தஞ்சை பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) கோயில்

வாச‌க‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்கம், கடந்த நாட்களில் எனது அலுவலகப் பணியின் காரணமாக வலைப்பதிவை தொடர்ச்சியாக எழுத முடியவில்லை. எனினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னால் இயன்றவற்றை இவ்வலைப்பூவில் பதிக்கிறேன்.

எனது முந்தைய 'இராஜராஜ சோழன்' பற்றிய பதிப்பின் நிறைவாக‌த் த‌ஞ்சை பெரிய‌ கோவில் ப‌ற்றி எழுத‌ வேண்டும் என்ற முனைப்பு என்னுள் இருந்துகொண்டே இருந்த‌து. இன்று இணைய‌த‌ளத்திலும், வ‌லைபூக்க‌ளிலும் தஞ்சை பிர‌க‌தீஸ்வ‌ர‌ர் ஆல‌ய‌த்தைப் பற்றிய‌ செய்திக‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும் ப‌ர‌வ‌லாக‌க் காண‌ப்படுகின்ற‌ன.

இத்திருக்கோயிலின் த‌ல‌வ‌ர‌லாற்றைப் ப‌ற்றியும், அத‌ன் சிறப்பைப் ப‌ற்றியும் பெரும்பாலான தமிழ் ஆர்வலர்க‌ள் அறிந்திருக்கக்கூடும்.

thanjai-periya-kovil-33s.jpg


 இத்திருக்கோயிலின் பெருமையைப் போற்றுவோர் ஒருபுறமிருக்க, இதற்கு எதிர்கருத்துள்ளவர்களும் இங்கு உண்டு. இதைப்பற்றிய விவாதங்களும், கருத்துகளும் இன்றும் நடந்துகொண்டிருக்க இத்திருக்கோயிலின் சிறப்பையும், இத்தலம் உருவான வரலாற்றையும் இங்கு காண்போம்.

த‌ஞ்சை - பெய‌ர்க்கார‌ண‌ம்:

தஞ்சன் என்னும் அசுரன் மக்களை துன்புறுத்தி வந்தான் என்றும், இங்குள்ள மக்களைக் காக்க சிவபெருமான் அவனை வதம் செய்து அழித்த இடமானதால் தஞ்சாவூர் என்று பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.

ஆனால் வைணவக் கொள்கையுடையவர்கள் மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும் அதனால்தான் தஞ்சாவூர் ஆயிற்று என்று சொல்கிறார்கள். இப்படி இருவேறு கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் தஞ்சன் எனும் அசுரனின் கொடுமைகளுக்கு ஆட்பட்ட ஊர் தஞ்சாவூர் என்று தெரிகிறது.

த‌ஞ்சையின் சிறப்பு: 
 • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது.
 • உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 • உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது.
 • தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. மேலும் தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மையும் மிகவும் புகழ் பெற்றது.
 • கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.
 • மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.
 • இன்னொரு முக்கியச் சிறப்புமிக்க பெருமையாகப் போற்றப்படுவது இங்குள்ள "தஞ்சை பெருவுடையார் கோயில்".
 • இத்திருக்கோயில் வானத்தை நோக்கிப் பிரம்மாண்டமாய் எழுப்பப்பட்டு, உலகம் முழுவதும் வியந்து போற்றும்  வண்ணம் கட்டிடக்கலைக்கு பெயர் சேர்த்து நிற்கிறது. இந்தப் பெரிய கோயில் கோபுரக் கலசத்தின் நிழல் தரையில் விழாமல் கோபுரத்தின் மேலேயே விழும் வகையில் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது என்பதும் இத‌ன் சிறப்ப‌மைப்பு.

IMG_3162.jpg

தலவரலாறு:

சோழப் பேரரசின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவன் இராஜராஜ சோழன். இவன் சுந்தரசோழன் என வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனின் இளைய மகன். ஐப்பசிச் சதய நாளில் பிறந்தவன்; இயற்பெயர் அருண்மொழித்தேவன். பட்டப்பெயர் இராசகேசரி. இவருக்கு ஆதித்த கரிகாலன் என்ற சகோதரனும், குந்தவை என்ற தமக்கையும் இருந்தனர்.

தில்லைவாழ் அந்தணர்களால் இராசராசன் என்று பெயர் சூட்டப்பட்டவன். சிவபாதசேகரன், திருநீற்றுச்சோழன் முதலிய வேறு பெயர்களையும் உடையவன். இம்மன்னன் சிவபெருமான் மீது கொண்ட அதிகப் பற்றுதலின் காரணமாக தஞ்சாவூரில் மிகப்பெரிய கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினான்.  மேலும் இக்கோயில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும் மிகப்பெரும் சாதனையாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினான்.

அவனது விருப்பப்படி இந்தக் கோயில் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரும்பான்மையாக அவன் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த கற்கள் அனைத்தும் முழுமையாகச் செதுக்கப்பட்டு கோயிலாக வடிவமைக்க சுமார் 34 வருடங்கள் வரை ஆகியது.
 • கோயில் கோபுரம் தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரம் உடையது.  கோபுரம் கர்ப்பக்கிரகத்திலிருந்து 190அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
 • இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவமான கல் சுமார் 80 டன் அளவுடையது. 
 • இக்கோயிலின் மூலவரான பிருகதீசுவரர் (பெருவுடையார்) லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த லிங்கத்தின் உயரம் 13 அடி. ஆவுடை எனும் லிங்கத்தின் கீழ்ப்பகுதியான வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாக இருக்கிறது.  இந்த லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றங்கரையிலிருந்த ஒரு மலையில் இருந்து கல் எடுத்து வந்து செய்யப்பட்டது என்கிறார்கள். இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.    
 • இந்தக் கோயிலின் சுவாமி விமானம் 216 அடி உயரமுள்ளது - இதை தக்ஷிணமேரு எனச் சொல்கிறார்கள்.
 • இங்கு கோயிலின் முன்புறமுள்ள நந்தியும் மிகப்பெரிய அளவுடையது. இது 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இது போன்ற நந்தி உருவம் வேறு எங்கும் இல்லை. 
 • கருவூரார் எனும் சித்தரின் அறிவுரையின்படி 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் முதலில் இராஜராஜ சோழன் பெயராலேயே இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் வந்த போது பிருகதீசுவரம் என்று பெயர் மாற்றமடைந்தது. 
 • இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் உள்ள "தளிக்குளம்" வைப்புத் தலமாகும். அப்பர் பெருமான் திருவீழிமிழலைத் தாண்டகத்துள் "தஞ்சைத் தளிக் குளத்தார்" என்று பாடியிருக்கிறார். இந்த சிவகங்கையில் நீர் குறைந்திருக்கும் காலத்தில் சிவலிங்கம், நந்தியைக் காணலாம். 
 • கோயிலின் முதற் கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன் வாயில் என்றும், இரண்டாம் கோபுர வாயிலுக்கு இராசராசன் வாயில் என்றும், தெற்குக் கோபுர வாயிலுக்கு விக்கிர சோழன் வாயில் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது 
 •  இக்கோயிலில் உள்ள திருமேனிகளை இராசராசனும், அவன் மனைவியர்களும், அவன் குலத்தவர்களும், அமைச்சர்களும் தந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுக்களின் மூலம் அறியப்பட்டுள்ளது. 
 • கோயிலின் முதல் தளத்தின் உட்சுவர்களில் 108 வகையான நடன அமைப்புகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

temple-2.jpg

 • இங்குள்ள சிவதாண்டவம், திரிபுராந்தகர், சுப்பிரமணியர், விநாயகர், காளி முதலிய வண்ண ஓவியங்கள் கலைக்குச் சிறப்பு சேர்க்கின்றன. 
 • இராசராசன் கோயிற் பணிகளுக்காகப் பல ஊர்களிலிருந்து கொண்டு வந்த 400 நடனப் பெண்களை 2 நீளமானத் தெருக்களில் குடியமர்த்தினான். இப்பெண்டிர் தளிச்சேரி பெண்டிர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வசித்த தெரு தளிச்சேரி என்று பெயர் பெற்றது. இவர்களுக்குப் பட்டங்களும் அளித்துச் சிறப்பு செய்யப்பட்டன என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 • இது போல் கானபாடிகள், நட்டுவர், சங்குகாளம் ஊதுவோர், மாலைகள் கட்டித் தருவோர், விளக்கேற்றுவோர், பரிசாரகர்கள், மெய்க்காவலர்கள் முதலியோர்களையும் இராஜராஜன் நியமித்திருந்தான் என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 • கல்வெட்டுக்களில் இறைவனின் பெயர் ஆடல்வல்லான், தக்ஷிணமேருவிடங்கர் எனவும், பின்னர் இராசராசேச்சரமுடையார், இராசராசேச்சமுடைய பரமசுவாமி எனவும் குறிக்கப்பட்டுள்ளது. 
 • கோயில் வளாகத்தில் சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில்  63 நாயன்மார்கள் சிலைகள் பல வடிவங்களிலான 108 சிவலிங்கங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுவற்றில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 
 • இந்தக் கோயிலைச் சுற்றி அக்காலத்தில் வெட்டப்பட்ட அகழிகள் இன்னும் உள்ளன.
தபால் தலை:

Tanjai_stamp.jpg

மத்திய அரசு 1995ஆம் ஆண்டில் வெளியான மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலை வெளியிட்டது.
 
ஆயிரம் ரூபாய் நோட்டு:

Tanjai1000.jpg

தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி  1000 நோட்டு வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் 4&வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின.

துணைக் கோயில்கள்:

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெருவுடையார் கோயில் தவிரவடமேற்கு மூலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலும், வடகிழக்குப் பகுதியில் வராகியம்மன் கோயில், சண்டிகேசுவரர் கோயில், கணபதி கோயில், நடராஜர் கோயில் போன்றவைகளும், முன்பகுதியில் பெரிய நந்தி கோயிலும், கருவூரார் கோயிலும் அமைந்துள்ளன.

1 comment: