பெண்ணொருத்தி....



கண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. வெளிர் பாதத்தில் ஓரிரு இலைகள் பதிந்தாலும், பழுத்த அவ்விலைகளால் எவ்வித பாதிப்புமில்லை.

தரையில் ஊர்ந்து செல்லும் செந்நிற எறும்புக் கூட்டமொன்று, போருக்குச் செல்லும் படைவீரர்களைப் போல சீராக அணிவகுத்துச் செல்கிறது, ஒரு கணம் தடம் மாறினாலும் வரிசையுடனான தொடர்பற்றுப் போய்விடும்.

நீண்ட தூரப் பயணத்தால் நாக்கு வறண்டிருக்கிறது, நிழலின் தேவையைக் காட்டிலும் நீரின் தேவை அதிகமாக இருக்கிறது. கச்சையில் கசிந்திருக்கும் மெல்லிய வியர்வை உடம்பையொட்டிச் செல்கிறது. களைப்பான கால்கள் நிழல் தரும் மரத்தின் மடியை நாடிச் செல்கிறது. 

பருவமெய்திய இளம்பெண்கள் பூத்து நிற்கும் மரத்தடியில் அதிக நேரம் இருத்தலாகாதென்று எதிர்வீட்டுக் கிழவி அம்மாவிடம் கூறியது ஞாபகத்திலுள்ளது.  அதற்கானக் காரணத்தை அம்மாவும் இதுவரைக் கூறியதில்லை. அம்மாவின் சேலை வாசனையில் கண் சொருகித் தூங்கும் குழந்தையைப் போல் இப்பேதையின் கண்களும் அயர்ச்சியில் சொருகி மூடின!

இதுபோன்ற கற்பனையும் கவலையுமில்லாத உறக்கம் எப்போதாவதுதான் வருகிறது. உறங்கிய சில கணங்களில், பூச்சிகளின் ரிங்காரம் காதில் விழிப்பு மணி போல் தொடர்ந்து ஒலிக்கிறது. அயர்ச்சி நீங்கி உடலில் புத்துணர்வுப் பிறக்கிறது. பாதச் சுவடு நின்ற இடத்திலிருந்து மீண்டுமொரு இரகசியப் பயணம் தொடர்கிறது.

பாதையின் குறுக்கே செல்லும் பட்டாம்பூச்சி, என்னைக் கண்டுகொள்ளாமலும், தனது பாதுகாப்பை எண்ணிக் கவலையுற்றதாகவும் தெரியவில்லை. இயற்கை அன்னையின் தொட்டிலான இவ்வழகிய வனம், பழக்கப்படாத எனக்கு பாதுகாப்பு அளிப்பதைப் போன்று பட்டாம்பூச்சிக்கும் அரணாக இருக்கிறது. நினைத்துப் பார்க்கும் போது ஆறறிவுடைய மனிதனின் பலம் உயிரற்ற ஜடங்கள் வாழும் நரகத்தில் (நகரத்தில்) மட்டுமே என்பது புலனாகிறது.

வழி நெடுகில் அருவியிலிருந்து விழும் நீரின் சத்தம் கேட்கிறது. இலக்கு இல்லாப் இப்பயணத்தின் முடிவுப்புள்ளி அறியாமல் துள்ளியோடும் மானாக, சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினேன். அதோ தெரிகிறது, அந்த பிரம்மாண்ட அருவி
! அருவியின் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீர்த்துளிகள் வழுக்கானப் பாறையில் விழுந்து சிதறிச் செல்கிறது. அதன் நுரைகள் ஈரம் நிறைந்த கரையிலிருக்கும் எனது பாதங்களைத் தீண்டிச் செல்கிறது. 

தாய்ப்பசுவின் காம்பை நோக்கி வாஞ்சையுடன் ஓடிவரும் கன்றைப் போல
, இம்மெல்லிய உடல் அருவியை நோக்கி விரைகிறது. வனப்பு என்ற சொல்லின் பொருள் பெண்களுக்கு மட்டுமல்ல, என்றும் வற்றாத இளமையுடன் நிறைந்திருக்கும் இயற்கைக்கும் மிகப்பொருந்தும். குளிர்நீர் முழங்கால் மற்றும் நாபி வரை பரவியதில் சட்டென்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவி விரிந்தது. இந்தப் படபடப்பு அடங்கும் முன், பெருகிவரும் நீர் இளமார்பில் பட்டு பருவக் கிளர்ச்சியூட்டிச் செல்கிறது. 

தீண்டலின் பரவசத்தில் எனை மறந்து கண்கள் சொருகி நின்றேன். கண்களிலிட்ட மை நீரில் சுவடின்றி கரைந்து ஒதுங்குகிறது. பெருகிவரும் நீரின் பிரவாகத்தில் மார்பில் கட்டியிருந்த மேலாடையும் கச்சையும் நிலைகுலைந்துச் சரிந்து சென்றதை உணர பல நொடிகளாயிற்று. எனைச் சுற்றிப் பிண்ணியிருந்த நாணம் என்ற வளையம், நீரில் அடித்துச் செல்லும் இலைச்சருகுகளைப் போல அரவமற்று கட்டவிழ்ந்துச் செல்கிறது.

ஆடை சரிந்ததில் திமிறிய மார்புகள் கூச்சத்தில் விடுதலையானதை எண்ணி உள்ளூர வெட்கம் கொண்டது. கார்க்கூந்தலின் சில மயிர்க்கற்றைகள் பிறை போன்ற நெற்றியில் சரிந்து, முகத்திலிருந்த வெட்கத்தை மறைத்து நிற்கிறது. 

நீரில் தொடர்ந்து இருப்பதனால் மெல்ல மெல்ல நடுக்கம் குறைந்து, தேகம் வெப்ப சமநிலை அடைந்து கதகதப்பானது. நீரினுள் பாசிகளைத் தேடித் திறியும் சின்னிஞ்சிறு மீன்கள், அடிவயிற்றில் ஆடை இறுக்கிய வரித்தடங்களையும் அல்குலையும் உரசிச் செல்வது இன்பங்கலந்த வேதனையை அளிக்கிறது. 

நீரின் அணைப்பிலான என் தழுவல்கள் நிகழ்ந்தெழுகையில், தேகத்தில் பரவிய இன்பத் தீயானது மின்னலின் பாய்ச்சலைப் போன்று உள்ளூரப் பரவிச் செல்கிறது. இதுதான் தீண்டலின் சுகமென்று எண்ணி மனம் அளவலாவிய மோகத்தில் சுழல்கிறது.   

குளிர்சுனையின் தழுவலில் இருந்த இவ்வுடல், ஆதவனின் கதகதப்பில் மொட்டவிழும் மலர் போன்று நீருக்கு வெளியில் உதயமானது. மருவி நிற்கும் பின்னழகை செந்நிறப் பாறையில் சாய்த்தும், கீழ்வயிற்றின் தொடர்ச்சியை நீருக்குள் கிடத்தியும், மேலுடலை நீருக்கு வெளியிலும் இருத்தி, அகண்ட வானத்தை கண்டு பிரமிப்புடன் நின்றேன்.

நீருக்கடியிலிருக்கும் மேடு பள்ளங்களை நீரானது மறைத்துச் செல்வது போல், பேதைப் பெண்கள் தத்தம் அங்க இலாவண்யங்களை உடை எனும் போர்வைக்குள் மறைத்துக் கொள்கின்றனர். மேலுதட்டின் மென்மயிர், குவிந்த உதட்டின் ஓரத்தில் ஒட்டி நிற்கும் சிறு நீர்த்திவலைகள் குளிர்க்காற்றில் கரைந்தும், காதோரம் சுருண்டிருக்கும் மயிர்கற்றைகள் தென்றலின் அசைவிலும் வளைந்தாடுகிறது.

நெற்றியிலிருந்த நீர்த்துளிகள் மெல்லச் சரிந்து திண்ணமான மார்பின் மேட்டில் செங்குத்தாய் வடிந்து செல்கிறது. ஆதவனின் ஒளிக்கற்றைகள் நீரின் மேற்பரப்பில் பட்டு உலோகப் பளபளப்பான மார்பில் எதிரொளிப்பது, கோயில் தூண்களில் வீற்றிருக்கும் பெண் சிலையின் தனங்களில் வடித்திருக்கும் காம்பு, விளக்கொளியின் பிரகாசத்தில் மிளிர்வது போன்றுள்ளது. இத்தகு நுட்பமான அழகை வடித்திருக்கும் சிற்பி நிச்சயம் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை! 

அடிவயிறு குளிராகவும்  அதே கணத்தில் கனமாகவும் தோன்றுகிறது. தென்றலின் தொடர்ச்சியான ஸ்பரிசம் மேலுடலைத் தீண்டுகையில், மென்மையான வயிற்றின் மேல் படர்ந்து நிற்கும் பச்சை நரம்புகளின் உணர்ச்சி அணுக்கள் ஒருமித்து வெடிப்பது போன்று உள்ளது. 

ஆதவனின் கதிர்கள் அகன்று அந்தி சாயும் வேளையில், அருவி நீருடனான என் காதல் கலவரமின்றித் தொடர்கிறது. காதல் மோகத்தில் இலயித்திருந்த உடலும், மனமும் பயமென்ற போர்வையைக் கலைத்து மெல்லத் தவழ்கிறது.

மனம் உள்ளூர இன்பம் கொண்டிருந்த வேளையில், அதோ அப்பாறையின் பிளவிலிருக்கும் இரு கண்கள் இப்பூவுடலை சல்லடையாய்த் துளைக்கிறது. அந்த முயலின் கூர்மையான  பார்வை, பருவக் களிப்பை எதிர்நோக்கி திணவுடன் நிற்கும் ஆடவனின் பார்வையாக உள்ளது. அடிப்பெண்ணே, இதென்ன பொய் வெட்கம், தொடரட்டும் நீருடனான உன் ஆலிங்கனம் !

நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் அந்தரங்கங்களைத் திறந்து கொள்ளப் பழக்கப்பட்டிருந்த எனக்கு, நாகரிகம் என்ற சிறையினுள் இப்பூவுடலை மீண்டுமொருமுறை தாளிட மனமில்லை. அண்டவெளி அனைத்தும் திகம்பர நிலையில் இருக்கும்போது நான் மட்டும் விதிவிலக்கா? இதோ பூரண நிலவாக துகில் களைந்து நிற்கிறேன் இயற்கை அன்னையின் நிழலில் !

நீண்ட கனவிலிருந்து சட்டென்று விலகி பஞ்சணையில் புரளுகையில், அந்தரங்கத்தின் பூட்டவிழ்ந்தது போன்ற எண்ணத்தில் கன்னக்கதுப்புகள் வெட்கிச் சிவந்தன. 

சங்கப்பாடலொன்றில் குறிப்பிட்டது போல, புணர்தலின் போது தனங்களில் ஏற்பட்ட நகக்குறியை மகளிர் பகல் பொழுதுகளில் தடவிப் பார்த்து இரசிப்பது போன்று, அருவி நீருடனான காதலை எண்ணி இப்பேதையின் மனம் மீண்டுமொரு இரவிற்காக ஏங்கி நிற்கிறது!

நிர்வாண நிழல்

உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்தவொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே!
 
அவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை. 


நீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை என்னால் மாற்றமுடியாது. அது காண்பவர்களின் நிலையைப் பொறுத்தது – நாம் அச்சப்படத் தேவையில்லை. உனைப் பார்க்கும் எவர்க்கும் என் அகத்தைப் பற்றி அறிய வாய்ப்பில்லை, அதனால் தான் என் ஆழ்மனதின் பொருமலையும், கோபத்தையும், வெறுப்பையும் நான் வெளிக்காட்டுவதில்லை, அதில் ஒரு சில நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது.
 
ஏன் இப்படிச் சிரித்து ஏளனம் செய்கிறாய்? இது என் மனதினுள் இருக்கும் அச்சத்தின் குறியீடாக இருக்கும் என்று சந்தேகிக்கிறாய்! அது தவறல்ல, உன் கற்பனா சக்தியை என்னால் கட்டுப்படுத்த முடியாது. இப்படிப் பல நேரங்களில் என்னைச் சிந்திக்க வைக்கிறாய். என்னுள் எழும் எண்ணங்களை உன்னிடமிருந்து மறைக்க முற்படும்போதெல்லாம் அனேகமாகத் தோல்வியைச் சந்திக்கிறேன்.

இதில் வியப்பான விடயம் யாதெனில், என் மீது விழும் வெப்பக்கதிர்கள் உன்னுள் தெரிவதில்லை, அதுபோல மழை வரும் நாட்களில் நீ வெளிவருவதில்லை. இப்பிரபஞ்சத்தைப் பற்றிய உன் புரிதல் என்னூடே நிகழ்கிறது, என்னை நீ ஓரு ஊடகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய்! நான் வெவ்வேறு கணங்களில் அணியும் முகத்திரையின் இரகசியத்தை நம்மிருவரைத் தவிர வேறெவரும் அறிந்ததில்லை. என் போல் நீ முகமூடியேதும் அணியாமல் நிர்வாணமே போதும் என்கிறாய், வெட்கங்கெட்டவனே! விந்தையாக உள்ளது - உன் தோற்றத்தில் நீ எவ்வித வண்ணமும் பூசிக்கொள்ளாமல் இருப்பது. கருப்பு நிறத்தில் இருப்பதில் அப்படி என்ன கர்வம் உனக்கு?

இந்த முகமூடி இரகசியத்தைத் தொடர்ந்து காத்துவருவதால் உன்னிடம் தோழமை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக உன்னுடன் பலமுறைப் பேச முயன்றேன், ஆயினும் காண்பவர்கள் சந்தேகிக்கக் கூடுமென்பதால் அவ்வெண்ணத்தை நிறுத்திக்கொண்டேன். உன்னுடனான இந்நெருக்கம் அவளுடனான என் நட்பில் விரிசல் விழச் செய்யுமா? குழம்பி நிற்கிறேன். அதோ அவள் வரும் ஒலி கேட்கிறது, என்னை விட்டுச் சற்று ஒதுங்கி நில்; இன்று இரவு வெளிச்சத்தில் நம் சம்பாசணையை மீண்டும் தொடரலாம்.

உன் பால் பலவித வெறுப்புகள் இருந்தாலும், இறுதியில் என்னை அதிகம் புரிந்துகொண்டவன் நீ தான், என்னை நீ என்றும் வெறுத்தது கிடையாது. உன்னை பிரியும் நாளே இம்மண்ணுலகில் நான் வாழும் கடைசி நாளாக இருக்கும்! நம்மிருவருக்குமிடையே நீளும் இந்தப் புரிதலையும் நெருக்கத்தையும் அவளிடம் சொல்லாதே!
 

குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி

வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம். 

இந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பத்துப் புத்தங்கள் வாங்கியதாக ஞாபகம், அதில் முதலில் வாசிக்க வேண்டும் என்றெண்ணியது "குற்றப்பரம்பரை" நாவல். நாவலின் முன்னுரையில் 'பெருநாளாய் தீ வளர்த்தேன்',  பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்' என்று ஆசிரியர் குறிப்பிட்டதை வாசித்த போது நாவலின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்தது. 

இந்நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்கள். இவரை சமீப கால தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடியும்.  எழுத்துலகில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிபடுத்தி வருகிறார்.

முன்னுரையிலிருந்து…

என் பேரன்பு எவர் பால்? பெருங்கோபம் எவர் பால்? என்பதை என் எழுத்தைத் தொடர்பவர் அறிவர். தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம். பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு என்றும், இந்த இரு சாதியினர் மோதினால் இனப்பெயரையும் குறித்து, சாதிக்கலவரம் என்றும் அக்கினி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா? சாதிப் பயிர்களுக்கு சாணி, உரம் இடுபவன்தானே, பெரியார் பெயர் சொல்லி தொடர்ந்து கொடியேற்றுகிறான்? சில சலுகைகளுக்காக மண்டியிடும் சான்றோர், ஆன்றோர்களின் திருக்கு மீசைகளில் ஒரு வண்டி மண் ஒட்டி இருக்கிறதே – என்று தொடக்கத்திலேயே சாடியுள்ளார் !!

நாவலின் கதைக்களம் அன்றைய இராமநாதபுரத்தைச் சுற்றியிருந்த பெருநாழி, கொம்பூதி, பெரும்பச்சேரி எனும் கிராமப் பகுதிகளில் நடப்பதாகப் புனையப்பட்டிருக்கிறது. அந்நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த மூன்று சாதிக் குழுக்களைப் பற்றியது. குறிப்பாக கள்ளர் என்ற இனக்குழுவைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், அவர்களின் வாழ்வியல் மற்றும் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விவரித்துச் செல்கிறது.

ம்மக்களிடமிருந்த வேற்றுமைகள், சிறுபான்மைச் சமூகமான அவர்களுக்கு எதிராக மறுக்கப்பட்டிருந்த உரிமைகள், அதன் தொடர்ச்சியாக நிகழும் சண்டை, அவர்களை ஒடுக்க ஆங்கிலேயர்களும் உயர்சாதியினரும் கையாண்ட அடக்குமுறைகள், சித்ரவதைகள், வலியவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், அவ்விரு பூர்வீகக் குடிகளுக்கிடையே மூண்டெழும் கலவரம் அணையா நெருப்பாகி ரத்தம் படிந்த பூமிக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. 

களவு, தீண்டாமை, வீரம், நேர்மை, வன்மம் துரோகம், பொறாமை, அடக்குமுறை, சூழ்ச்சி, கொலை  மற்றும் கலவரம் என்று மனிதனின் அகம், புற வாழ்வின் கொடிய பகுதிகளுக்குள் கதை நகர்கிறது.

நாவலை ஒரே மூச்சில் படித்து விட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன் ஆனால் தொடக்கத்தில் கதையுடன் சேர்ந்து பயணிக்க முடியாமல், ஏதோ ஒருவித தொய்வும் இடைவெளியும் உண்டானது. கதை நிகழும் இடமும், மாந்தர்களுக்குள் நிகழும் சம்பாசணைகளும், அங்கு வழக்காடப் பட்டிருந்த வட்டார மொழியும்  எனக்கு அதிகம் பரிட்சையமில்லாத காரணத்தால் ஒரு கணம் வாசிப்பை நிறுத்தி விடலாமா என்றெண்ணினேன்!

ஆனால் அடுத்த சில பக்கங்களைக் கடந்த பின் முதலில் நினைத்தது எத்தகு தவறு என்பதை உணர்ந்தேன். ஆசிரியரின் எழுத்து நடை கதை மாந்தர்களின் வாழ்வியலைப் போன்று ஆரம்பத்தில் சற்று கரடுமுரடாகச் சென்றாலும், சிறிது நேரத்தில் நம்மை முழுவதும் வசியப்படுத்துகிறது. வாசிப்பின் இடையில் ஆசிரியர் நமக்கு சுவாசிக்கவும் இடம் தராமல் முழு மூச்சில் ஓட விடுகிறார். நிதானித்துத் திரும்பிப் பார்க்கும் எண்ணத்திற்கே இடமில்லாமல் போகிறது. 

முன்னுரையில் மட்டுமின்றி கதை முழுவதும் அவ்வுயர் சமூகத்தின் மீது அவருக்கிருந்த கோபமும், சிறுபான்மையினர் மீதிருந்த பரிவும் புலனாகிறது. வேயன்னா எனும் கள்ளர் இனத்தலைவனைச் சுற்றி கதை நகர்கிறது. கதையில் வரும் இவரின் போக்கும் செயலும் நாவலாசிரியரை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது. கதையின் இன்னொரு சிறப்பம்சம் இதில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் அவர்களின் இயல்புடன் ஒன்றிப் பயணிக்கிறது. எ.கா. கூழானிக்கிழவி, சேது, வில்லாயுதம், அக்கம்மா, வையத்துரை, காளத்தி, சிட்டு, அன்னமயில், வீரணன், விக்டர்துரை, வஜ்ராயினி.

கள்ளர் இனக்குழுவின் வாழ்வியலை சிறிதும் தொய்வின்றி சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார். வெவ்வேறு நிலைகளில் தொடர்ந்து இச்சமுகத்தால் விலக்கப்படுவதால், வேறுவழியின்றி களவையேத் தொழிலாகக் கொண்டிருந்தனர். எதற்கு இத்தகு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார்கள், விருப்பத்தின் பேரிலா? நிச்சயம் கிடையாது என்பதை வாசிப்பினூடே நம்மால் உணர முடிகிறது. கோபமிருக்கும்  இடத்தில் தான் குணமிருக்கும், அதுபோல அம்மக்களின் புறத் தோற்றம் கரடுமுரடாகத் தோன்றினாலும், அகத்தில் மாசற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாகக் கூறுகிறார்.

இப்படிக் களவாடிய பொருட்களைத் தங்களின் ஆடம்பர வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல், உயர்சாதி ஒருவனிடம் கொடுத்து, அதற்கு ஈடாக உணவு தானியங்களைப் பெறுவதிலிருந்து அவர்கள் உண்ணும் உணவிற்காகவே இவ்வளவும் செய்கிறார்கள் என்றறியும் போது மனதில் இரக்கமும் அனுதாபமமும் குடிகொள்கிறது. வெக்கையில் வளரும் மனிதர்களிடம் இயற்கையாகவே கோபம், ஆத்திரம், பிடிவாதம், திமிர் போன்ற குணாதிசயங்கள் இருப்பது அவர்களின் தவறல்ல. 

நாவலில் கிளைக்கதையாக வரும் வஜ்ராயினி, நாகமுனி, ஹஷார் தினார் அவர்களின் பகுதிகள் ஏனோ மனதில் ஒட்டவில்லை.  பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட  வளரி எனும் ஆயுதத்தை (பூமராங்) நினைவுபடுத்தி இருக்கிறார்.

நாவலை வாசித்த பின்பு குற்றப்பரம்பரைச் சட்டத்தைப்  (Criminal Tribes Actபற்றி இணையத்தில் விரிவாகத் தெரிந்துகொண்டேன். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில்  வட இந்தியாவில் பெருகி வந்த கொலை மற்றும் கொள்ளையைத் தடுக்க ஆங்கிலேயர்கள் இச்சட்டத்தை  முதலில் கொண்டுவந்தனர். பின்னர் இச்சட்டம் ஒரு சில சமூகத்தினருக்கு (கீழ் சாதி)   எதிராகத் திரும்பியது.

தமிழ்நாட்டில் கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், முத்தரையர், அம்பலக்காரர், வலையர் என 89 சாதிகள் குற்றப்பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. இதில் குறிப்பிட்ட சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்று அறிவிக்கப்பட்டனர்.   இப்படி நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த இயற்றப்பட்ட சட்டம் நாளடைவில் கை ரேகைச்சட்டம், ராத்திரிச்சீட்டு என்று பல்வேறு அடக்குமுறைகளைச் சிறுபான்மையினருக்கு எதிராகத் திணித்தது. இதன் எதிரொளியாக தென் மாநிலங்களில் பல்வேறு கலவரங்களும், உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக நடந்துவந்தது.

கள்ளர் இனக்குழுவின் வாழ்வையும், அவர்களின் சமுதாய நிலைப்பாட்டையும், அந்த சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்தவர்கள் யார்? எதிர்த்து நின்றவர்கள் யார்? என்று அச்சமூகத்தின் வாழ்வியலை இந்நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார். களவைக் குலத்தொழிலாகக் கொண்டிருந்தாலும் அது நல்லவர்கள் நிறைந்த கூட்டமாகவே தெரிகிறது !
அடக்கி ஆள்ந்துகொண்டிருக்கும் உயர் சமூகம் ஒருநாள் உணர்வற்றுப் போகும், ஒடுக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுமிருந்த சமூகம் வரும் நாளில் நிச்சயம் விழித்தெழும் !!
இப்படியொரு உணர்வுப் பூர்வமான நாவலை ஆசிரியர் அளித்ததாலோ என்னவோ, வாசிப்பின் முடியில் நல்லதொரு நாவல் படித்த திருப்தி கிட்டியது. வேயன்னாவின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு மனதிலிருக்கும்.

இந்நாவல் தமிழ் வாசகர்கள் அனைவரும்  கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று.