சமுத்திரக்கனியின் - அப்பா

நான் பொதுவாகத் திரைப்படங்களைப் பார்ப்பதோடு சரி, அவற்றைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் திரைப்படங்களைப் பற்றி விமர்சிப்பது அவ்வளவு எளிதல்ல, அது பல நூறு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட உழைப்பு. மேலும் நமக்குப் பிடித்த படங்கள் பிறருக்குப் பிடிப்பதில்லை, பெரும்பாலனவர்களுக்குப் பிடிப்பதிருப்பது நமக்கு பிடிப்பதில்லை. சினிமாவை வெறும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது என் எண்ணம். நாம் சினிமா பார்ப்பதால்/பார்த்ததால் வளர்ந்தவர்கள் தான் இங்கு ஆட்சி செய்கிறார்கள், எனவே இந்த சினிமா என்பது நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதான் ஒன்றல்ல.

அதேபோல் பிறருடன் பகிரும் அளவுக்கு எந்தவொரு நல்ல மெசேஜூம் திரைப்படங்களில் இருப்பதில்லை. ஆனால் ஒரு சில சமயங்களில் சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லும் திரைப்படங்களும் வருவதுண்டு; அவற்றில் பெரும்பாலான படங்கள் கருத்துக்களை மிகைப்படுத்திக் காட்டுவதால் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, எனவே அதைப் பற்றி நான் எழுத நினைப்பதில்லை. காலத்திற்கு ஏற்றாற்ப் போல் வாழ்வியலை ஒட்டி வரும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

வெற்றியையும் வசூலையும் மட்டும் எதிர்பார்த்து படம் செய்யாமல், சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் சமுத்திரமுனியின் - ``அப்பா`` என்ற முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

கமர்ஷியல் படங்களுக்கும் குப்பைப் படங்களுக்கும் மத்தியில் இதுபோன்று ஒரு சில நல்ல படங்கள் வெளிவந்து, மக்களிடம் வெற்றி பெறுவது அரிது. விழிப்புணர்வுள்ள சமூகம் இதுபோன்ற படங்களை நிச்சயம் ஆதரித்துக் கொண்டாடும் (நம் சமூகம் இப்படத்தை வரவேற்றதா? கொச்சையான வசனங்களும் பெண்களை இழிவுபடுத்தி வெறும் காட்சிப் பொருளாகக் காட்டும் படங்கள் இன்று வசூலில் மிஞ்சி நின்கின்றன. வாழ்க தமிழகம்!) . 

படத்தில் வரும் கதாபாத்திரங்கள், இயக்கம் போன்றவற்றைப் பற்றி விவாதிக்க எனக்கு விருப்பமில்லை, மாறாக படம் முழுவதும் சொல்லப்படிருக்கும் நல்ல கருத்துக்களைப் பற்றி ஆராயலாம் என்று தோன்றுகிறது. 

இன்று மூன்று வயதுக் குழந்தைகளுக்குப் ப்ராஜெக்ட் வேலை, இரண்டு அல்லது மூன்று பக்கத்திற்கு வீட்டுப்பாடம், வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் கூடுதல் ஹோம்வோர்க்! குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்பாமல், வீடு என்ற சிறைக்குள் அவர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களுக்குப் போதுமான இடைவெளி தராமல், அவர்களின் வளர்ச்சியை சிதைப்பதுதான் நகரத்தில் வசிக்கும் பெற்றோர்கள் செய்துகொண்டிருப்பது. 

பர்ஸ்ட் ரேங்க் வாங்கவில்லையென்றால் வாழ்வில் முன்னேற முடியாது என்று தவறாகச் சொல்லி வளர்ப்பது இங்கு வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலும் பெற்றோர்கள் நினைப்பது, தன்னால் சாதிக்க முடியாதவற்றை தனக்குப் பிறக்கும் மகனோ/மகளோ சாதிக்க வெண்டும். 

குழந்தைப் பிறப்பதற்கு முன்னரே அவன்/அவள் என்ன படிக்க வேண்டும், எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த மாதிரியான வேலைக்குச் செல்ல வேண்டும், எந்தத் துறையில் அதிக சம்பளம் வாங்க முடியும் என்ற எண்ணங்களை விதைக்க முனைகிறோம். 

பிறந்த குழந்தையை ஒரு நல்ல மனிதனாக்கி இச்சமுதாயத்திற்கு அளிக்கிறோமா என்பது தான் சமுத்திரக்கனியின் கேள்வி! வெறும் படிப்பு மட்டும் தான்  நம் வளர்ச்சிக்கு உதவும், நன்றாகப் படிக்க வேண்டும், பின் ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்று சொல்வதோடு நின்றுவிடுகிறது நம்முடைய குழந்தை வளர்ப்பு. 

நம்மைச் சுற்றி நடக்கும் நல்லது, கெட்ட விஷயங்களைப் பற்றிக் அவர்களிடம் விவாதிருக்கிறோமா? அல்லது அவர்களின் வயதிற்கு ஏற்றாற்போல எளிமையாக்கி புரியவைக்க முயற்சித்திருக்கிறோமா? எது சரி, எது தவறு என்று அவர்களாகவே சிந்திக்க வாய்ப்பளித்திருக்கிறோமா? இல்லை, முற்றிலுமாக இல்லை. படம் முழுவதும் இதுபோன்ற கேள்விகளும் அதற்குத் தகுந்த பதில்களும் நிறைந்திருக்கிறது.

நம்மைச் சுற்றியுள்ள நாலு பேர் என்ன நினைப்பார்கள், அவர்களின் பிள்ளை எந்த பள்ளியில் படிக்கிறது என்பதைப் பற்றி மட்டும் யோசித்து, அவர்களுக்குச் செவி சாய்க்கும் தாய்மார்களின் தவறான செயலை அருமையாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். இதுபோன்ற தவறை நாம் தான் வளர்த்து வருகிறோம், பெற்றோர்களாகிய நம்மிடம்தான் பிரச்சனை என்று நெத்தியில் அடித்தது போல சொல்லியிருக்கிறார்.

குழந்தையை விளையாட அனுமதிக்காமல் வீட்டிற்குள்ளே பூட்டி வைத்து, டோரா, சோட்டா பீம் போன்ற கார்ட்டூன் கேரக்டர்களை அவர்களின் நண்பர்களாக்கி, அவர்களின் மனதிற்குள் ஒரு பொம்மை சமூகத்தை வளர்க்கின்றோம். பின்னொரு நாளில் அவர்கள் வளர்ந்து தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தைப் பார்க்கும் போது, அங்கு அவர்கள் எதிர்பார்க்கும் பொம்மைச் சமூகம் இருக்காது; மாறாக அவர்களின் கற்பனைக்குள் அடங்காத ஒரு மாய உலகம் தோன்றும். 

அந்நேரத்தில் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்துடன் ஒத்துப்போகும் நிலை தெரியாமல், தங்களுக்குள்ளே சுவர் எழுப்பி அதனுள்ளே வாழ்ந்து அழிந்து போகும் சூழ்நிலைதான் நாம் இன்று அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குழந்தைகளின்  பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, மாறாக நமது எண்ணங்களை அவர்களிடத்தில் திணிக்கிறோம். இது அவர்களிடத்தில் பயத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என்பதை உணராமல் அறிவிலியாக உள்ளோம்.

சிறுவயதைக் கடந்து வாலிப வயதை அடையும் பிள்ளைகளுக்கு எதிர்பாலினர் பற்றி எப்படி விளக்க வேண்டும், அவர்களுக்கு வரும் பருவ மாற்றத்தை எப்படி புரிய வைப்பது என்று கூறுவதில் வெற்றி பெற்றிருக்கிறார். 

"பெண் என்பவள் எதிர் பாலினம், அவளுக்கும் உன்ன மாதிரிதான்; அடிச்சா வலிக்கும்’’

``எப்ப வேணாலும் இங்க வரலாம், ஆனா இங்க தான் வர்றன்னு சொல்லிட்டு வரணும்`` என்று தன் மகனின் பெண் நண்பரிடம் கூறுவது.

"உனக்கு ஒரு விஷயம் அப்பாகிட்ட சொல்ல முடியும்னு நினைச்சா, அத செய். சொல்ல முடியாதுன்னா நினைச்சா அத செய்யாத"

``வாழ்க்கைக்குப் படிப்பு அவசியந்தான், ஆனா படிப்பே வாழ்க்கையல்ல’’

‘’தைரியமா இருன்னு நம்பிக்கையான வார்த்தைய சொல்றதுக்குத் தான் இங்க யாருமில்ல``

``வாழ்க்கையில சாதிச்ச எல்லாரும் படிப்பால மட்டும் சாதிக்கல``

போன்ற வசனங்கள் மிகவும் அருமை. பருவமடைந்த பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை அளவிட்டுக் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.

இது மாதிரியானப் படங்களைப் பார்த்துவிட்டு பாராட்டினால் மட்டும் போதாது, சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்களில் ஒருசிலவற்றையாவது கடைபிடித்துக்காட்ட வேண்டும், இது நம்மைச் சுற்றியிருக்கும் நாளு பேருக்காக அல்ல, நம் பிள்ளைகளுக்காக!!

சினிமாவில் புதைந்திருக்கும் குப்பைகளுக்கு நடுவில் வைரமாக வந்திருக்கும் `அப்பா` - நிச்சயம் வணக்கத்திற்கும் பாராட்டிற்கும் உரியது. சமுத்திரக்கனிக்கு வணக்கமும், வாழ்த்துகளும்!!! 

இதுபோன்ற நல்ல யதார்த்தமான திரைப்படங்கள் நிறைய வெளிவர வேண்டும்.
 

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்


பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இன்று ``ஸ்ரீரங்கத்து தேவதைகள்`` புத்தகத்தை படித்தேன். பசிக்கும் நடுவில் புத்தகத்தை முடிக்கும் ஆவலில் ஒரே சூட்டில் முடித்துவிட்டேன் என்பதை நினைக்கும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சி எழுகிறது, இதுபோன்று இடைவெளியில்லாமல் புத்தகத்தைப் படித்து பல வருடங்களாயிற்று.


றைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் எழத்ில் வந்த மிக முக்கியமான, சுவாரசியமான சிறுகதைத் தொகுப்பு இந்த - ஸ்ரீரங்கத்து தேவதைகள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒருவித எழுத்து நடை இருக்கும், ஆனால் சுஜாதா அவர்களின் எழுத்து நடையில் ஒருவித யுனிக்னெஸ் இருப்பதை அவரின் புத்தகங்களைப் படித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருக்க முடியும். பொதுவாக சுஜாதாவின் புத்தகங்களைப் புதிதாகப் படிப்பவர்களுக்கு இரண்டு மூன்று பக்கத்திற்கு குழப்பமிருக்கும், ஆனால் தொடர்ந்து படிக்கும் போதுதான் அந்நடையின் உயிரோட்டம் புரிந்து, கதையில் கூறப்படும்  செய்திகள் கண்முன்னே கானல்நீர்ப் போலத் தோன்றும். 

இப்புத்தகத்தை வாசித்து முடித்த அனைவருக்கும் முதலில் வரும் ஐயப்பாடு, புத்தகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனையா அல்லது நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிகளா? என்பதாக இருக்கும். இங்குதான் சுஜாதா அவர்களின் இன்னொரு வெற்றி நிகழ்ந்திருக்கிறது. 

சிறு சிறு கதைகளாக மொத்தம் பதினான்கு, அதில் முதல் கதையில் வரும் பாத்திரங்களில் ஒருவரே அடுத்த பகுதியின் நாயகன்/நாயகியாக இருப்பார். கதை சொல்லப்படும் விதம் எழுத்தாளர் நமக்கருகில் நின்று சுட்டிக்காட்டுவது போல் பயணிக்கும். கதையை வாசிக்கும் பொழுது சில நேரங்களில் நம் உதட்டருகில் ஒரு மெல்லிய புன்னகையும், சில நேரங்களில் சோகமும் சூழ்ந்துகொள்வது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

கதையின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலைத் தனியே பிரித்து வைத்தது போல் தெரியாமல், அவ்வாழ்த்தே கதைக்குள் அமைந்து கடவுளுக்குக் கடிதம் என்று தொடங்கும். கதையைப் படிக்கும் போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் கீழ்ச் சித்திரை வீதியும், கோட்டை வாசலும், கீழ் வாசலும் நம் கண் முன்னே தெரியும்.

கதையில் வரும் பாத்திரங்களின் பெயர் அவர்களின் கேரக்டரருக்குப் பொருத்தமாக இருக்கும். கோவிந்து பைத்தியம், ரங்கு, உள்ளூர் இன்டெலக்சுவல் ராவிரா, பணக்காரன் தாஸ், குண்டு ரமணி, கணக்கு வாத்தியார் விஜிஆர், பிரபந்தம் திண்ணா, வரதன், பாட்டி (நிஜக்கேரக்டர்), ஜீனியஸ் ரங்கநாதன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் முன்னோட்டம் அளித்திருக்கும் விதம் இன்னும் அருமை. 

அதேபோல கதையை சஸ்பென்சாக முடித்திருக்கும் விதம், வாசகர்களின் கற்பனைக்குள் பொருந்துவதாகவும், அன்றைய நிலையில் அச்சமூகத்தில் பொதுவாக இருந்த நிகழ்ச்சிகள் குறித்து முற்றுப் பெறும்.  கதையின் முடிவு முன்பகுதியில் வந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியை அல்லது பொருளை தொடர்பிட்டு  முடியும். உதாரணத்திற்கு,

~சின்ன `ரா` வின் முடிவில் வரும் - `செல்வம் இப்போதெல்லாம் படிக்கிறான்`, இதில் படிக்கிரான் – சின்ன ரா??~

~திண்ணாவின் சாதனையை `வீழ்ச்சி’ என்று என்னால் சொல்ல முடியவில்லை~

~மல்லிகா கோபாலனை கல்யாணம் பண்ணிக் கொண்டு அதே வீட்டில் அவள் அம்மாவைப் போல் நிற்கிறாள். அவர்கள் பெண் (மற்றொரு மல்லிகா) வாசலில் சிரித்துப் பேசிக் கொண்டே பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருக்கிறாள்~

அதே போல் குண்டு ரமணியின் பாத்திரத்தைப் போல் வரும் ஒருவரை நம் தெருவில் நிச்சயம் சந்தித்திருப்போம்.

ஒரு சில இடங்களில் நல்ல பன்ச் டயலாக் மறைந்திருக்கும். எடுத்துக்காட்டாக, `கோவிந்தின் அம்மா சக்கரத்தாழ்வாருக்கு இன்னும் நெய்  ஊற்றிக்கொண்டுதான் இருக்கிறாள்’ என்று பைத்தியத்தை தெளிவிக்க தீபம் மட்டும் போதாது என்று கடவுளுக்குக் கடிதம் என்ற கதையை முடித்திருப்பார்.

~எனக்கு யார் மேலோ கோபம் வந்தது, ஒருவேளை ஸ்ரீரங்கத்து பெருமாள் பேரில் இருக்கலாம்~ என்று தன்னுள்ளிருக்கும் ஆதங்கத்தைச் சொல்லியிருப்பார்.

கிருஷ்ணசாமியின் டாமினென்ட் கேரக்டரை விவரிக்க, சரித்திரத்தில் சர்வாதிகள் பலரும் குள்ளமாக இருந்ததாகக் கேள்விப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பார்.

அதேபோல் அந்த வயதிற்குத் தோன்றும் கலர்புல்லான மசாலா எண்ணங்களை ஆங்காங்கே சிதறவிட்டிருக்கும் விதம் அவ்வயதைக் கடந்து வந்த அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ள இயலும் – வரதனுக்கு அவன் மாமா அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் பிரத்யோகப் படங்கள்! வீரசிம்மன் கதையில் திரை வழியாக சில்க் ஆசாமி கண்ணடித்த விதம், சிவராமன் வத்சலாவைப் பார்க்க வருவது, திருச்சி பார்பர் ஷாப்பில் இருக்கும் சீன அழகிகளின் போட்டோ, ஹரிதாஸ் படத்தில் வரும் வெட்டப்பட்டக் காட்சி என்று அந்த வயதில் தோன்றும் எண்ணங்களை பட்டியலிட்டிருப்பார்.

சில நேரங்களில் நண்பர்களின் மத்தியில் நாம் ஒப்புக்குச் சப்பாணியா நிற்பதையும், விளையாடும் போது நண்பர்களில் ஒருவன் அங்கிருக்கும் அனைவரையும் ஆதிக்கம் (டாமினேட்) செய்வதும், அதைக் கண்டு நாம் பொறாமைப் படுவது போன்ற இயல்பான விஷயங்களைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.

இக்கதையில் வரும் கதாபாத்திரங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அவர் பாட்டியின் கேர்க்டர் தான். சுஜாதா அவர்களின் சிறு வயதில் பெரும்பாலும் பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்ததையும், பாட்டியின் கண்டிப்பையும் கதை முழுவதும் பார்க்க முடியும். தனியே அழைத்து வந்து தண்டிப்பதையும், பிறர் முன் தன்னை விட்டுக் கொடுக்காமல் பாட்டி பேசியதை மிக அழகாகக் கூறியிருப்பார்.

அதே போல சிறு வயதில் தான் செய்த தவறுகளில் ஒன்றான திருட்டு வேலையையும், அதனால் பின்னாளில் அவரடைந்த வலியையும் அதன் தொடர்ச்சியையும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருப்பார்.

என் பார்வையில் ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது புத்தகத்தை வாசிக்கும் வாசகர்களுக்கு, அதில் வரும் அடுத்த பக்கத்தைப் புரட்டும் ஆவல் முடிவில்லாமல் தொடர்ந்து வரவேண்டும்; மேலும் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகும் அதில் வரும் ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது பாத்திரம் (கேரக்டர்) மனதில் நிலைக்க வேண்டும். சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லுவதெல்லாம் அதற்குப் பிறகுதான்.

ஒரு நல்ல புத்தகத்தை வாசித்தது போன்ற உணர்வு தோன்றுகிறது. 

கீழ்க்கணக்கு - நூல்நாற்பது தெரியுமா?


இணைய நண்பர்களுக்கு வணக்கம். 

சில நாட்களாகவே என்னுடைய பதிவுகளில் சிறுகதைகளும், சமூகப் பார்வை பற்றிய பதிவுகளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. இவ்வழக்கத்திற்கு மாறாக சங்கத்தமிழின் சுவையை இணைய நண்பர்களுடன் பகிரலாம் எனத் தோன்றியது, அதன் பொருட்டு எழுந்ததே இப்பதிவு - ``ூல் நாற்பது தெரியுமா?’’.

நம்மில் பெரும்பாலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி அறிந்திருப்போம். அதில் முதல் நான்கு நூல்களைப் பற்றி இங்கு காண்போம்.

               1)     இன்னா நாற்பது
               2)     இனியவை நாற்பது
               3)     கார் நாற்பது
               4)     களவழி நாற்பது

இந்நான்கு நூல்களுக்குமிடையில் உள்ள ஒற்றுமை யாதெனில், இந்நான்கும் நாற்பது பாடல்/செய்யுள்களைக் கொண்ட தொகுப்பு ஆகும்.  

(நூல்ாற்பில் மில் வுவு `இன்னா`, ஏன் கார் நாற்பையோ அல்லு கி நாற்பில் வைக்கில்ை?)



உள்ளடக்கம்
ஆசிரியர்
இன்னா நாற்பது
அறம் பற்றியது
துன்பந் தரும் நிகழ்ச்சிகளைக் கூறுவது
கபில தேவர்
இனியவை நாற்பது
அறம் பற்றியது
இன்பந் தரும் நிகழ்ச்சிகளைக் கூறுவது
பூதஞ் சேந்தனார்
கார் நாற்பது
அகம்
கார் காலத்தின் தோற்றம் பற்றிக் கூறுவது
கண்ணங்கூத்தனார்
களவழி நாற்பது
புறம்
போர்க்களம் பற்றிக் கூறுவது
பொய்கையார்
 
 

இந்நூட்களில் குறிப்பிட்டுள்ள பாடல்களை எடுத்துக்காட்டுடன் இங்குப் பார்ப்போம்.
  
            1) இன்னா நாற்பது – பாடல் மூன்று

``கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு’’

விளக்கம்:

கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம்
தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம்
வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம்
உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பமாம்.

       2)  இனியவை நாற்பது – பாடல் ஒன்று

``பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு’’

விளக்கம்:

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது
அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது
அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

      3) கார் நாற்பது – பாடல் ஒன்று

தோழி தலைவிக்குப் பருவம் காட்டி வற்புறுத்தியது.

``பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?’’

விளக்கம்:

கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல,
இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க
வருவேன் என சொல்லிப்போன தலைவர்,
மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ?

      4) களவழி நாற்பது – பாடல் மூன்று

``ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
 இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து.’’

விளக்கம்:

இடிபோன்ற போர் முரசினை முழங்கி வெற்றி பெற்ற சோழனின் போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்தத்தைத் தங்கள் நடையால் சேறாக்கிச் சோர்ந்த வீரர்கள் நடக்க முடியாமல் வழுக்கி விழும் போது அருகில் வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடந்த யானையின் தந்தத்தை ஊன்று கோலாக்கி எழுந்து நடந்தார்கள்.