என் முதல் கைபேசி (Cellphone)




வாழ்வில் முதலில் வாங்கிய, பார்த்த, ரசித்த, பழகிய அனுபவங்கள் நமக்கு கண்டிப்பாக ஞாபகம் இருக்கும். அதுவும் முதல் சம்பளத்தில் வாங்கியது நன்றாகவே ஞாபகம் இருக்கும். யோசித்துப்பார்த்தால் வழக்கமாக அனைவரும் கண்டிப்பாக ட்ரஸ் அல்லது ஸூ,/செப்பல் வாங்கிருப்போம்.


நான் என் முதல் மாத வருமானத்தில் வாங்கியது கைபேசி (cellphone) SAMSUNG C100, 10 வருடங்களுக்கு முன் வாங்கியது. இன்றும் நினைவில் உள்ளது. இந்த பத்து வருடத்தில் கைபேசியயில் தான் எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்துள்ளது. அலைப்பிற்காக தொடங்கப்பட்டது இன்று music, camera, internet , whatsapp, FB, games, mobile banking, gps, email என்று வளர்ந்துள்ளது.

வாங்கிய புதிதில் என் நண்பர்கள் அனைவரும் வாங்கிப்பார்ப்பார்கள், எங்க வாங்கின, எவ்வளவு ரூபாய் என்று ஆர்வமாக கேட்பார்கள். கலர் டிஸ்ப்லே, சைட்ல க்ரீன்/ப்ளு LED லைட் ப்ளிங்க ஆகும். அப்போதெல்லாம் நோ மெமரி ஸ்லாட், நோ Wifi, Bluetooth. மொத்தமாக 5 அல்லது 6 வால்பேப்பர்கள் இருக்கும்.

ட்ரெய்னிங் நேரத்தில் வால்பேப்பர் மாற்றுவது, தினசரி ரிங்டோன் மாற்றுவது, மெசேஜ் வந்துள்ளதா அல்லது கால் வந்துள்ளதா என்று அடிக்கடி பார்ப்பது தான் முழுநேர வேலையாக இருக்கும். அழைப்பு வந்திருக்காது இருந்தும் ஆர்வக்கோளாரால் கைபேசியையே பார்த்துக் கொண்டே இருப்பேன். தினமும் இரண்டு மணிநேரம் கண்டிப்பாக சார்ஜ் செய்வேன்.

ஏறக்குறைய இரண்டு வருடங்கள் வைத்திருந்தேன், பின் வேறொரு புதிய கைபேசி வாங்கினேன். இப்போதெல்லாம் கைபேசி என்பது வாழ்வின் ஒரு இன்றியமையாத பொருளாக உள்ளது. இன்று ஐந்து வயதுக்குழந்தையிலிருந்து அனைவரிடத்திலும் கைபேசி உள்ளது. 

தகவல் தொழில்நுட்பம் ஒரு புறம் வளர்ந்துகொண்டு சென்றாலும் அதனால் விளையக்கூடிய தீமைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன!

பாரதி (யார்?)




எட்டையபுரத்தில் உதித்தான் - இவன்
சுடர்மிகு அறிவுடையான்
தமிழ்ப் பயின்றான்! 

அவ்வை வழிநின்றான்
தமிழமுதின் சுவைகண்டான்
மானுட வாழ்வின் வழியுரைத்தான்!

விடுதலை வேட்கையுடையான்
சிறை சென்றான்!
கேலிச்சித்திரம் தீட்டினான்!

கம்பன் வள்ளுவன் இளங்கோ கண்டான்
தெருவெல்லாம் தமிழ் முழக்கமிட்டான்
 
காக்கைச் சிறகென்றான், தீக்குள் விரல் வைத்தான்
அற்ப மாயை யறிந்தான்!

அறிவே ஒளியென்றான்!
உண்மையே தெய்வமென்றான்!

மரமென்றான், விலங்கென்றான், தான் மண்ணில் வாழும் புழுவென்றான்!
அஃறிணையும் தானென்றான்!

அச்சம் தவிர் என்றான்!
சாதி இல்லையென்றான்!

ஆண் பெண் நிகரென்றான்!
புதுமைப் பெண் கண்டான்!

ரௌத்திரம் பழகென்றான்!
காலனை கால்மிதித்தான்!

பிறமொழி ஆதரித்தான்
இறவாத புதுநூல்கள் தமிழில் இயற்றக் கேட்டான்

வாழ்த்தினான், நம்
செந்தமிழை வணங்கினான்


- இவனே நான் கண்ட பாரதி (தீ)

இனிய‌ தீபாவளி



இணையதள வாசகர்களனைவருக்கும் எனது இனிய‌ தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தாயின் கடமை சரியே! நற்றிணை

பருவக் கோளாறின் காரணமாக காதல் வயப்பட்டு, தலைவன் பிரிவை நினைத்து வாடும் தனது பெண்ணை அன்னையொருத்தி கண்டித்தாள். சினம் கொண்ட தலைவிக்கு, தாயின் கடமை சரியே என தோழி எடுத்துரைத்தல்;


வளர்பிறையாய் உம் காதல் வளர்ந்து
குளிர்நிலவாய் அமுதமழை பொழிந்தால்
குலமகளே ! உமை வாழ்த்தாமல்
உன் தாயின் மனமென்ன ;
நிலமகழ்ந்து எடுத்திட்ட
இரும்பாகப் போமோ?

கருவுற்ற காலத்தில் அவள் நாவினைக்
கசப்பாக்கித் தொல்லை தந்தபோது
திருவுற்ற அந்தத் தாய்
புளிப்பாலே கசுப்பு போக்கி உன்
புன்னகை காணத் தவமிருந்தாள்!
ஆலின் இலைபோன்ற அவள் அழகு வயிற்றை ஒரு
சாலின் வடிவாக்கி நீ அலங்கோலம் தந்தபோதும்,

உன் கோலம் காண்பதற்கே அவள்
உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள்!
மணிவயிற்றுக்குள்ளிருந்து நீ
மாறி மாறி உதைத்த போதும்,
வலிபொறுத்துக் கொண்டபடி
அணியென்ன பூட்டலாம் அந்தக் காலுக்கென்று
ஆயிரம் சிந்தனை செய்திருந்தாள்!

ஊதையில் துரும்பெனத் தாயுடல் அலைக்கழித்து
உலகில் நீ பிறந்துருண்டு அழுதபோது இன்ப
போதையில் துன்பமெலாம் மறந்திருந்தாள்! இன்றவள், உன்
பாதையில் பாடம் சொல்லல் ஒரு பாபமா?
பூவைத்துப் பொட்டிட்டு முத்தமாரி பெய்தபோது நீ,
பூவையாய் ஆவது எப்போதென்று ஆண்டெண்ணிக் கிடந்த அன்னை;

கோவையாய் சிவந்த உன் இதழைக் கிளியொன்று
கொத்துமென்று தெரியாத பேதையா  என்ன?
ஆற்றில் இறங்கிக் குளிக்கத் தடை கூறவில்லை அன்னை!
ஆழம் தெரிந்து இறங்கென்று கூறுகின்றாள் அவ்வளவே!
அதற்குள் நீ அவன் வருமட்டும் வழிபார்த்துக் காத்திருந்து
அல்லும் பகலும் உறக்கமின்றி வாடிவதங்கி,
உடலைக் கெடுத்துக் கொள்கின்றேன் என்றால்;
உனை உயிராக நினைக்கின்ற பெற்றோர்கள் ஒப்புவரோ?
உன் தோழி கெஞ்சுகின்றேன்; உடனே கேள்!
உறங்கி எழு! உற்சாகமாய் இரு!
உறையூர் எங்கும் ஓடிவிடாது - உன்
அறையூரில் அடங்கத்தான் போகிறது!" - என்றுரைத்துச் சிரித்தாள்.