Showing posts with label சிலேடை. Show all posts
Showing posts with label சிலேடை. Show all posts

சிலேடை-2

காட்டு வழியில் சென்றுகொண்டிருந்த இரு தமிழ்ப்புலவர்களின் உரையாடல் இதோ –
 
நடந்து சென்று கொண்டிருந்த ஒரு புலவர் காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது. அவர் குனிந்து அதைப் பிடுங்கி எறிந்தார். நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து தலை நாகம் என்று ஒரு வழக்குப் பெயர் உண்டு. அவர் மற்ற புலவரிடம்,"ஐந்து தலை நாகம் ஒன்று என் காலைக் குத்தியது, என் செய்ய?" என்று கேட்டார். அதற்கு அடுத்தவர்,

"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலை எடுத்துத் தேய் சரியாகிவிடும்"

என்று பதிலுரைத்தார்.

இங்கே பத்துரதன் என்றது தசரதன் (பத்து = தசம்)
தசரதனின் புத்திரன் என்றது இராமன் (புத்திரன் = மகன்)
இராமனின் மித்திரன் என்றது சுக்ரீவன் (மித்திரன் = நண்பன்)
சுக்ரீவனின் சத்துரு என்றது வாலி (சத்துரு = எதிரி)
வாலியின் பத்தினி என்றது தாரை (பத்தினி = மனைவி)
தாரையின் கால் என்றது தாரை என்ற சொல்லில் உள்ள கால் (ா)

மேற்கூறிய வாசகத்தின் பொருள்,
தசரதனின் மகனான இராமனின் நண்பன் சுக்ரீவன். அவன் எதிரி வாலி. வாலியின் மனைவி தாரை. அந்தத் தாரை என்ற சொல்லில் உள்ள காலை நீக்கினால் தரை என்றாகும்.

மேற்கூறிய வாசகத்தின் உட்பொருள், முள் குத்திய காலைத் தரையில் தேய் என்பதே.

சிலேடை-1 ஐப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.



காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்து (சிலேடை)


"காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
        கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
   களப்போர் பாடத் திறமினோ"

இது கலிங்கத்துப் பரணியில் புலவர் செயங்கொண்டார் கடைத்திறப்பு என்ற பகுதியில்அமைத்த பாடலின் வரிகள்.  இதுவே மறைந்த சரித்திர நாவலாசிரியர் திரு. சாண்டில்யண் அவர்களின் வரலாற்று நாவல் "கடல் புறா"வின் முதல் வரி.

இணையதள தமிழ்வாசகர்களே செந்தமிழின் சிறப்பை இங்கே உற்றுநோக்குங்கள், சிலேடை தெரிந்தவர்களுக்கு இவ்வரிகளின் பொருள் விளங்கும்.

ஆசிரியர் செயங்கொண்டார் உரைக்க விளிவது, குலோத்துங்க சோழன் காஞ்சியில் தங்கி இருக்க அவனது ஆணையின் பேரில் அவனது படைகள் கலிங்கத்தை அழித்தன. 

இதன் இன்னொரு பொருள் பின்வருமாறு - காஞ்சி என்பது மகளிர் இடையில்  அணியும் ஒரு ஆபரணம், கலிங்கம் என்பது உடுத்தும் ஆடை. இதுவே மகளிர் தத்தம் கணவருடன் கலவியில் (கலவிப்போரில்) இருக்கும்போது ஆபரணம் இருக்க ஆடை கலைந்தது.

மகளிர் நடத்திய கலவிப்போரையும், கலிங்கத்தில் கழற்சென்னியான குலோத்துங்க சோழன் நடத்திய ஆயுதப்போரையும் புலவர் சிலேடையாகப் பாடியுள்ளார்.

மேற்கூறப்பட்ட கலிங்கப்போரை குலோத்துங்கன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் படை நடத்திப் பெற்ற மாபெரும் வெற்றியைப் பற்றி விளக்கும் நூலாகும். கருணாகரன் குலோத்துங்க சோழனின் நெருங்கிய நண்பணாவான், இவனே கடாரத்தையும், விஜயநகரத்தையும் குலோத்துங்கன் ஆணையின் பேரில் வென்று, அவ்விரு நாட்டிலும் நல்லாட்சி மலரச் செய்தான். இராஜராஜ சோழன் ஆட்சியில் பெருகிய  கிழக்கத்திய நாடுகள் உடனான கடல் வாணிபத்தை மீண்டும் வளரச் செய்தான்.

திரு. சாண்டில்யன் எழுதிய கடல்புறா என்ற நாவலைப் பற்றி என்னுடைய அடுத்த பதிவில் பகிர்கிறேன்.