செருமுக நோக்கிச் செல்க - புறநானூறு


சங்க கால பெண்களின் நிலை குறித்த பல்வேறு விவாதங்களும், எதிர்மறைக் கருத்துக்களும் ஆங்காங்கே நிகழ்ந்து வந்தாலும், அப்பெண்கள் வீரத்திலும், அறத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறுக்க இயலாது. சங்க காலப் பெண்பால் புலவர்கள் பலரும் பெண்களின் வீரம், செருக்கு, துணிவு, நாட்டுப்பற்று ஆகிய பண்புகளைப் பற்றிப் பல்வேறு செய்யுள்களில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். 
புறநானூற்றுப் பாடலொன்றில் ஒக்கூர் மாசாத்தியார் எனும் பெண்பால் புலவர் ஒருவர், தந்தை மற்றும் கணவனை இழந்து நிற்கும் தமிழ்ப் பெண்ணொருத்தி தன் நாட்டைக் காப்பதற்காக, அவளது சிறு மகனையும் போருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறுகிறார்.

புறநானூறு பாடல்  எண் - 279
ஆசிரியர் - ஒக்கூர் மாசாத்தியார்
திணை – வாஞ்சி (புறத்திணை)

கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலக்கி, ஆண்டுப்பட்டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇப,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்,
செருமுக நோக்கிச் செல்க என விடுமே !

கடிது – கடுமையானது;  மூதில்(ன்) – முதுமையான, பழைய; செரு – போர்; மேல்நாள் – முன்னொரு நாள்; பெருநல் – நேற்று; கொழுநன் – கணவன்; நிரை – ஆநிரை (பசுக்கள்); விலக்கி (விலங்குதல்) - குறுக்கிட்ட; செருப்பறை – போர்ப்பறை; வெளிது – வெண்மை; பாறுமயிர் -  உலர்ந்து விரிந்த மயிர்; உடூஇ – உடுத்தி.

பாடலின் பொருள்:
இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு கடுமையானது. இவள் முதுமையான மறக்குடியின் பெண்ணாக இருப்பதற்கு தகுந்தவள் தான். முன் ஒரு நாளில் நிகழ்ந்த போரில் இவள் தந்தை யானையை எதிர்த்துப் போரிட்டு களத்தில் உயிர் நீத்தான். நேற்று நிகழ்ந்த போரில் இவளது கணவன் பசுக்களை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் உயிர் துறந்தான்.

இன்று, தெருவில் போர்ப்பறை ஒலி காதில் கேட்டதும் முகம் மலர்ந்து, அறிவு மயங்கி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த தனது ஒரே மகனின் கையில் வேல் கொடுத்து, வெண்மையான ஆடையை விரித்து உடுத்தி, அவனது உலர்ந்த தலைமயிர் குடுமியை எண்ணெய் பூசிச் சீவி, போர்க்களம் நோக்கிச் செல்லுமாறு அனுப்பிவைத்தாள்.
 
இவளது துணிவையும் நாட்டுப்பற்றையும் என்னவென்று சொல்வது. 

இதுபோன்று ஈழப்போரில் எண்ணற்ற நம் தமிழ்ப் பெண்கள் தத்தம் உறவுகளை போர்க்களத்திற்கு அனுப்பி வைத்து, தாமும் சென்றதனால் அவர்களும் முதுமையான மறக்குலப் பெண்களாகவே இருக்க முடியும்.

படம்: கூகிள்

5 comments:

  1. சிறப்பான புறநானூற்றுப் பாடல். அதற்கான ஓவியம் மிகச் சிறப்பு.

    பொருளுடன் பாடல் பகிர்ந்தமைக்கு நன்றி. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம், வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. புறநானூறு மட்டுமல்ல எந்த இலக்கியமாக இருந்தாலும் சரி அதனை இலக்கியமாக பார்க்கும் வரை o.k ... ஆனால் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டால் முரண்பாடுகளே மிஞ்சும். ... கடுமையான போருக்கு இன்னும் உடல்தகுதி அடையாத அதுவும் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையின் கையில் வேல் கொடுத்து அனுப்புவது எந்த மாதிரியான அறம் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த குழந்தை போரில் என்ன கிழிக்க போகிறது என்பதும் புரியவில்லை. எனவே சங்ககால இலக்கியங்களை வெறும் இலக்கிய நாவல்களாக எடுத்துகொண்டு படித்து மகிழவேண்டுமேயொழிய அதை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடல் புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் இங்கு குறிப்பிட்டது ஒருவகையில் உண்மைதான், குழந்தையை போருக்கு அனுப்புவது சரியானதல்ல. ஆனால் பாடலினூடே கூற முற்பட்டது அன்றைய மக்களின் துணிவு, நாட்டுப்பற்று ஆகியனவே. நம்மைச் சுற்றி நிகழும் தவறை பார்த்துக் கண்டுங்காணாமல் செல்வது நம் துணிவின்மையை காட்டுகிறது, இது தொடர்ந்து நிகழ்வது வருத்தமான ஒன்று.

      Delete
  3. பொருத்தமான - தகுந்த பதில்

    ReplyDelete