப் பிறந்தது வெறும் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் செலவிடுவதற்காக அல்ல என்று எனது அப்பா அடிக்கடி கூறுவது வழக்கம்.

நம்மில் எவ்வளவு பேர் அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் சென்றுள்ளோம். கடந்த வாரம் மாற்றுத்திறனாளிகள் பற்றிய தலைப்பு விவாதிக்கப்பட்டது. சமூகத்தில் ஒவ்வொரு நிலைகளிலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பிறப்பிலிருந்து இறப்புவரை அவர்கள் அதிக துன்பங்களையே சந்திக்கின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர் குறிப்பிட்டது - குழந்தை பிறக்கும்போது அனைவரது வீட்டிலும் மகிழ்ச்சியைக் காணமுடியும், அதுவே உடலில் குறைபாடுள்ள குழந்தை பிறந்தால் துக்கத்தையே காணமுடியும். இவர்கள் பிறக்கும்போதே துன்பமும் சேர்ந்துகொள்கிறது.

ஆனாலும் அவர்களில் ஒரு சிலர் எத்தனையோ சாதனை புரிந்துள்ளர், தன்னலம் கருதாமல் அவர்களைப் போன்றவர்களுக்கு உதவுகின்றனர். நிகழ்ச்சியின் முடிவில் மாற்றுத்திறனாளிகள் குழுவாக நடத்திய நடன நிகழ்ச்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

நம்மில் பலர் 4, 5 மற்றும் 6 இலக்க சம்பளம் வாங்கினாலும் போதவில்லை என்ற மனநிறைவு இல்லாமல் ஆடம்பர வாழ்க்கை வாழ எண்ணுகிறோம். இது மாற வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் நம் சொந்த விஷயங்களை நோக்கியே செலவிடுகிறோம். பொதுநலத்திற்காக செலவிடும் நேரம் மிகக்குறைவே.

வருமானத்தின் ஒரு பகுதி, குறைந்தது 2 / 3 இலக்கத்தொகையை நாம் நன்கொடையாக வழங்கியிருப்போமா? வார இறுதியில் ஷாப்பிங்கிற்காகவும், சினிமாவிற்காகவும் உல்லாச செலவு செய்யும் நாம் வருடத்தில் ஒரு முறையாவது அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் சென்றிருப்போமா?


பணவசதியில்லாதவர்கள் தங்களால் முடிந்த பொதுநல உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். படித்த இளைஞர்களும், இயந்திர வேலைசெய்யும் நம் போன்ற சுயநலவாதிகளும் வருடத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்ற அனாதை இல்லங்களுக்குச் சென்று அங்கிருக்கும் சிறுவர்களுக்கு தங்களுக்குத் தெரிந்த கல்வியை சொல்லித்தர முன்வர வேண்டும். அதேபோல் முதியோர் இல்லங்களுக்குச் சென்று பிள்ளைகளால் கைவிடப்பட்ட‌ முதியவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் ஒரு பழைய பாடல்மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழைப்போல தன்னைத் தந்து தியாகியாகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்.

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் கிளைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்
மனம்..மனம்..அது கோவிலாகலாம்

1 comment: