நினைத்தாலே இனிக்கும் - கல்லூரி நாட்கள் - 1



எனது 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர முடிந்தது. நுழைவுத் தேர்வை முடித்து அண்ணா பல்கலைக்கழத்தில் இஞ்ஜினியரிங் கவுன்சிலிங் சென்றது இன்றும் நினைவிலுள்ளது. 



கல்லூரியின் முதல்நாள் - கடந்து வந்த நம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. விடுதியில் காலை 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தது, அதுவே முதலும் கடைசியுமாக அமைந்தது. அந்த நாள் கல்லூரியே கலர்புல்லாக இருந்தது. வகுப்பறையில் அருகிலிருந்த முகவரி தெரியாத நண்பனிடம் முதலில் சொன்ன 'ஹாய்'. அதுவே நாளடைவில் மாமா, மச்சி என்று வளர்ந்தது. பலருடன் பழகியிருந்தாலும் கடைசியில் பத்து பேரின் நினைவே நெஞ்சில் நிற்கின்றது.

அடுத்து கல்லூரி வாழ்வின் முக்கியப் பகுதி ‍ராகிங். கல்லூரி தொடங்கிய முதல் வாரத்திலேயே ரப்பர் செருப்பு அணிந்து சென்றது நினைவிவுள்ளது. இது செருப்போடு மட்டும் நிற்காமல் உடை, மீசை என்ற அனைத்திலும் சென்றது. சீனியர் பெண்ணை சில்லென்று பார்த்ததால், அன்றிரவே சீனியரின் அறை சன்னலில் வௌவாலாக‌த் தொங்கினேன். தொடக்கதில் துன்பமாகத் தோன்றினாலும், நாளடைவில் அதுவே சீனியர்களின் நட்புக்குப் பாலமாக அமைந்தது.

அம்மாவின் சமையலில் உப்புச் சப்பில்லா குறைகளைக் கண்டுபிடித்த எனக்கு, ஹாஸ்டல் மெஸ்‍சின் காய்ந்த தோசையும், உப்பான சாம்பாரையும் ஏற்க வேண்டுமென்ற தெளிவு பிறந்தது. என் நாவிற்கு கண்ணீரஞ்சலி செலுத்தப்பட்ட‌து அந்நாளில்தான். புலி பசித்தாலும் புல்லை தின்னாது, ஆனால் நானோ பசித்தால் எதைவேண்டுமென்றாலும் உண்ணலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். சுவையின் சுகத்தை நிறுத்தினேன். கேண்டீனின் மசாலா தோசையில் மசாலாவை தேடியதும், தேவையற்ற நேரங்களில் தேனீரருந்தியதும் நினைவிலிருப்பவையே. கேண்டீனின் குட்டிச்சுவர்/திட்டு - சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் மற்ற‌ வகுப்புத்தோழர்களை பார்த்துப் பழகி மனவிட்டு பேசுமிடம் அதுவே. கேண்டீனின் பத்து ரூபாய் மேட்டரை இன்று நினைத்தாலும் இனிப்பாகவே உள்ளது.
அடுத்ததாக Treat - ‍ தேர்வில் தேர்ச்சி பெற்றால் treat, தோல்வியடைந்தாலும் treat.  ஃபிகரைப் பார்த்தால் treat, ஃபிகர் நம்மை பார்த்தாலும் treat, வகுப்பறையில் ஆசிரியர் திட்டினாலும் treat, தேர்வுக்கு முன்பும் treat, தேர்வுக்குப் பின்னும் treat. மொத்ததில்‌ treat நாட்க‌ளில் மெஸ்சின் வ‌றண்ட தோசையின் வாசம் ம‌றைந்த‌து.

கல்லூரி நாட்களில் நான் மிகவும் ப‌ய‌ந்த‌து ப்ராக்டிகல் எக்ஸாம். லேப் நாட்களின் நீலநிற உடை கண்முன்னே நிற்கிறது. 3 அல்லது 4 பேர் கூட்டாகச் செய்தாலும் முடிவில் அவுட்புட் வ‌ராதது வேடிக்கையான‌தே. இது எங்க‌ளின் குற்ற‌மா, இல்லை க‌ணினியின் குற்ற‌மா! லேபின் 100 ம‌திப்பெண்ணிற்காக‌ 200 முறை ஃபேகல்டி அறையை உலாவ‌ந்த‌து உண்மையே. செம‌ஸ்ட‌ர் தேர்வில் எப்ப‌டியாவ‌து ப‌க்க‌ங்க‌ளை நிறைத்து பாஸ் செய்தாலும் ப்ராக்டிகலில் அது முடியாத ஒன்று. அன்றைய‌ நாட்க‌ளில் எத்த‌கைய‌ வினாத்தாள் கொடுத்தாலும் தேர்வுத்தாளில் ப‌க்க‌ம் சேர்ப்ப‌தென்பது மிகவும் சாதார‌ணமான ஒன்று.

ASSIGNMENT வைக்க‌வேண்டிய‌ நாட்க‌ளில் கண்டிப்பாக வ‌யிற்றுவலி, கண்வலி, காய்ச்சல் வ‌ருவ‌து இய‌ல்பான‌தே. விடுதியில் ஒவ்வொரு காலைவேளையிலும் பாத்ரூம் பிடிப்ப‌து தியேட்ட‌ரில் எந்திர‌ன் ப‌ட‌த்திற்கு முதல் நாள் டிக்கெட் வாங்குவ‌த‌ற்குச் சமம். காலைக் குளிரில் க்யூவில் நிற்ப‌து நக‌ர‌ப்பேருந்தில் க‌டைசி ப‌டியில் நின்று ப‌ய‌ணிப்ப‌த‌ற்குச் சம‌ம். அப்ப‌டி க‌ஷ்ட‌ப்ப‌ட்டுக் குளித்து முடித்தாலும், பல நேரங்களில் காலை உணவை கண்ணில் பார்க்காத நாளே அதிகம். மாலையில் தொடங்கும் வெட்டிப்பேச்சு இரவு 4 மணிவரை நீண்டிருக்கும்.  முதல் PERIOD பற்றித் தொட‌ங்கும் இந்த‌ப்பேச்சு IIT, IIM போன்ற‌ கல்வி சம்பந்தமான தலைப்பில் மேய்ந்து,  RS புரம், ஊட்டி, மூணாறு என்று நீண்டு, கிரிக்கெட், சச்சின், வோர்ல்ட் கப்,  சன் டி.வி, விஜய்  டி.வி, சூர்யா டி.வி, இளமை புதுமை, லொள்ளு சபா என்று கலகலப்பாகப் பயணித்து, அடுத்த விடுமுறை பற்றிய விவாதங்களில் விழுந்து, இறுதியில்  கடைசியாகப் பார்த்த சினிமா படத்தில் முற்றுப்பெரும்.

விடுமுறை நாட்களில் இரவு படத்திற்குக் குறைவிருக்காது. வெள்ளி, சனி இரவுகளில் ஏதாவது ஒரு படம் பார்க்க வேண்டுமென்பது கல்லூரியின் விடுதி வாழ்வின் நியதி. அதுபோலவே, ஞாயிறு காலையில் வீதியுலா செல்வது கல்லூரி வாழ்வில் இன்றியமையாதது. அதற்காக எட்டு மணிக்கு (அதிகாலை!!) எழுந்து, காலை உணவை முடித்து (செல்லவிருக்கும் தியேட்டரின் தொலைவைப் பொறுத்தது மாறும்), நகரப்பேருந்தில் தொத்தி கடைசியில் ஒரு சப்ப படத்தைப் பார்த்த அலுப்பில் முடிவுறும். திரும்புகையில் கையில் காசு இருந்தால் கால்டேக்சியில் கல்லூரி வந்து சேர்வோம். 

தேர்வுநாள் அறிவிக்கப்பட்ட‌வுடன் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வெட்டிப் பேச்சு குறைந்து, கடைசியில் SYLLABUS, XEROX, NOTES சேகரிப்பு  என்று புல்லட் ரயிலைப் போல் பற‌க்கும். சாதாரண நாட்களில் வெறுச்சோடிக் கிடக்கும் மெஸ்சின் காப்பிக்கு, தேர்வு நாட்களில் மிகப்பெரிய ‌‍‍க்யூ நிற்கும். தேர்வு நாட்களில், இதுவரை வணங்கப்படாத அனைத்து தெய்வங்களையும் அவசர அவசரமாக வணங்கிவிட்டு காலை உணவைப் புறக்கணித்து 10 நிமிடத்திறகு முன்பாகவே தேடிப்பிடித்து தேர்வறைக்குச் செல்வோம்.   வினாத்தாளை பெற்று விடைத்தாளில் எழுத்தத்‌ தொடங்கும் பொழுது, எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருந்த நாவலாசிரியனும், எழுத்தாளனும் உருப்பெருவார்கள்.   

இத்தகைய ரகளையான, சேட்டைகள் நிறைந்த என் கல்லூரி வாழ்வின் நாட்கள் என்றும் என் நினைவில் நிற்கும் !!

(தொடரும்)

தி.மு & தி.பி


சமீபத்தில் என் நண்பனுடன் நடந்த உரையாடலின் வெளிப்பாடு!

வரலாற்றை கி.மு, கி.பி என்று பிரிப்பதைப் போல, நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.

திருமணத்திற்கு முன் ஆணும்/பெண்ணும் தனிச்சையாக‌வே செய‌ல்ப‌டுகிறார்க‌ள். பெற்றோர் அல்லது சுற்றத்தாரின் தலையீடு பொதுவாக‌ இருந்தாலும்,  தத்தம் விஷயங்களில் தனித்தே செய‌ல்ப‌டத் தொடங்குகிறார்க‌ள். இத‌ன் பொருட்டு தைரியம், ஆணவம் ம‌ற்றும் சில அடிப்படை குண‌ங்க‌ள் அவ‌ர்க‌ளுக்குள் வ‌ள‌ர்கின்றன. பின்னாளில் திரும‌ண‌மாகும் பொழுது, அதுவரை வளர்க்கப்பட்ட அடிப்படை குண‌ங்க‌ளில் மாற்ற‌த்தைக் கொணர‌ ம‌னத்த‌ய‌க்க‌மும், பிடிவாத‌மும் தோன்றுகிறது.

சமீபத்தில் திருமணமான என் நண்பனிடம் உரையாடும் போது, இல்ல‌ற‌ வாழ்க்கை இனிதாக‌‌ச் சென்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் அவனுக்குள்ளிருந்த க‌ச‌ப்புண‌ர்வுள்ளதை உணர்ந்தேன்.  சிறிது மனம்விட்டு பேசும்போது தவறான எண்ணச் சூறாவளியில் அவன் சிக்கித்தவிப்பதை அறிந்தேன். அவனுடைய கூற்றுக்களின் படி  தி.மு  நமக்கு தேவையானவற்றை  நாமே திட்டமிட்டு, செயல்படுத்தி வந்திருப்போம். அதில் யாருடைய தலையீடும் இருந்திருக்காது.  அதுபோலவே தங்களுக்கு விருப்பமான அல்லது  தேவையான பொருட்களை வாங்குவதிலும் அதே நிலைதான். விடுமுறை நாட்களில் விருப்பமான செயல்களில் ஈடுபடல், சினிமா, பொழுதுபோக்கு என்று அனைத்து செயல்களிலும் யாருடைய குறுக்கீடும் இருந்திருக்காது. ஆக திருமணத்திற்குப் பிறகு அவனது சொந்த விஷயங்களில் தன் மனைவியின் குறுக்கீடு உள்ளதை அவன் விரும்பவில்லை  என்பது புலப்பட்டது. இதே நிலைதான் திருமணமான பெண்களிடத்திலும் இருப்பதில் ஐயமில்லை.

மேலே கூறப்பட்ட அனைத்தும் ஒரு தனிமனிதனின் உளப்பாங்காக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் நாமனைவரும் ஒரு சிறிய விழுக்காடாவது இவற்றை உணர்ந்திருப்போம். இதை சரியா தவறா என்று விவாதிப்பதைவிட, திமு &  திபி என்ற இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தி.பின் முதலில் உணரப்படுவது - அன்பு, ஆதரவு.  ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணையாக உள்ளதை உணர முடிகிறது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நம்மிடமுள்ள சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ள எதிர்பாலரின் துணை இன்றியமையாதது. அவ்வப்போது மாமிச உணவு உண்ணும் நான், எனது மனைவியின் தெய்வ‌ வ‌ழிபாட்டின் காரணமாக திங்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அவற்றை தவிர்த்துக் கொண்டேன். இது என்னால் முடிந்த காரியமே!  நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனதை நாம் பழக்கிக்கொள்ள வேண்டும்.

சில நேர‌ங்களில் நம்மிடமுள்ள  தவறான செயல்களை கணவனோ/மனைவியோ சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக்கொள்வதே பண்பானது.  இதனைக் குறுக்கீடாகக் கருதாமல், அவர்களின் யோசனையாகவோ அல்லது கருத்தாகவோ எண்ணலாம். தி.முன் தனித்து எடுக்கும் முடிவுகளைவிட, திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் துணையிடம் கலந்தாலோசித்து எடுக்கும் முடிவே சரியானதாக இருக்கலாம். கணவன்-மனைவிக்கிடையில் கொடுக்கப்படுவதும், கிடைப்பதுமான இன்பமும் துன்பமும்  வேறெந்த உறவுகளிடமிருந்தும் கிடைக்கப் பெறாதவையாகும். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தத்தம் முன்னேற்றத்திற்கு ,வாழ்க்கைத் துணையின் பங்கு மிகவும் இன்றியமையாத‌து.

முடிவில்,  தி.முன் க‌ருப்பு/வெள்ளை ப‌ட‌ங்க‌ளாக இருந்த நம் வாழ்வு, தி.பின் வ‌ண்ணப்படமாக‌ மாறியுள்ள‌து உண்மையே!!!
 

கர்வம்

ஒரு வகையில் நாம் அனைவரும் கர்வம் உள்ளவர்களாகவே பிறந்துள்ளோம். ஏனெனில் பிறக்கும்போதே தாய்க்கு "அம்மா" என்ற பதவியையும், தந்தைக்கு "அப்பா" என்ற பதவியையும் அளித்துள்ளோம். அன்று தொடங்கிய கர்வம் சில நேரங்களில்/ நிலைகளில் நம் உடன்பிறப்பாக தொடர்ந்து வருகிறது.

படித்தவனுக்கு படித்ததில் கர்வம். தூங்குபவனுக்குத் தூங்குவதில் கர்வம். ஆணுக்கு ‍தான் ஒரு ஆண் என்பதில் கர்வம். பெண்ணுக்கு தான் ஒரு பெண் என்பதில் கர்வம். மனிதனுக்கு மனிதன் என்பதில் கர்வம், அதுவே ஒரு மாட்டிற்கு தான் ஒரு மாடு என்பதில் கர்வமோ!!! (இருக்கலாம்). தேர்வில் பாஸ் செய்தவனுக்கு தேர்ச்சி பெற்றதில் கர்வம்.  தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவனுக்கு தரவரிசையில் கர்வம்.

பொதுவாக‌ நமக்கு தமிழன் என்பதினால் கர்வம், அயல்நாட்டவனுக்கோ அவன் அயல்நாட்டவன் என்பதில் கர்வம்.

இக்கூற்றுகளிலிருந்து கர்வம் என்பது ஒருவரின் தன்னியியல்பாகவே தோன்றுகிறது. ஆக ஒவ்வொரு நிலையிலும் ஏதோ ஒருவிதத்தில் கர்வம் இருந்து கொண்டே வருகிறது. 

உதாரணமாக, செல்வந்தனுக்கு தனக்குக்கீழ் மற்றவர்கள் உள்ளதால் கர்வம். நடுத்தர நிலையிலிருப்பவனுக்கு அவனுக்குக் கீழே மற்றும் சிலர் உள்ளதால் கர்வம். ஆனால் கடைசியில் கீழே இருப்பவனுக்கு யாருடனும்  ஒப்பிடுதல் இல்லையென்று சொல்லிவிட முடியாது. அவனுக்கோ தான் செல்வந்தனைவிட நிம்மதியாக இருப்பதால், நிம்மதியில் கர்வம் உள்ளவனாக இருப்பான். முடிவில் கர்வம் உள்ளவனுக்கு தான் வெளிப்படையாக வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும், முடிவில் ஒரு மறைமுக தோல்வி உள்ளதை மறுக்க முடியாது.

கடைசியில் இறந்த பிறகும், தம் உடலை பிறர் சுமப்பதினால் மீண்டும் கர்வம் பிறக்கிறது. இவ்வாறு மனிதனுக்கு தான் பிறக்கும்போது தோன்றிய கர்வம், இறக்கும்போதும் இருப்பதை உணரமுடிகிறது.

நீ ‍ தமிழனா? ‍

(இது ஒரு தமிழனின் உள்ளக் குமுறல்)

என்ன செய்தாய் நீ ‍ ‍தமிழனாகப் பிறந்து !
குற்றம் நடந்தது என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அது  தமிழ்ப் பாட நூலின் முதல் பக்கத்திலேயே முடிய வேண்டுமா?  தமிழ் என்பது வெறும் 100 மதிப்பெண் பாடமாக மட்டுமே இருக்க வேண்டுமா?  Twitter/facebook/iphone தெரிந்த நமக்கு, அகநானூறு/புறநானூற்றுப் பாடல்களை ஒரு முறையாவது வாசித்திருப்போமா? பாரதி(யார்)  யார்? ஔவை (யார்)  யார்? இவ்வினா நம் வாரிசுகளிடமிருந்து வரும் முன் விழித்தெழ வேண்டாமா?  இவையனைத்தும் நான் என்னுள்ளே வினவும் வினாக்கள்.

மழலைகள் நடைமுறைப் பழக்க வழக்கங்களை பெற்றோர்களிடமிருந்தும், சுற்றத்தினிடமிருந்துமே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். அத்தகைய பொறுப்பிலிருக்கும் நாம் நம் குழந்தைகளுக்கு தமிழின் சிறப்பை உணர்த்தத் தவறிவிட்டதாக உணர்கிறேன்.

யோசித்துப் பார்த்தால், என் குழந்தையின் தமிழ்வழிக் கல்வி கேள்விக்குறியே என்ற உண்மை புரிகிறது. இதற்குக் காரணம் நான் வெளி/வடநாட்டில் வசிப்பதனாலா? இன்றைய சூழ்நிலையில் ஆங்கிலத்தில் பேசும் குழந்தைகளை பாராட்டும் நாம், நம் தாய்மொழியின் சிறப்பைக் கூற மறந்தோமே! தாய்மொழிக்கல்வியா அல்லது ஆங்கில வழிக்கல்வியா (பிறமொழி வழிக்கல்வி) என்பது அவரவர் சொந்த விஷயம். அதை நான் இங்கு முன்வைக்கவில்லை. நாம் நம் பிள்ளைகளுக்கு தமிழின் சிறப்பை உணர்த்த வேண்டும்  என்றே வலியுறுத்துகிறேன்.  இதுவே தற்போது என்னுள் பரவியுள்ள ஐயம்.

யோசித்துப் பாருங்கள் !!

தந்தையாக நானும், தாயாக என் மனைவியும், என்னைப் போல் தொலைவிலிருக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் !

நான் யாரையும் வெண்பா எழுதச் சொல்லவில்லை அல்லது அதற்கான விளக்கமும் கேட்கவில்லை ! அனைவரையும் ஒரு முறையாவது தமிழ் இலக்கியங்களை வாசிக்கப் பணிக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இத்தகைய  இணையதள வசதிகள் இல்லை. நூல்கள் எங்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் இன்று பெரும்பாலான தமிழ்ப்புத்தகங்கள் இணையதளத்தில் (மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம்) இலவசமாகக் கிடைக்கின்றன. அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. வாசிக்க நமக்கு விருப்பமா?

முந்தைய பதிவுகளில் அதற்கான இணையதள முகவரிகளை குறிப்பிட்டுள்ளேன்.

நான் எனது புத்தகம் படிக்கும் பழக்கத்தை என் தந்தையிடமிருந்தே கற்றுக் கொண்டேன். தமிழில் நான் வாசித்த முதல் புத்தகம் மறைந்த எழுத்தாளர் திரு. சாண்டில்யன் எழுதிய 'கன்னிமாடம்', இன்றும் நினைவில் உள்ளது.  பின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், மணிபல்லவம், கடல் புறா, பாரதியார் கவிதைகள்,  உரைநடைகள் என்று வாசிக்கத் தொடங்கினேன். 

அன்று தொடங்கிய நான் இன்றுவரை புத்தக வாசிப்பை முடக்கவில்லை. அதிலிருந்து சிறது சிறிதாக சங்க இலக்கியங்களையும், வரலாற்றுப் புதினங்களையும் படிக்கும் முயற்சி தொடங்கிற்று. பின் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி படிக்கும் ஆர்வம் பிறந்தது. இன்றைய இணைய தளத்தின் உதவியால் தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம்  ஆகிய வரலாற்றச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன். தமிழினத்தின் மரபு,  பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை உணரத் தொடங்கினேன். அன்றிலிருந்துதான் நம் தமிழின் சிறப்பை உணர்ந்தேன். இத்தகைய தொன்மையான, செம்மையான தமிழ் மொழியின் சிறப்பை நாம் நம் பிள்ளைச் செல்வங்களுக்கு உணர்த்த வேண்டும்.  இது நம் அனைவராலும் இயலக்கூடிய ஒன்றே!!

இந்தப் பதிவின் மூலம் நான் எந்த ஒரு தனிநபரையும் குறைகூறவில்லை. நாம் என்ன செய்ய வேண்டுமென்ற கருத்தையே விளிக்கிறேன். தமிழில் இன்னும் நான் படிக்க வேண்டியவை, தெரிந்துகொள்ளவேண்டியவைகள் மிகுதியாக உள்ளன. தமிழை (தமிழில்) படிக்கப் படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது. தமிழ் நூல்கள் சேகரிப்பைத் தொடங்கியுள்ளேன். வருங்காலத்தில் இன்னும் எனக்குத் தெரிந்த பல அறிய தகவல்களை இவ்வலைப்பூவில் பகிர்வேன்.

முடிவில் தமிழின் இனிமையிலிருந்து நாம் விழகிச் செல்கின்றோமோ என்ற ஐயப்பாடு இருந்தாலும், நாமனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

எனக்கு நம்பிக்கை உள்ளது, இப்பதிவினை வாசிக்கும் வாசகர்களில் ஒருவருக்காவது இது ஒரு தூண்டுதலாக அமையும் என்று!