நா. முத்துகுமார் – மறைந்தும் ஒளிவீசும் சூரியன்

நாள் 14.8.2016 - தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு துக்கமான நாள். ஆனந்த யாழை மீட்டியவனும், எல்லாமே அழகுதான் என்று சிலாகித்துக் கொண்ட தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துகுமார் இன்று நம்முடன் இல்லை. அவரது ரசிகர்கள் பலரும் இணையத்திலும் வலைப்பூக்களிலும் அவருக்காக இரங்கல் பாவை படித்துவிட்டனர். ஒரு நல்ல படைப்பாற்றல் மிக்க கவிஞனை நாம் இன்று இழந்து விட்டோம்.

இனி அவர் விட்டுச் சென்ற பாடல்களும்,  கவிதைகளும், அவர் பெற்றப் புகழும் மட்டுமே நிலைத்திருக்கப் போகிறது. 41 வயதில் இறப்பென்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!

கவிஞர் கண்ணதாசன் இறந்த போது கவிஞர் வாலி அவருக்காக எழுதிய இரங்கல் பா பின்வருமாறு:

``உன் மரணத்தால்
ஒர் உண்மை புலனாகிறது
எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில் –.

எமனும் ஒருவன்;
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான்’’.

அதே எமன் மீண்டுமொருமுறை நிருபித்துவிட்டான், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அவனுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை என்று!!
 
வருங்காலத்தில் நிறையத் தமிழ்க் கவிஞர்கள் தோன்றுவார்கள் ஆனால் ஆனந்த யாழை மீட்டிய நா.முத்துகுமார் போல் வருவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. 1500க்கும் மேற்பட்ட பாடல்கள், 2 தேசிய விருதுகள், மாநில விருது, கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது என்று அவர் பெற்ற விருதுகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். திரைப்படப் பாடல்களை தமிழ்ப்புலமையுடன் புனைந்த ஒரு சிலரில் நா. முத்துகுமார் நிச்சயம் இடம் பெறுவார். 

அவர் திரைப்படத்துறையில் மட்டுமல்லாது தமிழ் இலக்கியத் துறையிலும் சாதித்தவர். கவிதை எழுதுவதில் அவருக்கிருந்த ஆளுமை, சாந்தமான முகம், அனைவருடனும் பழகும் சகோதரத்துவ  பழக்கம் என்று நம் அனைவரையும் வசப்படுத்தியிருந்தார். வாழ்வில் தன்னுடைய உயர்விற்கும் முன்னேற்றத்திற்கும் அவர் அப்பாதான் காரணம் என்று பலமுறைக் கூறியுள்ளார்.

இன்று திரைப்படத் துறையில் பலரும் பாடலாசிரியர்களாக உள்ளனர், ஆனால் அவர்களுள் கவிஞர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம், விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அவரது எழுத்தில் வெளிவந்த பல பாடல்கள் எனக்கு பிடிக்கும், அதில் குறிப்பிட்ட ஒரு சில பாடலின் வரிகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

தங்கமீன்கள் படத்திலிருந்து:

``ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை!
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!

அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி

உன் முகம் பார்த்தால் தோணுதடி 
வானத்து நிலவு சின்னதடி 
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி 
உன்னிடம் வெளிச்சம் கேட்க்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து 
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி! ‘’

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலிருந்து:

‘’ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே!

தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்!

கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன்முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன்முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…’’

ஜூலிகணபதி படத்தில் வரும்:

‘’எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.

நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்!‘’

அவரின் மறைவை எண்ணி இரங்கல் கடிதம் வாசித்தாகிவிட்டது, இனி செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றிப் பார்ப்போம்.

சமீபத்திய பேட்டியொன்றில் திரைப்பட பாடலாசிரியர்களின் பொறுப்புணர்வைப் பற்றி அவர் கூறியது:

தமிழ் கவிஞராக விரும்புபவர்கள் ஏன் தொல்காப்பியம், நன்னூல், போன்றவற்றைப் படிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர் கூறியது:- 

அவரைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கூறியது, ''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' என்கிற வரிகளே அவரின் சாதனைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன்.


நமக்குக் கிடைத்த இன்னொரு சூரியனும் மறைந்துவிட்டது என்ற வருத்தமே நெஞ்சில் நிற்கிறது.


குறிப்பு: இங்குள்ள காணொளிகள் யூிப்லிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது.

10 comments:

  1. நமக்குக் கிடைத்த இன்னுமொரு சூரியனும் மறைந்துவிட்டது.... :(

    பேரிழப்பு தான் இது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் வெங்கட், நல்ல கவிஞனை இழந்துவிட்டோம். அவர் தினமும் 20 மணி நேரம் வேலை செய்ததாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.

      உடல் ஆரோக்கியத்தில் அவர் சிறிது அக்கறைக் காட்டியிருந்தால் இந்த இழப்பைத் தடுத்திருக்கலாம். ஆதங்கமாக இருக்கிறது.

      வருகைக்கு நன்றி வெங்கட்!

      Delete
  2. பாரதியைப்போல இளம்வயதில் மரணத்தை தழுவி விட்டார், வேதனையாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  3. @ ஷைலஜா, தங்களின் முதல் வருமைக்கும் கருத்தளித்தமைக்கும் மிக்க நன்றி. இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்திருப்பார், வேதனையாக இருக்கிறது,

    ReplyDelete
  4. தாங்க முடியாத ஏற்றுக்கொள்ள இயலா மரணம்.

    ReplyDelete
    Replies
    1. @ சிவகுமாரன், இந்த வயதில் மரணம் என்பது கொடியது! நல்லவர்களின் மறைவு வேதனையாக இருக்கிறது.

      Delete
  5. celebrated poets lord byron john keats our bharathiar also died at an young age..
    let us pray for naa muthukumar

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மைதான் கவிகள் பலரும் தங்கள் இளவயதிலேயே விண்ணுலகம் அடைந்தனர்!!!

      Delete
  6. கண்ணதாசன் மற்றும் நா. முத்துக்குமார் இவர்களின் இழப்பு கவியுலகில் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு ... இதை மேற்கொண்டு தவிர்க்க வேண்டுமெனில் நீங்கள் ஆரம்பத்தில் சொன்னதுபோல் எமனுக்கு முதலில் எழுதப்படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete
  7. உண்மையான வரிகள் - எமனுக்கு முதலில் எழுதப்படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete