ரவிதாஸா இன்னும் என்ன யோசனை!

அன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் காவலர்களின் ஓசை மெல்ல மெல்லக் குறைந்து, அனைத்து ஜீவராசிகளும் நித்திரா தேவியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தன அந்த நான்கு கண்களைத் தவிர. இன்று நிகழப் போகும் கொடூரத்தைக் காண விரும்பாத நிலவும் வெறுப்பினூடே மறைந்து நின்றது. 
அப்போது கோட்டைக்கு மிக அருகில் மரங்களடர்ந்தப் பகுதியிலிருந்து ஆந்தையின் ஓசை கேட்டது.  மரப்புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த ரவிதாஸனின் காதில் அதில் இன்பகானமாக ஒலித்தது. அனைத்தும் ஒன்று கூடி வருவதாக எண்ணிக்கொண்டான்.

இந்தச் சுரங்கப் பாதையைக் கண்டறிந்த தன் நுண்ணறிவை நினைத்துச் சிலாகித்துக் கொண்டான். இதுவரை மன்னர் மற்றும் முதன்மந்திரியான அநிருத்தப் பிரம்மராயரைத் தவிர வேறு யாரும் அறிந்திராத இந்நிலவறை ரகசியத்தை அறிந்து கொண்ட அவன் முகத்தில் கர்வம் நிறைந்திருந்தது. விகாரமான அவன் புருவங்கள் மேலெழுந்து, கண்கள் இன்னும் பெரிதாகி பழிதீர்க்கும் படலம் அவன் மனக்கண் முன் தோன்றியது. 

அவனது இக்கர்வத்திற்கான காரணமும் இருந்தது, சோழ மன்னனின் பாதுகாப்பு அரணாக விளங்கும் பெரிய பழுவேட்டரையரும் அறிந்திராத அதிசயம்தான் கோட்டைக்குள் செல்லும் இச்சுரங்கப் பாதை.

கையிலிருந்த பந்தத்தில் நெருப்பை மூட்டி தாழ்வார வழியிலிருந்தப் படிக்கட்டுகளில் ஓசைபடாமல் இறங்கினான். படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட விதத்தை எண்ணி வியப்படைந்து, ``என்னதான் சோழர்கள் நமக்கு எதிரிகளாக இருந்தாலும், கட்டிடக்கலையில் அவர்களுக்கிருந்த அறிவைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்’’ என்றெண்ணி சிறிது வாய்விட்டுக் கூறினான்.

பந்தத்திலிருந்து வரும் வெளிச்சம் அங்கு மூலையில் குவிக்கப்பட்டிருந்த பிராணிகள், விலங்குகளின் எலும்புக்கூட்டில் விழுந்ததில் கொடூரனான ரவிதாஸனக்குள்ளும் சிறிது கிளியை ஏற்படுத்தியது. தொடர்ந்து செல்லச் செல்ல வளைவில் நடைபாதை குறுகி, சுவரின் ஓரத்தில் செங்குத்தானப் படிகள் இருப்பதைக் கண்டான். நிலவறைக் கதவுகளுக்கருகில் வந்துவிட்டதை எண்ணி பெருமூச்சுவிட்டான்.

இடது கையில் பந்தத்தைப் பிடித்துக் கொண்டு, சுவரிலிருந்த அந்த வாள் போன்றத் திருகைக் கீழ்ப்புறமாக அழுத்தி வெளிப்புறமாக இழுத்தான். மெல்ல மெல்ல நிலவறையின் கதவுகள் திறக்கும் சப்தம் கேட்டது, பந்தத்திலிருந்த நெருப்பை அணைக்கும் போது கதவிற்க்கருகில் ஒரு உருவம் நின்றிருப்பதைக் கண்டதில் அவன் மூச்சு முழுவதும் நின்றுவிடுவது போலிருந்தது.

வெளியிலிருந்த சோமன் சாம்பவனின் குரல் கேட்ட பின்னர் தான் மூச்சு சீராகி இந்த உலகத்திற்கு வந்தான். உள்ளிருந்த பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ``நீ இங்கு வந்து எவ்வளவு நேரமாகிறது?’’ என்று வினவினான்.

``நான் இங்கு வந்து வெகு நேரமாகிறது, நீ வர ஏன் இவ்வளவு கால தாமதமானது’’ என்று சோமன் சாம்பவன் கோபத்தில் கேட்டான்.

``நீ நினைப்பது போல் இங்கு வருவதென்பது எளிய காரியமா? நம் திட்டப்படி ஆந்தையின் குரல் கேட்ட பின்னர் தான் நான் வருவேனென்பது உனக்குத் தெரியாதா? இதுபோன்ற இராஜ்ஜிய சதிகாரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். சரி நம் சம்பாசனையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம், இப்போது அந்தப் புலியிருக்கும் குகைக்குச் செல்லும் வழியைக் காட்டு’’ என்று கூறி அவனைத் தொடர்ந்தான்.

``ரவிதாஸா இதுதான் அருள்மொழிவர்மரின் சயன அறை. தாதிப் பெண்ணின் உதவியுடன் இரவு உணவில் தேவையான அளவு மயக்க மருந்தைக் கலந்து இருக்கிறேன். அவர் கண் விழிக்கக் குறைந்தது இன்னும் இரண்டு நாழிகைகளாகும்'' என்றான்.

``நல்லது, இவனிருக்கும் நிலையைப் பார்க்கும்போது, நீயளித்த மயக்கத்துளிகள் நன்று வேலை செய்திருப்பதாகத் தோன்றுகிறது`` என்ற ரவிதாஸனின் விழிகளில் ஏளனப் பார்வை இருந்தது.

ரவிதாஸன் உறையிலிருந்த விஷக்கத்தியை தடவிப் பார்த்து நிம்மதியடைந்தான். நம்முடைய கடும்உழைப்பு வீண்போகவில்லை; நாம் அளித்த நரபலிகளை அந்த  மகாகாளி ஏற்றுக்கொண்டுவிட்டாள், இல்லாவிட்டால் தஞ்சையின் பொக்கிஷத்தை அழிக்கும் வாய்ப்பு இவ்வளவு எளிதில் கிட்டுமா? எல்லாம் காளியின் செயல். சோழ சாம்ராஜ்ஜியம் பாண்டிய நாட்டிற்கு இழைத்த அநீதிகளுக்கெதிராக பழிதீர்க்கும் நாள் வந்துவிட்டது. இன்று சோழ நாடு இருக்கும் நிலையில், அரச குடும்பத்தில் இரண்டாவது  கொலை நிகழ்ந்தால் நாட்டில் புரட்சியும், குழப்பமும் இன்னும் அதிகமாகும். சிதறிக்கிடக்கும் நமது ஆபத்துதவிகளை ஒன்று திரட்டி, கோட்டைக்குள் வரவழைத்து அரச குடும்பத்தவர்களை ஒவ்வொருவராக பழி தீர்த்துக் கொள்ள இதுவே நல்ல சந்தர்ப்பம்.

அவன் கண் முன்னே வீரபாண்டியரின் கழுத்தும் முண்டமும் தனித்தனியே எழுந்து நின்றது; வீரபாண்டியனின் உதட்டிலிருந்து ஓசை வரவில்லை மாறாக குருதி படர்ந்த அக்கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிவது போல் தோன்றிற்று.

இன்றுடன் நாம்பட்ட துயரமெல்லாம் முடிந்து விடும், சோழ நாடு அழியும் நேரம் வந்துவிட்டது.  தஞ்சைக் கோட்டையில் மீன்கொடி ஏறும் நாள் வெகுதொலைவில் இல்லை. சோழ நாடே `பொன்னியின் செல்வன்` என்று போற்றும் அருள்மொழிவர்மன் என் கண் முன்னே கிடக்கிறான். புலியின் குகைக்குள்ளேப் புகுந்து புலியை அழிப்பதுதான் வீரம். இந்நாள் பாண்டிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய நாள் என்று மனதில் எண்ணிக் கொண்டு அருள்மொழிவர்மன் முன் நின்றான்.

தூரத்திலிருந்த தீபத்தின் ஒளி உறங்கிக் கொண்டிருக்கும் அருள்மொழிவர்மனின் திவ்விய முகத்தில் விழுந்தது. எதிரியின் முகத்தைப் பார்த்தான், அவன் கண்கள் கூசுவது போன்று இருந்தது. மீண்டும் உற்று நோக்கும்போது சாந்தமான குழந்தையின் முகத்தைப் பார்ப்பதுபோல தோன்றியது; நெஞ்சத்துனுள் இருந்த குரூரமும், வஞ்சமும் வெளிவராமல் அந்த வசீகர முகத்தில் ஒளிரும் பெரும் தீட்சை உணர்ந்தான். ரவிதாஸன் மெல்ல மெல்ல தன் சுயநினைவை இழப்பதுபோன்று பிரமையடைந்தான்.

அருகிலிருந்த சோமன் சாம்பவன் உரக்கக் குரலில், ``ரவிதாஸா இன்னும் என்ன யோசனை? உறையிலிருக்கும் விஷக்கத்தியை அவன் மார்பில் பாய்ச்சிக் கொன்றுவிடு! யோசிக்க நேரமில்லை, அரண்மனை வேலையாட்கள் விழிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. வந்த வேலையை சீக்கிரம் முடி, அவர்கள் கண்ணில் நாம்பட்டால் நிச்சயம் திரும்பிப் போக முடியாது, அத்துடன் நம் ஆயுள் முடிந்துவிடும்'' என்று பயத்துடன் கூறினான்.

சிலை போல நின்றுகொண்டிருந்த ரவிதாஸனின் காதுகளுக்கு அவன் சொன்ன எதுவும் எட்டவில்லை, திக்பிரமை பிடித்தது போல கல்லாக நின்றான்.

சோமன் சாம்பவனுக்குக் கோபம் தலைக்கேறியது, ``ரவிதாஸா நீ உயிருடன் தான் இருக்கிறாயா அல்லது உனக்கு சித்த பிரமைப் பிடித்துவிட்டதா?'' என்று உரக்கக் கத்தினான். 

