இரண்டாம் ஜாமங்களின் கதை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குறுகிய காலத்தில் வாசித்து முடித்த நாவல் இது. எழுத்தாளர் சல்மாவின் காணொளிகளை ஓரிரு முறை பார்த்ததுண்டு, ஆனால் அவரது படைப்புகளை வாசித்ததில்லை. 'இரண்டாம் ஜாமங்களின் கதை' வாசிப்பின் முடிவில் அவரது மற்ற படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. 

பதிப்பகம்: காலச்சுவடு

இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை, வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையிலிருந்தே அமைந்து வந்துள்ளது. முன்னுரையில் குறிப்பிட்டது போன்று "முதல் ஜாமத்தைக் காட்டிலும், விபரீதமானது - கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்". அது எல்லைகளற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தணல் போன்றது, ஆழ்ந்த நினைவுகளைக் கிளறிக் கொணர்வது. 

நாவலில் வரும் பகுதிகளைக் குறிப்பிடாமல், என்னுள் உணர்ந்தவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். ராபியா என்ற சிறுமியிலிருந்து தொடங்கும் நாவல், அவளிடமிருந்தே முற்றுப் பெறுகிறது. இக்கதையில் கதாநாயகன்/நாயகி என்று  யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, கதையில் பயணிக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் ஒரு பகுதியில் கதாநாயகராவதும் பின்பு கதையில் சக பயணிகளாகத் தொடர்வதுமாக அமைந்துள்ளது. 

பெண் உலகம் - சூழ்ச்சி, அடிமைத்தனம், ஏமாற்றம், சுரண்டல் மற்றும் வலிகளால் சூழப்பட்டுள்ளது. நமது குடும்ப அமைப்பில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் (ஒதுக்கப்பட்டிருக்கும்) இடத்தைப் பற்றியும், குடும்பம் மட்டுமின்றி வெளிச்சமூகத்திலிருந்து அவர்களுக்கு இழைக்கப்படும் கட்டுப்பாடுகள், சுதந்திரமின்மை,  தொடர்ந்து விதிக்கப்படும் பாரபட்சங்கள் மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. திருமண உறவின் மூலம் ஏற்படுத்தப்படும் இறுக்கம், உடலியல் சார்ந்த துன்பங்கள், மறுக்கப்படும் காமம், அவளைச் சுற்றி நிகழும் சுரண்டல்கள் என பல்வேறு விடயங்களை பகிங்கரமாகச் சொல்கிறது.

பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர், இன்றும் அது தொடர்ந்துகொண்டே வருகிறது. பெண்ணுலகம் முற்றிலும் வேறுபட்டது, பெண்கள் தனியாகக் கூடுமிடத்தில் பேசக்கூடிய விடயங்கள் நம் கற்பனைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. அந்தரங்க விடயங்களை குழுமமாகப் பேசுவது விசித்திரமானதாகத் தோன்றினாலும், அது விரக்தியின் வெளிப்பாடாகவுள்ளது.

பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் ஆண்களால் இழைக்கப்படுவதைக் காட்டிலும் மிகுதியானது. ஆண்கள் இழைக்கும் தவறுகளைப் பெண்கள் ஏற்றுக் கொள்வதும், அதைத் தொடர்ந்து ஆதரிப்பதுமானக் குடும்பப் பின்னல் அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பூப்பெய்தியவுடன் அவர்களின் கல்வியும் மறுக்கப்பட்டு, சிறுவயதிலேயே திருமணத்திற்கு தள்ளப்படும் நிர்பந்தமே பரவலாக உள்ளது.

தனது மகளின் திருமண விவகாரத்திலும் கணவனின் தலையீடே அதிகமுள்ளது, அது தவறெனத் தெரிந்தும் தடுக்க இயலாத நிலையே உள்ளது. இஸ்லாமிய ஆண் ஒருவன் வேற்று மத பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருப்பது அவர்களுக்குத் தவறாகப் படவில்லை, அதே சமயம் வேற்று மதத்தினரைக் காதலித்து மணப்பது மிகப்பெரிய குற்றமாகக் கருத்தப்படுகிறது.  கணவனை இழந்த பெண்ணிருவர் வேறொரு ஆணுடன் தொடர்ப்பிலிருப்பதும், இறுதியில் துர்மரணமடைவதுமாக உள்ளது. மரபு மீறல்கள் ஆங்காங்கே வந்து செல்வது தவறாகத் தோன்றவில்லை, (பெண்களுக்கான) மரபு என்பது ஆண்களால் வகுக்கப்பட்ட ஒன்றுதான். வைப்பாட்டி வைப்பதும், கருக்கலைப்பு செய்வதும் மரபு மீறல்கள் தான்!

நாவல் முழுவதும் பெண்ணுலகின் துன்பங்கள், வலிகள் பற்றி விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது இஸ்லாமிய சமூகப் பெண்களுக்கு மட்டுமின்றி பெரும்பான்மையான பெண்களுக்கும் பொதுவானதாக உள்ளது. நாவலாசிரியர்கள் தொடத் தயங்கும் சிக்கலான கருக்களத்தை நேர்த்தியாகக் கொண்டு சென்றது மிகவும் பாராட்டுக்குரியது. இஸ்லாமிய சமூகத்தில் நேரிடையான அல்லது மறைமுக எதிர்ப்பைப் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. வலைதள உலாவலில் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே காணமுடிகிறது. இதில் இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று இது ஒரு பக்கச்சார்பு கொண்ட கோணல் கதை என்றும் விமர்சித்துள்ளனர். 

ஆனால் எனது பார்வையில், இந்நாவல் இஸ்லாமிய சமூகத்தைப் பற்றியது மட்டுமல்ல இன்னபிற சமூகத்திலும் இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நாவல் பெண்களுக்கெதிரான சுரண்டல், ஆணின் வன்மம் முதலியவற்றை மதம், சமூகத்தின் போக்கு மற்றும் குடும்ப அமைப்பின் மூலம் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலை பற்றி விரிவாகக் கூறுகிறது. இந்நாவலை மற்ற நாவல்களைப் போல் அணுகாமல், பெண்ணியக் கூறுகள், உடலியல் சார்ந்த நோக்கில் வாசிக்கப் பட வேண்டும் என்பதுவே எனது பரிந்துரையாகும்.

வாசித்துப் பாருங்கள், பெண்களின் அகவுலகை அறியும் போது அவர்களைச் சுற்றி நாம் ஏற்படுத்தியிருக்கும் அடிமைத்தனத்தை உணரமுடியும்.