சூப்பர் மார்க்கெட்டும் அண்ணாச்சி கடையும்

இன்று ஊரெங்கும்  பேரங்காடிகள் வெவ்வேறு பெயர்களில் (ஹைபர் மார்க்கெட், சூப்பர் மார்க்கெட்), வடிவங்களில் பெருகி வருகிறது. எங்கு  திரும்பினாலும் தள்ளுபடிஒன்று வாங்கினால் இன்னொன்று  இலவசம், 25-75% தள்ளுபடி, இலவச பாரிக்கிங் வசதி, கணினி பில்லிங் கவுன்டர்கள் என்று நவீன வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பெரிய அறைகள் நம்மை கவர்ந்திழுக்கின்றன.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட  நுழைவுப்பகுதிபெட்டகங்களில் அடைக்கப்டட்ட ஜெல்லி, மிட்டாய்,   ரசாயன பொருட்கள் கலந்த கலர்  குளிர்பானங்கள் என்று உடல்நலத்தைப் பேணும் பொருட்கள், கவர்ச்சிகரமான ஷாம்பு, முகப்பசைகள், உதட்டுச் சாயம், அழகுசாதனப் பொருட்கள், எண்ணெய் (ஆயில்) நிரப்பப்பட்ட கண்ணாடிக் குடுவைகள் (பாட்டில்), மாவுப் பொருட்கள், பலசரக்கு மற்றும் மளிகைப் பொருட்கள் ஒருபுறமும்புத்தங்களுக்கென தனி பிரிவு, குழந்தைகளுக்கான பொம்மைகள், பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகள், காய்கறிகள்  மற்றும் பழவகைகள் என்று எளிதில் கண்டுகொள்ளக்கூடிய வகையில்  பெயர்ப் பலகைகள் கடை முழுவதும் தொங்க விடப்பட்டிருக்கும். 

இப்படி நகர்புறங்களில் மெல்ல மெல்ல ஹைடெக் கடைகளின் ஆக்கிரமிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் இதையே குடும்பத் தொழிலாகக் கொண்ட நமது தெருவோர அண்ணாச்சி கடைகள் வேகமாக மறைந்து வருகின்றன.

இக்கடைகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் நெல்லை மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள். அவர்களை பொதுவாக ''அண்ணாச்சி'' என்றழைப்பது வழக்கம். இவர்களின் கடைகள் பெரும்பாலும் மக்கள் அகிகமாக வசிக்கும் இடத்திலோ அல்லது தெருமுனையிலோ இருக்கும். பொதுவாக இரண்டு மூன்று தெருக்களுக்கு ஒரு  கடையாக  இருக்கும். கடையின் மொத்தப்பகுதி ஏறக்குறைய 150-200 சதுர அடிக்குள் இருக்கும். வெளிப்புறத்தில் பலகைக் கதவுகள் வைக்கப்பட்டு இடையில் இரண்டு அல்லது மூன்று அரிசி மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ளிருப்பவருக்கும் வாடிக்கையாளர்க்கும் நடுவே ஒரு தடுப்புச் சுவராக இருக்கும்.


கடையின் உரிமையாளர் கல்லாப்பெட்டியின் அருகில் நரம்புகள் பிண்ணப்பட்ட தேய்ந்த மர நாற்காலியில் அமர்ந்திருப்பார். கடையின் உட்புறத்தில் திரைச்சீலையால் மறைக்கப்பட்ட அவர்களது வசிப்பிடமிருக்கும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு உட்புற அறை தெரியாது. நாற்காலியின் மறுபுறத்தில் தூசி படிந்த நிலையில் பழைய BPL அல்லது Onida டிவியும் மறுபுறம் மாதாந்திர நாட்காட்டியும் சுவற்றில் அறையப்பட்டிருக்கும். நுழைவாயிலின் இரு புறங்களிலும் மூங்கில் நட்டு இடையில் தென்னைவோலை வேயப்பட்டிருக்கும். ஓலையின் நடுவில் பல வண்ணங்களில் நோட்டீஸ்கள் சொருகப்பட்டிருக்கும் - புதிய துணிக்கடை விளம்பரம், மூலம் பௌத்திரம், ஆண்மை குறைவு-செக்ஸ் கவுன்சிலிங் ஸ்பெசலிட் ஆயுர்வேத சித்தர் திருச்சி/சேலம் வருகை பற்றிய மஞ்சள் நிற நோட்டீஸ்கள் இருக்கும். ஓலையின் பின்புறம் பயறுவகைகளை சலித்த ஓடும், வெற்றிலைப் பாக்குக் கறையும் தரையில் பரவலாகக்கிடக்கும். நுழைவாயிலின் முன் நிழலான பகுதியில் பச்சை நிற சோடா/கலர் பாட்டில்கள் சிறிய தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும்.

அன்றைய நாட்களில் இதுபோன்று  தள்ளுபடி என்ற வார்த்தையை நாம் மறந்தும் கேட்டதில்லை. ஒவ்வொரு பொருளும் அதற்குரிய சரியான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. விலைகளை மறைமுகமாகக் கூட்டியும் இறக்கியும், கலர்கலராக தள்ளுபடி விளம்பரம் செய்யும் இன்றைய போக்கு அன்று  கையாளப்படவில்லை. கவர்ச்சியான தள்ளுபடி அறிவித்து அதிக லாபம்/ஆதாயம் பெற அவர்கள் எண்ணயதில்லை. அவர்களின் தள்ளுபடி உக்தி பெரிய ஆதாயத்திற்கான வழியாக இருந்ததில்லை. ஒரு ருபாய்க்கு தேங்காய் வாங்கினால் ஒரு கைப்பிடி கருவேற்பிலை இலவசம், ஐந்து தேன் மிட்டாய்க்கு ஒரு  மிட்டாய், இரண்டு நெய் பிஸ்கட்டுக்கு அரை பிஸ்கட்  இலவசம். ஆனால் இவையெதுவும் லாப நோக்கிலோ உள் ஆதாயத்திற்காககவோ வழங்கப்படவில்லை, நட்பின் நிமிர்த்தமாகவே வழங்கப்பட்டது. எப்போது கடைக்குச் சென்றாலும் வீட்டில் அனைவரும் நலமா? எக்ஸாம் முடிஞ்சிருச்சா? என்று ஆர்வமாகக் கேட்கும் நம் அண்ணாச்சிகள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்குத்  திரும்பிவிட்டனர். 

இன்று அலங்கார விளக்குகளிலும் கவர்ச்சி தள்ளுபடியிலும் மின்னும் இந்த சூப்பர் மார்க்கெட்களின் அசுர வளர்ச்சி  இதுபோன்ற எண்ணற்ற அண்ணாச்சி கடைகளைத் தேய்பிறையாக்கியுள்ளது.

8 comments:

 1. என் பதிவில் பின்னூட்டம் பார்த்து வந்தேன் எனக்கு இந்த ஹைடெக் கடைகள் என்றாலே அலர்ஜி கடையில் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நேர்முக பரிவர்தனை இருக்க வேண்டும் என்றாஉ நம்புகிறேன் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் இந்த ஹைடெக் மோகம் பரவுவது தடுக்கப் படவேண்டும் என்பது என் அபிப்பிராயம் எல்லாமே மாறிவருகிறாஅதுசெரிப்பது கடினமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அருமையாகச் சொன்னீர்கள் ஐயா, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 3. அருமையான பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 4. @ அசோகன் குப்புசாமி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா!

  ReplyDelete
 5. பல்பொருள் அங்காடிகளுக்கு முன்னால் நம்முடன் இருந்த கடையை இயற்கையாக அண்ணாச்சிக் கடை என விளித்தமை மகிழ்ச்சி. நெல்லை மாவட்டத்தில் மட்டுமின்றி ஏனைய மாவட்டங்களிலும் அண்ணாச்சிக் கடைக்கு இருந்த/இருக்கிற மவுசு வியப்பு கலந்த மகிழ்ச்சி. தங்கள் பதிவில் உள்ள உயிரோட்டத்திற்கு வாழ்த்துக்கள். - சோம. அழகு

  ReplyDelete
 6. @ சோம. அழகு, தோழியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அண்ணாச்சி கடை என்பது எங்கள் ஊரில் மிகவும் பிரபலம், வீதிக்கொருக் கடையைப் பார்க்க முடியும்.

  ReplyDelete
 7. i differ from you..
  in big super markets in vegetable sections one can always buy keerai different apples plantains lots of varieties...
  also they are fresh... prices are reasonable.... pl do not condemn super markets malls

  ReplyDelete
  Replies
  1. @ Chander, பதிவை வாசித்து எதிர்-கருத்தளித்தற்கு நன்றி!
   நான் இப்பதிவில் கூறமுற்பட்டது சூப்பர் மார்க்கெட்டுகளை எதிர்ப்பதாக அல்ல; மாறாக மெல்ல மெல்ல நலிவடைந்து இன்று நம் கண் முன்னே காணாமல் போகும் அண்ணாச்சி கடைகளையும், அதனைப் பரம்பரைத் தொழிலாகக் கொண்டிருந்த வகுப்பினரின் தோய்மை நிலையையும் எண்ணி வருத்தமாக இருக்கிறது என்பதன் நோக்கில் பதிவிட்டிருந்தேன்.

   நீங்கள் கூறியது போல் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் நல்ல தரமான காய்கறிகளும் பழ வகைகளும் கிடைப்பதை மறுப்பதற்கில்லை!!!!!

   Delete