சற்றே உரக்கக் கத்தியதில் ரவிதாஸன் தன் சியநினைவை அடைந்தான். தொலைவில் காவலாளிகள் நடந்துவரும் சத்தம் கேட்டது.

மீண்டும் சோமன் சாம்பவன், ``ரவிதாஸா உனக்கு ஞாபகம் இருக்கிறதா, அன்று நள்ளிரவில் கொடும்பாளூர் கோட்டையில் ஆதித்தகரிகாலனைப் பழிதீர்த்தது. அதன்பின் சுந்தர சோழனின் உடல்நிலை இன்னும் மோசமானது. இன்று நிகழப்போகும் இந்தக் கொடூரக் கொலையைக் கேள்விப்பட்டாலே அக்கிழவனின் உயிர் போய்விடுமென்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் ஏன் தாமதம்? இன்று பாண்டிய நாட்டிற்கு நீ செய்யும் இப்பேருதவி, காலம் அழியும்வரை நிச்சயம் இருக்கும்''.

''அந்தப் பெண்புலியான குந்தவையின் கொட்டத்தை அடக்க வேண்டாமா? அளித்த மயக்கத்துளிகள் செயலிழக்கும் முன் நெஞ்சிலிருக்கும் குரோதத்தைக் கொட்டி அவனைக் கொன்றுவிடு. நம்மையே நம்பியிருக்கும் நந்தினிதேவிக்கும் வருங்கால இளவரசருக்கும் இதுவே நாம் செய்யும் நன்றிக்கடன். நம் அரசர் வீரபாண்டியரின் கழுத்தைக் கொய்து, தஞ்சைக் கோட்டையின் மதிலில் ஏற்றிய சோழர்களைப் பழிவாங்க வேண்டாமா? இன்னமும் தாமதிக்காதே, காவலர்கள் வரும் முன் விரைந்து செய்!''  என்று இரைந்தான்.

ரவிதாஸனுக்குள்ளிருந்த வெறி மிகுதியடைந்து, அவன் கண்கள் தீப்பிழம்பாகின. பாண்டிய நாட்டு மக்களின் குரல்கள் ஒன்றாகச் சேர்ந்து பேரிரைச்சலாக அவன் காதுகளுக்குக் கேட்டது. உறையிலிருந்த விஷக்கத்தியை கைகளில் ஏந்தி அருள்மொழிவர்மனின் மார்பை நோக்கி இறக்கினான்.

``என்னங்க, எத்தனை தடவ கத்தறது? தனவ் ஸ்கூலுக்குப் போகணும் டைம் ஆகுது. இன்னைக்கு பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்கு, சீக்கிரமா வந்து இந்தக் காபியைக் குடிச்சிட்டு, குளிச்சிட்டு வாங்க. நான் அவனை ரெடி பண்றேன்''.

``ச்சே லீவு  நாள் அதுமா உன் தொல்லை தாங்க முடியல! கரெக்டா அருள்மொழிவர்மனை கத்தியால குத்தவரும் போது  டிஸ்டர்ப் பண்ணிட்ட. கனவுல என்ன நடந்துச்சுன்னு தெரியலையே?''.

''நான் இருக்கும் போது வேற யாரு உங்கள கத்தில குத்தவர்றாங்க! நீங்க தான் அருள்மொழிவர்மன்னு புனைப்பேர் வைச்சிட்டு இருந்தீங்க. இந்த வெட்டிப் பேச்ச கொஞ்சம் நிறுத்திட்டு, காபி ஆர்ரதுக்குள்ள பிரஷ் பண்ணிட்டு வாங்க, நான் இட்லி எடுத்து வைக்கறேன். தனவ் நீயும் உங்கப்பா மாதிரி கனவு காண்கறத நிறுத்திட்டு, டேபிள் மேல இருக்கற மில்க் எடுத்துக் குடி''.

ஹூம் கண்டிப்பா ராஜராஜ சோழன் தப்பிச்சிருப்பாரு.

லீவு நாள் வந்தாலே காலைல கனவுதான்!!!!
  

4 comments:

  1. வெங்கட் அவர்களின் வருகைக்கு நன்றி!
    உண்மையில் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில் ரவிதாஸன் அருள்மொழிவர்மனைக் கொல்ல முயற்சிப்பது போன்ற நிகழ்ச்சிகள் எதுவுமில்லை. இது முற்றிலும் என் கற்பனை, அவ்வளவுதான்!

    ReplyDelete
  2. அடட்டா கனவா! ரசித்தேன்.. உங்கள்பெயரே சொல்கிறதே பொன்னியின் செல்வன் மீதான அபிமானத்தை!!

    ReplyDelete
  3. பொன்னியின் செல்வனைப் பலமுறை வாசித்திருந்தாலும் அதன் மீதிருக்கும் காதல் இன்னும் குறைந்தபாடில்லை, ரவிதாஸனையும் மறக்கவில்லை!

    தோழியின் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete