Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

அவன் கண்களுக்கு வேசியானாள்!!



``இன்னும் எவ்வளவு நேரந்தான் குடிச்சிட்டு இருப்ப, போதும் வீட்டுக்குப்  போ''.

``இல்ல முருகா மனசு சரியில்ல; என்னைத் தொந்தரவு செய்யாதே. நீ கிளம்பு நான் பொறுமையா வர்றேன்''.

``நீ சொன்னாக் கேக்க மாட்ட, இனி உன் இஷ்டம்''.

இன்றும் தனபாலின் உள்ளம் சூறாவளியால் சீரழிந்த தோப்பைப் போன்று சிதறிக் கிடந்தது. தற்கொலைப் பற்றிய எண்ணமும் மெல்ல மெல்லத் தோன்றலாயிற்று. குடி என்பது எப்பேர்பட்ட நல்ல மனிதனையும் அழிக்கும் என்பதற்கு  இதோ இந்த தனபாலுதான் சரியான உதாரணம்.

இன்று குடிகாரன் என்று ஏசும் இதே ஊர்தான், இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் `ஆம்பளைனா நம்ம தனபாலு மாதிரி இருக்கணும். எப்படி நல்லா வேலை செய்யறான், எல்லாரிடமும் பணிவு, அக்காவ நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டு, அம்மாவையும் பார்த்துக்குது இந்தப் புள்ள` என்று மெச்சிக் கொண்டது. இவையனைத்தும் அவனுக்குத் திருமணம் என்ற ஒன்ற நடக்கும் வரையில்தான்; திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன; ஆனால் இன்று விருப்பமில்லாத பல திருமணங்கள் நரகத்தையும் தாண்டிச் செல்கின்றன.  

தனபாலின் மனதிற்குள் சரசுவைப் பார்த்து மனம் விட்டுப் பேசி எப்படியாவது அவளைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். இனியும் இந்தச் சித்திரவதையை தன்னால் அனுபவிக்க முடியாது என்று சொல்லிக் கொண்டு மிதிவண்டியில் சரசுவின் வீட்டை நோக்கிப் பயணமானான்.

``ஏய் சரசு நான் தனபால் வந்திருக்கேன், கதவைத் திற''.

உள்ளேயிருந்து சரசுவின் குரல், ``இருய்யா வர்றேன், கதவை ஒடைச்சிராதே. என்ன இந்த ராத்திரி நேரத்தில வந்திருக்கே, உள்ள வா.

``ஏன் இந்த நேரத்தில நான் வரக்கூடாதா?''.

``யோவ் அப்படியெல்லாம் இல்ல, திடுதிப்புன்னு வந்திருக்கேயேன்னு கேட்டேன். அந்தப் பாய்ல உட்காரு. எப்படியா இருக்க, கொஞ்ச நாளா ஆளப் பார்க்கவே முடியல''.

``சரசு நீயும் இங்க வந்து உட்காரு, தலையெல்லாம் ஒரே வலி மண்டை வெடிச்சிரும் போல இருக்கு''.

``இன்னைக்கும் சாராயம் குடிச்சியா, ஏன்யா இப்படி கெட்டுப்போற. உன்கிட்ட எத்தனைத் தடவ சொல்லிருக்கேன், அந்தப் பாலாப் போன சாராயத்தைக் குடிக்காதேன்னு. போன வாரந்தான் நம்ம அருகாணி புருஷன் சாராயங் குடிச்சு செத்துப் போனான், நீயும் அந்த மாதிரி செத்துப் போலாம்னு இருக்கியா? 

``குடிக்காம என்னால இருக்க முடியாது, குடிச்சாத்தான் எனக்கு நிம்மதிும், குடிக்கறத நிறுத்திட்டா கண்டிப்பா செத்துப் போயிருவேன்''.
 
``நீ எதையோ நினைச்சு குழம்பி போயிருக்க, நான் போய் காபித்தண்ணி எடுத்திட்டு வர்றேன்''.

``இந்த வாழ்க்கையே புடிக்கல, இப்படி இருக்கறதுக்கு செத்துப் போறதே மேல்; இந்த மாதிரி பொம்பள கூட இனி என்னால ஒரு நிமிஷங்கூட சேர்ந்து  குடும்பம் நடத்த முடியாது. அவளை அத்து விட்டாத்தான் எல்லாம் சரியாகும்''.

``இந்தா இந்தக் காபியைக் குடி. முன்னெல்லாம் இப்படி புலம்ப மாட்ட, சரி ஏதோ பிரச்சனைன்னு தெரியுது பொறுமையா சொல்லு''.

``ஏய் சரசு, காப்பில சீனியே இல்ல''.

``அடடா உன்னைப் பார்த்த அவசரத்தில எல்லாம் மறந்து போச்சு, அதை குடு நான் போய் சீனி போட்டு எடுத்திட்டு வர்றேன்.  வர வர ஞாபக மறதி அதிகமாயிட்டே இருக்கு''.

``சரசு இங்க வந்து பக்கத்தில உட்காரு, உன்கிட்ட என் பிரச்சனையெல்லாம் சொல்லி மனசுவிட்டுப் பேசணும். எனக்கு உன்னைவிட்டா வேற யாரு இருக்கா, அப்படியே உன் மடியில படுத்து, மனசில இருக்கற பாரத்தைச் சொல்லி அழலாம்னு இருக்கு''.

``புரியுதுயா, எதுவா இருந்தாலும் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரலாம். முதல்ல நீ குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு''.
 
``அதுக்கு முன்னாடி நான் சொல்றத நீ கேட்டாத்தான் நான் சத்தியம் பண்ணுவேன்''.

``சரி அதான் எல்லாம் பேசலாம்ன்னு சொல்லிட்டேன்ல. ஆத்தா எப்படி இருக்கா, உங்க வீட்ல தானே இருக்காங்க''.

``இல்ல ரெண்டு மாசமா அக்கா வீட்டில இருக்கு. நெஞ்சு வலின்னு சொன்னாங்க அதான் போன வாரத்துல போய்ப் பார்த்துட்டு வர்றேன். இப்ப பரவாயில்ல''.

``என்னய்யா சொல்ற, நல்லாத்தானே இருந்தாங்க, திடீர்னு என்னாச்சு? ஆம்பளப் பையன் நீதானே ஆத்தா வைச்சுப் பார்த்துக்கணும், பொண்ணு வீட்டில இருந்தா நல்லாவா இருக்கும். நீ உன் வீட்டில வைச்சுப் பார்க்கறது தான் சரி''.

``இங்க இருந்ததால தான் அவங்க உடம்புக்கு முடியாமப் போச்சு. இங்க யார் இருக்கா அவங்களப் பார்த்துக்கறதுக்கு?''.

``ஏன் உன் பொண்டாட்டி இல்லையா? நீங்க ரெண்டு பேருந்தான் பார்த்துக்கணும். பானு எப்படி இருக்கா?''.

``அவளைப் பத்திப் பேசாதே, அவளாலதான் இவ்வளவு பிரச்சனையும், நான் சீரழிஞ்சு போக அவ தான் காரணம். அவளைக் கல்யாணம் பண்ணின நாள்லேயிருந்து பிரச்சனைதான்''.

``ஏன்யா அப்படி சொல்ற, பாவம் அது சின்னப் பொண்ணு. பொண்ணப் பார்த்தா நல்ல வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கு. நீ தான் அவள திட்டிட்டு இருக்கற. அப்படி என்ன தப்பு செஞ்சா?''.

``தினமும் பிரச்சனை, வீட்டில சொன்னதைக் கேக்கறதில்லை;  வேலைக்குப் போயிட்டு  வீட்டுக்கு வந்தாலே பிரச்சனைதான். சோறாக்கத் தெரியல, பெரியவங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியல, அவளால தான் எங்கம்மாவுக்கு இப்படி முடியாம போச்சு. என்னோட சண்டைப் போடறது பத்தலைன்னு அவங்களோடவும் பிரச்சனை, சண்டை. இது தான் தினமும் நடக்குது, ஒரு நாள் என்கிட்ட அடிவாங்கியே சாகப் போறா''.

``அதைப் பார்த்த அப்படியெல்லாம் கொடுமை பண்ற பொண்ணு மாதிரித் தெரியல. ஒரே பொண்ணுன்னு செல்லமா வளர்ந்திருக்கும், நீ தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகணும். இங்க சண்டையில்லாத வீடு எங்க இருக்கு; புருஷன் பொஞ்சாதி சண்டையைப் பேசித்தான் தீர்க்கணும். அதை விட்டுட்டு கொன்னு போடுவேன், தற்கொலை பண்ணிக்குவேன்னு புலம்பறது தப்பு''.

``உன்னைக் காதலிச்சு ஏமாத்தியதற்கு கிடைச்ச தண்டனை இது. பெண் பாவம் பொல்லாததுன்னு சொல்றது எவ்வளவு உண்மை, உன்னை விட்டுட்டுப் போனப்ப நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பே. நீ அன்றைக்குச் சொன்னது இன்னும் என் காதில ஒலிச்சிக்கிட்டே இருக்குது''.

~உன் கூட வாழ எனக்குத் தான் கொடுத்து வைக்கல, நீ உங்க அம்மா பார்த்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்க, அப்பத்தான் உன் வாழ்க்கை நல்லாயிருக்கும். பொண்ணு நல்லா அழகா இருக்கா, சொத்து பத்தெல்லாம் இருக்குதுன்னு பேசிக்கறாங்க! என்னை மாதிரி வேசியோட புள்ளையக் கல்யாணம் பண்ணினா என்ன கிடைக்கும்,? அவமானம் தான் கிடைக்கும். பழச யாராலும் மாத்த முடியாது.  நான் நல்லா யோசிச்சுப் பார்த்திட்டேன் நீ அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணினா நீ மட்டுமில்ல உங்க அம்மாவும் சந்தோஷப் படுவாங்க. என்னைப் பத்திக் கவலைப்படாதே; இதை விட நிறைய கஷ்டத்தப் பார்த்திட்டேன், எல்லாம் போகப் போக சரியாயிடும். இந்த காதல் கத்திரிக்காயெல்லாம் அப்படியே மறந்து போயிடும்~.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சரசுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. தனபாலுக்குத் தெரியாமல் முந்தானையில் துடைத்துக் கொண்டு மீண்டும் சொல்லலானாள்,

``இன்னுமா அந்தப் பழசயெல்லாம் நினைச்சிட்டு இருக்கே; நான் அதெல்லாம் மறந்து ரொம்ப நாளாச்சு. முதல் இரண்டு மூணு மாசம் கஷ்டமாயிருந்தது, அப்பறம் எல்லாம் பழகிப் போச்சு. பழசையே நினைச்சிட்டு இருந்தா இங்க ஒண்ணும் ஆகப்போறதில்ல. என்னைப் பாரு எந்தக் குறையுமில்லாம நல்லா சந்தோஷமா இருக்கேன், உன்னையே நினைச்சிட்டு செத்தா போயிட்டேன்.  எல்லாம் விதிப்படி தான் நடக்கும், இப்படி என்னைப் பத்தி யோசிக்கறத நிறுத்திட்டு இனி ஆக வேண்டிய வேலையப் பாரு''.

சரசுவும் தனபாலுவும் மூன்று வருடங்களாகக் காதலித்து வந்தனர். முதலில் கோயில் திருவிழாவில் பேச ஆரம்பித்து, நட்பில் தொடங்கிய அவர்களது உறவு பின்னாளில் காதலாக மலர்ந்தது.

தனபாலின் அப்பா இறந்த பிறகு, அவன் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய சுழ்நிலைக்குத் தள்ளப்பட்டான். சரசுவோடு பழகிய பிறகே தனபாலுக்கு வாழ்வில் நம்பிக்கையும் பக்குவமும் வந்தது. வேலைக்குச் சென்று சம்பாதித்ததால் அவன் அக்காவிற்கு நல்ல வரண் பார்த்துத் திருமணம் முடித்துக் கொடுத்தான். தனபால் படிப்படியாக முன்னேற சரசு தான் முதற் காரணம்; அவன் சோர்ந்த போன தருணங்களில் ஒரு அன்னையைப் போன்று அவள் அளித்த ஆறுதலும், நம்பிக்கையும் அவன் முன்னேற்றத்திற்குத் துணையாய் நின்றது. ஒரு கட்டத்தில் இருவரும் நிஜக் கணவன் மனைவி போல மனதிற்குள் நினைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர்.  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்பது தனபாலின் வாழ்வில் உண்மையாயிற்று. 

சரசுக்கு ஐந்து வயதிருக்கும் போது அவள் அப்பா வீட்டை விட்டு ஓடிவிட்டார். வயிற்றுப் பிழைப்பிற்காக அவள் அம்மா அது போன்ற தொழில் செய்யத் தொடங்கினாள். அதில் கிடைக்ககும் காசில் தான் அவளது குடும்பம் ஓடிற்று. சரசு பெரியவளான நான்கைந்து வருடத்தில் அவள் அம்மாவும் இறந்துவிட்டாள். அம்மா இறந்த பிறகு சரசு பட்ட இன்னல்களும் கொடுமைகளும் எண்ணிலடங்கா. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அம்மா செய்த தவறை செய்யக் கூடாது என்ற கொள்கையோடு இருந்தாள். எந்த ஆணோடும் சிரித்துப் பேச மாட்டாள்; இதுவரை அவளிடம் எத்தனையோ ஆண்கள் தவறாக நடக்க முயற்சி செய்தும் அவர்களால் அவளை நெருங்க முடியவில்லை. 

தனபாலின் நண்பர்கள் பலரும் சரசுவுடனான காதலைத் தவிர்க்கும்படிக் கேட்டும், தனபால் பிடிவாதமாக மறுத்தான். `என் சரசு பத்தற மாசத்துத் தங்கம், யாரும் அவகிட்ட தப்பான எண்ணத்தில் நெருங்க முடியாது, அவ கண்ணகி மாதிரி எரிச்சிடுவா. அவங்க அம்மா எப்படி இருந்தாங்கன்னு எனக்கு முக்கியமில்ல, சரசு அந்த மாதிரி எந்தவொரு தவறான காரியத்தையும் செய்யமாட்டாள்` என்று தெளிவாக இருந்தான். 

இப்படி இன்பமாக சென்ற அவர்களது வாழ்வில் அந்த நாளும் வந்தது. தனபாலின் அம்மா சரசுவைச் சந்தித்துக் கெஞ்சிய பிறகு அவளால்  மறுப்புச் சொல்ல முடியவில்லை. அவன் அம்மாவின் அழுகைக்கு முன் அவளுடைய சந்தோஷம் பெரிதாகத் தோன்றவில்லை. தனது வாழ்வு அழிந்தாலும் தவறல்ல; தன் காதலனின் வாழ்வு நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தன் காதலைத் தியாகம் செய்தாள். 

முதலில் தனபால் அவள் சொல்லுக்குச் செவி சாய்க்கவில்லை; ஆத்திரத்திலும் கோபத்திலும் செய்வதறியாது தவித்தான். எவ்வளவு சொல்லியும் சரசு அவனைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள். தன் குடும்பக் கதையைக் கூறி மெல்ல மெல்ல அவனை விட்டு விலக ஆரம்பித்தாள். கவலையிலிருந்த தனபால் கடைசியில் தன் அம்மா பார்த்து நிச்சயித்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். 

திருமண வாழ்க்கை அவன் காதல் வாழ்க்கையைப் போல் இனிக்கவில்லை; தனபாலின் மனைவி அவனைவிட அந்தஸ்த்தில் பெரியவள். செல்லமாக வளர்ந்து விட்டதால் குடும்ப உறவுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் தன் மனதிற்குத் தோன்றியபடி வாழத் தொடங்கினாள். 

பின்னாளில் தன் நெருங்கிய தோழி மூலமாக தனபாலின் முந்தைய காதல் பற்றித் தெரியவர அவனை வெறுக்கத் தொடங்கினாள். வெறுப்பில் உழன்ற அவர்களின் வாழ்க்கை நாளடைவில் சண்டை, சச்சரவு என்று பெரிதாகி முடிவில் இருவரும் தாம்பத்தியத்திலிருந்து விலகி வாழ ஆரம்பித்தனர். கவலைக்காகக் குடிக்கத் தொடங்கிய தனபால், மெல்ல மெல்ல அந்தக் குடிக்கு அடிமையானான்.  

இவையெல்லாம் நடந்து இன்றுடன் ஓராண்டுக்கு மேலாகிறது. 

``சரசு உன்கிட்ட கடைசியா கேக்கறேன், என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா? இது நான் குடிபோதைல எடுத்த முடிவல்ல நல்லா யோசிச்சு எடுத்த முடிவு. வாழ்ந்தா இனி உன் கூட மட்டும் தான் வாழ்வேன். நீ என்ன சொல்ற?''.
 
``நீ சொல்றது எதுவும் சரியில்ல. இப்ப உனக்கு கல்யாணமாகி பொண்டாட்டி இருக்கா, அவ உயிரோட இருக்கும் போதே இன்னொருத்திய தேடுனா அது பெரிய தப்பு, எங்கம்மா வாழ்க்கை மாதிரி ஆயிடும். கல்யாணத்திற்கு முன்னாடி நாம எப்படி இருந்தோம்ங்கிறது முக்கியமில்ல, ஆனா ஒருத்திய கைப்பிடித்த பிறகு அவ தான் உன் மனைவி. இன்னொருத்திய மனசால நெனைக்கிறது கூட தப்புதான். உன்னைக் காதலிச்சப்ப எவ்வளவோ நாள் சந்தோஷப் பட்டிருக்கேன், உன்னை மாதிரி புருஷன் கிடைக்கிறது என் அதிர்ஷடம்னு; ஆன இன்னைக்கு நீ சொன்னத நினைச்சுப் பார்த்தா அதெல்லாம் தப்புன்னு தோணுது''.

``போதும் சரசு, நீ சொல்ற எதையும் கேட்கிற மனநிலைல நானில்லை. அவ கூடச் சேர்ந்து இனி ஒரு நிமிஷங்கூட என்னால வாழ முடியாது. இதுவரைக்கும் நடந்ததை மறந்திட்டு, நாம ரெண்டு பேரும் கோயில்ல போய் கல்யாணம் பண்ணிட்டு, ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கலாம். அதுல நீயும் நானும் மட்டும்தான், வேற யாரும் வேண்டாம். நான் உனக்கு செஞ்ச தப்புக்கு இதுதான் பிராய்சித்தம்''.

``ச்சீ நீ என்ன பேசற, கல்யாணம்ங்கிறது உடம்புக்கு மேல போடற சட்டை மாதிரி நினைச்சிட்டியா, வேண்டாம்னா கழற்றிப் போட! அது ஒரு உறவு, அந்த உறவை அசிங்கம் பண்ணாதே. புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல ஆயிரம் பிரச்சனை வரும் அதைப் பேசித் தான் தீர்க்கணும், அதை விட்டுட்டு ஓடிப் போலாமான்னு கேக்கற! ச்சீ எனக்கே அசிங்கமா இருக்குது, உன்னைப் போய் காதலிச்சேன்னு நினைக்கிறதுக்கு'.

உங்கம்மாவுக்கும் அவங்க வீட்டுக்கும் என்ன பதில் சொல்லுவே? இது வெளியில தெரிஞ்சா உனக்குத் தான் அசிங்கம். பொண்டாட்டிய வைச்சு ஒழுங்கா குடும்பம் நடத்த தெரியாதவன்னு சொல்லி ஊரே சிரிக்கும்; யோசிச்சுப் பாரு இந்த ஒரு வருஷம் அந்த பொண்ணு மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். வேதனையை மறக்க நீ சாராயங் குடிப்ப, அவளால என்ன செய்ய முடியும். அப்படியே மனசுக்குள்ள போட்டு அழவேண்டியது தான். எல்லா ஆம்பிளைகளும் ஒரே மாதிரிதான் இருக்கீங்க.

அந்த சாராயத்தைக் குடிச்சு உன் மூளையெல்லாம் அழிங்சிருச்சு; இப்ப உங்க வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கு; நேரம் கிடைக்கும் போது யோசித்துப் பார்த்தேனா உனக்கே இதெல்லாம் தப்புன்னு புரியும். பாவம் அந்தப் பொண்ணு வீட்டில தனியா இருப்பா, இப்படி பொண்டாட்டிய விட்டுட்டு வர்றது தப்பு. ரொம்ப நேரமாகுது எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்``

``நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல. அன்றைக்கு உன் பேச்சக் கேட்டதால தான் இவ்வளவு பிரச்சனையும்; போதும் இதுக்கு மேல எதுவும் சொல்லாதே. கல்யாணம் வேண்டாம்னா பரவாயில்ல; நான் உன் வீட்டிலேயே இருந்தர்றேன், இப்ப இருக்கற மாதிரியே இருக்கலாம், யாருக்கும் பிரச்சனை வராது''.

சரசுக்கு நன்றாக விளங்கிற்று இனி தனபாலுவை நல்ல முறையில் சொல்லித் திருத்துவதென்பது முடியாது; எனவே இருப்பது ஒரே வழி - அவனுக்குத் தன் மேல் வெறுப்பு ஏற்பட்டால் நிச்சயம் விலகுவான் என்றெண்ணிக் கூறத் தொடங்கினாள்.

``யோவ் உன்கிட்ட ரொம்ப நாளா ஒண்ணு சொல்லணும்னு நினைச்சிட்டிருந்தேன், ஆனா அதை எப்படி சொல்றதுன்னு தெரியல. உனக்கு நம்ம மேஸ்திரி கந்தசாமியைத் தெரியுமா?`''
 
``ஹூம் தெரியும் சொல்லு``

``இப்ப அவங்க ஆளுகளோட தான் வேலைக்குப் போறேன். தினமும் ஏதாவது வேலையிருக்குது, அப்படியே கொஞ்சம் காசு பார்க்க முடியுது. மூணு மாசத்துக்கு முன்னாடி அவரு பொண்டாட்டி செத்துப் போச்சு, ரெண்டு வயசில சின்னக் குழந்தை வேற, ரொம்ப நல்ல மனுஷன் பார்க்கவே பாவமா இருந்துச்சு. அடிக்கடி இங்க தான் வருவாரு, எல்லா சோகத்தையும் என்கிட்ட சொல்லி அழுவாரு.  இப்ப கூட நீ வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் இங்கதான் இருந்தாரு;  பாவம்னு பேச ஆரம்பிச்சு எல்லாம் நடந்திருச்சு. எனக்கும் வேற வழி தெரியல, வயசாயிட்டே போகுது இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இப்படியே இருக்க முடியும். வாரத்திற்கு ரெண்டு மூணு தடவ வந்துட்டுப் போவாரு; உன்னை மாதிரியே கரு கருன்னு சுருட்ட முடி. அதைப் பார்க்கும் போது எனக்கு உன் ஞாபகந்தான் வரும்.``

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தனபாலின் உள்ளம் குமுறியது, கண்கள் கோபக் கனல் வீசியது, வெறுப்பின் உச்சத்தை அடைந்தான். 

``ச்சீ நீயெல்லாம் ஒரு பொம்பளையா! இதெல்லாம் கொஞ்சங்கூட வாய் கூசாம சொல்ற. வேலை குடுக்கறான்னா எது வேணாலும் செய்வியா? உங்கம்மா புத்திதான் உனக்கு வரும். முதல்ல நீ யோக்கியமா இரு அப்பறம் எல்லாருக்கும் புத்திமதி சொல்லு. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலைன்னு சும்மாவா சொன்னாங்க. உன்னை மாதிரி பொம்பளைக மூஞ்சியில விழிக்கறதே பாவம், இதுதான் நான் உன்னைப் பார்க்கிற கடைசி தடவை'' என்று கூறி சரசுவின் வீட்டிலிருந்து வெளியேறி வேகமாக சைக்கிளில் புறப்பட்டான்.

அவன் செல்லும் வழியில் மண் வாசனை எழும்பிற்று; மெல்ல மெல்ல மழை பெய்யத் தொடங்கியது.

விளக்கிலிருந்த வெளிச்சம் மெல்ல மெல்லக் குறைந்து, பின் அணைந்து, வீடு முழுவதும் காரிருள் சூழ்ந்தது. சரசுவின் கண்களில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

காதலனின் கண்களுக்கு வேசியானால் இந்த கண்ணகி.

இந்த வேசியின் தியாகம் அந்த மழையினும் போற்றத்தக்கது. 


அலமேலு பாட்டி


``பாட்டி தினமலர் பேப்பர் ஒண்ணு குடுங்க’’

``இந்தாப்பா மீதி காசு, தம்பிய போன வாரத்தில பாக்க முடியல

``ஊருக்குப் போயிருந்தேன், அதான் ஒரு வாரம் லீவு போட்டுட்டேன். நேத்து நைட் தான் திரும்பி வந்தேன்’’.

``ஊர்ல எல்லாரும் சௌக்கியமா இருக்காங்களாயா?”

``எல்லாரும் நல்லா இருக்காங்க பாட்டி

``தம்பி பேரென்ன, எந்த ஊரு? தெனமும் பாக்கறது ஆன பேருதான் தெரியாது!

என் பேரு ரவி பாட்டி, நமக்கு திண்டுக்கல்லுக்குப் பக்கத்தில இருக்கிற சின்னாளப்பட்டி தான் ஊரு. பெத்தவங்க ஊர்ல இருக்காங்க, தங்கச்சி படிச்சிட்டு இருக்கா, நான் இங்க பனியன் கம்பெனில சூப்பர்வைசரா இருக்கேன். எப்படி பாட்டி நான் ஊர்ல இல்லாதத கரெக்டா கண்டுபுடிச்சீங்க!

அதான் தெனந்தோறும் பாக்கிறேன்ல, அவ்வளவு சீக்கிரத்தில மூஞ்சி மறந்து போயிருமா?”

சரி பாட்டி வேலைக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன்”.

சரிப்பா பாத்துப் போயிட்டு வாங்க.

இதுதான் நம்ம அலமேலு பாட்டி. பாட்டியைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தினமும் நாம் சாலையில் செல்லும் போது பிளாட்பாரத்தில் பூ, பேப்பர் விற்றுக் கொண்டிருக்கும் கிழவியைப் போல இருப்பார். 

பாட்டி பிறந்தது, வளர்ந்தது எல்லாமே திருப்பூர் தான். சுருக்கம் விழுந்த தோலும், முகத்தில் வாகனப்புகையால் படிந்த புழுதியும், வெத்தலைப் பாக்குக் கறையேறிய முன்பற்களும், தலையைச் சுற்றித் தூசும், வெள்ளை நரையும், நைந்த  நிலையிலிருக்கும் பழைய சீலையும், சாயம் போன ஜாக்கெட்டுடன், நடையில் சிறிது தளர்வும், காய்ந்த அந்த உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய சோகம் கலந்த புன்னகையுடன் இருப்பார்.

பாட்டியின் கண்கள் அந்தச் சாலையில் செல்லும் பாதசாரிகளின் முகங்களை எடை போட்டுக் கொண்டே இருக்கும். பாட்டியின் ஒரே எதிரி வாகன நெரிசலின் போது ஏற்படுத்தப்படும் ஹாரன் தான். அந்த சபதத்தைக் கேட்கும்போதெல்லாம் அவர் கணவர் வாகன விபத்தில் இறந்ததுதான் நினைவுக்கு வரும்.

யாருடைய முகத்தையும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார், அப்படியொரு ஞாபகசக்தி இந்த 68 வயதிலும். கணவர் இறந்த பிறகு வயிற்றுப் பிழைப்பிற்காக இந்தப் பேப்பர் கடையைத் தொடங்கினார். ஏறக்குறைய 16 வருடங்களாகிறது, இதுவரை யாருடைய உதவியையும் நாடிச் சென்றதில்லை. வாழ்க்கையில் கடன் வாங்கக் கூடாது என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகிறார்.

பாட்டியின் அந்தப் பேப்பர் கடை பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள நடைபாலத்தை ஒட்டியிருக்கும் பிளாட்பாரத்தில் இருக்கிறது. கடையிலுள்ள சொத்துக்கள் என்று பார்த்தால் தலைக்கு மேலிருக்கும் நீலநிற தார்ப்பாயும், உட்காருகின்ற முக்காலியும், தரையில் விரிக்கப்பட்டிருக்கும் தார்ப்பாயும், அதற்கு மேலே மொழிவாரியாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களும், நாளிதழ்களும், தார்ப்பாய் காற்றில் பறக்காமலிருக்க நான்கு முனையிலும் வைக்கப்பட்டிருக்கும் கருங்கற்களும் அடங்கும்.  


கடையில் தமிழ் மற்றும் ஆங்கில நியூஸ் பேப்பர், குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், மங்கையர் மலர்,  இந்தியா டுடே போன்ற வாரப் பத்திரிக்கைகள், சிறுகதைப் புத்தங்கள், சாமி பாட்டு,  ஜோசியம், ஆன்மீகப் புத்தகங்கள் என்று வெரைட்டியாக இருக்கும்.

கணவர் இறந்த பிறகு தனியாத்தான் இருக்கிறார். இந்த மார்க்கெட்டுக்குப் பின்புறம்தான் அவருடைய ஓலை மாளிகை. சிக்கனமாக இருப்பார், உதவின்னு வந்தா தன்னால் முடிந்ததைச் செய்வார்.

``பாட்டி என்ன இன்னைக்கு கடைய சீக்கிரமா மூடற மாதிரி தெரியுது?

பக்கத்துல நம்ம மாரியாத்தா கோயில் சாட்டியிருக்காங்க, அதான் நேரத்திலேயே  கிளம்பளாம்னு இருந்தேன்.

உங்க வீட்டுல யார்லாம் இருக்காங்க பாட்டி?”

அவரு போனதுக்கப்பறம் நான் தனியாத்தான்யா இருக்கேன்.

புள்ள குட்டிக எங்க இருக்காங்க?”

பெரிய பையன் டிரைவரா இருக்கான், சின்னவன் ஏதோ பிரஸ்ல வேலை செய்றான். ஆத்தா புண்ணியத்தில ரெண்டு பேரும் குழந்தை குட்டிகளோட சொகமா இருக்காங்க.

அப்ப நீங்க மட்டும் ஏன் தனியா இருக்கீங்க, அவங்களோட போய் இருக்கலாம்ல!

நமக்கு அந்த ஊரெல்லாம் சரிபட்டு வராது; இந்த ஊரை விட்டு வெளிய போக மனசு வரல. அங்கிருக்கற ஜனங்களோட பழக்க வழக்கம் நமக்கு ஒத்து வராது.

பேரக் குழந்தைகளோட சந்தோசமா இருக்காம, இப்படி தனியா கஷ்டப்படறீங்க, நீங்களும் அவங்ககூட ஒண்ணாயிருந்தா அவங்களுக்கும் பிரியமா இருக்கும்.

நீ சொல்றது சரிதான்பா, ஆனா இந்த கெட்ழடுக்கு அப்படியே பழகிப் போச்சு.  கண்ணு மூடுற வரைக்கும் இங்கயே இருந்தாப் போதும். பையனும் மருமகளும் வரும் போதெல்லாம் இதையே தான் சொல்றாங்க, ஆனா எனக்குத் தான் அந்த டவுன் வாழ்க்கை புடிக்கல. அங்க போன கைதி மாதிரி வீட்டுக்குள்ளையே இருக்கணும், எத்தன நேரந்தான் டிவியப் பார்த்துட்டு இருக்கிறது. எனக்கு கொஞ்சங் கூடப் புடிக்கல.

ஆமா பாட்டி, புது ஊர்னா அப்படித்தான் இருக்கும். எனக்கும் இங்க வந்த புதுசுல அப்படித்தான் இருந்துச்சு, மனுஷங்களோட பழகப் பழக இப்ப அதுவே புடிச்சுப் போச்சு. எல்லாரையும் கடைசியா எப்பப் பாத்தீங்க?”

ஏழெட்டு மாசம் இருக்கும், பசங்க வேலை செய்யறதால அடிக்கடி வரமுடியறதில்லை. அவங்களுக்கு இங்க வரப் பிரியந்தான், நான் தான் குழந்தைகளோட படிப்புக் கெட்டுப் போகுது வரவேண்டாம்னு சொல்லிட்டேன். பாவம் அதக் கேட்டு அவங்க மூஞ்சி வாடிப்போயிருச்சுஎன்று அன்பான அம்மாக்கள் சொல்லும் அதே பொய்யைச் சரியாகச் சொன்னார்.

புரியுது பாட்டி, என்னப்பாருங்க அப்பா அம்மாவ தனியா விட்டுட்டு இங்க வந்திட்டேன். உங்களுக்குப் புள்ளைக கூப்பிட்டாலும் போக மாட்டிறீங்க.

ஆனாலும் பேரன் பேத்திகளோட வெளையாட முடியலன்னு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. எங்கிருந்தாலும் நம்ம புள்ளைக நல்லா இருந்தா அதுவே போதும். அந்த மாரியாத்தாகிட்ட நான் வேண்டறது அதுதான்.

பாட்டிக்கு இங்கிருக்க புஸ்தகமெல்லாம் படிக்கத் தெரியுமா? “

ஏதோ கொஞ்சம் படிக்கத் தெரியும் தம்பி, எல்லாம் கலியாணத்துக்கு அப்பறம் அவரு சொல்லிக் கொடுத்ததால கத்துக்கிட்டேன். ஹூம்ம் அதெல்லாம் நெனச்சாலே கண்ணீரு தான் வருது.  அப்படியே வாழ்ந்து பழகியாச்சு.

பசங்க அப்பப்ப காசு அனுப்புவாங்களா?”

இல்லப்பா, நான் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன். இந்தப் பேப்பர் கடையில வர்ற வருமானமே என் ஒருத்திக்கு போதும். மீதிக் காசை கோயில்ல பிச்சையெடுக்கரவங்களுக்குத் தர்மம் பண்ணிருவேன். கையும் காலும் நல்லா இருக்கு, அதனால இருக்கற வரைக்கும் யாரோட காசும் வேண்டாம்.

பாட்டி உங்ககிட்ட இருந்து நெறைய கத்துக்கணும். இந்த வயசிலயும் உழைச்சு சம்பாதிச்சு, யாரையும் தொந்தரவு செய்யாம, நேர்மையா இருக்கீங்க.  இந்த மாதிரி பாக்கறதே அபூர்வந்தான். இதோ பேப்பர்ல பாருங்க, டெய்லியும் கொலை கொள்ளைன்னு; அடுத்தவன்கிட்டயிருந்து திருடிப் பொழைக்கிறது, என்னவொரு கேவலமான பிறவிக.  உழைச்சு சாப்பிட ஆண்டவன் கை காலக் கொடுத்தா அத வச்சு கொள்ளையடிக்கிறானுக, இவனுகளுக்கெல்லாம் நல்ல சாவே வராது.

தம்பி நேரமாயிட்டே இருக்கு கோயில்ல பூஜை ஆரம்பிச்சிருவாங்க, ஒரு உதவி பண்ண முடியுமா? என்கிட்ட 800 ரூபா இருக்கு, இந்தக் காசுக்கு ஒரு ஃபோன் வாங்கி தந்தீங்கன்னா சௌரியமா இருக்கும். பேரன்கூட பேசி ரொம்ப நாளாகுது. கடைக்குப் போய் வாங்க கொஞ்சம் தயக்கமா இருக்கு, அதான் தம்பிகிட்ட உதவி கேக்கலாம்னு இருந்தேன்.

ஒண்ணும் பிரச்சனையில்ல பாட்டி நான் வாங்கித் தர்றேன். பணத்தை அப்பறம் குடுத்தாப் போதும், அவசரமில்ல.  எந்த மாதிரி ஃபோன் வேணும் உங்களுக்கு?”

ஃபோனப் பத்தியெல்லாம் இந்த கெழுட்டுக்கு தெரியாதுப்பா, நீயே நல்லதா பாத்து வாங்கி குடு. அப்பப்ப புள்ளைகளோட பேசி அவங்க குரலக் கேட்டாலே போதும். வெளிய யார்கிட்டவும் கடன் வாங்கிப் பழக்கமில்லை, அப்படியே வாங்குனாலும் மனசை உறுத்திட்டே இருக்கும். இந்தப் பணத்துக்கு வர்ற மாதிரி வாங்கினா போதும்.

சரி பாட்டி, நான் அப்படியே கிளம்பறேன்.

 மூன்று நாட்களுக்குப் பிறகு:

சார் இங்க ஒரு பாட்டி பேப்பர் கடை வைச்சிருந்தாங்க பாத்தீங்களா?”

இல்ல சார் நான் ஊருக்குப் புதுசு எனக்கு தெரியாது, அந்த டீக்கடைல கேட்டுப் பாருங்க.

 அண்ணா இங்க பிளாட்பாரத்தில ஒரு பாட்டி கடை வைச்சிருந்தாங்களே அவங்க எங்கேன்னு தெரியுமா?”

யாரு நம்ம அலமேலு பாட்டியவா கேக்கிறீங்க.

ஆமா அவங்க தான், வீடு எங்கிருக்குன்னு சொன்னா போய் பார்த்திட்டு வந்திருவேன்.

தம்பி, நீங்க அவங்களுக்கு சொந்தமா? அந்தப் பாட்டி செத்துபோய் மூணு நாளாச்சு. சாயந்திரம் கோயிலுக்குப் போயிருக்காங்க, சாமி கும்பிடும்போது அப்படியே சன்னிதானத்திலேயே உசிரு போயிருச்சு. அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணிருக்கணும். அந்தன்னைக்கு காலைலகூட பக்கத்து வீட்டு லட்சுமி அவங்க புள்ளைக்கு ஜூரம்னு சொன்னதுக்கு முன்னூறு ரூபா குடுத்திருக்காங்க. பாவம் அந்த லட்சுமி இதைச் சொல்லிச் சொல்லி அழுதிட்டிருக்கா.

அய்யோ கடைசியா அவங்க முகத்தை ஒரு தடவப் பார்த்திருக்கலாம், முடியாமப் போச்சே என்றெண்ணிய ரவியின் கண்களில் கண்ணீர் தேங்கியது.

இந்தக் கண்ணீர் விலைமதிப்பற்றது. அலமேலு பாட்டியைப் போல் இன்றும் பலர் நம்மைச் சுற்றி வாழ்ந்து வருகிறார்கள்.

``இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
  இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’’

சூப்பர் மார்க்கெட் போகணும் லேட் ஆகுது!!

”ஏய் உள்ளே என்ன பண்ற? சூப்பர் மார்க்கெட் போகணும் லேட் ஆகுது”.

“டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க, நவீன் பாத்ரூம் போய்ட்டு இருக்கான்”.

“ஆமா வெளியில போகும் போது தான் அவனுக்கு எல்லாம் வரும்”.

“சரி, மறக்காம லாக் பண்ணி கீ எடுத்துக்கோ!”

சூப்பர் மார்க்கெட்டினுள் நுழையும் போது கதவிலிருந்த வந்த குளுமையான காற்று கோபியின் முகத்தில் பட்டது. தனக்கே உண்டான அவசர பாணியில் ஒருபுறமிருந்த தள்ளுவண்டியை உள்ளே தள்ளிச் சென்றான்.

”நவீன், உங்கப்பாவுக்கு பொறுமையே இல்லடா. எப்டி போறாரு பாரு”.

நவீன் தன் மழலை மொழியில், அப்பா பேட் ஃபெல்லோ என்று செல்லமாக சொன்னான்.

”காயத்ரி, பர்சேஸ் முடிச்சிட்டு நைட் அப்பிடியே ஹோட்டல்ல சாப்பிட்டுப் போலாம்”.

“ஓகே கோபி, இன்னைக்கு வீட்டு பக்கத்துல இருக்கிற நார்த் இண்டியன் ரெஸ்ட்ரன்ட்ல நாம சாப்பிட்டதே இல்ல, சோ அங்க ட்ரை பண்ணலாம்”.

உள்ளே நுழைந்தபின் எங்கு பார்த்தாலும் நியூ இயர் ஆஃபர், இதை என்னும்போதே கோபியின் கை பாக்கெட்டிலுள்ள கடன் அட்டையை தடவிச் சென்றது. ம்ம் இன்னைக்கு எவ்வளவு ஆகும்னு தெரியல, வழக்கம்போல ஃபோர் டிஜிட் போகாமிருந்தா சரி என்று எண்ணிக் கொண்டே சென்றான்.

“அப்பா, எனக்கு அந்த மெக்குயின் கார் வேணும். என்கிட்ட கிரீன் காரே இல்ல!”

“கடைக்கு வந்தா போதும் எப்ப பார்த்தாலும் இது அது வேணும்னு ஒரே டார்ச்சர். போன வாரம்தான் ஒரு கார் வாங்கின, அதுக்குள்ள இன்னோரு கார்…அப்பா சொன்ன பேச்சுக் கேட்டு சைலண்டா இரு, இல்லே நல்லா அடி வாங்குவே. வர வர உன் தொல்லை அதிகமாயிருச்சு”.

நவீன் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அருகிலிருந்த சிறுவனின் கையிலிருந்த கார் பொம்மையை வெறித்துப் பார்த்தான்.

“டேய் ஏன் அழுதிட்டு இருக்க? கடைக்கு வந்தா சைலண்டா இருக்கமாட்டே நீ!” 

“அம்மா, அப்பா என்னை திட்டிட்டே இருக்காரு. நான் மெக்குயின் கார் கேட்டேன் அப்பா நோ சொல்லிட்டாரு”

”நவீன் மறுபடியும் அழுகையை ஆரம்பிக்காதே. ஒழுங்கா குட் பாய்யா இரு, அம்மா அப்பாகிட்ட சொல்றேன்”.

“கோபி உன்கிட்ட க்ரே கலர் சர்ட் இல்ல, இந்த சர்ட் பாரு ரொம்ப நல்லா இருக்கு”.

”ரெண்டு வாரம் முன்னாடிதான் ஒரு சர்ட் எடுத்தேன். ஆல்ரெடி நிறைய சர்ட் இருக்கு, சோ இப்ப வேணாம்”.

”நல்லாயிருந்தா எடுக்கவேண்டியதுதானே, அப்புறம் நாம தேடும்போது வேணுங்கிற கலர் கிடைக்காது”.
”ஒவ்வொரு தடவையும் இப்டியே வாங்கிட்டுடிருந்தா அப்புறம் அதுவே பழக்கமாயிடும். இதை பார்த்துத்தான் அவன் கத்துக்கிறான், எங்க போனாலும் அடம்புடிக்கிறது”

”சரி உன் இஷ்டம் வேண்டாம்னா எடுக்க வேணாம்”.

“வழக்கம்போல மறந்திட்ட!, அரிசி மாவு இல்லைன்னு ஞாபகப்படுத்த சொன்ன, மறக்காம எடுத்துவச்சிக்க. நான் பில்லிங்ல வெயிட் பண்றேன்”.

“கோபி இந்தா இதையும் பில் போட்டிரு”.

“ஏய் இதை எதுக்கு எடுத்திட்டு வந்தே! அவனே மறந்திருப்பான்”

“பாவம் அவன், ஒரு கார் தானே, இருந்திட்டு போகட்டும். புள்ளைக்கு வெளியில போய் விளையாட முடியல அட்லீஸ்ட் வீட்டுக்குள்ளே தானே இருக்கான். நெக்ஸ் டைம் நோ சொல்லிடலாம்”

”சரி நீ மூஞ்சிய தூக்கி வச்சிக்காத, அதை குடு நான் பில் போட்டுட்டு வரேன்”.

பில் பண்ணிவிட்டு தன்னுடைய சொகுசு காரில் ஹோட்டலுக்கு சென்றனர். இரவு முழுவதும் காரை வைத்து விளையாடிவிட்டு அசதியில் நவீன் தூங்கினான்.

அடுத்த நாள் காலை, கோபி பில்லை தேடிக்கொண்டிருந்தான்.

“என்ன தேடிட்டு இருக்க?”

“நேத்து வாங்கின பில்லைப் பார்த்தியா?”

”எதுக்கு தேட்ற, நேத்தே அதை பின்ல போட்டுட்டேன்”

“சூப்பர், அட்லீஸ்ட் கார் விலை எவ்வளவுனு பார்த்தியா?”

“இல்ல அப்டியே கவரோட போட்டுட்டேன்”

“வாங்கற நாமே விலையை பார்க்காம வாங்தித் தர்றோம். அப்புறம் புள்ளையே திட்டி என்ன பண்றது. யோசிச்சு பாரு நாம சின்ன வயசில இப்படி பார்த்ததெல்லாம் வேணும்னு அடம்புடிச்சிருப்போமா? அப்ப நமக்கு காசோட வேல்யூ தெரியும், அப்பா அம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்க. இப்ப நிலைமையே வேரே, வேணுங்கிறத இப்பிடியே வாங்கிக் குடுத்திட்டு இருந்தா அவனுக்கு காசோட அருமையே தெரியாது. பெரியவனானா அவனுக்குத்தான் கஷ்டம்”

“ஆமா கோபி, நானும் இப்பத்தான் ரியலைஸ் பண்றேன். சரி இனி ஸ்லோவா நாமதான் சொல்லித்தரணும்”.