சமுத்திரக்கனியின் - அப்பா

நான் பொதுவாகத் திரைப்படங்களைப் பார்ப்பதோடு சரி, அவற்றைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் திரைப்படங்களைப் பற்றி விமர்சிப்பது அவ்வளவு எளிதல்ல, அது பல நூறு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட உழைப்பு. மேலும் நமக்குப் பிடித்த படங்கள் பிறருக்குப் பிடிப்பதில்லை, பெரும்பாலனவர்களுக்குப் பிடிப்பதிருப்பது நமக்கு பிடிப்பதில்லை. சினிமாவை வெறும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது என் எண்ணம். நாம் சினிமா பார்ப்பதால்/பார்த்ததால் வளர்ந்தவர்கள் தான் இங்கு ஆட்சி செய்கிறார்கள், எனவே இந்த சினிமா என்பது நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதான் ஒன்றல்ல.

அதேபோல் பிறருடன் பகிரும் அளவுக்கு எந்தவொரு நல்ல மெசேஜூம் திரைப்படங்களில் இருப்பதில்லை. ஆனால் ஒரு சில சமயங்களில் சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லும் திரைப்படங்களும் வருவதுண்டு; அவற்றில் பெரும்பாலான படங்கள் கருத்துக்களை மிகைப்படுத்திக் காட்டுவதால் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, எனவே அதைப் பற்றி நான் எழுத நினைப்பதில்லை. காலத்திற்கு ஏற்றாற்ப் போல் வாழ்வியலை ஒட்டி வரும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

வெற்றியையும் வசூலையும் மட்டும் எதிர்பார்த்து படம் செய்யாமல், சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் சமுத்திரமுனியின் - ``அப்பா`` என்ற முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

கமர்ஷியல் படங்களுக்கும் குப்பைப் படங்களுக்கும் மத்தியில் இதுபோன்று ஒரு சில நல்ல படங்கள் வெளிவந்து, மக்களிடம் வெற்றி பெறுவது அரிது. விழிப்புணர்வுள்ள சமூகம் இதுபோன்ற படங்களை நிச்சயம் ஆதரித்துக் கொண்டாடும் (நம் சமூகம் இப்படத்தை வரவேற்றதா? கொச்சையான வசனங்களும் பெண்களை இழிவுபடுத்தி வெறும் காட்சிப் பொருளாகக் காட்டும் படங்கள் இன்று வசூலில் மிஞ்சி நின்கின்றன. வாழ்க தமிழகம்!) . 

படத்தில் வரும் கதாபாத்திரங்கள், இயக்கம் போன்றவற்றைப் பற்றி விவாதிக்க எனக்கு விருப்பமில்லை, மாறாக படம் முழுவதும் சொல்லப்படிருக்கும் நல்ல கருத்துக்களைப் பற்றி ஆராயலாம் என்று தோன்றுகிறது. 

இன்று மூன்று வயதுக் குழந்தைகளுக்குப் ப்ராஜெக்ட் வேலை, இரண்டு அல்லது மூன்று பக்கத்திற்கு வீட்டுப்பாடம், வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் கூடுதல் ஹோம்வோர்க்! குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பாமல், வீடு என்ற சிறைக்குள் அவர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களுக்குப் போதுமான இடைவெளி தராமல், அவர்களின் வளர்ச்சியை சிதைப்பதுதான் நகரத்தில் வசிக்கும் பெற்றோர்கள் செய்துகொண்டிருப்பது. 

பர்ஸ்ட் ரேங்க் வாங்கவில்லையென்றால் வாழ்வில் முன்னேற முடியாது என்று தவறாகச் சொல்லி வளர்ப்பது இங்கு வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலும் பெற்றோர்கள் நினைப்பது, தன்னால் சாதிக்க முடியாதவற்றை தனக்குப் பிறக்கும் மகனோ/மகளோ சாதிக்க வெண்டும். 

குழந்தைப் பிறப்பதற்கு முன்னரே அவன்/அவள் என்ன படிக்க வேண்டும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த மாதிரியான வேலைக்குச் செல்ல வேண்டும், எந்தத் துறையில் அதிக சம்பளம் வாங்க முடியும் என்ற எண்ணங்களை விதைக்க முனைகிறோம். 

பிறந்த குழந்தையை ஒரு நல்ல மனிதனாக்கி இச்சமுதாயத்திற்கு அளிக்கிறோமா என்பது தான் சமுத்திரக்கனியின் கேள்வி! வெறும் படிப்பு மட்டும் தான்  நம் வளர்ச்சிக்கு உதவும், நன்றாகப் படிக்க வேண்டும், பின் ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்று சொல்வதோடு நின்றுவிடுகிறது நம்முடைய குழந்தை வளர்ப்பு. 

நம்மைச் சுற்றி நடக்கும் நல்லது, கெட்ட விஷயங்களைப் பற்றிக் அவர்களிடம் விவாதிருக்கிறோமா? அல்லது அவர்களின் வயதிற்கு ஏற்றாற்போல எளிமையாக்கி புரியவைக்க முயற்சித்திருக்கிறோமா? எது சரி, எது தவறு என்று அவர்களாகவே சிந்திக்க வாய்ப்பளித்திருக்கிறோமா? இல்லை, முற்றிலுமாக இல்லை. படம் முழுவதும் இதுபோன்ற கேள்விகளும் அதற்குத் தகுந்த பதில்களும் நிறைந்திருக்கிறது.

நம்மைச் சுற்றியுள்ள நாலு பேர் என்ன நினைப்பார்கள், அவர்களின் பிள்ளை எந்த பள்ளியில் படிக்கிறது என்பதைப் பற்றி மட்டும் யோசித்து, அவர்களுக்குச் செவி சாய்க்கும் தாய்மார்களின் தவறான செயலை அருமையாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். இதுபோன்ற தவறை நாம் தான் வளர்த்து வருகிறோம், பெற்றோர்களாகிய நம்மிடம்தான் பிரச்சனை என்று நெத்தியில் அடித்தது போல சொல்லியிருக்கிறார்.

குழந்தையை விளையாட அனுமதிக்காமல் வீட்டிற்குள்ளே பூட்டி வைத்து, டோரா, சோட்டா பீம் போன்ற கார்ட்டூன் கேரக்டர்களை அவர்களின் நண்பர்களாக்கி, அவர்களின் மனதிற்குள் ஒரு பொம்மை சமூகத்தை வளர்க்கின்றோம். பின்னொரு நாளில் அவர்கள் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பார்க்கும் போது, அங்கு அவர்கள் எதிர்பார்க்கும் பொம்மைச் சமூகம் இருக்காது; மாறாக அவர்களின் கற்பனைக்குள் அடங்காத ஒரு மாய உலகம் தோன்றும். 

அந்நேரத்தில் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்துடன் ஒத்துப்போகும் நிலை தெரியாமல், தங்களுக்குள்ளே சுவர் எழுப்பி அதனுள்ளே வாழ்ந்து அழிந்து போகும் சூழ்நிலைதான் நாம் இன்று அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குழந்தைகளின்  பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, மாறாக நமது எண்ணங்களை அவர்களிடத்தில் திணிக்கிறோம். இது அவர்களிடத்தில் பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என்பதை உணராமல் அறிவிலியாக உள்ளோம்.

சிறுவயதைக் கடந்து வாலிப வயதை அடையும் பிள்ளைகளுக்கு எதிர்பாலினர் பற்றி எப்படி விளக்க வேண்டும், அவர்களுக்கு வரும் பருவ மாற்றத்தை எப்படி புரிய வைப்பது என்று கூறுவதில் வெற்றி பெற்றிருக்கிறார். 

"பெண் என்பவள் எதிர் பாலினம், அவளுக்கும் உன்ன மாதிரிதான்; அடிச்சா வலிக்கும்’’

``எப்ப வேணாலும் இங்க வரலாம், ஆனா இங்க தான் வர்றன்னு சொல்லிட்டு வரணும்`` என்று தன் மகனின் பெண் நண்பரிடம் கூறுவது.

"உனக்கு ஒரு விஷயம் அப்பாகிட்ட சொல்ல முடியும்னு நினைச்சா, அத செய். சொல்ல முடியாதுன்னா நினைச்சா அத செய்யாத"

``வாழ்க்கைக்குப் படிப்பு அவசியந்தான், ஆனா படிப்பே வாழ்க்கையல்ல’’

‘’தைரியமா இருன்னு நம்பிக்கையான வார்த்தைய சொல்றதுக்குத் தான் இங்க யாருமில்ல``

``வாழ்க்கையில சாதிச்ச எல்லாரும் படிப்பால மட்டும் சாதிக்கல``

போன்ற வசனங்கள் மிகவும் அருமை. பருவமடைந்த பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை அளவிட்டுக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.

இது மாதிரியானப் படங்களைப் பார்த்துவிட்டு பாராட்டினால் மட்டும் போதாது, சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்களில் ஒருசிலவற்றையாவது கடைபிடித்துக்காட்ட வேண்டும், இது நம்மைச் சுற்றியிருக்கும் நாளு பேருக்காக அல்ல, நம் பிள்ளைகளுக்காக!!

சினிமாவில் புதைந்திருக்கும் குப்பைகளுக்கு நடுவில் வைரமாக வந்திருக்கும் `அப்பா` - நிச்சயம் வணக்கத்திற்கும் பாராட்டிற்கும் உரியது. சமுத்திரக்கனிக்கு வணக்கமும், வாழ்த்துகளும்!!! 

இதுபோன்ற நல்ல யதார்த்தமான திரைப்படங்கள் நிறைய வெளிவர வேண்டும்.
 

7 comments:

 1. நல்லதொரு விமர்சனம் நன்று நண்பரே மாறுபட்ட திரைப்படம்தான்.

  ReplyDelete
 2. கில்லர்ஜியின் வருகைக்கு நன்றி.
  நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கும் படம், அவசியம் பார்க்க வேண்டியது.

  ReplyDelete
 3. உண்மையில் இது அனைத்து அப்பக்களுக்குமான படமல்ல பாடம்.

  ReplyDelete
  Replies
  1. குமரவேல் அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
   சரியாகச் சொன்னீர்கள், இது படமல்ல பாடம்! குப்பைகளுக்கு மத்தியில் இதுபோன்ற நல்ல கருத்துள்ள படங்கள் வெளியாவது வரவேற்கத்தக்கது.

   Delete
  2. நன்றி நண்பரே எனது கருத்துக்கு மதிப்பளித்து மறுபதிவு இட்டதற்கு!

   Delete
 4. படம் பார்க்கவே இல்லை உங்க விமர்சனம் படித்ததும் பார்க்க ஆவலாகிறது

  ReplyDelete
  Replies
  1. @ ஷைலஜா, தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்டு இருப்பதாகத் தோன்றினாலும், அவற்றைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் நிறைவாகவே தோன்றுகிறது. சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வந்திருக்கும் ஒரு நல்ல கருத்துள்ள படம். வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பாருங்கள்!

   Delete