நற்றிணை - பாடல் 380, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனுக்கு தலைவி கொதித்தெழுந்து கூறுவது

முன்னொரு பதிவில் குறிப்பிட்டதைப் போல நான் சமீப காலமாக சங்க இலக்கிய நூல்களை வாசிக்கத் துவங்கியுள்ளேன்.

நற்றிணையின் பாடல் 380ல் புலவர் கூடலூர்ப் பல்கண்ணனார் அமைத்த பாடலையும், அதன் பொருளையும் இங்கே காண்போம். நான் பருகிய இத்தமிழ்ச் சுவையை இணையதள வாசகர்களும் சுவைக்கும் வகையில் இங்கு பகிர்ந்துள்ளேன். 

தலைவனும் தலைவியும் கலவிச் சுவை கழித்த நாட்களின் பரிசாக உதித்தான் புதல்வன். கட்டிலுக்குத் துணையாய் வாய்த்த மங்கை பிள்ளைத் தொட்டிலுக்கு முழு நேரக் காவலானாள்.  காமப் பசியால் தவித்தவன் தனது காமத்தண‌ல் தணிய‌ பரத்தையின் இல்லச் சிறை புகுந்தான்.  பரத்தையின் கட்டில் சுவைத் தெவிட்டத் தொடங்கியதாலும், தலைவியின் உள்ளப் புலம்பல் உணர்ந்து, தலைவியை நோக்கிச் சென்றான்.

காம இச்சையின் பேரில் தலைமகளை விட்டு பரத்தையின் குடில் சென்று திரும்பும் தலைவ‌னை நோக்கி மாதரசி கூறுவது;

திணை: மருதம் (மருதத் திணை பற்றி அறிய இங்கே சொடுக்கவும் - http://tamilliteratureworld.blogspot.ae/2011/03/blog-post_159.html)

"நெய்யும் குய்யும் ஆடி மையொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென்முலைத் தீம்பால்  பிலிற்றப்
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே
வாலிழை மகளிர் சேரித் தோன்றுந்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன்புனை நரம்பின் இன்குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினுந் தொழாஅல்
கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப்
பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப்
புரவியும் பூணிலை முனிகுவ
விரகில மொழியல்யாம் வேட்டதில் வழியே"

விளக்கம்:
குய் - புகை (ஆடை நாற்ற நீங்கச் செய்யும் நறும்புகை); மை - குழந்தைகளுக்கு இடப்படும் மை; கலிங்கம் - ஆடை (இங்கு மாசுபட்ட ஆடையை குறிக்கின்றது)
திதலை - தேமல்; பிலிற்ற - சுரந்து பீச்சிட;  புல்லிப் புனிறுநா றும் - அணைத்துப் பால் கொடுத்ததால் ஏற்படும் பால்வாடை
வாலிழை - ஒளிவிடும் அணி;

பாண கலிங்கமும் நெய்யும் குய்யும் ஆடி மையொடு மாசு பட்டன்று - பாணனே! எம்முடைய ஆடைதானும் நெய்யும் நறும்புகையும் அளாவிப் புதல்வதற்குத் தீட்டும் மையும் இழுகி அழுக்குப் படிந்திரா நின்றுது;

திதலை மெல்முலைத்தீம்பால் பிலிற்றப் புதல்வன் புல்லி தோளும் புனிறு நாறும்மே - சுணங்கு அணிந்த மெல்லிய கொங்கையின் இனியபால் பெருகுதலாலே அந்தப் பால் சுரப்பப் புதல்வனைப் புல்லிக் கொண்டு எம் தோளும் ஈன்ற அணிமையானாகிய முடைநாற்றம் வீசாநிற்கும்;

வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் - இங்ஙனம் ஆகையில் தூய இழையணிந்த பரத்தையர் சேரிக்கண்ணே தோன்றுகின்ற தேரையுடைய காதலன் கூடுதற்குரிய தகுதிப்பாடுடையேமல்லேம்;

அதனால் நின் தண் துறை ஊரனைக் கொண்டு செல் - ஆதலின் நின் தண்ணிய துறையையுடைய அவ்வூரனை இப்பொழுதே கொண்டு சென்று பரத்தையர் பால் விலைகொண்டு ஈடாக உய்ப்பாயாக!;

பொன் புனை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழா அல் வல்லை ஆயினும் - பொன்போன்ற நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழையெடுத்துப் பாடுதலில் நீ வல்லனே யாயினும்;

தொழாஅல் - ஈண்டு எம்மைத் தொழுது படாதேகொள்;

பாடு மனைப்பாடல் கூடாது நீடு நிலைப்புரவியும் பூண் நிலை முனிகுவ - சிறந்த எமது மனையின்கண்ணே நீ நின்று பாடுதலைச் செய்யாதபடி நெடும் பொழுது நிற்றலையுடைய தேரிலே பூட்டிய குதிரைகளும் தம்மைப் பிணித்திருத்தலை வெறுக்கின்றன கண்டாய்;

யாம் வேட்டது இல் வழியே விரகு இல மொழியல் - யாம் விரும்பியது இல்லாதவிடத்துப் பயனில்லாத சொற்களை எம்பால் மொழிய வேண்டா!

Reference:
  1.      .    http://www.tamilvu.org/

1 comment: